86 வயது ஹாலிவுட் புயல்!



ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட் வரை கிளின்ட் ஈஸ்ட்வுட் படங்களுக்கு எப்பவும் தனி மவுசு. சினிமா காதலர்கள் பலரின் ஃபேஸ்புக் புரொஃபைல் பிக்சரை அலங்கரிப்பவர். நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர், அரசியல்வாதி, பிசினஸ்மேன் என்று பல முகங்களைக் கொண்ட கிளின்ட்டுக்கு வயது 86 என்பது இன்னும் ஆச்சரியம். இப்போது உலக சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம்... அவரது ‘சல்லி’தான்!

2009-ல் பறவை மோதியதால் விபத்தில் சிக்க இருந்த விமானத்தை அமெரிக்காவின் ஹட்சன் நதியில் அதிரடியாக இறக்கி பயணிகள் உயிரைக் காப்பாற்றிய ஒரு கேப்டனின் உண்மைக்கதையை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கிறது ‘சல்லி’. இரண்டு முறை சிறந்த நடிப்புக்காக ஆஸ்கர் விருது பெற்ற டாம் ஹாங்க்ஸ் நாயகனாக நடித்திருப்பது படத்துக்கான எதிர்பார்ப்பை இன்னும் கூட்டியிருக்கிறது. முதன்முதலாக ஹாங்க்ஸும் ஈஸ்ட்வுட்டும் இந்தப் படத்தில்தான் கூட்டணி சேர்ந்திருக்கிறார்கள்.

‘இந்த வயசுல மனுஷன் எப்படி படத்தை எடுத்திருப்பார்?’ என்று படம் வெளியானபிறகு பார்ப்போம். அதற்குமுன் அவரைப் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம். ‘‘என்னை எப்போதெல்லாம் திரையில் பார்க்கிறேனோ, அப்போதெல்லாம் கண்ணீர் விட்டு அழுவேன்’’ என்று சொல்கிற ஈஸ்ட்வுட் ஒரு நடிகனாகத்தான் தன்னுடைய திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார்.

நடிப்பதற்கான வாய்ப்புகளைத் தேடி அலைந்தபோது ‘முகம் சரியில்லை, கவர்ச்சியாக - அழகாக இல்லை’ என்று பலரால் நிராகரிக்கப்பட்டார். திறமை இருந்தால் வாய்ப்புகளுக்கு அணை போட முடியாதே! இவர் நடித்த தொலைக்காட்சித் தொடரைப் பார்த்த  இத்தாலிய இயக்குநர் ஒருவர், வெஸ்டர்ன் படங்களில் நடிக்க ஈஸ்ட்வுட்டை அணுகினார். தனக்குக் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்டதோடு மட்டுமில்லாமல், 60, 70களில் நடிப்புக்காக, ஸ்டைலுக்காக தனக்கென்று ரசிகர்கள் பட்டாளத்தை ஹாலிவுட்டைத் தாண்டி உலகெங்கும் உருவாக்கினார்.

கௌபாய் வேடத்தில் இவர் நடித்த ‘தி குட், தி பேட், அண்ட் தி அக்லி’ நம்ம ஊரிலும் சக்கைப் போடு போட்டது. கழுதைப் புலி கனைக்கிற மாதிரி ஆரம்பிக்கும் படத்தின் தீம் மியூசிக் இன்றைக்கும் பிரபலம். தலையில் அகலமான தொப்பி, முகத்தில் மெலிதாக வளர்ந்திருக்கும் தாடி, முழங்கால் வரையிலான பூட்ஸ், சட்டையின்மீது அழுக்கு படிந்திருக்கும் சால்வை, பெல்ட்டில் மாட்டியிருக்கும் துப்பாக்கி, வாயில் சுருட்டுடன், வறண்ட பொட்டல் காட்டில் முரட்டுத்தனமாக குதிரையில் ஸ்டைலாக இவர் வரும்போது தியேட்டரே கரகோஷத்தில் அதிரும்.

பொதுவாக பிரபலங்களிடம் நோட்டுப் புத்தகங்களில் ஆட்டோகிராப் வாங்குகிற ரசிகர்களைப் பார்த்திருப்போம். ஆனால் ரசிகர்கள் துப்பாக்கியை நீட்டி, ‘இதில் ஆட்டோகிராப் வேணும்’ என்று சொல்கிற ஒரே நடிகராக இவர் இருந்தார். ‘இவரால் கௌபாய் படங்கள் புகழடைந்ததா? அல்லது கௌபாய் படங்கள் மூலம் இவருக்குப் புகழ் கிடைத்ததா’ என்று உலகெங்கும் பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பு கிடைக்காமல் இருக்கும் அளவுக்கு கௌபாயின் அடையாளமாகவே இன்றைக்கும் இருக்கிறார்.

பூட்ஸின் மீது தீக்குச்சியை உரசி, வாயின் ஓரத்திலிருக்கும் சுருட்டை பற்ற வைக்கும் இவரின் ஸ்டைலே தனி ரகம். ரஜினி சிகரெட் பிடிக்கின்ற ஸ்டைல் எங்கிருந்து வந்திருக்கும் என்பது இவரின் படத்தைப் பார்த்தாலே நமக்குத் தெரியும். ஏராளமான படங்களில் சிகரெட் புகைப்பதைப் போல நடித்திருந்தாலும், நிஜ வாழ்க்கையில் புகை பிடிக்காதவர். காதல் கதைகளில் அதிகமாக நடித்ததில்லை என்ற போதிலும், இவருக்கு ஏராளமான காதலிகள் இருந்திருக்கிறார்கள். நிஜத்தில் காதல் மன்னனாக வலம் வந்தவர்.

ஒரு கட்டத்தில் துப்பாக்கிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு கேமராவைப் பிடிக்க ஆரம்பித்தார். நடிப்பதோடு மட்டுமில்லாமல் திரைப்படங்களை இயக்கவும் செய்தார். 70களுக்குப் பிறகு படம் இயக்குவதில்தான் அதிக கவனம் செலுத்தினார். கேமராவின் முன்பு நடிகனாக தன்னை அடையாளப்படுத்த எவ்வளவு போராடினாரோ, அதே அளவுக்கு கேமராவிற்குப் பின்னால் இருந்து இயக்குனராகவும் தனக்கு அங்கீகாரம் பெற கடுமையாகப் போராடினார்.

‘‘ரசிகர்களை மனதில் வைத்துத்தான் படம் இயக்குகிறேன்’’ என்று சொல்லும் ஈஸ்ட்வுட், ‘அன்ஃபர்கிவன்’, ‘மில்லியன் டாலர் பேபி’ போன்ற படங்களுக்காக சிறந்த இயக்குனர் உட்பட நான்கு ஆஸ்கர் விருதுகளைப் பெற்றிருக்கிறார். சிறந்த இயக்குனர் விருது பெறும்போது வயது 74. அதிக வயதில் ஆஸ்கர் விருதைப் பெற்ற இயக்குனரும் இவர்தான்.

இன்றைக்கு சினிமா உலகம் ஈஸ்ட்வுட் ஒரு நடிகர் என்பதை விட, இயக்குனராகத்தான் அவரைக் கொண்டாடுகிறது. ‘‘நான் எடுக்கிற படங்கள் எனக்குப் புதிதாக ஏதாவது ஒன்றை கற்பித்துக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் நான் தொடர்ந்து திரைப்படம் எடுத்துக்கொண்டே இருக்கிறேன்’’ என்கிற ஈஸ்ட்வுட் இந்த தள்ளாத வயதிலும் இளமைத் துடிப்போடுதான் இருக்கிறார் என்பது அவரின் படங்களைப் பார்த்தாலே நமக்குப் புரியும்.

மனதை இளமையாக வைத்திருக்கும் மந்திரம் அவருக்கு மட்டுமே வாய்த்த ரகசியம்! 86 வயதில் நம்மால் என்ன செய்ய முடியும் என்பது தெரியவில்லை. ஆனால், ‘‘இந்த வயசுல கூட மனுஷன் என்னமா படம் எடுத்திருக்கான்யா! ஆரம்பிக்கிறதும் தெரியல, முடியறதும் தெரியல. எவ்வளவு சுவாரஸ்யமா போகுது!’’ என புருவத்தை உயர்த்தி வியப்போடு ரசிகர்கள் சொல்லும் நம்பிக்கையை இம்மாதம் வெளியாக இருக்கும் ‘சல்லி’யும் காப்பாற்றும்!

- த.சக்திவேல்