செல்போனில் எடுக்கலாம் ரயில் டிக்கெட்!



ஜினி படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் வாங்குவதை விட கஷ்டமானது ரயிலில் டிக்கெட் கிடைப்பது! பிளாட்பார்ம் டிக்கெட்டுக்கே பல நிமிடங்கள் க்யூவில் நிற்க வேண்டும். இந்த சூழலில் சென்னை புறநகர் ரயிலில் பயணிப்பவர்கள் சிரமம் தீர்க்க, மொபைல் மூலமாகவே ரயில் டிக்கெட்டை எடுக்கும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது தென்னக ரயில்வே. ‘யு.டி.எஸ்’ (அன்ரிசர்வ்ட் டிக்கெட்டிங் சிஸ்டம்) என்ற ஆப்பை டவுன்லோடு செய்து வைத்துக்கொண்டு இப்படி டிக்கெட் எடுக்கலாம்! இந்த ஆப் எப்படி செயல்படுகிறது? அதன் பயன்பாடுகள் என்ன? ரயில்வே அதிகாரிகளிடம் பேசினோம்...

‘‘மக்கள் பல மணி நேரங்கள் ரயில் நிலையங்களில் காத்துக் கிடப்பதைத் தவிர்ப்பதற்காகவும், பயணிகளின் நேர விரயத்தைக் குறைப்பதற்காகவும் இந்த ஆப்பை அறிமுகம் செய்திருக்கிறோம். ஆண்ட்ராய்ட் போன் வைத்திருப்பவர்கள் மட்டும் இதை உபயோகிக்க முடியும். ஐபோன் வைத்திருப்பவர்களுக்கும், விரைவு ரயில்களில் டிக்கெட் புக் செய்யவும் இந்த  திட்டத்தை எதிர்காலத்தில் கொண்டு வர இருக்கிறோம். இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரம் பேர் இந்த ஆப்பை தரவிறக்கம் செய்திருக்கிறார்கள்.

சென்னை புறநகர் ரயில்களுக்கு மட்டும் அறிமுகமாயிருக்கும் இந்த திட்டம் சென்னையிலிருந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி வரை செல்லும் ரயில்களுக்கும், இதே எல்லைக்குள் ஓடும் பறக்கும் ரயில்களுக்கும் பொருந்தும். தினசரி, சீசன், பிளாட்பாரம் டிக்கட்டுகளை இதில் எடுக்கலாம். கடந்த சில மாதங்களாக ரயில் நிலையங்களில் ஃப்ரீ வைஃபை மூலம் பயணிகளுக்கு இந்த ஆப்பை எப்படி தரவிறக்கம் செய்வது போன்ற விளக்கங்களை செய்து காட்டினோம். இதன்மூலம் ரயில்வே ஊழியர்களை விட அதிகமாக பயன்பெறப்போவது பயணிகள்தான்’’ என்று உற்சாகமாகச் சொன்னார் தென்னக ரயில்வேயின் சென்னை தலைமையக தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி தனஞ்செயன்.

தென்னக ரயில்வேயின் பேசஞ்சர் ரிசர்வேஷன் சிஸ்டத்தின் துணை வணிக மேலாளர் வெங்கட சுப்ரமணியன், இந்த ஆப் எப்படி செயல்படுகிறது என்பது குறித்து பேசினார். ‘‘இந்த ஆப்பை கூகுள் ப்ளே ஸ்டோரில் இலவசமாக தரவிறக்கம் செய்துகொள்ளலாம். தரவிறக்கம் செய்யும்போது சில தகவல்களை இந்த ஆப் கேட்கும். உதாரணமாக உங்கள் போன் நம்பர், உங்கள் முகவரி, ஆதார அடையாள அட்டையின் எண்கள், நீங்கள் இருக்கும் நகரம் போன்ற விஷயங்கள். இதை ஃபீட் செய்தவுடன் ஜெனரேட் ஓ.டி.பி (ஒன் டைம் பாஸ்வேர்ட்) என்று வரும்.

நீங்கள் இந்த ஆப்பை தரவிறக்கம் செய்ததற்கான பாஸ்வேர்ட்தான் இது. பிறகு இந்த பாஸ்வேர்டைக் கொண்டே எப்போதும் டிக்கெட்களை புக் செய்யலாம். நீங்கள் பயணம் செய்ய இருக்கும் ரயில் நிலையத்தின் பெயர், எத்தனை பேர் பயணம் செய்கிறீர்கள், அரை டிக்கெட்டா, முழு டிக்கெட்டா, சாதாரண டிரெயினா, எக்ஸ்பிரஸ் டிரெயினா, ஒருவழி டிரெயினா, இருவழி டிரெயினா போன்ற விஷயங்களைக் கேட்கும்.

இதற்கு எல்லாம் டிக் செய்தபிறகு ‘இ வாலட்’ என்ற ஒரு நிரப்பவேண்டிய இடம் வரும். இந்த இ வாலட்டின் மூலம்தான் டிக்கெட்டுக்குரிய பணத்தை செலுத்த முடியும். அதனால் பணம் கொடுத்து இ வாலட்டை ரீசார்ஜ் செய்துகொள்ளவேண்டும். குறைந்தது 100 ரூபாயிலிருந்து 1000 ரூபாய் வரைக்கும் இந்த வாலட்டில் பேலன்ஸ் வைத்துக்கொள்ளலாம். நம் பர்ஸில் பணம் வைத்திருப்பது போல இதிலும் பேலன்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்று கூறியவர் இந்த ஆப்பை செயல்படுத்துவதில் உள்ள சில நுணுக்கங்களை பகிர்ந்துகொண்டார்.

‘‘இந்த ஆப் எந்த மொபைல் மூலம் தரவிறக்கம் செய்யப்பட்டதோ அந்த மொபைலுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஆகவே ஒருவர் தரவிறக்கம் செய்த மொபைலில் உள்ள சிம் கார்டை இன்னொரு மொபைலுக்கு மாற்றி டிக்கெட்டை புக் செய்ய முயற்சித்தால் அது முடியாது.  ஒருவேளை மொபைல் பழுதானால் இந்த ஆப் குறித்த புகார்களுக்காக 24 மணி நேர சேவை மையத்தில் புகார் தெரிவிக்கலாம்.  இந்த ஆப் மூலம் டிக்கெட் புக் செய்பவர்கள், ரயில் நிலையத்துக்கு சுமார் 50 மீட்டர் தூரத்திலேயே புக் செய்யவேண்டும்.

எந்தவித டிக்கெட்டுகளும் வாங்காமல் ரயில் நிலையத்துக்குள்ளே வந்து இந்த ஆப்பை பயன்படுத்தும்போது, டி.டி.ஆரைப் பார்த்துவிட்டு அவசரமாக டிக்கெட் எடுப்பதற்கு சமமாக ஆகி விடும்’’ என்று முடித்தார் அவர். இந்த ஆப்பை பயன்படுத்தி நம் நேரத்தை மிச்சப்படுத்தலாமே!

24 மணி நேர சேவை மைய தொலைபேசி எண்: 9840931998
புகார் தெரிவிக்க: 138
இமெயிலில் புகார் தெரிவிக்க: www.sr.indianrailways.gov.in
ஃபேஸ்புக்: facebook.com/pages/southern-railway
ட்விட்டர்: @gmsrailway

- டி.ரஞ்சித்
படங்கள்: புதூர் சரவணன்