ஆட்டோ டிரைவர் வாங்கிய 5 லட்ச ரூபாய் துப்பாக்கி!



‘‘நானும் மற்ற அப்பாக்களைப் போல, என் மகள் மிட்டலின்  திருமணத்துக்காக பணம் சேர்த்து வந்தேன். துப்பாக்கி சுடுதலில் மிட்டலுக்கு  இருந்த ஆர்வத்தைப் பார்த்தபிறகு, சொந்தமாக துப்பாக்கி இருந்தால் மட்டுமே அவளால் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்தேன். அதனால் என் சேமிப்பை வைத்து 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஜெர்மன் துப்பாக்கியை வாங்கிக் கொடுத்தேன். மகள்  தன்னுடைய கனவுகளை நோக்கிச் செல்லும்போது, அந்தப் பாதையில் தடைகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது தந்தையின் கடமையல்லவா!’’ என்று பூரிக்கிறார் மணிலால் கோகில்.

ஆட்டோ ஓட்டி சிறுகச் சிறுக சேமித்த பணத்தை மகளின் கனவுக்காகக் கொடுத்திருக்கிறார் இந்தத் தந்தை. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஆட்டோ ஓட்டுகிறார் கோகில். இவரது மகள் மிட்டல், தேசிய அளவில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர். ‘துப்பாக்கி சுடுதலில் உலகின் தலைசிறந்த வீராங்கனையாக வேண்டும்’ என்பதே மிட்டலின் கனவு. குடும்ப வறுமையால் சொந்தமாக துப்பாக்கி வாங்க முடியாத நிலையில் இருந்தார். பயிற்சியின்போதும், போட்டிகளின்போதும் மற்றவர்களிடம் இரவல் வாங்கிய துப்பாக்கியைத்தான் பயன்படுத்தி வந்தார். பதக்கம் வென்றதுகூட இரவல் துப்பாக்கியில்தான்!

‘‘என் தாத்தா துப்பாக்கி வைத்திருந்தார். சிறு வயதில் அதைப் பார்த்தவுடன் என்னை அறியாமலே அதன் மீது ஈர்ப்பு ஏற்பட்டது. நான்கு வருடங்களுக்கு முன்பு அப்பா, என்னை ஒரு துப்பாக்கி சுடும் கிளப்புக்கு அழைத்துச் சென்றார். முதல் முயற்சியிலேயே இலக்கை நோக்கிச் சரியாக சுட்டேன். அதற்குமுன் எந்தவித பயிற்சியும் எடுத்ததில்லை. என்னால் துப்பாக்கி சுடுதலில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அந்த நொடியில்தான் பிறந்தது’’ என்று நெகிழ்கிறார் மிட்டல்.

கிரிக்கெட்டைப் போல மற்ற விளையாட்டுகளுக்கு நம் தேசத்தில் ஊக்குவிப்போ, பயிற்சியோ கிடைப்பதில்லை. ஸ்பான்சர் செய்யவும் ஆளில்லை. ஆனால் ஒலிம்பிக்கில் பதக்கம் எதுவுமே நம் வீரர்கள் வாங்கவில்லை என்று ஏளனம் செய்கிறோம். கோல்ஃப் மாதிரி துப்பாக்கி சுடுதலும் பணக்காரர்களின் விளையாட்டாக மாறிப்போன சூழலில், ஆட்டோ டிரைவரின் மகளான மிட்டல் இதில் சாதித்துக்கொண்டிருப்பது வரவேற்க வேண்டிய விஷயம்.

அரசு செய்து தரவேண்டிய அனைத்தையும் தனிமனிதனாக இருந்து செய்த தந்தைக்கு ஒரு சல்யூட்! மிட்டல் இனி தனக்கு சொந்தமான துப்பாக்கியைக் கொண்டு பயிற்சியில் ஈடுபடுவார். சிந்து, சாக்‌ஷி மாதிரி உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பார். அந்தப் பெருமையில் ஒரு ஆட்டோ ஓட்டுநரின் தியாகமும், விடாமுயற்சியும், அன்பும் கலந்திருக்கும்!

- த.சக்திவேல்