குட்டிச்சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

தல, தளபதில ஆரம்பிச்சு சின்ன தளபதி, குட்டி தளபதி, புரட்சி தளபதி, வறட்சி தளபதி வரை ரஜினி, கமல் படங்களைத்தான் பலரும் வழக்கமா ரீமேக் செய்வாங்க... இல்ல, ரஜினி/ கமல் பட டைட்டிலைத்தான் தங்கள் படத்துக்கு வைப்பாங்க. அதுல சில பேரு அந்தப் படத்துக்கும் செகண்ட் பார்ட், தேர்ட் பார்ட்னு போவாங்க. ஆனா, இப்பல்லாம் ரஜினியும் கமலுமே தங்கள் படங்களுக்கு  செகண்ட் பார்ட் போக ஆரம்பிச்சுட்டாங்க.

கமலின் ‘விஸ்வரூபம் 2’வைத் தொடர்ந்து இப்ப ரஜினியின் ‘கபாலி 2’. கோடம்பாக்கத்துல இந்த வார ஹாட் டாபிக்கே ‘கபாலி-2’தான். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களே பார்ட் 2 பண்றப்ப, மிச்ச நட்சத்திரங்கள் எல்லாம் தங்களின் சிறந்த படங்களை பார்ட் 2 எடுக்கக்கூடாதா என்ன?

கேப்டனுக்கு சரியான சாய்ஸ் ‘வானத்தைப் போல பார்ட் 2’தான். முதல் பார்ட்ல பிரிஞ்சு போக வாய்ப்பிருக்கும் தனது தம்பிகளை  கூட்டுக்குடும்பத்துல சேர்க்க, அறுபது அடி கட்டிடத்துல அந்தரத்துல தொங்கிக்கிட்டு பெயின்ட் அடிக்க கஷ்டப்பட்ட மாதிரி, இரண்டாவது பார்ட்ல, தன் தம்பிகளை குடும்பத்தை விட்டுத் துரத்த, பகல் 12 மணி ஆகலையேன்னு டாஸ்மாக் திறக்க தவிக்கிறதுதான் கதை. முதல் படத்துல தம்பிகளுக்கு லூசா சட்டை தைச்சு கொடுத்து பார்க்கிற நம்மளை கண் கலங்க வச்ச மாதிரி, ரெண்டாவதுல வேணும்னே சட்டை தைச்சு தரேன்னு ஜாக்கெட் தைச்சும், பேன்ட் தைச்சு தரேன்னு பாவாடையும் கொடுத்தும் கடுப்ப கிளப்புறாரு.

முதல் பாகத்துல தனது தம்பிங்களுக்காக தனது காதலையே தியாகம் பண்ணி தலைநிமிர்ந்து நின்ன மகாராசா, ரெண்டாவது பாகத்துல தனது தம்பிங்களை வெறுப்பேத்த பக்கத்து வீட்டுல சுவரேறிக் குதிச்சு ‘சொல்வதெல்லாம் எங்கடா உண்மை’ நிகழ்ச்சில தலைகுனிஞ்சு நிக்கிறாரு. பிரபு ‘சின்னதம்பி பார்ட் 2’ல நடிக்கலாம். வீடு கட்டுறதுல ஆரம்பிச்சு பண்டிகைக்கு பாட்டு கட்டுறது, பொண்ணுங்க புடவை கட்டுறது முதல் பொணத்துக்கு பாடை கட்டுறது வரை எல்லாம் தெரிஞ்ச சின்னதம்பிக்கு குஷ்பூ கழுத்துல தாலி கட்டுறது மட்டும் தெரியல.

ஒரு ஒன்றரை டன் அமுல் பேபிய ஏமாத்தி தாலி கட்ட வச்சதை வச்சு, செகண்ட் பார்ட்ல ஊருல பல்லு போன கிழவி முதல் பவுடர் போடுற குமரி வரைக்கும் எல்லோர் கையிலயும் ராக்கி கட்ட வைக்கிறோம். பாக்யராஜுக்கு பார்ட் 2க்கு பிரமாதமா செட் ஆகக்கூடியது ‘அந்த ஏழு நாட்கள்’தான். ‘‘சாரே! எந்தே காதலி உங்க மனைவி ஆகலாம், பட்சே உங்க மனைவி என் காதலி ஆக முடியாது’’ன்னு ராஜேஷ் கைல தன் காதலியைக் கைகோர்த்துட்டு பாக்யராஜ் போய்விட, பொண்டாட்டி தொல்லை பொறுக்க முடியாம, கடுங்கோபத்தோட பாக்யராஜை தேடிப் பிடிச்சு அவர் திருப்பி ஒப்படைச்சுட்டு வர்றதுதான் கதை. 

படிக்க வேண்டி ஒத்தைக் காலுல நின்ன முட்டம் சின்னப்பதாஸ் சத்யராஜை வச்சு ‘கடலோரக் கவிதைகள் பார்ட் 2’ பண்ணலாம். ஒரு மனுஷன் படிச்சா, ஹோம்வொர்க் பண்ணாம கிளாஸ் ரூம் வாசல்ல, கிளாஸை கட்டடிச்சதுக்கு காலேஜுக்கு வெளிய, வேலைக்கு பதிவு பண்ண எம்பிளாய்மென்ட் ஆபீஸ் க்யூவுல, இன்டர்வியூக்கு ஆயிரம் ஆபீஸ்கள் வாசல்ல, சம்பளம் எடுக்க ஸ்டேட் பேங்க் ஏடிஎம் வாசல்லன்னு இப்படி பல க்யூக்கள்ல நிற்கணும்னு காட்டலாம்.

நாலு நண்பர்கள் இருந்தாங்களாம். முதல் ஆளு சொன்னானாம்... ‘‘மச்சான்! நான் ஒரு கார் வாங்கியிருக்கேன். எப்பவும் அதை ஓட்டுறப்ப, சீட் பெல்ட் போட்டுக்கிட்டுதான் ஓட்டுவேன். அதான் உயிருக்கு பாதுகாப்பு’’ன்னு. ரெண்டாவது ஆளு ஆரம்பிச்சானாம், ‘‘மச்சான்! நானும் ஒரு கார் வாங்கியிருக்கேன். எப்பவும் அதை ஓட்டுறப்ப, சீட் பெல்ட் மட்டும் போட்டு ஓட்ட மாட்டேன். என் இடுப்புல இருக்கிற பேன்ட் பெல்ட்டையும் கார் சீட்டுல கட்டிக்கிட்டுதான்  ஓட்டுவேன். அதான் ரொம்ப பாதுகாப்பு’’ன்னு.

இதைக் கேட்டுக்கிட்டு இருந்த மூணாவது ஆள் சொன்னானாம், ‘‘மச்சான்! நான்கூட போன வாரம் ஒரு கார் வாங்கியிருக்கேன். அதை சீட் பெல்ட் போட்டுக்கிட்டு, சீட்டுல என் பேன்ட் பெல்ட்டையும் மாட்டிக்கிட்டு, பாதுகாப்புக்கு தலையில ஹெல்மெட்டையும் மாட்டிக்கிட்டுதான் ஓட்டுவேன். இதுதான்  மிகச் சிறந்த பாதுகாப்பு’’ன்னு. நாலாவதா நம்ம ஆள் சொன்னானாம், ‘‘மச்சான்! இந்தப் பிரச்னைகளுக்காகத்தான் நான் காரே வாங்கலை. இப்ப எனக்கு ஆக்சிடென்ட் ஆகும்னு எந்தக் கவலையும் இல்ல. இதுதான் உண்மையான பாதுகாப்பு’’ன்னு! 

இதைத்தான் நம்ம ஊரு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பின்பற்றுகிறாங்க. உலகத்தின் தலைசிறந்த விமான நிலையமான பெல்ஜியம் பிரஸ்ஸல்ஸ் ஏர்போர்ட்ல தீவிரவாதத் தாக்குதல் நடத்துறாங்க. ஐரோப்பாவின் மிக பிஸியான விமான நிலையமான துருக்கியின் இஸ்தான்புல் ஏர்போர்ட்ல குண்டு வைக்கிறாங்க. மணிக்கு 220-250 கிலோ மீட்டர் வேகம் போகும் ரயில்கள் பிரான்ஸில் தடம் புரளுகின்றன. உலகத்தின் மிகச் சிறந்த சாலையான ஜெர்மனியின் ‘ஆட்டோபான்’ல ஒரு ஆக்சிடென்ட் நடந்தா, அதன் டிராஃபிக்கை க்ளியர் செய்ய வளர்ந்த வல்லரசுக்கே ஒரு நாள் ஆகுது. 

இப்படி, கண்ணாடி மாளிகைக்குள் இருந்தா கல்லடி படறப்ப பெரும் நஷ்டம்  நமக்குத்தான் என்பதை தெளிவாக உணர்ந்த நம்மாளுங்க, அதனாலதான் நம்ம நாட்டுல நல்ல ரோடு, நல்ல உள்கட்டமைப்பு வசதிகள், நல்ல விமான நிலையம்னு எதுவும் பண்ணாம ‘வரும்முன் காப்போம்’ங்கற லட்சியத்தோட இருக்காங்க. சில சமயம் ஏதாவது பண்றதைவிட, எதுவுமே பண்ணாம இருக்கிறதுதான் ரொம்ப நல்லதாம்.

- ஓவியங்கள்: அரஸ்