உறவெனும் திரைக்கதை



-ஈரோடு கதிர்

நம்மை நாம் மறந்து பிறரைக் கொண்டாடும் தருணங்களை வாழ்க்கை விதவிதமாய் வழங்கிவிடுகிறது. பிறரின் ஏதோ ஒன்று நமக்குப் பிடித்ததாக அமைந்து விடும்பொழுது, அதீதமாய் அவர்களைக் கொண்டாடத் துவங்கி விடுகிறோம். சில நேரங்களில் அதிகாரம் மிக்கவர்கள், ஆட்சியாளர்கள் என நமக்கு நேரிடைத் தொடர்பே இல்லையெனினும், பிடித்துவிட்ட காரணங்களுக்காகவே கொண்டாடத்தான் செய்கின்றோம்.

ஏன் இந்தக் கொண்டாட்டங்கள் என யோசித்தால், உரிக்க உரிக்க ஒன்றுமில்லாமல் போகும் வெங்காயம் போல் காரணங்கள் ஏதுமின்றிக் கொண்டாடியிருக்கிறோம் என்பது புரியும். எனினும் எவரையேனும் ஏதோ காரணத்துக்காக கொண்டாடிட எப்போதும் காத்திருக்கிறோம் என்பதையும் மறுக்க முடியாது. தொண்ணூறுகளின் துவக்கமாக இருக்கலாம். கோவைக்கு அரசு சொகுசுப் பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்தேன். பேருந்தின் முகப்பு குவிந்தும், இருக்கையின் சாய்வுப் பகுதி தலைக்கு மேலும் உயர்ந்திருக்கும், அதுதான் அப்போது சொகுசு அல்லது டீலக்ஸ் பேருந்து.

ஓட்டுனருக்குப் பின் வரிசையில் நடு இருக்கை மட்டும் ஆளில்லாமல் இருக்க, அதில் அமர்கிறேன். வலது பக்கம் திரும்பிப் பார்த்தால் நடிகர் ரகுமான் அமர்ந்திருக்கிறார். ‘புதுப்புது அர்த்தங்கள்’, ‘புரியாத புதிர்’ படங்கள் வெளியாகியிருந்த காலம். என்னால் நம்பவும் முடியவில்லை; நம்பாமலும் இருக்க முடியவில்லை. அடிக்கடி அவரைத் திரும்பிப் பார்க்கிறேன். பேச ஒரு வார்த்தையும் என்னிடமில்லை. அரிதாக என் பக்கம் திரும்பும் பொழுதெல்லாம் மெலிதாகப் புன்னகைக்கிறார்.

என் படிப்பு குறித்து ஏதோ கேள்விகள் கேட்கிறார். பதில் வந்ததா, வெறும் காற்று மட்டும் வந்ததா எனும் சந்தேகம் இப்போது வரையிலும் உண்டு. இறங்கும் வரை அவரிடம் பேசும் துணிச்சல் வரவேயில்லை. செல்போன்கள் கிடையாது, செல்ஃபிகள் கிடையாது. பள்ளி விடுதிக்குச் சென்று ரகுமான் புராணம் பாடத் துவங்குகிறேன். அன்றிலிருந்து ரகுமான் தொடர்பான செய்திகள், புகைப்படங்களை கவனிக்கத் தொடங்குகிறேன். கிட்டத்தட்ட ரகுமான் ரசிகனாக மாறும் தருணத்தில், ரகுமானின் சில நிழற்படங்களைப் பார்த்து, அன்று பேருந்தில் உடன் பயணித்தவருக்கும் ரகுமானுக்கும் ஆறு வித்தியாசங்கள்... இல்லையில்லை, நூறு வித்தியாசங்கள் கூட இருக்கலாம் என எனக்குள் தீர்ப்பெழுதுகிறேன்.

பள்ளிக் காலம் முடியும்வரை என் அருகில் பயணித்தது ரகுமான் இல்லையெனச் சொல்லும் நேர்மையும், துணிவும் கைவசப்படவேயில்லை. குமாருக்கு இலக்கியத்தில் நல்ல பரிச்சயம் உண்டு. படைப்பாளிகளைத் தேடித் தேடி நட்பு பாராட்டும் பழக்கமுண்டு. அலுவலகப் பணி காரணமாக ஒரு விளம்பர நிறுவனத்திற்குச் செல்லும் சூழல் ஏற்பட்டது. விளம்பர நிறுவனத்தை நடத்தும் இளைஞரின் அறையில் இருந்த சில இலக்கியப் புத்தகங்கள், ஓவியங்களைப் பார்த்த குமாருக்கு, அவர் மீது அதீத மரியாதை உருவாகிவிட்டது. இலக்கியத்தில் தொடங்கி உலகத் திரைப்படங்கள் வரை உரையாடல் சென்றது.

‘சினிமா பிரபலங்களுடன் தனக்கு நேரடிப் பழக்கம் உண்டு’ என தனிப்பட்ட சுவாரஸ்யமான செய்திகள் சிலவற்றைச் சொல்லியிருக்கிறார் அந்த இளைஞர். குமார் அவருடைய பெயரைக் கேட்க, அவர் ‘அகிலன்’ (பெயர் மாற்றப்பட்டுள்ளது) எனச் சொல்லியிருக்கிறார். கேட்ட குமாருக்கு மெல்லிய அதிர்ச்சி வந்திருக்கிறது. காரணம், பிரபல வாரப் பத்திரிகை ஒன்றில் உலகத் திரைப்படங்கள் குறித்து ‘அகிலன்’ என்ற பெயரில் ஒரு தொடர் வந்து கொண்டிருந்தது. ‘‘சார்... நீங்களா அந்தப் பத்திரிகையில் தொடர் எழுதுறீங்க?” என குமார் கேட்க, அகிலன் குறும்புப் புன்னகையோடு ஆமோதித்திருக்கிறார்.

அப்படியான ஒரு ஆளுமை இத்தனை எளிமையாக இருப்பதை குமாரால் ஜீரணிக்கவே இயலவில்லை. விலை குறித்து பேரம் எதுவும் பேசாமல், தன் நிறுவனத்தின் அனைத்து விளம்பரத் தேவைகளையும் அந்த நிறுவனத்திற்கே உடனடியாக ஒதுக்கித் தந்திருக்கிறார். அடுத்த கட்டுரை வெளியானவுடன் அகிலனை அழைத்து சிலாகித்துத் தள்ளியிருக்கிறார். கட்டுரை வரிகளை நுணுக்கமாகப் பகிர்கையில், ‘‘இன்னும் புக் பார்க்கல! நிறைய எழுதிட்டே இருக்கிறதால, எதைப் போட்டாங்க, என்ன எழுதினோம்ங்கிறதே மறந்து போயிடுது’’ எனச் சொல்லியிருக்கிறார். குமார் அசந்துபோய் விட்டார்.

சில நாட்கள் கழித்து மற்றொரு நண்பரிடம் அகிலன் குறித்து சிலாகிக்க, ‘‘அந்தாளு ஒரு ஃப்ராடு பயலாச்சே!” என அவர் இடைமறிக்க, வார இதழ் தொடர் குறித்து குமார் சொல்ல, உண்மையில் தொடர் எழுதும் திரைத்துறையில் பணியாற்றும் அகிலனை கூகுளில் தேடியெடுத்துக் காண்பித்து, ‘‘என்னய்யா! இத்தனை படிக்கிறே, இத்தன பேரைத் தெரியுதுங்கறே... இப்படியா பொசுக்குனு நம்பி ஏமாறுவ?” எனக் கேட்டிருக்கிறார்.

ஒரு பேருந்துப் பயணத்தில் அருகில் இருந்த பயணி வைத்திருக்கும் ‘தி சைக்கிளிஸ்ட்’ புத்தகத்தைப் பார்த்த அந்தப் பெண், ஆச்சரியத்தோடு ‘‘எங்கு வாங்கினீர்கள்?’’ எனக் கேட்கிறார். புத்தகம் வைத்திருந்த நபர், “கடையில்” என்றதோடு, அந்தப் புத்தகத்தை அந்தப் பெண்ணிற்கே அன்பளிப்பாகவும் கொடுக்கிறார். வாங்க மறுக்கும் அந்தப் பெண்ணிடம், ‘‘இது என் புத்தகம்தான்’’ எனச் சொல்லிக் கொடுக்கிறார்.

ஆச்சரியப்படும் அந்தப் பெண், “நீங்கள்தான் இயக்குனர் மக்மால்பஃபா?” எனக் கேட்கிறார் (‘தி சைக்கிளிஸ்ட்’ எனும் புகழ்பெற்ற ஈரானியப் படத்தின் இயக்குனர் மக்மால்பஃப்). அந்த நபர் புன்னகையோடு ஆமோதிக்க, ‘‘ஒரு பெரிய இயக்குனர் காரில் செல்லாமல், இப்படி பேருந்தில் வரலாமா?” எனக் கேட்கிறார். திரைப்படத்திற்கான காட்சிகள் கிடைக்கும் என்பதால் பேருந்தில் வருவதாகச் சொல்கிறார் மக்மால்பஃப்.
 
அந்தப் பெண் தம் இரண்டு பொறியியல் பட்டதாரி மகன்களைப் பற்றிக் கூறி, அதில் இளைய மகன் திரைப்படத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டு திரைக்கதை வரை எழுதி வைத்திருப்பதையும் சொல்கிறார். முகவரி கொடுத்து வீட்டிற்கு அழைக்கிறார். இவரும் அந்தப் பெண்ணின் வீட்டில் சென்று இரண்டு தினங்கள் தங்குகிறார். ஒரு கட்டத்தில் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட, ஒரு செய்தியாளர் காவல்துறையினரை அழைத்து வந்து அவரைக் கைது செய்ய வைக்கிறார். நீதிமன்றத்தில் அவரை நிறுத்துகின்றனர். ‘ஏமாற்றுதல்’ எனும் பிரிவில் குற்றம் சாட்டப்பட்டு விசாரணை தொடங்குகிறது.

‘மக்மால்பஃப்’ என்ற பெயரில் ஏமாற்றிய சப்ஸியான், அச்சுக்கூடம் ஒன்றில் பணியாற்றியதும், இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பனான அவர், வசதி குறைவின் காரணமாக மனைவி, ஒரு மகனைப் பிரிந்து, தன்னோடு ஒரு மகனை வைத்துக்கொண்டு தம் அம்மாவோடு வசிப்பதும் தெரியவருகிறது. அந்தக் குடும்பத்தினர், ‘சப்ஸியான் தங்களை ஏமாற்றியதாகவும், சிறிய தொகையொன்று வாங்கியதாகவும், வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிடும் வகையில் வீடு முழுக்கச் சுற்றிப் பார்த்ததாகவும், வீட்டில் இருந்த மரத்தை வெட்டுமாறு சொன்னதாகவும்’ குற்றம் சாட்டினர். ஆனால் சப்ஸியான் ‘இதுதான் என் முதல் குற்றம்’ என்றார்.

‘‘கொள்ளையடிக்கும் நோக்கம் எதுவுமில்லை. திடீரெனக் கிடைத்த மரியாதையின் கிளர்ச்சியை அனுபவிக்க அப்படி நடித்தேன். அந்தப் பாத்திரமாகவே மாறிப்போனதால் அவ்வாறு நடந்துகொண்டேன்’’ என்கிறார். ‘‘அந்தக் குடும்பத்தினருக்கு எந்தவித இழப்பையும், கெடுதலையும் ஏற்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை. ஆனால், அவர்களின் உணர்வுகளோடு விளையாடியது குற்றம். அதற்காக நீதிமன்றம் என்ன தண்டனை தந்தாலும் ஏற்றுக்கொள்கிறேன்’’ எனத் தெரிவிக்கிறார்.

புகார் அளித்த குடும்பம் அவரை மன்னிக்கிறது. வெளியில் வரும் சப்ஸியானை உண்மையான மக்மால்பஃப் நேரில் வந்து பார்க்கிறார். மலர்கள் நிரம்பிய ஒரு பூந்தொட்டியோடு, மன்னித்த அந்த குடும்பத்தினரைச் சந்திக்க அழைத்துச் செல்கின்றார். சப்ஸியானின் இந்த விளையாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியது 1990ம் ஆண்டு ஈரானில் வெளியான ‘குளோசப்’ படம். இப்படத்தின் சிறப்பம்சமே, இதில் யாரும் நடிக்கவில்லை என்பதுதான். கைது செய்யப்படுவது தொடங்கி, சிறை, நீதிமன்றம், விடுதலை, மக்மால்பஃப் உடன் செல்வது வரை அனைத்தையும் உண்மைக் காட்சிகளாக நேரடியாகப் படம் பிடித்திருக்கிறார்கள்.

‘எதையும் புனிதப்படுத்தாதே, எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்து’ என்பதே அறிவின் விதி. அதீதமாய் ஒருவரை நம்புவதும், கொண்டாடு வதும் அறிவின் வீழ்ச்சியன்றி வேறென்ன? ஏமாறுகிறவர்கள் இருக்கின்றவரை ஏமாற்றுதல் சற்றும் துவண்டுபோகாது. அகிலன், சப்ஸியான் ஆகியோரிடம் குமாரும், அந்தக் குடும்பமும் தாங்கள் ஏமாற்றத்தின் ருசியை உணரத் தயார் என்பதை உணர்த்துகிறார்கள்.

ஏமாற்றுதலில் ஏற்படும் கிளர்ச்சியை, மகிழ்ச்சியை, ஆதாயத்தை, கொண்டாட்டத்தை இவர்களே ஏமாற்றுபவர்களுக்கு வழங்குகிறார்கள். அந்தத் தூண்டல், அவர்களை முயற்சியெடுக்கச் சொல்கிறது. அப்படி சந்தேகத்தோடு முயல்கின்றவர்களை முழுமையாக நம்புவதற்கும், அவர்களிடம் ஏமாறுவதற்கும் தயாராக இருப்பவர்கள் கொண்டாடுகிறார்கள். அந்தக் கொண்டாட்டம், அவர்களை அந்தப் பாத்திரமாகவே இருக்கப் பணிக்கிறது. தொடர்ந்து ஏமாற்றுதலைச் செய்யப் பணிக்கிறது. ஒரு கட்டத்தில் அந்தப் பாத்திரமாகவே மாற உந்துகிறது. சக மனிதன் குறித்த கொண்டாட்ட மாயைகளிலிருந்து தெளிவதற்குள் ‘செய்கூலி... சேதாரம்’ மிகுந்து விடுகிறது.

எவரையேனும் ஏதோ காரணத்துக்காக கொண்டாடிட எப்போதும் காத்திருக்கிறோம் என்பதை மறுக்க முடியாது.

‘எதையும் புனிதப்படுத்தாதே, எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்து’ என்பதே அறிவின் விதி. அதீதமாய் ஒருவரை நம்புவதும், கொண்டாடுவதும் அறிவின் வீழ்ச்சியன்றி வேறென்ன?

(இடைவேளை...)

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி