விஜய் 60 விறுவிறு சீக்ரெட்ஸ்



விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளியில் கலர்ஃபுல் கொண்டாட்டங்கள் காத்திருக்கின்றன. ‘விஜய் 60’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் குதூகலம் அது. ‘அழகிய தமிழ்மகன்’ பரதனின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தில் என்ன ஸ்பெஷல்? சாருக்கு டபுள் ஆக்‌ஷனா? எத்தனை கெட்டப்கள்? யாரெல்லாம் படத்தில் இருக்கிறார்கள்? படம் எப்போ ரிலீஸ்? என பல கேள்விகள் விஜய் ரசிகர்களின் மனதில் சிக்ஸர் அடித்துக் கொண்டிருக்கின்றன. படம் பற்றி விசாரித்தால், வியக்க வைக்கும் தகவல்கள் வந்து கொட்டுகின்றன.

* இயக்குநர் தரணியின் அசிஸ்டென்ட்டான பரதன், ‘கில்லி’, ‘தூள்’ படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். ‘கில்லி’ விஜய்க்கு மகுடம் சூட்டிய படம். அந்தப் படத்தில் இருந்தே பரதனும் விஜய்யும் நெருக்கமானார்கள். அந்த நட்பின் அடிப்படையிலேயே ‘அழகிய தமிழ்மகன்’ இயக்கினார். அதன் பின் டைரக்‌ஷனைத் தவிர்த்த பரதன், அஜித்தின் ‘வீரம்’ படத்திற்கு வசனம் எழுதி, அதன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார்.

இப்போது ‘விஜய் 60’ மூலம் மீண்டும் இயக்குநராகக் களம் இறங்கியிருக்கிறார். ஃபேமிலி, சென்டிமென்ட், காமெடி கலந்த வசனங்கள் மூலம் கவனத்தை ஈர்த்தவர் பரதன். அதனால் இந்தப் படத்திலும் வசனங்கள் பேசப்படும். ‘‘பன்ச் டயலாக்கா வேணாம்ங்ணா... பேசுறதே பன்ச்சா இருக்கட்டும்ங்ணா’’ என விஜய்யும் வேண்டுகோள் வைக்க, அவரது டேஸ்ட்டுக்கே வசனங்களை எழுதியிருக்கிறார் பரதன்.

* படத்தின் டைட்டில் ‘எங்க வீட்டு பிள்ளை’ என தகவல்கள் கிளம்பிவிட, ‘‘இது எந்தப் படத்தோட ரீமேக்கும் அல்ல’’ என அவசரமாக மறுத்திருக்கிறார்கள். ‘‘பெரிய பெயர் வேண்டாம். ‘கில்லி’, ‘ஜில்லா’, ‘தெறி’ மாதிரி சிம்பிளான டைட்டிலாக இருந்தால் நல்லதுங்ணா’’ என்று சொல்லியிருக்கிறார் விஜய். எனவே இந்தப் படத்துக்கும் ஒற்றை வார்த்தை டைட்டில்தான் இருக்கும்!

* படத்தில் விதவிதமான கெட்டப்களில் விஜய் வருகிறார். கிராமத்து இளைஞன், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடன்ட் என டபுள் ஆக்‌ஷனில் விஜய் கலக்கப் போகிறார் என்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் கல்லூரி மாணவியாக நடிக்கிறார்.

* சென்னையில் சிம்பிளாக பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு, பிறகு ஐதராபாத்தில் நடந்தது. விஜய் - கீர்த்தி சுரேஷ் காலேஜ் போர்ஷன் படப்பிடிப்பு அங்கே நடந்தது. இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி பகுதிகளில் செட் போட்டு படமாக்கியிருக்கிறார்கள். பின்னர் சென்னை திரும்பியவர்கள் மகாபலிபுரத்தில் கல்லூரி சீன்களை படமாக்கி யுள்ளனர். படத்தின் கடைசிக் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடக்கிறது. இதற்காக யூனிட் தயாராகி வருகிறது.

* படத்தில் கீர்த்தி சுரேஷ் தவிர துணைக் கதாநாயகிகள் இருவர் உள்ளனர். ஒருவர் அபர்ணா வினோத். இன்னொருவர் பாப்ரி கோஷ். பெங்காலி பெண். ‘டூரிங் டாக்கீஸ்’ படத்தில் அறிமுகமானவர்.

* இந்தப் படம் ‘கில்லி’ டைப் கதை என்றும், கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவம் ஒன்றை கதையாக்கியுள்ளனர் என்றும் கிசுகிசுக்கிறார்கள். விஜய்யின் பாஸ் ஆக ஒய்.ஜி.மகேந்திரன், அவரது மகளாக பாப்ரி கோஷ், கிராமத்துப் பெண்ணாக அபர்ணா வினோத் ஆகியோர் வருகிறார்கள். தவிர ‘மொட்டை’ ராஜேந்திரன், சதீஷ், ஸ்ரீமன், ‘ஆடுகளம்’ நரேன், தம்பி ராமையா, மைம் கோபி என பலரும் உள்ளனர்.

* படத்தில் வில்லன்களுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். ‘லிங்கா’வுக்குப் பிறகு ஜெகபதிபாபு தமிழில் நடிக்கும் படம் இது. விஜய்யுடன் முதல்முறையாக இணைந்திருக்கிறார் டேனியல் பாலாஜி. இவர்கள் தவிர ஹரீஷ் உத்தமனும் உண்டு.

* ‘போக்கிரி’யில் விஜய்யின் காஸ்ட்யூம் பெரிதும் பேசப்பட்டது. சட்டையுடன் டி-ஷர்ட்டும் சேர்ந்ததுபோல் ஒரு வித்தியாசமான ஷர்ட்டை வடிவமைத்திருந்தனர். பட ரிலீஸுக்குப் பிறகு அந்த காஸ்ட்யூம் ‘போக்கிரி’ சட்டை என ட்ரெண்ட் ஆனது. அதன்பிறகு விஜய்யின் வேறு எந்தப் படத்திற்கும் அந்தப் பெருமை கிடைக்கவில்லை. இப்போது மீண்டும் விஜய் ரசிகர்கள் விரும்பி அணியும் வண்ணம் புதுவித காஸ்ட்யூமை விஜய் பயன்படுத்தியிருக்கிறார். படத்தில் அவரது உடை, அக்சஸரீஸ்களில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

* ‘போக்கிரி’ படத்தின் சக்சஸ் ஃபங்ஷனுக்காக திருவனந்தபுரத்திற்கு வந்த விஜய்யை கூட்டத்தில் ஒரு ஓரமாக இருந்து சந்தித்து மகிழ்ந்த கீர்த்தி சுரேஷ், இந்தப் படத்தில் ரொம்பவே ஆர்வம் பொங்க நடித்து வருகிறார்.

* படத்திற்கு இசை சந்தோஷ் நாராயணன். சுகுமாறன் ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங் தவிர பரதனின் பிரியமான டெக்னீஷியன்களும் படத்தில் உண்டு. அனல் அரசுவின் சண்டைக்காட்சிகள் படத்தில் பேசப்படுமாம்.

* படப்பிடிப்பு நடந்த ஸ்பாட்களில் குவியும் ரசிகர்களுக்கு சின்னதொரு ஸ்மைலும், கூடவே போட்டோ எடுத்துக்கொள்ளும் வாய்ப்பும் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கிறார் விஜய். இதுவரை அவர் நடித்த படங்களிலேயே ரசிகர்களுடன் அதிகமாக புகைப்படம் எடுத்துக்கொண்டது இந்தப் படத்தின் ஷூட்டிங்கில்தான்.

* முதல்முறையாக இதில் விஜய் சில கெட்டப்களுக்கு விக் வைத்து நடித்திருக்கிறார்.

* விஜய்யின் செம கமர்ஷியல் படங்களுக்கு கேரளாவில் வரவேற்பு அதிகம். ‘விஜய் 60’ படத்தின் கேரளா தியேட்டர் உரிமை 6 கோடி ரூபாய்க்கு மேல் விற்றிருப்பதாக சொல்கிறார்கள். கேரளாவில் இப்படி வியாபாரம் ஆகியுள்ளது விஜய்க்கு இதுவே முதல்முறை. கேரளா ரசிகர்களை மனதில் வைத்து, படத்தில் பாதிக்கும் மேற்பட்ட கேரக்டர்களில் மலையாள நடிகர்- நடிகையர் நடிக்கின்றனர். ‘தெறி’யில் அப்பா-மகள் சென்டிமென்ட் வொர்க் அவுட் ஆனது போல் இதிலும் ஒரு குழந்தை நட்சத்திரம் உண்டு. மலையாளத்தில் ‘சங்கு சக்கரம்’ படத்தில் நடித்த ஆறு வயது சுட்டியான மோனிகா இதில் நடிக்கிறார்.

* ஐதராபாத்தில் படத்தின் ஓப்பனிங் பாடலைப் படமாக்கியுள்ளனர். படத்தின் பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்த நிலையில் இன்னும் பாடல் காட்சிகளில் மட்டும் ஒரு பகுதியைப் படமாக்க வேண்டியிருக்கிறது. ஒரு பாடலை விஜய்யை பாட வைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர்.

* நடந்து முடிவுற்ற இரண்டு கட்ட படப்பிடிப்பின் எடிட்டிங் பணிகள் நிறைவடைந்துவிட்டன.

* அக்டோபரில் படப்பிடிப்பு நிறைவடையும் என்கிறார்கள். பொங்கலுக்கு ‘விஜய் 60’ அட்டகாச என்ட்ரி!

- மை.பாரதிராஜா