நியூஸ் வே



* ரியோ ஒலிம்பிக்கில் சாதித்த தங்கங்களுக்கு பரிசு மழை குவிந்து வருகிறது. லேட்டஸ்ட்டாக, ஐதராபாத் பேட்மின்டன் சங்கத் தலைவர் சாமுண்டேஸ்வர்நாத், வெள்ளி வென்ற சிந்து, அவரின் பயிற்சியாளர் கோபிசந்த், மல்யுத்தத்தில் வெண்கலம் தட்டிய சாக்‌ஷி, ஜிம்னாஸ்டிக்கில் சிறப்பாக செயல்பட்ட தீபா ஆகியோருக்கு சுமார் ரூ.37 லட்சம் மதிப்பு கொண்ட பி.எம்.டபிள்யு கார்களை, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மூலம் பரிசாக வழங்கி கவுரவித்தார். இந்நிகழ்வில் பேசிய சிந்து, ‘‘கடந்த முறை சச்சின் கையால் ‘ஸ்விஃப்ட் டிசையர்’ கார் பரிசாகப் பெற்றேன். அப்போது சச்சின், ‘ஒலிம்பிக்கில் மெடல் வாங்கினால் இன்னொரு கார் பரிசாகத் தருகிறேன்’ என்றார். இப்போது அது நனவாகிவிட்டது’’ எனச் சொல்லி நெகிழ்ந்தார்.

* டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்த கதையையும், அரவிந்த் கெஜ்ரிவாலின் அசுர வளர்ச்சியையும், ‘An Insignificant Man’ என்ற ஆவணப்படமாக எடுத்திருக்கிறார்கள். டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இது முதல்முறையாகத் திரையிடப்படுகிறது.

* வழக்கமாக ஆசிரியர் தினத்துக்கு ஜனாதிபதி ஆற்றும் உரைதான் அதிகம் கவனத்துக்கு உள்ளாகும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த தினத்தில் மாணவர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நடத்தும் உரையாடல் பாப்புலராகி, ஜனாதிபதி உரையை பின்னுக்குத் தள்ளிவிட்டது. இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தில் மோடி பிஸியாக வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அதனால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மீண்டும் கவனிக்கப்படுவார்!

* டெல்லி மகளிர் ஆணையத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடப்பதாகப் புகார் எழவே, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அங்கு ரெய்டு நடத்தப் போனார்கள். பல மணி நேரம் ரெய்டு முடித்து அதிகாரிகள் கிளம்பும் நேரத்தில், மகளிர் ஆணையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் எல்லோரும் அவர்களைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அந்தப் பெண்கள் ராக்கி கயிறு கட்ட, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தர்மசங்கடத்தில் தவித்துவிட்டார்கள்.

* டெல்லி மகளிர் ஆணையத்தில் பணி நியமனங்களில் முறைகேடு நடப்பதாகப் புகார் எழவே, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அங்கு ரெய்டு நடத்தப் போனார்கள். பல மணி நேரம் ரெய்டு முடித்து அதிகாரிகள் கிளம்பும் நேரத்தில், மகளிர் ஆணையத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் எல்லோரும் அவர்களைச் சுற்றி வளைத்துக்கொண்டார்கள். அந்தப் பெண்கள் ராக்கி கயிறு கட்ட, லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தர்மசங்கடத்தில் தவித்துவிட்டார்கள்.

* இந்திய பல்ப் ஃபிக்‌ஷன் எழுத்தாளர்களில் முன்னணியில் இருக்கும் சேத்தன் பகத்தின் அடுத்த நாவலும் ரெடி. அக்டோபர் 1ல் ரிலீசாக இருக்கும் நாவலின் தலைப்பு ‘ஒன் இண்டியன் கேர்ள்’. இதுவரை சினிமா மட்டுமே சொந்தம் கொண்டாடிய டீசர் கலாசாரத்தை இந்த நாவலுக்கும் கொடுத்து கலக்கி வருகிறார் சேத்தன். ஒரு நிமிடம் ஓடும் டீசரில் நிழல் உருவமாகத் தெரியும் ஒரு பெண்ணின் புகைப்படத்துடன், அந்தப் பெண் தன்னைப் பற்றிச் சொல்லும் அறிமுகமும் கலக்குகிறது.

‘‘ஹாய்! நான் ராதிகா மேத்தா. எனக்கு அடுத்த வாரம் கல்யாணம். நான் ஒரு டாப் இன்வெஸ்ட்மென்ட் பேங்க்கில் வேலை செய்கிறேன். என் கதை ரொம்ப ஆர்வம் தரக்கூடியது. நீங்கள் படிக்கலாம்... ஆனால் எச்சரிக்கை! காரணம், நான் நிறைய பணம் சம்பாதிக்கிறேன். நான் எல்லா விஷயங்கள் பற்றியும் கருத்து சொல்வேன். நான் செக்ஸ்கூட வச்சிக்கிட்டேன்... இப்படி ஒரு ஆண் சொன்னால் உங்களுக்குப் பிரச்னை இல்லை! நீங்கள் விரும்பும் பெண்ணாக நான் இல்லாமல்கூட இருக்கலாம்...’’ என்று அந்த டீசர் கிளப்பிய பரபரப்பில், இந்தப் புத்தகத்துக்கு கபாலியைவிட ஏகப்பட்ட ப்ரீ புக்கிங் ஆர்டர்கள் குவிகிறதாம்.

* மேற்கு வங்காள நிதி அமைச்சர் அமித் மித்ரா ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்துக்குப் போயிருந்தார். ‘‘நமது பிரதம மந்திரி யார்?’’ என அவர் கேட்க, ‘‘நரேந்திர மோடி’’ என கோரஸாக பதில் வந்தது. அமித் மித்ரா தலையாட்டி மறுத்து, ‘‘இல்லை! மம்தா பானர்ஜி’’ என்றார். இது குழந்தைகளை மட்டுமில்லை, அமைச்சருடன் போன அதிகாரிகளையும் ஷாக்கில் தள்ளிவிட்டது. ‘‘நான் முதல் மந்திரின்னு கேட்க நினைச்சேன்’’ என அப்புறம் சமாளித்தார் அமைச்சர்.

* ரியோ ஒலிம்பிக்கில் தென் கொரியாவை விட வட கொரியா குறைவான பதக்கங்களையே வென்றுள்ளது. இது அதிரடி நடவடிக்கைகளுக்கு பெயர் போன வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோபத்தைக் கிளறியுள்ளது. பதக்கம் வெல்லாத வீரர்களை சுரங்கத்தில் கூலி வேலைக்கு அனுப்பப் போவதாக அவர் காட்டமாகச் சொல்லியிருக்கிறார். இந்தப் பிரச்னை இப்படி என்றால், அடுத்து வெடித்திருக்கிறது ‘செல்ஃபி’ பூதம். வட கொரியாவின் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஹோங் உன் ஜோங், தென் கொரிய வீராங்கனையுடன் இணைந்து செல்ஃபி போஸ் கொடுத்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவ, ஹோங்குக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

* ரயில்வேயின் வருமானத்தைப் பெருக்க பத்தாயிரம் ரயில்களில் முதல் பெட்டியிலிருந்து கடைசி பெட்டி வரை முழுவதும் விளம்பரங்களால் கவர் செய்ய முடிவெடுத்திருக்கிறது இந்தியன் ரயில்வே! இதனால் 11 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் கிடைக்குமாம். ‘‘அதோடு ரயில்களுக்கு பெயின்ட் அடிக்கும் செலவும் குறையும். மேலும், இந்த ஐடியாவால் சரக்கு மற்றும் பயணிகள் கட்டணத்தை மட்டுமே வருமானத்துக்கு நம்பியிருந்த நிலை மாறும்’’ என்கிறார் ரயில்வே உயரதிகாரி ஒருவர்.