சச்சினும் கபில்தேவும் கலந்த கலவை!



அசரடிக்கும் ஆறு வயது புயல்

‘‘என் பெயர் ஏடன் ஜோஸ்வா. எதிர்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடுவதுதான் என் கனவு!’’ - கெத்தாக நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் இந்தப் பிஞ்சுக்குரலுக்கு ஜஸ்ட் ஆறு வயதுதான். இந்த வயதில் மணிக்கு 55 மைல் வேகத்தில் பந்து வீசுகிறான் என்றால்... ‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ எனக் கண்ணாடியைக் கழற்றுகிறார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

ஜோஸ்வாவின் கிரிக்கெட் வீடியோதான் சில நாட்களுக்கு முன் ட்விட்டர், வாட்ஸ்ஆப் வட்டாரத்தில் செம வைரல்! ‘‘தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் ஜேக்கப், ‘ரியலி ஷாக்கிங்’ என்ற வாசகத்துடன் ஜோஸ்வாவின் வீடியோவை தன்னோட ட்விட்டரில் பகிர, அதைத் தொடர்ந்து கார்ட்னி வால்ஷ், கிப்ஸ், நிக்கி போஜேனு பலரும் அதை ஷேர் பண்ணினாங்க. அடுத்த சில நிமிடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் எல்லாரும் ஷேர் செய்ய... இப்ப கிரிக்கெட் வட்டாரத்துல முக்கிய நபரா ஜோஷ்வா இருக்கான்!’’ - பெருமிதத்துடன் பேசத் துவங்குகிறார் ஜோஸ்வாவின் தந்தை பால் சாமுவேல்.

‘‘நாங்க நடுத்தரக் குடும்பம்தான். ஜோஷ்வா போன வருஷம்... அதாவது அஞ்சு வயசுல இருந்தே கிரிக்கெட்ல ஆர்வமா இருக்கான். எப்பவும் கிரிக்கெட் பத்திதான் பேசுவான், கேள்வி கேப்பான். இவனுக்காக எப்பவும்  டி.வில கிரிக்கெட் மட்டும்தான் ஓடும். காலையில ஆறு மணிக்கு விளையாட ஆரம்பிச்சா, 11 மணி வரை சோர்வு இல்லாம ஆர்வமா கிரிக்கெட் ஆடிக்கிட்டே இருப்பான். இவன் ஆர்வத்தைப் பார்த்து, நான் வேலையை ரிசைன் பண்ணிட்டு முழு நேரம் இவனுக்கு கோச்சா மாறிட்டேன்.

என்னோட மனைவி ஜெமி தனியார் நிறுவனத்துல வேலை செய்றாங்க. அவங்களோட ஊக்கத்தில்தான் குடும்பம் இயங்குகிறது. இப்போ இவனுக்கு ஆறு வயசுதான். ஆனாலும் ‘இண்டியன் கிரிக்கெட் அகாடமி அண்டர் 12’ டீம்ல இருக்குற பசங்களைவிட திறமையா விளையாடுறான். அண்டர் 12 லெவல்ல இதுவரை 22 மேட்ச் விளையாடி இருக்கான். அந்த டீம்ல இவன்தான் ரொம்ப சின்ன வயசு. ஆனா, எல்லாரையும் விட வேகமா பந்து வீசுறவன் இவன்தான். ஆறு வயசுல 55 மைல் வேகம்ங்கிறது எனக்கே ஆச்சரியமாத்தான் இருக்கு.

இந்தியன் டீம்க்காக இவனைத் தயார்படுத்துறதுதான் என்னோட ஒரே நோக்கம்!’’ என்கிறார் பால் சாமுவேல். தந்தை மட்டுமல்ல... ஜோஸ்வா பற்றிக் கேட்டால் தமிழ்நாடு கிரிக்கெட் ஸ்கூல் ஃபெடரேஷனின் தேர்வு கமிட்டி தலைவர் சந்தோஷ் கோபியும் பரவசப்படுகிறார். ‘‘இயற்கையாவே ஜோஸ்வாகிட்ட கிரிக்கெட் திறமை இருக்கு. எதையும் கட்டாயப்படுத்தி அவனுக்கு சொல்லித்தர வேண்டிய அவசியமில்லை. நிறைய விளையாட்டு நுணுக்கங்களை இவனாவே முயற்சி செஞ்சு கத்துக்கறான்.

பவுலிங், பேட்டிங், ஃபீல்டிங்னு எல்லாத்திலும் ஆல் ரவுண்டரா வரும் திறமை இருக்கு. கிரிக்கெட் நுணுக்கங்களை மாணவர்களுக்கு சொல்லித் தந்தா, சிலர் அதை அப்படியே இமிட்டேட் பண்ணுவாங்க. ஜோஸ்வா அதைத் தாண்டி வேற விதமா விளையாடுறான். நிறைய கேள்வி கேப்பான். பதிலைக் கேட்டுட்டு தன்னோட ஸ்டைல்லதான் விளையாடுறான். இவ்வளவு சின்ன வயசுல இப்படி ஒரு பையன இப்போதான் பாக்குறேன். எதிர்காலத்தில் நிச்சயம் அவன் சச்சின் மாதிரி... கபில்தேவ் மாதிரி வருவான்!’’ என்கிறார் அவர் முழு மகிழ்ச்சியுடன். இந்தியாவின் வீக்னஸே வேகம்தான். அந்த வேகம் தமிழ்நாட்டில் வேகமாக ரெடியாகுது!

இவ்வளவு சின்ன வயசுல இப்படி ஒரு பையன இப்போதான் பாக்குறேன்...

- திலீபன் புகழ்
படங்கள்: ஆர்.சி.எஸ்.