காதல்



‘இவளைக் கல்யாணம் செய்துகொண்டால் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம்’ என மனதில் நினைத்தபடி பைக்கில் காத்திருந்த சுதாகர், அந்த பங்களாவின் கேட்டைத் திறந்து ஸ்கூட்டியில் வெளியே வந்தவளைப் பார்த்ததும் தன் பைக்கை ஸ்டார்ட் செய்து விரட்டினான். சுதாகர் தன்னைப் பின்தொடர்வதை ஸ்கூட்டியின் ரியர் வியூவில் பார்த்துப் புன்னகைத்தவள், அவன் தன்னை நெருங்கி வரட்டும் என்று வேகத்தைக் குறைத்தாள்.

கிட்டத்தட்ட ஒரு மாதம் வெறும் பார்வையில் பரிமாறிக்கொண்ட காதலை இன்று எப்படியும் சொல்லிவிட வேண்டும் என்று நினைத்த சுதாகர், அவளை உரசுவது போல பைக்கைக் கொண்டு சென்று, ‘‘ஹாய்! ஒரு மாசமா உங்களைப் பார்த்துட்டிருக்கேன். உங்க பேருகூட தெரியாது. ஆனா உங்களைப் பார்த்த நொடியிலயே காதலிக்க ஆரம்பிச்சுட்டேன்...’’ என எச்சில் விழுங்கியபடி சொல்லி முடித்தான்.

‘‘தெரியுங்க! நானும் வாட்ச் பண்றேன். என் பேரு கிரிஜா. எனக்கும் உங்களைப் பிடிச்சிருக்கு. என் வீட்டுல வந்து பொண்ணு கேளுங்க’’ என்றாள் வெட்கத்துடன். ‘‘நிஜமா சொல்றீங்களா... எப்ப வரட்டும்?’’ - ஆச்சரியமாய்க் கேட்டான். ‘‘நாளைக்கு ஈவ்னிங் வாங்க... என் வீடு தெரியுமில்லே? இங்கிருந்து வலது பக்கம் நாலாவது சந்து. அங்கே வந்து வீட்டு வேலை செய்யுற கிரிஜா வீடுன்னு கேளுங்க, சொல்வாங்க!’’ - சொன்னவள் ஸ்கூட்டியின் வேகத்தை அதிகரித்தாள்.

-கீர்த்தி