மினியேச்சர் மனிதர்கள்!



பிரமாண்ட விஷயங்களைப் போலவே மினியேச்சர்களும் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துபவை. ‘புலி’யில் வரும் ‘ஜிங்குலியா ஜிங்குலியா சித்திரகுள்ளிசிலிர்க்கிறாளே..’ பாடலில் வரும் குட்டி மனிதர்களைப் போல செம க்யூட்டாக இருக்கிறது ‘மை க்யூட் மினி’யில் காணப்படும் குட்டி சிலைகள். திருமண கொண்டாட்டங்கள், ட்ரக்கிங் மனிதர்கள், க்யூட் குழந்தைகள், சினிமா, அரசியல் பிரபலங்கள் என அத்தனை பேரையும் மினி சிலைகளாக வடிவமைத்துள்ளார் சென்னையைச் சேர்ந்த ஹரி.

‘‘ஹாபியாக ஆரம்பித்தது இன்னிக்கு சின்ஸியராக பிசினஸ் பண்ற அளவிற்கு வந்துவிட்டது பாஸ்’’ என ஆரம்பிக்கிறார் ஹரி. ‘‘என்னோட பூர்வீகமே சென்னைதான். பி.இ. கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சிட்டு, ஐ.டி.யில வேலை. படிக்கும்போதே கைகளில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு மினியேச்சர் மாதிரி எதாவது கட்டிங், வெட்டிங் வேலைகள் செய்துகொண்டே இருப்பேன். எனது சின்னச் சின்ன ஆர்ட் வொர்க்கைப் பார்த்த பலரும் என்னைப் பாராட்ட, முறைப்படி கோர்ஸ் படிச்சிட்டு களத்தில் இறங்கினால் இந்தத் துறையிலும் சாதிக்க முடியுமே என ஆறு மாத கோர்ஸ் படிச்சேன்.

ஒருநாள் எங்கள் வகுப்பாசிரியரின் மகளை சின்ன மினியேச்சர் சிலையாக வடிவமைத்தேன். தத்ரூபமான அந்த குட்டி சிலையைப் பார்த்த பலரும் இதுபோல செய்து ஆன்லைனில் பிஸினஸ் பண்ணலாம் என ஐடியா கொடுக்க, உடனே அதைச் செயல்படுத்தினேன். முழு நேரப் பணியா இப்போ நானும், என்னோட அண்ணனும் சேர்ந்து இந்த வேலையில் இறங்கியிருக்கோம்.

எங்களுடைய சிலைகள் எல்லாமே சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் வடிவமைக்கறோம். குழந்தைகள் பயன்படுத்தினால் கூட ஆபத்து நேராத மெட்டீரியல்களைக் கொண்டு உருவாக்குகிறோம். அழகோடு சேர்ந்து பாதுகாப்பும் கருத்தில் கொள்கிறோம். கிஃப்ட் கொடுக்க சிறந்த பரிசா இந்த மினியேச்சர்கள் இருப்பதால், காதலர்கள் விரும்பி வாங்குறாங்க.

இப்போ பிப்ரவரி 14 வேற வரப்போவதால், இப்போதே நிறைய கிரியேட்டிவ் கிஃப்ட்கள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டோம். 2ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் வரை இந்த மினியேச்சர்களின் விலைகள் இருந்தாலும் 16 செ.மீ.யில் ஆரம்பித்து ஒரு அடி உயரம் வரை சிலைகள் இருக்குமாறு வடிவமைக்கிறோம்.’’

‘‘ஒருத்தரோட மாடலை வடிவமைக்க எத்தனை நாட்கள் ஆகும்?’’
‘‘பெரும்பாலான சிலைகளை செராமிக், களிமண், பிளாஸ்டர் ஆஃப் பாரீஸ் போன்ற பொருட்களைக் கொண்டு செய்கிறோம். மெட்டீரியலின் தன்மைக்கேற்ப ஒரு நாளிலும் முடியலாம்; மூன்று, நான்கு சிட்டிங்குகளும் ஆகலாம். அதாவது ரெண்டு வாரத்தில் ரெடி பண்ணி கொடுத்திடலாம். செராமிக்ஸ் பொம்மைகள் பார்ப்பதற்கு அழகாகவும், நுணுக்கமானதாகவும் இருப்பதால் கூடுதல் உழைப்பு தேவையாக இருக்கும். சின்னதொரு புகைப்படம் கொடுத்தாலே போதும், அதில் இருப்பவரை தத்ரூபமாக டிசைன் செய்து
விடுவது எங்க ஸ்பெஷல்.

‘உங்ககிட்ட விலை அதிகமா இருக்குதே’னு சிலர் சொல்லுவாங்க. மெஷினோ, அச்சோ கொண்டு எந்த சிலைகளையும் நாங்கள் உருவாக்கறது கிடையாது. எல்லாமே ஹேண்ட்மேட்தான். ஒவ்வொருவர் முகத்துக்கும் அந்த சரியான முகவெட்டு வர்ற வரைக்கும் பர்ஃபெக்‌ஷன் பார்க்க வேண்டும். சின்ன மாற்றம் இருந்தால் கூட கஸ்டமர் அது என்னோட முகம் இல்லைன்னு சொல்லிடுவாங்க. அப்புறம் அதுக்காக நாங்க உழைத்த உழைப்பு வீணாகிடும். இன்னொரு ஸ்பெஷல், எங்க தயாரிப்புகளுக்கு பத்து வருடங்கள் வரை உத்தரவாதமும் உண்டு’’ என ஹரி சொல்ல, எதிரே புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள் மினியேச்சர் மனிதர்கள்.

- ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆர்.சி.எஸ்