குங்குமம் ஜங்ஷன்



* நிகழ்ச்சி மகிழ்ச்சி
கண்திருஷ்டி விநாயகர், பால விநாயகர், சக்தி விநாயகர், பக்தி விநாயகர் என  விநாயகரின் 365 அவதாரங்களின் ஓவியக் கண்காட்சி அது.  சென்னையில் ஆர்ட் ஹவுஸ் கலைக்கூடம் வின்சென்ட் அடைக்கலராஜ் சார்பில் நடந்த இந்தக்  கண்காட்சியை பாபி சிம்ஹா தொடங்கி வைத்தார். இதில் இடம்பெற்றுள்ள ஓவியங்கள் அனைத்தும் குழந்தைகளால் வரையப்பட்டது என்கிறார்கள். ‘‘இதன் மூலம் திரட்டப்படும் நிதியானது கௌதமி நடத்தும் புற்றுநோயாளிகளுக்கான தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்’’ என்கிறார் பாபி சிம்ஹா. விநாயகர் சதுர்த்தி வரை இந்தக் கண்காட்சி நடைபெறும்.

* புத்தகம் அறிமுகம்
கண்டி வீரன் - ஷோபாசக்தி
(கறுப்புப் பிரதிகள், பி55. பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை-600005, விலை ரூ.160/-. தொடர்புக்கு 94442 72500) ஈழத்தின் தவிர்க்க முடியாத எழுத்தாளர் ஷோபாசக்தி. அவரின் பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு இது. மேம்போக்கான வாசிப்பு தவிர்த்து, ஆழ்ந்த கவனிப்பை வேண்டுபவை அவரின் கதைகள். அவரின் படைப்பு மொழி, ஆக்கம், கதையை இறுதிக்கு நகர்த்தும் விஷயம் எல்லாமே மிகுந்த அக்கறைக்கு ஆட்பட்டு நடந்தேறும்.

படித்து முடித்ததற்குப் பின்னாலும், நம் மனசை இறுக்கி, அசை போடத் தூண்டும் அவர் எழுத்து. இதில் இருக்கிற ‘கண்டி வீரன்’ சிறுகதை, கண்டிப்பாக விவாதத்திற்கு உட்பட வேண்டியது. அகதி வாழ்வில் துயர் உற்றாலும் முழுமூச்சோடு இயங்கிக் கொண்டிருப்பது ‘ஷோபா’வின் சாதனை. கண்டி வீரனைப் படித்து முடித்ததும், நமக்குள் ஒரு உரையாடலைத் ெதாடங்கவேண்டிய கட்டாயத்தில் நம்மை நிறுத்தி விடுகிறார். நிறைந்த காயங்களைக் கொண்ட அவர் எழுத்தின் தன்மை அவ்வளவு முக்கியமானது.

* டெக் டிக்!
குழந்தைகளைக் கவரும் விதமாக ‘கிட்ஸ் ஸ்மார்ட் வாட்ச்’ சந்தையில் புதிதாக அறிமுகமாகியுள்ளது. ‘ஜி.பி.ஆர்.எஸ்’ தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த வாட்ச், பள்ளிக்குச் செல்கின்ற  குழந்தைகள் முதல் வேலைக்குச் செல்கின்ற பெண்கள் வரைக்கும் சரியான சாய்ஸ். இந்த வாட்ச்சை பெற்றோர்கள் தங்களது ஸ்மார்ட் போனில் உள்ள கூகுள் மேப்பில் இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் குழந்தைகள் இருக்கும் இடத்தை தங்களது ஸ்மார்ட் போனிலேயே பெற்றோர்கள் துல்லியமாகத் தெரிந்துகொள்ள முடியும்.

மேலும் ஆபத்து நேரங்களில் அலெர்ட் தகவல் அனுப்பும் வசதியும் இதில் உள்ளது. குழந்தைகள் வெளியே விளையாடிக் கொண்டிருந்தால், அவர்களைச் சாப்பிட அழைக்க குறுந்தகவல் அனுப்பும் வசதியும் உள்ளது. இரவில் பயணம் செய்யும் பெண்களுக்கும் இது ஏற்றது.  மூன்று நாட்களுக்கு மேல் சார்ஜ் நிற்கக் கூடிய வசதியுள்ள இந்த வாட்ச்சின் விலை ரூ.2000 முதல் ரூ. 15000 வரை.

* யு டியூப் லைட்
ஹன்சிகாவின் செல்லக் குறும்புகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. குட்டிச் சுட்டீஸ் போல க்யூட்டான குட்டி வாத்தாக மாறி, வீடியோ ஒன்றை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார் ஹன்சி. ‘குவாக்... குவாக்...’ என குட்டி வாத்தாக ஹன்சிகா கத்தும் அழகிற்கே அள்ளுகிறது ஐயாயிரம் லைக்ஸ். வீடியோவை வெளியிட்ட நான்கு மணி நேரத்தில் 36 ஆயிரம் பார்வையாளர்கள், 112 ஷேர்ஸ் என எகிறிக்கொண்டிருக்கிறது. கூடவே, ‘சூப்பர் ஃபன்னி..’. ‘ஓ மை காட்... சூப்பர் க்யூட்டீ...’ என ரசிகர்களின் செல்லக் கொஞ்சல்களும் களை கட்டுகின்றன. இதற்கெல்லாம் காரணம் ஹன்சிகாவின் குழந்தை உள்ளம். அடடே!

* சிற்றிதழ் Talk
நீங்கள் உங்கள் ஆன்மாவைப் பின்தொடர்ந்தால், வலிமையைக் கூர்ந்து கவனித்தால், எவ்வித பிரதிபலனும் பாராமல் பிறருக்காக உதவினால், அந்த மனிதத்தின் பலனாக நீங்கள் உண்மையைக் கண்டடையலாம்
- எரின் ப்ரோகோவிச் (‘படச்சுருள்’ இதழில்)

* சர்வே
ஒலிம்பிக்கில் வாங்கும் வெள்ளிப் பதக்கம் பெரியதா? வெண்கலப் பதக்கம் பெரியதா? ‘‘மதிப்பு என்றால் வெள்ளிதான் ஒரு படி மேலே! இரண்டாவது இடம் பிடித்தவர்களுக்கானது அல்லவா? ஆனால், மூன்றாம் இடம் பிடித்து வெண்கலம் வாங்குபவர்களே சந்தோஷமாக இருக்கிறார்கள்’’ என்கிறது ஒரு ஆய்வு. சந்தேகம் இருந்தால், ஒரு மென்சோகத்தோடு பதக்க மேடையில் நின்ற பி.வி.சிந்துவையும், உற்சாகமாக நின்ற சாக்‌ஷி மாலிக்கையும் நினைத்துப் பாருங்கள்!

வெள்ளி பெறுபவர்கள், அப்போதுதான் ஒரு தோல்வியை சந்தித்திருப்பார்கள். ‘இப்படி தங்கத்தைத் தவற விட்டு விட்டோமே’ என அவர்கள் நினைப்பு இருக்கும். வெண்கலம் வென்றவர்களுக்கோ, ‘எப்படியோ ஒரு பதக்கம் கிடைத்ததே’ என்ற நிறைவு இருக்கும். இதுதான் வித்தியாசம்! கடந்த 2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் வெவ்வேறு பதக்கங்கள் வென்ற 84 பேரின் முகங்கள் காட்டிய உணர்வுகளையும், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் எடுத்த புகைப்படங்களையும் ஆய்வு செய்து பார்த்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.