அன்பால் கட்டிய டாய்லெட்!



கஷ்டப்படும் பள்ளி நண்பனுக்காக, மற்ற மாணவ நண்பர்கள் பெரிதாக என்ன செய்துவிட முடியும்? வேண்டுமானால் ஒரு புத்தகமோ, பேனாவோ, பென்சிலோ வாங்கித் தந்து தங்களால் முடிந்த உதவிகள் செய்யலாம். அவ்வளவுதான் என நினைப்போம்! ஆனால், தேத்தாகுடி தெற்கு கிராம மாணவர்கள் இதில் ரொம்பவே வித்தியாசமாக, தங்கள் உயிர்த் தோழனின் வீட்டிற்கு கழிப்பறையே கட்டித் தந்து அசத்தியுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகாவில் இருக்கிறது தேத்தாகுடி தெற்கு என்ற சிறிய கிராமம். இங்குள்ள, எஸ்.கே அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள் ஹரீஷ், வசீகரன், ராகுல், நவீன்ராஜ், அகத்தியன். ஐவரும் உயிர் தோழர்கள். இதில், அகத்தியனின் குடும்பம் ஏழ்மையானது. தந்தையும், தாயும் கூலி வேலை செய்கிறார்கள். வீட்டில் கழிப்பறை வசதி கிடையாது. தங்கள் நண்பனுக்கு உதவி செய்ய, இப்படியொரு வேலையில் இறங்கியிருக்கிறார்கள் இந்த மாணவர்கள்.

‘‘அகத்தியன் எங்களோட உயிர் நண்பன். அவன்  அடிக்கடி தொற்றுநோயால் கஷ்டப்படுவான். இதனால, ஸ்கூலுக்கு அப்பப்போ லீவும்  போட்டுருவான். இதுக்கு திறந்தவெளியைக் கழிப்பறையா பயன்படுத்தறதும் ஒரு காரணம்னு  தெரிஞ்சது. அவனுக்கு ஏதாவது பண்ணணும்னு தோணுச்சு. இதுக்கிடையில, சுகாதாரம்  பத்தி ஒரு விழிப்புணர்வுப் பேரணியை ஸ்கூல்ல நடத்தினாங்க. அதுல கலந்துக்கிட்டோம்.  அப்போதான் ‘நாமே ஒரு கழிப்பறையை அகத்தியன் வீட்டுக்குக் கட்டிக்  கொடுக்கலாம்’னு ஐடியா வந்துச்சு.

உடனே எங்க ஆசிரியர் வீரமணி சார்கிட்ட இதுபத்திப் பேசினோம். ‘உங்களால பண்ண முடியுமா?’னு அவர் கேட்டார். ‘முடியும்’னு சொல்லிட்டு, அப்படியே ஸ்கூல்ல படிக்கிற பசங்க, ஆசிரியர்கள்னு  எல்லோர்கிட்டயும் பணம் வசூலிக்க ஆரம்பிச்சோம். கிட்டத்தட்ட ஐயாயிரம்  ரூபாய்க்கு மேல கிடைச்சது. ஊர்ல இருக்கிற ஒரு கொத்தனார்கிட்ட பேசி இந்தக்  கழிப்பறையைக் கட்டி முடிச்சோம்’’ என்கிறார்கள், இந்த மாணவர்கள் மெல்லிய குரலில்!

‘‘ஆரம்பத்துல நண்பனுக்காகன்னுதான் இந்த வேலையில பசங்க இறங்கினாங்க. அப்புறம், கிராமத்துக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துற விஷயமா மாத்திட்டாங்க. அவங்க பணம் கலெக்ட் பண்ணிட்டு வந்து என்கிட்ட காட்டியதும் நான் ஆச்சரியமாயிட்ேடன். உடனே, அவங்களுக்கு கட்டிடப் பொருள்கள்ல இருந்து தேவையான எல்லா உதவிகளும் செஞ்சேன். அந்தக் கொத்தனாருக்கு இவங்களும் உதவி செஞ்சு, மூணே நாள்ல இந்தக் கழிப்பறை வேலையை முடிச்சாங்க. பசங்களோட சமூக அக்கறையை நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என மெச்சுகிறார் ஆசிரியர் வீரமணி!

- பேராச்சி கண்ணன்
படங்கள்: பாலச்சந்திரன்