காவிரி... மீண்டும் வஞ்சிக்கப்படும் தமிழகம்!



மீண்டும் ஒருமுறை காவிரி மணல் ஆறாகக் காட்சி தருகிறது. மீண்டும் ஒருமுறை கர்நாடகம் தண்ணீர் தர மறுத்திருக்கிறது. பச்சைப் போர்த்தியிருக்க வேண்டிய தஞ்சைத் தரணி மீண்டும் ஒருமுறை பாலைவனத் தோற்றம் தருகிறது. போராடிப் பெற்ற காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல், காவிரி ஆணையத்தையும் நீர் ஒழுங்குமுறை ெநறிகாட்டுக் குழுவையும் அமைக்காமல் தமிழகத்தை வஞ்சிக்கிறது மத்திய அரசு.

ஒவ்வொரு வருடமும் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சம்பா சாகுபடிக்காக காவிரி நீரைத் திறந்துவிட கர்நாடகாவிடம் கோரிக்கை வைப்பதும், பிறகு உச்ச நீதிமன்றம் செல்வதும் தொடர்கதை! இந்த முறை தமிழக விவசாய சங்கத்தினரே அதிரடி யாக களத்தில் இறங்கிவிட்டார்கள். தங்கள் ேகாரிக்கையோடு அவர்கள் நேரடியாகவே கர்நாடக முதல்வர் சித்தராமையாவைச் சந்தித்துத் திரும்பியிருப்பது ஹைலைட்!

இதனை தலைமையேற்று வழிநடத்தியவர் தி.மு.க முன்னாள் எம்.பியும், தமிழ்நாடு இயற்கை நீர்வளப் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவருமான கே.பி.ராமலிங்கம். ஏன் திடீரென இப்படியொரு சந்திப்பு? அவரிடமே பேசினோம். ‘‘இது தமிழக விவசாய சங்கங்களின் மனிதாபிமான அடிப்படையிலான சந்திப்பு. ஏற்கனவே தமிழக அரசு சட்டபூர்வ நடவடிக்கை எடுத்திருக்கிறது. நாங்கள் எங்கள் தரப்பில் உள்ள நியாயமான கோரிக்கையை எடுத்து வைக்கவே அவரைச் சந்தித்தோம்.

ஆகஸ்ட் 20ம் தேதிக்குள் 55 டி.எம்.சி தண்ணீரை நமக்கு கர்நாடகா தந்திருக்க வேண்டும். அப்படிக் கொடுத்திருந்தால் குறுவை, தாளடி என இரண்டு போகமும் செழித்திருக்கும். ஆனால், டெல்டா விவசாயிகள் முப்போக விளைச்சல் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது. வழக்கமாக ஜூன் ஆறாம் தேதியோ அல்லது ஆகஸ்ட் மாசத்திற்குள்ளோ மேட்டூர் அணை திறப்பார்கள். மிக மோசம் என்றாலும், செப்டம்பர் பத்தாம் தேதிக்குள்ளாவது நீர் வந்துவிடும். இந்த முறை இன்னும் நீர் திறக்கப்படவேயில்லை.

மேட்டூரில் 70 அடி தண்ணீர்தான் இருக்கிறது. இதில் பாதியளவு சேறும் சகதியும்தான். மீதி தண்ணீர் குடிநீருக்கானது. இப்போது உடனடியாக சம்பா சாகுபடிக்கான தொடக்க வேலைக்குத் தண்ணீர் தேவை. அப்போதுதான் முழுமையான பயிர் எடுக்க முடியும். காலம் தாழ்த்தி நீர் கொடுத்தால் எந்தப் பயனும் இல்லை. ‘நீங்கள் எங்களுக்குச் சகோதர மாநிலம். உங்கள் மாநிலத்தில் உள்ள விவசாயிகளைப் போல நாங்களும் விவசாயிகள்தான். எங்கள் நிலைமை பார்த்து தண்ணீர் கொடுங்கள்’ என அவரிடம் கோரினோம்.’’

அதற்கு கர்நாடகா முதல்வர் என்ன சொன்னார்? ‘‘ ‘நீங்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறீர்கள். எப்படி எங்களால் உடனடியாக தண்ணீர் தர முடியும்? அங்கே விளக்கம் அளித்த பிறகு மற்ற விஷயங்களைப் பேசலாம்’ என்றார். பிறகு, ‘எங்கள் அணைகளில் போதுமான நீர் இருப்பு இல்லை. மக்களின் குடிநீர் தேவைக்கே நாற்பது டி.எம்.சி தண்ணீர் தேவை. அதனால், ஐம்பது சதவீத சாகுபடிதான் பண்ணியிருக்கிறோம்.

மீதி 50 சதவீதம் பண்ணக் கூடாது என உத்தரவிட்டிருக்கிறோம்’ என்றார். அந்த அரசாணையையும் காண்பித்தார். ‘அந்த நாற்பது டி.எம்.சி தண்ணீர் இன்னும் எட்டு மாத காலத்திற்கானது. அதற்குள் மழை வந்து குடிநீர் பிரச்னையைத் தீர்த்துவிடும். ஆனால், தமிழ்நாட்டில் காவிரி நீரைப் பயன்படுத்தி எந்த சாகுபடியும் நடக்கவில்லை. இப்போதும் கிடைக்கவில்லை என்றால் இந்தியாவின் உணவு உற்பத்தியில் தமிழ்நாடு என்ற மாநிலமே இருக்காது. அதனால் எவ்வளவு நீர் தரமுடியுமோ அதையாவது கொடுங்கள்’ என்றோம்.

அவர் கலந்தாலோசித்து முடிவெடுப்பதாக சொன்னார். ஆனால், இப்போது தண்ணீர் தர வாய்ப்பில்லை என சொல்லியிருப்பது வேதனை அளிக்கிறது. கர்நாடக விவசாயிகளையும் சந்தித்தோம். நாங்கள் இரண்டு மாநில விவசாயிகளும் சகோதரர்கள். அதனால், இருக்கிற நீரைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றோம். அதை அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள்.’’ இந்த விஷயத்தில் அரசுகள் என்ன செய்திருக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்? ‘‘விவசாய சங்கங்களைப் பொறுத்தவரை எங்களுக்கு வேண்டியவர், வேண்டாதவர் என்கிற வித்தியாசம் இல்லை. விவசாயிகள் எழுப்புகிற கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டியது தமிழக முதல்வரின் கடமை.

அதேபோல், இந்த விஷயத்தில் தமிழக முதல்வருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடிவெடுத்திருக்கிறோம். இதில் மத்திய அரசு கடமை தவறிவிட்டது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வந்து, அதை அரசிதழிலும் வெளியிட்டாகி விட்டது. அதன்பிறகும் காவிரி ஆணையத்தையும், நீர் ஒழுங்குமுறை நெறிகாட்டு குழுவையும் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருகிறது. அப்போதே மத்திய அரசு வேகம் காட்டியிருந்தால் இரண்டு மாநில விவசாயிகளும் ரோட்டில் இறங்கி இருக்க மாட்டார்கள்.

இந்த ஆணையமே எல்லா வேலைகளையும் செய்திருக்கும். அதனால், இந்தக் காவிரி ஆணையத்தை மத்திய அரசு உடனடியாக ஏற்படுத்த வேண்டும்!’’ இதற்கு நிரந்தரத் தீர்வு இல்லையா? ‘‘இருக்கிறது. நீர் மேலாண்மைதான் நல்ல தீர்வு. இருக்கிற நீரை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்கிற புரிதல் அவசியம். அடுத்ததாக, நதிநீர் இணைப்பு முக்கியமானது. இப்போது அலகாபாத் நகரே வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கிறது. இதற்கு முன்பு இதே சீசனில் பிரம்மபுத்திராவில் வெள்ளம் வந்தது. இதில், எவ்வளவு நீர் வீணாகக் கடலில் கலக்கிறது எனச் சொல்ல முடியவில்லை. இதனை விவசாயத்துக்குப் பயன்படுத்தினால் இந்தியா செழிக்கும்!’’ 

சிறுவாணி சோகம்!

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளதாக இப்போது குரல் எழுகிறது. சிறுவாணியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கேரளாவுக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி தந்துள்ளது. ‘காவிரி நதியின் மேட்டுப் பகுதியில் உள்ள கேரளாவுக்கு காவிரி நீர் செல்ல முடியாது என்பதால், காவிரியின் கிளை நதியான பவானி படுகையில் இருந்து 6 டி.எம்.சி.யும், அமராவதியின் கிளை நதியான பாம்பாற்றில் 3 டி.எம்.சியும் அவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்’ என நடுவர் மன்றம் தீர்ப்பு தந்திருந்தது.

இதன்படி இப்போது சிறுவாணியிலும், பிறகு பாம்பாற்றிலும் கேரளா அணை கட்டுவதைத் தவிர்க்க முடியாது. இது திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களை வறட்சியில் தள்ளிவிடும். ‘‘நடுவர் மன்ற தீர்ப்பை மதித்து நமக்கு தண்ணீர் வராதபோது, கேரளா மட்டும் அவசரமாக அணை கட்டுவது ஏன்? இந்த விஷயத்தில் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது போல நடிப்பது ஏன்?’’ என கொந்தளிக்கிறார்கள் மேற்கு மண்டல விவசாயிகள்.

- பேராச்சி கண்ணன்