ரகசிய விதிகள்



அட்டகாசத் தொடர்

சுபா

சின்னதுரையின் கையில் ரத்தம் கொப்பளிப்பதைப் பார்த்து, பிளேடால் கீறியவன் சட்டென நகர்ந்து மற்றவர்களோடு கலந்துவிட்டான். சின்னதுரை சுற்றும் முற்றும் பார்த்தான். அவனுக்குக் குழப்பமாக இருந்தது. இதில் மிரட்டியவன் யார்? 

ஓடிவந்த காவலர் தன்னுடைய கைக்குட்டையை எடுத்து சின்னதுரையின் காயத்தில் அழுத்திப் பிடித்தார். “எவன்டா கோடு போட்டது..?” என்று சுற்றிலும் பார்த்து கோபமாகக் கேட்டார். யாரிடமிருந்தும் பதில் வரவில்லை. அந்தக் காவலர் சின்னதுரையைத் தனியே அழைத்துப் போனார். “என்ன தகராறு... யாரு உன்னை வெட்டினது..?” என்று கேட்டார்.

“நான் இன்ஸ்பெக்டர் துரை அரசனைப் பார்க்கணும்...” என்றான் சின்னதுரை, மிரண்ட குரலில். துபாயிலிருந்து பதினாறு மணி நேரம் இடைவிடாமல் பறந்து, அந்த விமானம் சான்ஃப்ரான்சிஸ்கோ விமான நிலைய ஓடுபாதையில் சிறு குலுக்கலுடன் தரையிறங்கியது. பயணிகள் கை, கால்களை நீட்டி மடக்கி ரத்த ஓட்டத்தை சீர் செய்துகொண்டு ஒவ்வொருவராக இறங்கினார்கள். விஜய் வெளியில் வந்தான்.

இமிக்ரேஷனில் அவன் பாஸ்போர்ட்டில் முத்திரை குத்திய குண்டுப் பெண்மணி விசாரித்தபோது, “சுற்றுலாப் பயணியாக வந்திருக்கிறேன். கூடவே கொஞ்சம் நண்பர்களையும் பார்க்கப் போகிறேன்...” என்று சொன்னான். சோதனைகள் முடித்து, கன்வேயர் பெல்ட்டில் தன் பெட்டிகள் வரும்வரை காத்திருந்து, அவற்றைக் கவர்ந்து எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான். இதமான வெயில். அமெரிக்க வானமும் இந்திய வானம் போலத்தான் இருந்தது. யார் யாரையோ வரவேற்க யார் யாரோ வந்திருந்தார்கள். ‘விஜய்’ என்ற பெயர் அட்டையுடன் அவனை வரவேற்க வந்திருந்தவன், தன்னை ‘பத்ரி’ என்று அறிமுகப்படுத்திக்கொண்டான்.

சதுரமான, சதைப் பிடிப்பான முகம். அடர்த்தியான புருவங்கள். வரிசையான பெரிய பற்கள். திடமான உடல். பேசியபோது, குரலில் சிறு முரட்டுத்தனம் தெரிந்தது. “உனக்கு மிஷன் ஸ்ட்ரீட்ல ஒரு அபார்ட்மென்ட் பிடிச்சிருக்கேன்! அங்க ரெண்டு மணி நேரம் ரிலாக்ஸ் பண்ணிக்க... சாயந்திரம் வெளிய கூட்டிட்டுப் போறேன்!” என்றான். காத்திருக்கச் சொல்லிவிட்டு, தன் ஹோண்டா காரை சரக்கெனக் கொண்டுவந்து நிறுத்தினான், பத்ரி. பெட்டிகளை டிக்கியில் போட்டு, கதவைத் திறந்து லெதர் இருக்கையில் அமிழ்ந்தான், விஜய்.  

புதிய அனுபவங்களை நோக்கி அவன் பயணம் துவங்கியது. அகலமான சாலையில் கார் விரைந்தது. அரசு மருத்துவமனை. இரண்டு தையல்கள் போடப்பட்டு சின்னதுரையின் மணிக்கட்டிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்த ரத்தம் நிறுத்தப்பட்டது. தகவல் கிடைத்து, இன்ஸ்பெக்டர் துரை அரசன் அங்கு வந்திருந்தார். “சார், என்னை ஏன் சேலம் ஜெயிலுக்கு மாத்தினீங்க..? புழல்ல இருந்த பாதுகாப்பு கூட எனக்கு இங்க இல்ல...” “இருபத்து நாலு மணி நேரமும் உன்னையே கவனிச்சிட்டு இருக்க ஜெயில்ல ஏது வசதி? புழலா இருந்தாலும், சேலமா இருந்தாலும், இதான் நெலமை. புரிஞ்சுக்கோ!”

“எனக்கு பயமா இருக்கு சார்...” “அந்தக் கைதி எதுக்கு உன்னை வெட்டினான். உன் சந்தேகம் என்ன..?” “தீபக் தர்மசேனாவுக்கு துரோகம் பண்ணுவியான்னு என்னை மெரட்டினான், சார்... இதைத்தான் நான் மொதல் நாளே உங்ககிட்ட சொன்னேன். என்னை உயிரோட விட மாட்டாங்க...” “உயிரை எடுக்கப் போறவங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தே. உயிருக்குப் பாதுகாப்பு கொடுக்கத் தயாரா இருக்கற எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டே... அப்படித்தானே..?” “அதுக்கில்ல, சார்...” “நாளைக்கு உன் பொணத்தை தூக்கிட்டுப் போகும்போது, உனக்கு ஒரு மாலைகூட போட மாட்டாரு, அந்த தீபக் தர்மசேனா!”

“துரோகி... அவருக்காக உயிரைக் குடுத்து வேலை செஞ்சேன் சார்..!” “இப்போ, உனக்கு சாதகமா ஒரே ஒரு விஷயம்தான் இருக்கு. எல்லா உண்மைகளையும் நீ சொல்லத் தயாரா இருந்தா, உனக்குத் தேவையான பாதுகாப்பு குடுக்கறதுக்கு நான் கமிஷனர்கிட்ட பேசுவேன்!” “எல்லா உண்மையையும் சொல்லிட்டா, எனக்கு எந்த தண்டனையும் இல்லாம பாத்துப்பீங்கனு சத்தியம் பண்ணிக் குடுங்க சார்... நான் சொல்றேன்!” “போலீஸும் திருடனும் சத்தியம் பண்ணா நம்பக் கூடாது. சத்தியம்லாம் கேக்காத! நீ எந்த அளவுக்கு ஒத்துழைக்கறியோ, அந்த அளவுக்கு போலீஸ் உன்னோட ஒத்துழைக்கும்.

வேலை முடிஞ்சதும் வெட்டறவனை விட மன்னிக்கறவன் பெட்டர் இல்லியா? யோசி...” சின்னதுரை அதிக நேரம் யோசிக்கவில்லை. “முழு ஒத்துழைப்பு குடுக்கறேன் சார்! எனக்குத் தெரிஞ்ச எல்லா உண்மையையும் உங்களுக்கு சொல்றேன் சார்...” என்றான் சின்னதுரை. “நடராஜர் சிலை எங்க போச்சு..?” “அது கப்பல்ல ஜெர்மனிக்குப் போயிருக்குன்னு நினைக்கறேன்... டாலர், யூரோனு சர்வதேச கரன்ஸியை அள்ளிக் கொடுத்து வாங்கிட்டுப் போவாங்க, சார்..” “பொய்த் தகவல் கொடுத்து நேரம் வாங்கலாம்னு பாக்காதே...” “இல்ல, சார்...” “தீபக் தர்மசேனாவுக்கும் இதுக்கும் என்ன தொடர்பு..?”

“அவர்கிட்ட ஏகப்பட்ட மீன்பிடிப் படகுகள் இருக்கு சார்! மீனைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்ய லைசன்ஸ் இருக்கு... மீன்களோட சேர்ந்து வேற என்னென்னவோ போகுது! சந்தேகமே வராம கடல்ல அவர் வியாபாரம் நடக்குது. தீவிரவாதிங்களுக்கு ஆயுதங்கள் வாங்கித் தர்றதுலேர்ந்து இன்னும் பல வேலைகளை கடல் வழியா செய்ஞ்சிட்டிருக்காரு, சார்! தீபக் தர்மசேனாவுக்கு ரொம்ப பெரிய நெட்வொர்க் இருக்கு சார். அவருக்காக வேலை செய்யறதுக்கு நூத்துக்கணக்கான பேரு இருக்காங்க. யாருக்கு வேலை செய்யறோம்னே அவங்களுக்குத் தெரியாது. அவருக்கு நெருக்கமா இருக்கறது நாலஞ்சு பேருதான்... அதுல நான் ஒருத்தன்!”

“ஸோ, உங்க நெட்வொர்க்குக்கு அவர்தான் தலைவரா..?” “இல்ல சார்... அவருக்கும் மேல ஒரு தலைவர் இருக்காருன்னு அவர் அப்பப்ப சொல்லுவார். ‘அந்த தலைவர்தான் திட்டம் போட்டுக் குடுக்கறாரு, நமக்குத் தேவையான ஏற்பாடுகளை செஞ்சு குடுக்கறாரு, பண உதவி செய்யறாரு’னு சொல்லுவார்... அது பொய்யா, உண்மையானு தெரியாது...” “யாரு அந்தத் தலைவரு..?” “அவர் யாருன்னு எங்க யார்கிட்டயும் தீபக் அய்யா சொன்னதில்ல...” “பொய்..!”

“சத்தியமா சார்! நான் உண்மைதான் சொல்றேன்னு உங்களுக்கு நிரூபிக்கறேன் சார். நான் சொல்ற அட்ரஸை குறிச்சுக்கங்க...” துரை அரசன் குறித்துக்கொண்டார். அது சிந்தாதிரிப்பேட்டையில் இருக்கும் ஒரு முகவரி. “மீனெல்லாம் ஸ்டாக் வெக்கிற ஐஸ் கோடவுன் சார். ஆனா, உள்ள மீன் மட்டும் இல்ல... நாங்க கடத்தின பல கோயில் சிற்பங்கள் இருக்கு...” மகா அகலமான மிஷன் தெருவில் ஒரு பார்க்கிங் மைதானத்தை அடுத்து இருந்தது அந்த அபார்ட்மென்ட் வளாகம். சென்ஸார் கருவியில் சாவியைக் காட்டி, கண்ணாடிக் கதவைத் திறந்து, மின்தூக்கியில் மீண்டும் சாவியால் எலக்ட்ரானிக் அனுமதி பெற்று, இருபத்திமூன்றாம் மாடியில் வெளிப்பட்டு... விஜய் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அபார்ட்மென்ட்டில் நுழைந்தான். மின் அடுப்பு, மின் குக்கர், மைக்ரோவேவ், பீங்கான் தட்டுகள், கண்ணாடிக்கோப்பைகள். “ஃப்ரிட்ஜுல பால், பிரெட், பழம் எல்லாம் இருக்கு... பசிச்சா, சாப்புடு... தூங்கு!”

“சாயந்திரம் வெளிய போலாம்னியே, எங்கே..?” “டி.வி சீரியல் விஷயமா ஹாலிவுட் ஏஜன்ட் ஒருத்தரை இன்னிக்கு ஈவ்னிங் மீட் பண்ணப் போறோம்...” விடைபெற்று பத்ரி விலகினான். விஜய் தூங்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்க்க ஆரம்பித்தான். சென்னை. சிந்தாதிரிப்பேட்டை. ஓய்ந்திருந்த மீன் மார்க்கெட். பரபரப்பான போக்குவரத்து அடங்கிய நேரம். சின்னதுரை கொடுத்திருந்த முகவரி ஒரு சந்தில் இருந்தது. இரண்டு லாரிகள் எதிரெதிரில் வந்தால், நடைபாதையில் ஏறித்தான் இடம் விட வேண்டும்.

‘கோல்டு ஸ்டோரேஜ்’ என்று அழைக்கப்படும் உறைகுளிர் நிரம்பிய பனியறை ஒன்றை ஒட்டி இஸ்திரிப்பெட்டியின் தீக்கங்குகளை தண்ணீர் ஊற்றி அணைத்துக்கொண்டிருந்த வண்டிக்காரன், திடீரென்று வாகனங்களின் சீற்றம் கேட்டு நிமிர்ந்தான். சந்தின் இரண்டு பக்கத்திலிருந்தும் அரசாங்க கார்கள் சரக் சரக்கென்று வந்து நின்றன. அதிகாரிகள் இறங்கியதும், வாசலில் காவலுக்கு இருந்த வாட்ச்மேன் மிரண்டான். இன்டர்காமை அவன் எடுத்தபோதே தடுக்கப்பட்டான். 

“இங்க யாரு பொறுப்பு..?” என்று அதிகாரமாகக் கேட்டார், துரை அரசன். “சூப்பர்வைஸர்...” சூப்பர்வைஸரிடம் இன்டர்காமில் பேசி கதவைத் திறக்கச் சொன்னார், துரை அரசன். காரணம் புரியாமல், குழப்பத்தோடு அவன் கதவைத் திறந்ததும், “ஸர்ச் வாரன்ட்டோட வந்திருக்கோம். எல்லாரும் அவங்கவங்க போனை குடுத்துட்டு, தனியா வந்து ஒதுங்கி நில்லுங்க...” என்றார். அங்கிருந்த பணியாளர்கள் அனைவரும் எதிர்க்காமல் ஒத்துழைத்தார்கள். அந்த மாபெரும் குளிர் அறை திறக்கப்பட்டது.

சூப்பர்வைஸர் மட்டும் வெகு மிரட்சியுடன் காணப்பட்டான். திடீரென்று சுவரோடு முதுகு தேய்த்து நகர்ந்து, வாசலை அடைந்து தப்பித்து, வெளியே ஓடப் பார்த்தான். முட்டாள்தனம். நான்கடி தாண்டுவதற்குள், குறுக்கிட்ட போலீஸாரால் மடக்கப்பட்டான். காருக்குள் அடைக்கப்பட்டான். அம்மாபெரும் குளிர்சாதன அறைக்குள் ஓர் ஓரத்தில் மிகப்பெரிய இரும்புக் கதவு ஒன்று பதிக்கப்பட்டிருந்தது. அதன் பூட்டின் அமைப்பு சற்று வித்தியாசமாக இருந்தது. இரண்டு, மூன்று அடுக்குகள், எண்கள் இருந்தன. அவற்றை வரிசைப்படுத்தினால் மட்டுமே அந்தக் கதவு திறக்கும் என்று தோன்றியது.

சூப்பர்வைஸர் தனக்கு அந்த சங்கேத எண்கள் தெரியாது என்று பிடிவாதமாகச் சொல்லிவிட்டான். “அப்ப யாருக்குத் தெரியும்..?” “எங்க முதலாளிக்கு மட்டுமே தெரியும்..” “யாரு உங்க முதலாளி..?” “உங்களுக்கு அவரை நல்லாத் தெரியும்... தீபக் தர்மசேனா.” அதே நேரம்... தீபக் தர்மசேனாவுக்கு தகவல் போய், அவர் தன் வழக்கறிஞரை அவசரமாக போனில் தொடர்புகொண்டார். “இப்ப, போலீஸ் என்னோட கோல்ட் ஸ்டோரேஜுக்கு ரெய்டு வந்திருக்காங்களாம்! என்ன செய்யட்டும்..?” “உள்ள என்ன இருக்கு..?”

“அது தெரியாம இருக்கறதே உங்களுக்கு நல்லது...” “இல்லீகல் வேலையா? கடவுளே... போலீஸ் கதவைத் தெறந்துட்டாங்களா..?” “இல்ல... நம்பர் காம்பினேஷன் எனக்கு மட்டும்தான் தெரியும்!” “வெரிகுட்! பயப்படாத... ஏதாவது சிக்கலாச்சுன்னா, பழியை எல்லாம் தூக்கி சூப்பர்வைஸர் மேல போடு! ‘நான் என்ன தினமும் போய் அந்த கோல்ட் ஸ்டோரேஜைப் பார்த்துட்டு இருக்க முடியுமா’னு கேளு. ‘சூப்பர்வைஸர்க்கு பூட்டு காம்பினேஷன் தெரியும். அவனோட பொறுப்புலதான் மொத்த கோல்ட் ஸ்டோரேஜும் இருக்கு... எனக்குத் தெரியாம அவன் ஏதோ ஒளிச்சு வெச்சிருக்கான்’னு சொல்லிடு. மாட்டுனா எத்தனை லட்சம் போகும்..?”

“லட்சம் இல்ல... கோடிகள்!” “அப்ப பெரிசா செலவு இருக்கு. மொதல்ல போலீஸ்கிட்ட பிடி கொடுத்து பேசாத... மிச்சத்தை நான் பார்த்துக்கறேன். உடனே முன்ஜாமீன் வாங்க அப்ளை பண்றேன்... உன் போனை ஸ்விட்ச் ஆஃப் பண்ணிட்டு, இதயவலினு ஏதாவது ஆஸ்பத்திரில போய் படுத்துக்க!” தீபக் தர்மசேனா தன் போனை அணைத்தார். அமெரிக்க மாலை நேரம்.

அந்தப் பெரிய சர்ச்சுக்கு முன்னால் இருந்த வளாகத்தில் காரைக் கொண்டு நிறுத்தினான், பத்ரி. விஜய் இறங்கினான். சுற்றிலும் பார்த்தான். அகலமான நடைபாதைகள். அகலமான சாலைகள். ஒளிவிளக்குகள் எல்லாம் இருந்தும், அங்கங்கே வீடில்லாத கறுப்பினத்தவர் படுத்திருந்தனர். இங்கேயும் நடைபாதைவாசிகள் இருக்கிறார்களா..? ஊரே சுத்தமாக இருக்க, தாங்கள் இருக்கும் இடத்தை அசுத்தம் செய்வது பற்றிய குற்ற உணர்வு ஏதுமின்றி அமெரிக்காவிலும் ஆட்கள் இருக்கிறார்கள் என்பது விஜய்க்கு திடுக்கிடலாக இருந்தது.

ஒரு நாய் சற்று தூரம் விஜய்யின் பின்னால் ஓடி வந்தது. அட்டையில் படுத்திருந்த கறுப்புப் பெண்மணி அதட்டல் போட்டதும், அது அவளிடம் ஓடிப்போய் உட்கார்ந்தது. எந்த ஊராக இருந்தாலும், ஏழைகளிடம் நாய்கள் அன்பு பாராட்டத் தவறுவதே இல்லை என்பதையும் அவன் கவனித்தான். பளபளப்பான கறுப்பு நிறக் கார் ஒன்று வந்து ஓரத்தில் நின்றது. அதிலிருந்து இறங்கிய மனிதர் மெலிதான தேகத்துடன் உயரமாக இருந்தார். வெளேரென்ற சருமத்துடன், அந்த மாலை வேளையிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்திருந்தார்.

“இது டாம் கார்ட்டர்...” என்று பத்ரி அவரை விஜய்க்கு அறிமுகம் செய்துவைத்தான். விஜய்யை அவருக்கு அறிமுகம் செய்துவைத்தான். அங்கிருந்த மர பென்ச்சில் அவர்கள் அமர்ந்தார்கள். “நான் இங்கு முக்கியமான ஒரு ஏஜென்ட்டாக இருக்கிறேன். உனக்கு சீரியல்களை வாங்கித் தருவது கஷ்டமில்லை. ஆனால், உங்கள் தொலைக்காட்சி மூலம் இந்தத் தொடர் காட்சி பல்லாயிரம் மக்களைச் சென்றடையும் என்பதை அவர்கள் நம்ப வேண்டியிருக்கும்...” என்று ஆங்கிலத்தில் சொன்னார்.

விஜய் தங்கள் கே.ஜி. தொலைக்காட்சி பற்றி அவரிடம் விளக்கினான். கையோடு கொண்டு வந்திருந்த புள்ளி விவரங்களை அவரிடம் பகிர்ந்துகொண்டான். அவர் ஐந்து டி.வி.டி.க்களை அவனிடம் கொடுத்தார். “இதையெல்லாம் நேரம் கிடைக்கும்போது பார். எந்த மாதிரியான சீரியல்களைத் தேடி வந்திருக்கிறாய் என்று தெளிவாகிவிட்டால், நாம் இந்த வாரக் கடைசியில் லாஸ் ஏஞ்சல்ஸ் போகலாம். அங்கு முக்கியமான கம்பெனிகளில் சந்திப்புகளுக்கு ஏற்பாடு செய்கிறேன்...” என்றார் டாம். எங்கோ, ஏதோ தவறாயிருக்கிறது என்று விஜய்யின் உள்மனதில் ஒரு குரல் கேட்டுக்கொண்டேயிருந்தது. ‘‘உள்ள மீன் மட்டும் இல்ல... நாங்க கடத்தின பல கோயில் சிற்பங்கள் இருக்கு...”

(தொடரும்...)

-ஓவியம்: அரஸ்