கஷ்டப்படுறவங்கதான் நாணயத்தில் சரியா இருக்காங்க!



சசிகுமார் ஓபன் டாக்

‘கிடாரி’ பாய்ச்சலுக்கு ரெடி. சரிந்து நெற்றியில் துவளும் கொத்துச்சிகை, 20 நாள் தாடி, முறுக்கு மீசை முகத்துடன்  இருக்கிறார் சசிகுமார்.  தனக்கான மைதானத்தில் எப்பவும் ெஜயிக்கிற குதிரை. ‘‘கிடாரி கொஞ்சம் திமிர்த்தனமும், தெனாவெட்டும் கலந்தவன். பழகுவதற்கும், புரிந்துகொள்வதற்கும் கஷ்டமான ஆள். ஒரு புள்ளியில் நிறுத்தி அவனை சேர்த்து வச்சு கட்ட முடியாது.

ஓரிடத்தில் உட்கார வைக்கவும் முடியாது. சட்ட திட்டங்களுக்கு அடங்காம திரிகிறவனை ‘கிடாரி’ன்னு சொல்வாங்க. சாத்தூர், கோவில்பட்டி ஏரியாக்களில் கட்டுக்கு அடங்காமல் திரிகிறவங்களுக்கு அப்படித்தான் பெயர். அப்படிப்பட்டவர்களில் நானும் ஒருத்தன். நான்தான் கிடாரி... என்னோட கதைதான் கிடாரி!’’ என சிரிக்கிறார்.

* ‘‘தொடர்ந்து கிராமத்துக் கதைகளில் இருக்கீங்க!’’
‘‘எனக்கு அவ்வளவு சரியாக பொருந்துதுன்னு நினைக்கிறாங்க. நான் பிரசாத் முருகேசன் கதையைக் கேட்டேன். கேட்ட கணத்திலே ‘இது நமக்கான கதைதான்’னு தோன்றிவிட்டது. நானே டைரக்ட் செய்யலாம்னு கூட நினைச்சேன்.  ‘கிடாரி’யோட மேனரிசம், பழக்கவழக்கம், குணநலன்கள் எல்லாத்தையும் அழகா உருவகப்படுத்தி வைச்சிருந்தார் பிரசாத். கிடாரியின் கோபமும், பாசமும், நேசமும் இதில் இருக்கு.  ஒரு குடும்பத்திற்குள் நடக்கிற விஷயம். இதில் விசுவாசமும், துரோகமும் கூட இருக்கு. என் படங்களில் இதுவரை இல்லாத அளவு கொஞ்சம் ரொமான்ஸும் இருக்கு.

எல்லாமே சரிவிகிதத்தில் வந்து திகட்டாது. பிரசாத்தை ெபாறுத்தவரை அவர் ரொம்ப நிதானிச்சு உணர்வையும், உயிரையும் எரிபொருளாக எரிச்சு கொண்டு வந்திருக்கிற கதை. நானே பல இடங்களில் இதில் இரண்டறக் கலந்திருக்கேன். கிராமத்துப் பக்கம்னு சொல்றது சாதாரண விஷயம் இல்லை. நம்ம எல்லாரும் சிட்டிக்குள்ளே வந்து  அடைஞ்சிட்டாலும், ஒரு கிராமத்து மனுஷன் இன்னும் எல்லாருக்கு உள்ளேயும் இருக்கான்.

ஜல்லிக்கட்டு, பதநீர், ஈசல் பிடிக்கிறது, திருவிழாவிற்கு வருகிற பெண்களை ஜனங்களோட ஜனங்களாக பார்த்து கண் வெட்டுறது எல்லாமே அப்படியே மனசுக்குள்ளே கிடக்கு. இது கரிசல்காட்டில நடக்கிற கதை. பதற வைக்கிற வெயிலில், ஷூட்டிங் முடிஞ்சதும் ஓட ஓட வந்து குடையில் நின்னு நடிச்சுக் கொடுத்த படம். கரிசல் மண்ணின் எளிமை சொல்லித் தீராது. இருந்தாலும் என் அளவிற்கு தயாரிப்பில், நடிப்பில் உயிர் கொடுத்திருக்கேன். மத்தபடி நம் மகாஜனங்கள் பார்த்து முடிவெடுப்பதுதான் தீர்ப்பு.’’

* ‘‘எப்படியிருக்கும் கிடாரி?’’
‘‘திருவிழா மாதிரி கலகலன்னு போற படம். ஆனாலும் அடிநாதத்தில் பல உண்மைகளைப் பேசும். பேரு, ஊரு, சாதியெல்லாம் இதில் எதுவும் இல்லை. நீங்க, நான், நாம எல்லோரும் படுகிற கஷ்டத்தைப் பத்தியும் பேசற படம்தான். ரொம்ப மனசிற்குள் வந்து உட்கார்ந்துகொள்கிற கதைதான். வன்முறை கூடாது என்பதற்காக அந்த வன்முறை இருக்கும். அதுல ஒரு வரைமுறையும் இருக்கும்.

* ‘‘நிகிலா... ‘வெற்றிவேலு'க்குப் பிறகு மறுபடியும்?’’
‘‘இதற்கும் பொருத்தமாக இருந்தார். முதல் படத்தில இருந்த அமைதிக்கு இந்தப் படத்தில் விடை கொடுத்தாச்சு. இதுல சதா துறுதுறுன்னு, வாயாடியா பேசித் திரிகிற பொண்ணு. வகைவகையான எக்ஸ்பிரஷன்களில் சும்மா பின்னுது. வெட்டிட்டு வான்னா, அத கட்டிக்கிட்டு வருது. நிச்சயமா இந்தப் படத்தில் அவங்களுக்கு நல்ல பெயர் இருக்கு. இதை சரியாக பயன்படுத்தறது, அவங்களுக்குப் பலன் தரும்!’’

* ‘‘கேரக்டர் ரோல்களில் நிறையப் பேர் இருக்காங்களே..?’’
‘‘இறுகிய முகமும், துடிக்கிற மீசையுமாய் இருக்கிறாரே, அவர்தான் ெகாம்பையா பாண்டியனாக வருகிற வேல ராமமூர்த்தி. நீங்களெல்லாம் அதை நடிப்புன்னு சொன்னாலும் நம்ப மாட்டீங்க. அப்படியொரு ரெளத்திரமான நடிப்பு. உடையநம்பியா வசுமித்ர நடிக்கிறார். பொய்யாழி  கேரக்டருக்கு மு.ராமசாமி. இப்படியெல்லாம் இலக்கியவாதிகளைக் கொண்டு நிரப்பணும்னு நினைக்கவேயில்லை. ஆனால் அவ்வளவு பொருத்தமாக அவங்க அமைஞ்சதாலேயே நடிச்சாங்க.

ரொம்ப நாளாகவே நெப்போலியன் நடிக்கவே இல்லை. என்னோட பல படங்களில் அவருக்கான ஒரு இடத்தை உருவாக்கி வைச்சிருப்பேன். தேடும்போது அவர் அமெரிக்காவில் இருப்பார், அல்லது இங்கே வந்திட்டு திரும்பிப் போகிற அவசரத்தில் இருப்பார். இப்ப இதற்கு வசமாக கிடைச்சு நடிச்சார். யூனிட்டே அவர் மேலே சிநேகிதமாகிப் போச்சு. அவரைக் கொண்டாட ஆரம்பிச்சிட்டாங்க. படத்தில் அவருடைய கேரக்டருக்கு சிறப்பா நியாயம் செய்திருக்கார்.’’

* ‘‘புதுசா தர்புகா சிவான்னு இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தியிருக்கீங்க...’’
‘‘தர்புகா, பிரசாத்தோட நண்பர். படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அவர்கள் இணைந்து பாடல்களை உருவாக்கியிருக்காங்க. பிரசாத் ஒப்பந்தமானதும், ‘இதோ இவர்தான் தர்புகா. பாடல்கள் உங்களுக்குப் பிடிச்சிருந்தால் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் உங்கள் இஷ்டம்’னு சொன்னார். அற்புதமாகவே இருந்தன. இன்னொரு இசை அமைப்பாளரை அறிமுகப்படுத்திய பெயரும் கிடைச்சது. மத்தபடி இதில் எனக்கு எஸ்.ஆர்.கதிர்தான் கேமராமேன். படம் நல்லா உருவாகி வந்ததில் அவனுக்குப் பெரிய பங்கு இருக்கு. என்னோட முதல் படத்திலிருந்து அவனுக்கான இடங்களைக் கொடுத்திட்டே இருக்கேன்.’’

* ‘‘சம்பளத்தை ஏதோ குறைச்சிட்டீங்களாமே?’’
‘நான் எப்ப ஏத்துனேன், குறைக்கிறதுக்கு? பேசிய சம்பளத்தை கறாராக கணக்கு பண்ணி வாங்க இனிமேல்தான் நான் தெரிஞ்சுக்கணும். தயாரிப்பு தரப்பில் குறிப்பிட்ட சம்பளத்தை எனக்கு ஃபிக்ஸ் பண்ணுவாங்க. அதில் எவ்வளவை கொடுக்க முடியுமோ அதைக் கொடுப்பாங்க. முழு சம்பளத்தை செட்டில் பண்ணினால்தான் டப்பிங் பேசுவேன்னு எனக்கு அடம் பிடிக்கத் தெரியாது. ஒரு நடிகனா மட்டும் இல்லாம எல்லாவிதத்திலும் ஒரு தயாரிப்பாளருக்கு எப்படி சிக்கனத்தை ஏற்படுத்த முடியும்னு யோசிச்சு அதுக்கான வேலைகளையும் நான் செஞ்சு கொடுப்பேன்.

முத்தையா ‘குட்டிப்புலி’ கதை சொன்னப்ப ரெண்டு தயாரிப்பாளர்களைக் கூட்டி வந்தான். அதில் ‘வாகை சூடவா’ முருகானந்தம் கொஞ்சம் கடனில் இருக்கிறதா சொன்னாங்க. படம் பண்ணணும்னு நினைக்கிறவங்க வசதியான தயாரிப்பாளரைத்தான் தேர்ந்தெடுப்பாங்க. நான் கஷ்டத்தில் இருந்த முருகானந்தம் தயாரிப்பில்தான் நடிச்சேன். படம் நல்ல பிசினஸாகி அவர் இன்னிக்கு நல்லா இருக்கார். அவ்வளவு சிரமத்திலும் பேசிய சம்பளத்தை என்னைத் தேடி வந்து முழுசா கொடுத்த ஒரே தயாரிப்பாளர் அவர்தான்.

பணம் வச்சிருக்கிறவங்களைவிட கஷ்டப்படுறவங்கதான் நாணயத்தில் சரியா இருக்காங்க. நான் நடிச்ச ஒரு படம் சரியா போகாத நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரைத் தேடிப் போய், நானே இன்னொரு படம் பண்ணிக் கொடுக்குறேன்னு சொன்னேன். ‘என்னோட வாழ்க்கையில் யாரும் இப்படி தேடி வந்து நம்பிக்கை சொன்னது இல்லை’ன்னு சொன்னார். பேசின சம்பளத்தை கறாரா வாங்குறவங்கதான் சம்பளத்தை ஏற்றி இறக்கணும். எனக்கு அந்த அவசியம் இல்லை.’’

- நா.கதிர்வேலன்