வயிற்றைக் காப்பாற்றும் வாந்தி!-டாக்டர் கு.கணேசன்

மழைக்காலம் தொடங்கிவிட்டது. இனி ஆஸ்பத்திரிகளில் தடுமல், காய்ச்சல், வீசிங் பிரச்னை பிளஸ் வாந்தி, பேதி கேஸ்கள் அலைமோதும். என்ன காரணம்? மழைக்காலத்தில் காற்று, தண்ணீர்,  உணவு என எல்லாமே எளிதில் அசுத்தமாகின்றன. தெரிந்தும் தெரியாமலும் இவை நம் உடலுக்குள் போகின்றன. அதற்கான எதிர்வினைதான் இந்த மழைக்காலப் பிரச்னைகள். இவற்றில் வாந்தியைப்பற்றி இந்த வாரம் பார்ப்போம்.

உங்கள் வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா? இருந்தால், அதற்கு உணவு கொடுக்கும்போது ஒரு நிமிஷம் நின்று பாருங்கள். என்னதான் நீங்கள் பழக்கமான எஜமானர் என்றாலும், அதற்கும் கொலைப் பசியாக இருந்தாலும், நீங்கள் வைக்கும் உணவை உடனே அது சாப்பிடாது. முதலில் முகர்ந்து பார்க்கும். அந்த உணவு தனக்குச் சரிப்படும் என்று அது கருதினால் மட்டுமே சாப்பிடும். ஆனால் நாம் அப்படியா? பசி வந்துவிட்டால், தட்டில் என்ன இருக்கிறது என்றுகூட பார்க்கமாட்டோம். வயிறு நிறைய கொட்டிக்கொள்வோம்.

அதிலும் அல்வா, பிரியாணி என்று எச்சில் ஊற வைக்கும் உணவு என்றால், அப்போதுதான் வயிறு நிறைய சாப்பிட்டிருந்தாலும், கோணிப்பையைக் குலுக்கிக் குலுக்கிப் புண்ணாக்கை அடைக்கிற மாதிரி, இவற்றையும் சாப்பிட்டு வயிற்றை ‘அடைத்து’ விடுவோம். வாந்திக்கான ஆணிவேர் இங்குதான் ஆரம்பிக்கிறது. வாந்தி என்பது தனிப்பட்ட நோய் கிடையாது. நோய் வருவதற்கான முன்னறிவிப்பு. குறிப்பாக, ‘வயிறு சரியில்லை’; அல்லது ‘உடலுக்குள் ஆகாத ஒன்று நிகழ்ந்திருக்கிறது’ என்பதை நமக்குத் தெரிவிக்கும் அலாரம்.

மூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் இருக்கிறது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது. இது அனிச்சையாக நடைபெறுகிறது. இந்த மெக்கானிசத்தைக் கொஞ்சம் விரிவாகவே பார்த்துவிடலாம். உணவின் மூலம் மோசமான பாக்டீரியாவோ, ரசாயனமோ வயிற்றுக்குள் புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் இருக்கிற சென்ஸார் செல்கள் மோப்பம் பிடித்து, ‘வேகஸ்’ நரம்பு  வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும்.

வாந்தி எடுத்தால்தான் பிரச்னை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்துவிட்டால், அந்தச் செய்தியை வாந்தி மையத்துக்கு அனுப்பி வைக்கும். உடனே அது ‘வாந்தி எடு’, ‘வாந்தி எடு’ என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளை பல்வேறு மத்திய நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும்போது முதலில் குமட்டல் ஏற்படும். பேட்டரி சார்ஜ் தீர்ந்துபோன கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளுகிறார்கள் அல்லவா?

அதுபோல... இரைப்பை சிரமப்படும்போது, இதற்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத் தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து குடலையும் இரைப்பையையும் அழுத்தும். அந்த அழுத்தம் தாங்காமல் உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள ‘வால்வு’ திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எதுவானாலும் ‘ஓவ்’ என்ற பெரிய சத்தத்துடன் வெளியேறும். இதுதான் வாந்தி. பெருமழைக்கு முன்னால் தூவானம் துவங்குவதுபோல, வாந்தி வருவதற்கு முன்னால் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற சின்னச் சின்ன முன்னறிவிப்புகள் ‘ஒலி’பரப்பாகும்.

சரி, வாந்தி நல்லதா? கெட்டதா?
வயிற்றைச் சிரமப்படுத்தும் உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியில் தள்ள சிலமுறை வாந்தியெடுப்பது நல்லதுதான். அதற்காக ஒரே நாளில் நான்கு ஐந்து முறைக்குமேல் என்றால், உடலின் நீர்ச்சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே களைத்து விடுவார்கள். இது ஆபத்து.

வாந்திக்கு என்ன காரணம்?
கெட்டுப்போன உணவு, அதீத  உணவு, அஜீரணமாகும் உணவு, அலர்ஜி ஆகும் உணவு... இப்படி வம்பு செய்யும் வஸ்துக்கள் வயிற்றுக்குள் போனால், வாந்தி வரும். இரைப்பை அழற்சி, அல்சர், கேன்சர், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, சிறுநீர்ப்பாதை அழற்சி, சிறுநீரகக் கல், தலையில் அடி, மூளையில் கட்டி, மூளைநீர் அழுத்தம், வலி மாத்திரைகள்,  டைபாய்டு போன்ற தொற்றுநோய்கள், புற்றுநோய் மருந்துகள்... இப்படி வாந்தியை ஏற்படுத்தும் காரணப் பட்டியல் பட்டாசு சரம் போல் நீண்டது.

ஆனால், வாந்தி என்றாலே ‘அது பித்தம்’ என்று முடிவுக்கு வருகிறவர்கள்தான் நம்மிடம் அதிகம். குழந்தைகள் வாந்தி எடுத்தால்கூட ‘தொக்கம்’ எடுத்தால் சரியாகிவிடும் என்று நம் மக்கள் சாதாரணமாக இருப்பார்கள். வாந்தி விஷயத்தில் நாம் காட்டும் அலட்சியம் அறுவை சிகிச்சையில் கொண்டுபோய் நிறுத்திவிடும் என்பதை எங்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.

குடலில் எங்கு அடைப்பு இருந்தாலும் வாந்தி வரும். வயிற்றில் ஓட்டை விழுந்தாலும் இதே நிலைமைதான். கணைய அழற்சியிலும், பித்தப்பை அழற்சியிலும் வாந்திதான் முதல் அறிகுறி. வாந்தியின் அளவை வைத்து, குடலில் அடைப்புள்ள இடத்தை அறிய முடியும். அதாவது, குறைவாக வாந்தி எடுத்தால், மேற்குடலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதிகமான வாந்தி என்றால், கீழ்க்குடலில் அடைப்பு என்றும் கணிக்கலாம். சாதாரண வாந்தியில் செரிக்காத உணவு, பச்சை நிறத்தில் பித்தநீர் போன்றவை வெளிவரும்.

ஆனால், வாந்தி மலத்துடன் கலந்த மாதிரி வெளிவந்தால், சிறுகுடலில் அடைப்பு பலமாக இருக்கிறது என்று அர்த்தம். இது ஆபத்தான அறிகுறி. இதற்கு உரிய சிகிச்சையை உடனடியாக எடுப்பது நல்லது. ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’ என்று சொல்கிற மாதிரி வாந்தி எடுப்பதற்கும் காதுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? காதில் ‘வெஸ்டிபுலர் அப்பேரடஸ்’ என்று ஓர் அமைப்பு இருக்கிறது.

கொத்தனார் கட்டிடம் கட்டும்போது சுவர் மட்டம் சமமாக இருக்கிறதா என்பதை ரசமட்டம் வைத்துப் பார்ப்பார் அல்லவா? அதுமாதிரிதான் இதுவும்! நாம் நடக்கும்போது, திரும்பும்போது, ஓடும்போது, மலை ஏறும்போது என்று உடல் எந்தத் திசையில் அசைந்தாலும், இதற்குள் உள்ள திரவம் சமநிலையில் இருக்க வேண்டும். ஊட்டிக்கு மலைப்பாதையில் பஸ்ஸில் செல்லும்போது அல்லது கடல் பயணம்/விமானப் பயணத்தின்போது இந்தச் சமநிலை தப்பிவிடும்.

இந்தத் தகவல் வாந்தி மையத்துக்குப் போகும். உடனே வாந்தி வந்து ‘உட்கார்ந்திருப்பது சரியில்லை’ என்று உங்களை உசுப்பிவிடும். காது இரைச்சல், காதில் சீழ் எனக் காதுக் கோளாறு எதுவானாலும் இம்மாதிரி வாந்தி வருவதுண்டு. சரி, கர்ப்பிணிகளும் வாந்தி எடுக்கிறார்களே, ஏன்? இவர்களுக்கு முதல் மூன்று மாதங்களில் சில ஹார்மோன்களின் அளவு எகிறுவதும் இறங்குவதுமாக இருக்கும். இதனால் மசக்கை வாந்தி வருகிறது. முதல் நாள் இரவில் நிறைய ‘குடி’த்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு.

சிலருக்கு மாரடைப்பின் ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது. விஷக்கடிகளின்போதும், ஊசி மருந்து/ மாத்திரை அலர்ஜி ஆனாலும் வாந்தி வருவது நிச்சயம். பார்வை, நுகர்தல், தொடுதல் புலன்களும் வாந்தியை வரவழைக்கும். பள்ளி/கல்லூரி விடுதிகளில் பல்லி விழுந்த பாலைப் பார்த்தால் மாணவர்கள் எல்லோரும் வாந்தி எடுப்பது, துர்நாற்றம் வீசும் இடங்களைக் கடக்கும்போது உண்டாகும் வாந்தி, பல் தேய்க்கும்போது பிரஷ் தொண்டையைத் தொட்டுவிட்டால் வாந்தி வருவது போன்றவை இதற்கான உதாரணங்கள்.

வாந்திக்கு மனமும் ஒரு காரணம்தான். ஸ்ட்ரெஸ், கவலை, கலக்கம் இந்த லிஸ்ட்டில் இடம் பெறும். இந்த வாந்தி பெரும்பாலும் காலை உணவு சாப்பிட்டதும் ஏற்படும். பணிச் சுமையை நினைத்து அல்லது தங்கள் ‘பாஸை’ நினைத்துப் பயப்படுபவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். பள்ளிக்குச் செல்ல பயப்படும் குழந்தைகள் பஸ்ஸில் ஏறும்போது வாந்தி எடுப்பது இந்த ரகம்தான்.

இன்னொரு உதாரணம், இளவரசி. வயது இருபது. ஏழைக் குடும்பம். பேண்டேஜ் கம்பெனியில் வேலை. அந்த வேலைக்குப் போனதிலிருந்து அவளுக்கு வாந்தி ஆரம்பித்துவிட்டது. அரசு மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்தார்கள். எல்லாமே நார்மல். ஆனால், வாந்தி மட்டும் நிற்கவில்லை. பெற்றோருடன் என்னிடம் வந்தாள் இளவரசி. நிறைய விசாரித்தேன். “உங்கள் மகளுக்கு மருந்து ஒன்றும் வேண்டாம். வேலைக்குப் போவதை ஒரு வாரம் நிறுத்துங்கள்.

வாந்தியும் நின்றுவிடும்” என்றேன். “மருந்து இல்லாமல் என்ன சிகிச்சை?” என்று என்னை நம்பாமல் பார்த்தனர். “சொல்வதைச் செய்யுங்கள்!” என்று கட்டாயப்படுத்தியதும்தான் சம்மதித்தனர். ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்தனர், மலர்ந்த முகத்துடன். “மகளுக்கு வாந்தி சரியாகிவிட்டது, டாக்டர்! இனி அவளை வேலைக்கு அனுப்பலாமா?” என்று கேட்டனர். “அனுப்பலாம்தான். ஆனால் வேறு வேலைக்கு!” என்றேன். “ஏன், டாக்டர்?” என்றனர் அதிர்ச்சியுடன்.

இளவரசியை வெளியில் அனுப்பிவிட்டு பெற்றோரிடம் தனியாகச் சொன்னேன், “அவளுக்குப் பிரச்னையே அந்த வேலைதான். அவளுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. அதைப் பலமுறை உங்களிடம் சொல்லியிருக்கிறாள். உங்கள் ஏழ்மையைக் காரணம் காட்டி அதை நீங்கள் நிராகரித்துவிட்டீர்கள். இதற்கு மனரீதியான ரீயா க் ஷன்தான் வாந்தி” என்றேன். புரிந்துகொண்டு, இளவரசியை டெய்லரிங் வேலைக்கு அனுப்பினார்கள். அதற்குப் பிறகு இளவரசி என்னிடம் வாந்திக்காக வந்தது, திருமணம் ஆகி கர்ப்பம் ஆனதும்தான்!

(இன்னும் பேசுவோம்...)

வாந்தியைத் தடுக்க வழி!

* ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் ஓரங்கட்டுங்கள்.
* அவசர அவசரமாகவோ, அளவுக்கு அதிகமாகவோ சாப்பிடாதீர்கள்.
* கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த நொறுக்குத் தீனிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
* வாந்தி எடுத்து உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓஆர்எஸ்’ எனப்படும் உப்பு-சர்க்கரைக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம். அல்லது 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து ஒவ்வொரு டீஸ்பூனாகக் குடிக்கலாம்.
* ‘பயண வாந்தி’ உள்ளவர்கள் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.
* வாந்தி மையத்தைத் தூங்க வைக்க, குடல் தசைகளுக்கு ஓய்வு கொடுக்க என்று வாந்தியை நிறுத்தும் மாத்திரைகளில் பலவிதம் உண்டு. எனவே, வாந்திக்குக் காரணம் அறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்.

வாசகர் கேள்விகள்

உணவு ஜீரணம் ஆவதற்கு  ‘ஸ்வீட் பீடா’ சாப்பிடலாமா?
-சிதம்பரநாதன், கடம்பூர்.

உணவு செரிமானம் ஆகத் தேவையான செரிமான நீர்கள் நம் செரிமான மண்டலத்திலேயே சுரக்கின்றன. ஆகவே, பீடா, வெற்றிலை, பாக்கு, புகையிலை போன்ற உபரி வஸ்துகள் தேவையில்லை. பீடாவில் கலக்கப்படும் பொருட்கள்  ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன. பல இடங்களில் இப்போது போதைப் பொருட்களையும் பீடாவில் கலந்து தருகிறார்கள். எனவே, பீடாவால் பாதிப்புகள்தான் அதிகம்.

பீடாவைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, வாயிலும் இரைப்பையிலும் செரிமான நீர் உற்பத்தியாவது குறைகிறது. வாய்ப்புண் வருகிறது. தொண்டையில் எரிச்சல் ஏற்படுகிறது. பற்களில் கறை படிகிறது. இந்தப் பழக்கம் வருஷக்கணக்கில் தொடர்ந்தால், வாயின் உட்புற செல்கள் அழிகின்றன. இதன் விளைவால், புற்றுநோய் வருகிறது. எனவே, பீடா வேண்டாம்!

எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. அடிக்கடி பஃபே விருந்துகளுக்குச் செல்ல வேண்டியது வருகிறது. அளவில்லாமல் சாப்பிட்டுவிடுகிறேன். அஜீரணம் ஆகிவிடுகிறது. ரத்த சர்க்கரை கூடிவிடுகிறது. இதைத் தடுக்க என்ன செய்வது?
-ரத்தினவேல், சென்னை-9.
   
விருந்தில் சிறிய தட்டை எடுத்துக்கொள்ளுங்கள். பிடித்த உணவை மட்டும் அளவாக எடுத்துக் கொள்ளுங்கள். வறுத்த, பொரித்த உணவுகள் வேண்டாம். அதிக இனிப்புப் பண்டங்களை ஓரங்கட்டுங்கள். ஆவியில் வேகவைத்த உணவுகளையும் காய்கறிகளையும் சற்று கூடுதலாகச் சாப்பிடலாம். சிறிதளவு பாயசம் சாப்பிடலாம். சூப் குடிக்கலாம். டெசர்ட் வகைகளைக் கட்டாயம் தவிர்க்கவும். ஒரு மணி நேரம் வரைகூட நிதானமாகச் சாப்பிடுங்கள்.

நிறைய தண்ணீர் குடியுங்கள். கோலா பானங்கள் வேண்டாம். நிறைய சாப்பிட்டுவிட்டால், அடுத்த இரண்டு நாட்களுக்குக் கூடுதலாக உடற்பயிற்சி செய்து, உடலில் சேர்ந்த கூடுதல் கலோரிகளை எரித்துவிடுங்கள். விருந்துக்குப் பிறகு வழக்கமான உணவுமுறையைக் கடைப்பிடியுங்கள். இது கடைசி என்றாலும் முக்கியம்.