வியாபாரம்



-இரா.பாரதிதாசன்

‘‘தம்பி, கர்ச்சீப் ஒண்ணு கொடு’’ என்று ஒருவர் வந்து கேட்டதும், கடைப் பையன் ஓடிப் போய் கர்ச்சீப் பண்டலை பிரித்துக் காட்டி, அதிலிருந்து ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு 10 ரூபாயை வாங்கி வந்து கொடுத்தான். இதைப் பார்த்துக்கொண்டிருந்த  முதலாளி டென்ஷன் ஆனார். ‘‘டேய் முரளி! இது மாதிரி கர்ச்சீப் பிசினஸுக்கு எல்லாம் முக்கியத்துவம் கொடுத்து நேரத்தை வீணாக்காதே. எவ்ளோ பெரிய கடை நம்மோடது! ஷர்ட்ஸ், புடவை, குழந்தைகள் டிரஸ்னு வாங்க வந்தா மட்டும் பாரு.

அதுலதான் நமக்கு லாபம். கர்ச்சீப் வித்தா நமக்கு என்ன கிடைக்கப் போகுது? 10 ரூபாய் வியாபாரத்துக்கு இப்படி ஓடாதே! கர்ச்சீப் மட்டும் வாங்க வந்தா, ‘இல்லே’ன்னு சொல்லி அனுப்பு’’ என்றார். சில நிமிடங்களில் அந்த கர்ச்சீப் கஸ்டமர் திரும்ப வந்தார். ‘‘சார்! கல்யாண ஜவுளி ஒரு லட்ச ரூபாய்க்கு வாங்கணும். எல்லா கடையிலேயும் கர்ச்சீப் கேட்டா, ஒரு மாதிரி பார்த்துட்டு ‘இல்லே’ன்னு சொல்றாங்க.

உங்க கடையிலே மட்டும்தான் ‘10 ரூபாய் வியாபாரம்தானே’ன்னு நினைக்காம, சேல்ஸ்மேன் ஓடிவந்து கொடுத்தாரு! அந்த ஒரே காரணத்துக்காகத்தான் பக்கத்துக் கடையையெல்லாம் விரும்பாம இங்கே வந்தேன்’’ என்று அவர் சிரித்த முகத்தோடு சொல்ல, முரளியை பெருமையோடு பார்த்தார் முதலாளி.