நிமோனியாவும் தரும் நெஞ்சு வலி!
-டாக்டர் கு.கணேசன்
அவர் ஒரு மில் அதிபர். பிசினஸ் விஷயமாக பல ஊர்களுக்குச் சென்றுவிட்டு, அன்றுதான் வீடு திரும்பியிருந்தார். எனக்கு போன் செய்து, “இரண்டு நாட்களாக நெஞ்சு வலிக்கிறது. இருமினாலே வலியில் உயிர் போகுது’’ என்று அவர் சொன்னபோதே அவருடைய ‘சிரமம்’ எனக்குப் புரிந்துவிட்டது. உடனே வரச் சொன்னேன்.
 ஆனால், அவர் ஒரு மணி நேரம் தாமதமாகவே வந்தார். “நெஞ்சுவலி தாங்க முடியல, டாக்டர். ஹார்ட் அட்டாக்கா இருக்குமோன்னு பயந்துட்டேன். அதனாலே வர்ற வழியில் ஒரு லேப்பில் இ.சி.ஜி. எடுத்துக்கிட்டே வந்துட்டேன்” என்றார். அவரது இ.சி.ஜி. அட்டை ‘நார்மல்’ என அறிவித்தது.
அவரை முறைப்படி பரிசோதித்துவிட்டு, “உங்களுக்கு வலது பக்க நுரையீரலில் நிமோனியா தாக்கியுள்ளது. அதனால்தான் நெஞ்சு வலி வந்துள்ளது” என்றேன். அதற்கான பரிசோதனைகளை எழுதிக் கொடுத்தேன். அவர் ஆச்சரியப்பட்டார். “மாரடைப்பில்தானே நெஞ்சு வலி வரும்? நிமோனியாவில் காய்ச்சல்தானே வரும்?” என்றார் என்னை நம்பாமல். அவரைப் போலவே பலரும் ‘நெஞ்சு வலி’ என்றாலே மாரடைப்புதான் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.
அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லை! காரணம் சொல்கிறேன்... நெஞ்சில் நுரையீரல்கள், நுரையீரல் உறைகள், சுவாசக் குழாய்கள், இதயம், இதய உறை, ரத்தக் குழாய்கள், உணவுக் குழாய், இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, உதரவிதானம் என்று பல உறுப்புகள் இருக்கின்றன. இவற்றில் எதற்கு பாதிப்பு என்றாலும், நெஞ்சில் வலி வரும். இதய வலியையும் நெஞ்சில் ஏற்படும் மற்ற வலிகளையும் பிரித்துப் பார்க்கத் தெரிந்துகொண்டால் போதும், அச்சம் தவிர்க்கலாம்!
இதய வலியில் இரு வகை உண்டு. நடக்கும்போது, மாடிப்படிகளில் ஏறும்போது, ஓடும்போது நெஞ்சு வலித்தால், சிறிது ஓய்வுக்குப் பின் அந்த வலி குறைந்தால், அது இதய வலியில் முதல் வகை. இதை ‘ஆஞ்சைனா’ என்கிறோம். மாரடைப்புக்கு முந்தைய நிலை இது. நடுநெஞ்சில் கயிறு கட்டி அழுத்துவது போல் வலி வந்து, அது கழுத்து, தாடை, இடது கைக்குப் பரவினால், அது மாரடைப்பு. இது இதய வலியின் இரண்டாம் நிலை. இந்த வலியின்போது உடல் கடுமையாக வியர்க்கும், மூச்சுத் திணறும், மயக்கம் வரும். இதுதான் உயிருக்கு ஆபத்து தரும்.
நுரையீரலில் நிமோனியா, காசநோய், சுவாசக்குழாய் அழற்சி காரணமாக சளி கட்டும். இதனால் நெஞ்சில் வலி வரும். அப்போது காய்ச்சல், இருமல், சளி, சளியில் ரத்தம் போன்ற துணை அறிகுறிகளும் காணப்படும். நுரையீரல் உறையில் பாதிப்பு இருந்தால், நெஞ்சின் பக்கப்பகுதிகளில் வலி கடுமையாக இருக்கும். தும்மும்போது, இருமும்போது வலி அதிகரிக்கும்.
பெரும்பாலான சமயங்களில் நெஞ்சுவலிக்கு இரைப்பை மற்றும் உணவுக்குழாய் பிரச்னைதான் காரணமாக இருக்கும். இரைப்பை அழற்சி, அல்சர் எனும் இரைப்பை புண், இரைப்பை பிதுக்கம், உணவுக் குழாய் அழற்சி போன்றவை ஏற்பட்டிருந்தால், நெஞ்சில் வலி வரும். இந்த வலியை எளிதில் இனம் காணமுடியும். நடு நெஞ்சில் வலி/எரிச்சல் தோன்றும். வாந்தி, ஏப்பம் வரும். நாம் சாப்பிடும் உணவுக்கும் நெஞ்சில் வலி ஏற்படுவதற்கும் தொடர்பு இருப்பதை உணர முடியும்.
கல்லீரல் அழற்சி காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். அப்போது காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற துணை அறிகுறிகளும் சேர்ந்திருக்கும். பித்தப்பைக் கோளாறுகள் காரணமாக இருந்தால், நெஞ்சில் ஏற்படும் வலி வலது தோள்பட்டைக்குப் பரவும். உதரவிதானத்தில் பிரச்னை இருந்தாலும் நெஞ்சு வலியானது தோள்பட்டைக்குப் பரவும்.
நெஞ்சில் அடிபடுவது, எலும்பு முறிவு, ரத்த உறைவு, தசைப்பிடிப்பு போன்றவற்றாலும் நெஞ்சில் வலி வரலாம். அப்போது நெஞ்சைத் தொட்டாலோ, அசைத்தாலோ வலி அதிகரிக்கும். அக்கி அம்மை, மனம் சார்ந்த பிரச்னை, ரத்த சோகை போன்றவையும் நெஞ்சில் வலியைத் தோற்றுவிக்கும். இப்போது மில் அதிபர் பிரச்னைக்கு வருவோம். அவருடைய பரிசோதனைகள் எல்லாமே அவருக்கு நிமோனியா இருப்பதை உறுதிசெய்தன. அதற்குப் பிறகுதான் நான் சொன்னதை நம்பினார். சரி, நிமோனியா என்றால் என்ன?
நுரையீரலில் ஏற்படும் மோசமான கிருமித்தொற்று இது. பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நோய் பரப்பும் கிருமிகள் இதற்குக் காரணகர்த்தாக்கள். என்றாலும், தாக்கும் விகிதத்தைப் பொறுத்தவரை ‘ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நிமோனியே’ (Streptococcus pneumoniae) எனும் பாக்டீரியாக்கள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இவை அசுத்தக் காற்றின் வழியாக நுரையீரலுக்கு வந்து நோயை ஏற்படுத்தும். ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையும் இது பாதிக்கும்; ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களையும் தாக்கும். நோயாளி இருமும்போது, தும்மும்போது, சளியைக் காறித் துப்பும்போது, இந்தக் கிருமிகள் காற்றில் கலந்து, அதை சுவாசிப்பவருக்கும் தொற்றிக்கொள்ளும். இந்த நோய் உள்ளவர்களோடு நெருங்கிப் பழகுவோருக்கும் நோய் பரவும் அபாயம் அதிகம்.
முதலில் குழந்தைகள் விஷயத்துக்கு வருவோம். இது எல்லா குழந்தைகளையும் பாதிக்குமா? இல்லை. சரியாகத் தாய்ப் பால் குடிக்காத குழந்தைகள், எடை குறைவாகப் பிறக்கும் குழந்தைகள், அசுத்தமான - அதிக நெரிசலான இடங்களிலும் - மாசு நிறைந்த சூழலிலும் வளரும் குழந்தைகள், புகை அடுப்பில் இருந்து வரும் புகையை சுவாசிக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்துக் குறைபாடு - குறிப்பாக வைட்டமின் ஏ சத்துக் குறைபாடு - மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் ஆகியோரை நிமோனியா எளிதில் தாக்கும்.
நிமோனியா தாக்கினால் குழந்தைக்குப் பசி இருக்காது. சாப்பிட மறுக்கும். காய்ச்சல், கடுமையான இருமல், சளி, வேகமாக மூச்சுவிடுதல், மூச்சுத் திணறல், உதடுகள் வெளிறிப்போவது அல்லது நீலம் பூத்துப்போவது போன்ற அறிகுறிகளும் தோன்றும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். இதனால், குழந்தை எந்த நேரமும் அழுது கொண்டிருக்கும்; சோர்வாகக் காணப்படும்.
சரி, பெரியவர்களுக்கு என்ன பிரச்னை? குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதைப் போலவே வயது ஆக ஆக பெரியவர்களுக்கும் குறையும். அப்போது இவர்களையும் நிமோனியா தாக்கும். இரண்டு மூன்று நாட்களுக்குத்தான் இருமல் இருக்கும். இருமும்போது தாங்க முடியாத அளவுக்கு நெஞ்சில் வலி ஏற்படும். கடுமையான குளிர் காய்ச்சல் வரும். இருமலில் சளி வெளியேறும். சளியில் ரத்தம் வரும்; தலைவலி, மூச்சுத் திணறல், பசிக் குறைவு, சோர்வு போன்றவையும் சேர்ந்துகொள்ளும்.
மார்பு எக்ஸ்-ரே அல்லது சி.டி. ஸ்கேன் எடுத்துப் பார்த்தால், நிமோனியா இருப்பது தெரியும். சளியைப் பரிசோதித்தால், அதிலுள்ள கிருமி வகை புரியும். ரத்தம் மற்றும் சிறுநீரில் இந்த பாக்டீரியாவுக்கான ஆன்டிஜென் உள்ளதா என்பதைத் தெரிந்தும் நோயை 100 % உறுதி செய்யலாம். பொதுவான ரத்தப் பரிசோதனைகள் (CBC) செய்து இந்த நோய்க் கிருமிகள் ரத்தத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் நோயின் தீவிரத்தை உணர்ந்து சிகிச்சைமுறையை அமைத்துக்கொள்ளலாம்.
இந்த நோயைக் கவனிக்கத் தவறினால், கிருமிகள் நுரையீரலைத் தாண்டி, ரத்த ஓட்டத்தில் கலந்து, உடல் முழுவதும் பரவக்கூடிய ஆபத்து உள்ளது. குறிப்பாகச் சொல்வது என்றால், முகத்தில் உள்ள சைனஸ் அறைகள், எலும்பு, ரத்தம், வயிறு, காது, மூளை போன்றவற்றைப் பாதித்து, உயிரிழப்பை ஏற்படுத்தும். பயப்பட வேண்டாம். இப்போது நிமோனியாவை ஒழித்துக் கட்ட பல மருந்துகள் உள்ளன. ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்தால், இது சுலபமாக விடை பெற்றுக்கொள்ளும் நோய்தான்.
நிமோனியாவை அதன் தாக்கத்தின் அடிப்படையில் இரு வகைகளாகப் பிரித்து சிகிச்சை அளிப்போம் ஆரம்பநிலை நிமோனியா முதல் வகையைச் சேர்ந்தது. இதற்கு வீட்டில் இருந்தபடியே ஒரு வாரத்துக்கு சிகிச்சை பெற்றால் குணமாகிவிடும். தீவிர நிமோனியா இரண்டாம் வகை. மருத்துவமனையில் அனுமதித்து, சிரை ரத்தக் குழாயில் தகுந்த ‘ஆன்டிபயாடிக்’ மருந்துகள் மற்றும் குளுக்கோஸை செலுத்தியும், மூக்கு வழியாக ஆக்ஸிஜனைச் செலுத்தியும் சிகிச்சை தரப்படும்.
தடுப்பூசி இருக்கு!
நிமோனியா நம்மை நெருங்க விடாமல் தடுக்க ‘நீமோகாக்கல் தடுப்பூசிகள்’ உள்ளன. 50 வயதைக் கடந்தவர்கள் யார் வேண்டுமானாலும் ‘PPSV 23’ தடுப்பூசியை ஒருமுறை போட்டுக்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக, இதய நோய், சிறுநீரக நோய், சர்க்கரை நோய், கல்லீரல் நோய், புற்றுநோய், மண்ணீரல் நோய், எய்ட்ஸ் நோய், ஆஸ்துமா உள்ளவர்கள், மது, புகைப் பழக்கம் உள்ளவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை மேற்கொள்கிறவர்கள், நெடுங்காலம் ஸ்டீராய்டு மருந்துகளைச் சாப்பிடுபவர்கள் ஆகியோர் ‘PCV 13’ தடுப்பூசியை ஒருமுறையும், 2 மாதம் கழித்து ‘PPSV 23’ தடுப்பூசியை ஒருமுறையும் அவசியம் போட்டுக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு ‘PCV’ தடுப்பூசியை ஒன்றரை, இரண்டரை, மூன்றரை மாதம் முடிந்தவுடன் போட வேண்டும். இதற்கு முதன்மைத் தடுப்பூசி (Primary vaccine) என்று பெயர். அதன் பிறகு, 15 மாதங்கள் முடிந்ததும், ஊக்குவிப்பு ஊசியாக (Booster vaccine) ஒரு தவணை போட வேண்டும்.
நிமோனியாவைத் தடுக்க 6 வழிகள்
* குழந்தைக்கு 6 மாதம் கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். * குழந்தைகளும் பெரியவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். * குழந்தைகள் உள்ள வீட்டில் சிகரெட் பிடிக்கக்கூடாது. * சளி இருப்பவர்கள் குழந்தைகளைத் தூக்கக்கூடாது. * இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும். * கண்ட இடங்களில் எச்சில் துப்பக்கூடாது.
வாசகர் கேள்விகள்
எனக்கு ஆஸ்துமா உள்ளது. நான் நுரையீரல் மருத்துவரைச் சந்திக்கும்போதெல்லாம் ‘பீக் ஃபுளோ மீட்டரை’ ஊதச் சொல்கிறார். ஏன்? -எம்.கண்ணன், சென்னை-15. காய்ச்சல் எவ்வளவு உள்ளது என்று தெர்மாமீட்டரை வைத்துப் பார்ப்பதைப்போல நுரையீரல் திறனைத் தெரிந்துகொள்ள ‘பீக் ஃபுளோ மீட்டர்’ (Peak Flow Meter) பயன்படுத்துகிறார்கள். நுரையீரலின் காற்றை உள்வாங்கும் திறன் எப்படி உள்ளது என்பதை அறிய பொதுவாக ‘ஸ்பைரோமெட்ரி’ பரிசோதனை செய்யப்படுவது வழக்கம். இதை ஒவ்வொரு முறையும் செய்தால் பணச் செலவு அதிகமாகும் என்பதால், ‘பீக் ஃபுளோ மீட்டரை’ப் பயன்படுத்துகிறார்கள்.
பார்ப்பதற்கு இன்ஹேலர் போல் இருக்கும் இந்தச் சாதனம் மிகவும் எளிமையான, செலவு அதிகமில்லாத பரிசோதனைக்கு உதவுகிறது. இதை வீட்டில் வைத்துக்கொண்டும் பயன்படுத்தலாம். ஆரோக்கியமான ஆணுக்கு நிமிடத்துக்கு 600 லிட்டர் என்றும், பெண்ணுக்கு நிமிடத்துக்கு 400லிருந்து 500 லிட்டர் என்றும் இருக்க வேண்டும். இதன் மூலம் நுரையீரலில் ஆஸ்துமா பிரச்னை ஆரம்பிப்பதற்கு முன்பே தெரிந்துகொள்ள முடியும். ஆஸ்துமா உள்ளவர்களுக்கு மருந்தின் அளவைக் கூட்டவும் குறைக்கவும் இது பயன்படுகிறது. குழந்தைகள் நீலம் பூத்துப் பிறக்கிறார்களே, இதற்கு வால்வுக் கோளாறுதான் காரணமா? -மஞ்சுளா ரவிக்குமார், ஓசூர். இதயத்தினுள் பிறவியிலேயே ஃபேலட்ஸ் டெட்ராலஜி (Fallot’s tetralogy) எனும் நோய் ஏற்படுவதுதான் காரணம். முக்கியமாக, இதயத்தின் கீழறை இடைச்சுவரில் துளை விழுந்து விடுவதால், அசுத்த ரத்தமும் சுத்த ரத்தமும் கலந்து, உடலுக்குச் செல்லும் ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடுவதே இதற்கு அடிப்படைக் காரணம். இந்த நோயில் நுரையீரல் வால்வு பழுதாவதும் உண்டு. இதுபோல் இன்னும் சில பிறவி இதயக் கோளாறுகளும் உள்ளன. இவை தவிர, குடிநீரில் நைட்ரேட் அதிகமிருந்தால், ‘மெத்ஹீமோகுளோபினிமியா’ எனும் பாதிப்பு ஏற்பட்டு, குழந்தையின் உடல் நீல நிறத்துக்கு மாறும்.
(இன்னும் பேசுவோம்...)
|