கார்



வாசலுக்கும் தோட்டத்துக்குமாக நடந்தபடி பெரியநாயகி தவித்தாள். ‘‘இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்ம மாப்பிள்ளை கம்பீரமா கார்ல வந்து இறங்கப் போறார்... இந்த நேரத்தில் கொல்லைப்புற மாட்டுத் தொழுவத்தில் நம்ம பசுமாட்டைக் குளிப்பாட்டப் போறீங்களே? மாப்பிள்ளை நம்மள பத்தி என்ன நினைப்பார்? பொண்ணும் மாப்பிள்ளையும் வந்துட்டுப் போவட்டும். பிறகு நீங்க உங்க செல்ல மாட்டைக் கழுவுங்க... நான் தடுக்கல!’’

முருகேசும் அமைதியாக வீட்டுக்குள் வந்து உட்கார்ந்தார். மாப்பிள்ளை வந்தார். விருந்தெல்லாம் முடிந்து ஊருக்குக் கிளம்ப இருந்தார். தோட்டத்து வேலைகளை முடித்துவிட்டு, ‘‘மாப்பிள்ளை எங்கேம்மா?’’ என்று மகளிடம் கேட்டார் முருகேசு. ‘‘வாசல்ல காரைக் கழுவிட்டிருக்கார்ப்பா. அவருக்கு அது எப்பவும் பளபளப்பா இருக்கணும். அவரே பார்த்துப் பார்த்துச் சுத்தம் பண்ணி...’’ மகள் சொல்லிக் கொண்டிருந்தபோது   பெரியநாயகி மெல்லிய குரலில் சிரித்தபடி  சொன்னாள், ‘‘மாமனாருக்கு ஒரு மாடு... மாப்பிள்ளைக்கு ஒரு காரு!’’

-பர்வதவர்த்தினி