ரஜினிக்குப் பிடித்த போஸ்டர் மாஸ்டர்!



சினி டிசைனர் பவன்குமார்

ஒரே ஒரு போஸ்டர் டிசைனை வைத்தே ஒரு படத்தின் கதையைச் சொல்லி விடலாம். போஸ்டரில் இருக்கும் ஹீரோவின் லுக், டிரஸ், அவரது முகம் காட்டும் உணர்வுகள், பின்னணி, போஸ்டரின் வண்ணம், தலைப்பு எழுதியிருக்கும் ஸ்டைல், அதில் ஒட்டியிருக்கும் உருவங்கள் என எல்லாம் பின்னிப் பிணைந்து ஒரு கதையைச் சொல்கின்றன. ரசனையான போஸ்டர்கள் டிசைன் செய்வதில் தமிழ் சினிமா அசுரப் பாய்ச்சல் காட்டியிருக்கிறது. இதில் பவன்குமார் முக்கியமான இடத்தில் இருக்கிறார்!    

‘‘ஒரு படத்தின் பப்ளிசிட்டி டிசைன்களுக்கான வேலைகள், படம் பூஜை போடுவதற்கு முன்னாடியே ஆரம்பிச்சிடுது. படத்தோட டைட்டில் டிசைன் அமைந்த பிறகே, கிளாப் போர்டில் அது இடம்பெறும், ‘இன்று முதல் பூஜையுடன் இனிதே துவங்குகிறோம்’ என அறிவிப்பு போஸ்டர் தொடங்கி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், ரிலீஸ் நேர போஸ்டர்கள், ப்ளோ அப் போஸ்டர்கள், அதன்பின் ‘25வது நாள்’, ‘நூறாவது நாள்’ விளம்பர போஸ்டர்கள் என எங்கள் வேலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்’’ - திருப்தியாகப் பேசுகிறார் ‘ரெட் டாட் டிசைன்’ பவன்குமார்.

கோலிவுட்டின் மோஸ்ட் வான்டட் போஸ்டர் டிசைனர். ரஜினியின் ‘கபாலி’, விஜய்யின் ‘புலி’, ‘தெறி’, சூர்யாவின் ‘சிங்கம் 2’, லேட்டஸ்ட் ‘ஜோக்கர்’ என எல்லாமே பவனின் கைவண்ணம்தான்! ‘‘என்னோட சொந்த ஊர் ஆந்திரா பக்கம் நெல்லூர். பி.எஸ்சி. மேத்ஸ் படிச்சிருக்கேன். சென்னையில்  விளம்பரக் கம்பெனி ஒன்றில்  நண்பர் ஒருவர் வேலை பார்த்தார். அவரைப் பார்ப்பதற்காக ஒருமுறை சென்னை வந்தேன். அவரது டிசைனிங் வேலை எனக்குப் பிடித்துவிட்டது.

‘இந்த துறைக்கு வர விரும்பினா, நீங்க கிரியேட்டிவ்வா யோசிக்க வேண்டியிருக்கும். டிசைனிங் தொடர்பான மென்பொருள்கள், புரோகிராமிங் கத்துக்க வசதியா இருக்கும்’னு எனக்கு வழிகாட்டினார். அவர் சொன்னது மாதிரியே கொஞ்சம் தெரிஞ்சு வச்சுக்கிட்டேன். சில மாதங்கள் டிசைனரா வொர்க் பண்ணினேன். அப்புறம் என்னோட ‘ரெட் டாட் டிசைன்’ மூலம் தனியாக இயங்க ஆரம்பித்துவிட்டேன். 100 படங்கள்கிட்ட வொர்க் பண்ணிட்டேன். சின்ன படங்கள், பெரிய படங்கள்னு எங்களுக்கு வித்தியாசம் இல்ல. இங்கே எல்லாத்துக்குமே ஒரே மாதிரிதான் யோசிக்கணும், டிசைன் பண்ணணும். உழைப்பு ஒண்ணுதான்’’ - என்றவரிடம் பிரபலங்களின் வொர்க்கிங் ஸ்டைல் பற்றிக் கேட்டால், ஆச்சரியமான தகவல்கள் வருகின்றன.

‘‘அஜித் சார் தவிர எல்லா ஹீரோக்களின் படங்களுக்கும் டிசைன் பண்ணியிருக்கேன். ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ பட டைம்ல, அதோட தயாரிப்பாளரா தாணு சார் அறிமுகமானார். தன் படங்களை பிரமாண்ட விளம்பரங்கள் மூலம் பேச வச்சிடுவார். கட் அவுட், பேனர் இருந்த காலங்கள்லேயே டிசைனிங்ல அவர் அசத்தியவர். அந்த நட்பால் ‘அரிமா நம்பி’ பண்ணினேன். அந்தப் பட டிசைன்கள் பேசப்பட்டுச்சு. ‘கபாலி’யை எனக்கு கொடுப்பார்னு எதிர்பார்த்தேன். அதே மாதிரி நடந்துச்சு. ‘ரஜினி சாருக்கு எல்லா டிசைன்ஸும் பிடிச்சிருக்கு’னு ரஞ்சித் சார் சொன்னார்.

‘தெறி’ படத்தோட தெலுங்கு, மலையாள வெர்ஷன் டிசைன்ஸ் எல்லாம் நான்தான் பண்ணினேன். ஹரி சாருக்கு என்னை ரொம்ப பிடிக்கும். ‘சிங்கம் 2’, ‘பூஜை’ படங்கள் தவிர ‘எஸ் 3’க்கு அறிவிப்பு போஸ்டரும் பண்ணியிருக்கேன். டென்ஷன் இல்லாமல் கம்ஃபர்ட்டா நம்மை ஃபீல் பண்ண வச்சிடுவார். நாலைந்து டிசைன்ல ஏதாவது ஒண்ணு செலக்ட் ஆகிடும்.  தூத்துக்குடியில் ‘சிங்கம் 2’ ஷூட்டிங் நடந்தபோது என்னை அங்கேயே வரச் சொல்லிட்டார். பாட்டு, ஃபைட் எடுக்கும் டைம்ல எல்லாம் இயக்குநர்களுக்கு வேலை கொஞ்சம் கம்மியாக இருக்கும்.

அந்த டைம்ல ஸ்பாட்லேயே டிசைனை ஓகே செய்துவிடுவார். ‘ஹீரோகிட்டேயும் காண்பிச்சிடுங்க’னு சொல்லுவார். ‘ரெண்டு நாள் தங்கி இருந்துட்டு ஊர சுத்திப் பார்த்த பிறகு கிளம்புப்பா’னு உரிமையா சொல்லுவார். சூர்யா சார் என்கரேஜ் பண்ணுவார். அவரோட ‘24’ படத்துக்கும் டிசைன்ஸ் பண்ணியிருந்தேன். ‘பருத்தி வீரன்’ டைம்லயே கார்த்தி சாரை தெரியும். கிட்டத்தட்ட 365 போஸ்டர்ஸ் பண்ணினோம்.

அவருக்கு அது முதல் படம் என்பதால், ஒவ்வொரு டிசைனுக்குமே மெனக்கெட்டார். ‘இது வேற மாதிரி படம் பாஸ்’னு சொன்னார். படம் ரிலீஸ் அன்னிக்கு ஃபர்ஸ்ட் ஷோவுக்கு டிக்கெட்டும் கொடுத்தார். அவரோட நட்பினால் ‘கொம்பன்’ கிடைச்சது. வெறும் அஞ்சு டிசைன்லேயே டைட்டில் ஓகே ஆகிடுச்சு. சில இயக்குநர்கள் இங்க வரும்போதே, ஒரு கான்செப்ட்டோடு வருவாங்க. ‘நாய்கள் ஜாக்கிரதை’க்கு பண்ணும்போது அந்த எழுத்துக்கள் எல்லாமே நாய் வடிவத்துல இருந்தா பெட்டரா இருக்கும்னு தோணுச்சு. இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனுக்கு அந்த டிசைன் பிடிச்சிடுச்சு.

அவரோட ‘மிருதன்’ படத்துக்கும் நான் டிசைன் பண்ணியிருந்தேன். ‘ஈரம்’ அறிவழகன் சாரோட ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’னு அவரோட படங்களின் டிசைன் எல்லாமே படத்தோட கான்செப்ட்டை பிரதிபலிக்கும். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ல இருந்து சிம்புதேவன் சார் பழக்கம். அவரே ஒரு ஓவியர்ங்கறதால ஈஸியா சொல்லி புரிய வச்சிடுவார்!’’

‘‘இந்தத் துறையில் உள்ள பிரச்னைகள் என்ன பாஸ்?’’

‘‘ஒரு காலத்துல மேனுவலா எல்லா வேலைகளையும் பார்க்க வேண்டியிருக்கும். பெரிய பெரிய போட்டோ ஆல்பத்தில் இருந்து ஸ்டில்ஸ் செலக்ட் பண்ணி, பிரின்ட் போட்டுக் குடுப்பாங்க. வெறும் ஒரு எம்.பி. மெமரி உள்ள ஃப்ளாப்பியில காப்பி பண்ணி  கொடுத்தாலே போஸ்டர் போட்டுடுவாங்க. இப்போ சாஃப்ட்வேர்கள், போட்டோஷாப், மேக்னு இந்தத் துறை ஹைடெக் ஆகிடுச்சு. வேலை ஈஸியாகிடுச்சு. ஹை ரெசல்யூஷன் படங்களைக்கூட மெயில் அனுப்பினாலே போதும்... உட்கார்ந்த இடத்துல இருந்து டிசைன் பண்ணி முடிச்சிடலாம். ஆனா, இப்போ டிசைனர்ஸ் பெருகிட்டாங்க.

போட்டி அதிகமாகிடுச்சு. ஒருசில இயக்குநர்கள் தயாரிப்பாளரை பார்க்கும்போதே டிசைனரை அழைச்சிட்டு போயிடுறாங்க. இன்னும் சில இயக்குநர்கள் நாலைந்து பேர்கிட்ட டிசைன் பண்ணச் சொல்றாங்க. அதுல எது பெஸ்ட்டோ அப்புறம் அந்த டிசைனர்கிட்ட வொர்க் கொடுக்கறாங்க. அதுக்காக மெனக்கெட்ட உழைப்பு, நேரம் எல்லாம் நமக்கு வீண்தான். காசும் தரமாட்டாங்க. ஒருத்தர் நம்மகிட்ட டிசைன்ஸ் சொல்லும்போதே அவங்க வொர்க் கொடுக்கறாங்களா? இல்லை, சாம்பிள் பார்க்குறாங்களா?னு புரிய அனுபவம் தேவைப்படும். மத்தபடி இது கிரியேட்டிவ் துறை என்பதால் நமக்கு வரும் ஒவ்வொரு வேலையையும் ரொம்பவே ரசிச்சு பண்ண முடியும். அதான் இந்தத் தொழிலின் பலம்!’’

- மை.பாரதிராஜா
படம்: புதூர் சரவணன்