உரிமை



‘‘என்ன நினைச்சுட்டிருக்கா அவ மனசுல? இந்த வீட்டுக்கு அவ மருமகளா வந்து ஒரு வருஷம்தான் ஆகுது! இதுக்குள்ளயே இப்படியா?’’ என் நண்பன் ராமசுப்புவின் வீட்டுக்குப் போயிருந்தபோது, அவனுடைய மூத்த மருமகள் விமலா, இளைய மருமகள் சுதாவைப் பற்றி டென்ஷனாக சொல்லிக் கொண்டிருந்தாள். ‘‘என்னம்மா... என்னாச்சு?’’ என்று கேட்டேன்.

‘‘பின்னே என்ன அங்கிள்! என் மாமனாரை முதியோர் இல்லத்துல சேர்க்கணுமாம். நான் ‘கூடவே கூடாது’னு கண்டிப்பா சொல்லிட்டேன்...’’ என்றவளை சந்தோஷமாகவும், பெருமையாகவும் பார்த்தேன். இந்தக் காலத்திலும் இப்படி ஒரு மருமகளா! ‘‘ஆமா அங்கிள். இந்த வீட்டு மூத்த மருமக நான். எதையும் முடிவு பண்ற உரிமை எனக்குத்தான் இருக்கு! அவ சொல்ற முதியோர் இல்லம் ரொம்ப பக்கத்துலயே இருக்கு. ‘பேரப் பசங்களைப் பார்க்கணும்’னு அடிக்கடி வீட்டுக்கு வந்து தொலைப்பாரு!

காஸ்ட்லிங்கறதால செலவும் அதிகம் பிடிக்கும். எனக்கு தெரிஞ்ச இன்னொரு முதியோர் இல்லம் இருக்கு. செலவு நார்மலா நம்ம பட்ஜெட்டுக்குள்ளே இருக்கும். அதுலதான் சேர்க்கணும்னு கண்டிப்பா சொல்லிட்டேன். நேத்து வந்தவ முடிவு பண்ண விட்டுடுவேனா?’’ அவள் சொல்லச் சொல்ல... மயக்கம் வந்தது எனக்கு.

-கே.ஆனந்தன்