தொழிலாளர்கள் ஓட்டு யாருக்கு?
‘‘இந்த ஆட்சியில் அதிகம் வஞ்சிக்கப்பட்டது நாங்கள்தான்’’ என்று குமுறுகிறார்கள் தொழிலாளர்கள். மக்கள் நலப் பணியாளர்களை வீதிக்கு அனுப்பி, தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாக்கியது முதல் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிய சத்துணவுப் பணியாளர்களை காவல்துறையை ஏவி அடித்துத் துரத்தியது வரை ஏராளமான கறுப்பு வரலாறுகள் சேர்ந்து கிடக்கின்றன அ.தி.மு.க ஆட்சியில்.
தமிழகம் முழுதுமே தொழிலாளர்களின் மனநிலை அ.தி.மு.க.வுக்கு எதிராகத்தான் இருக்கிறது. ‘‘சிறப்புற செயல்பட்டு வந்த கட்டுமானத் தொழிலாளர் வாரியம் உள்பட அனைத்து வாரியங்களிலும் ஆளுங்கட்சியினரை நுழைத்து அவற்றின் செயல்பாட்டை முடக்கியதோடு இல்லாமல், சட்டபூர்வமாக தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச பலன்களைக் கூட தராமல் வஞ்சிக்கிறார்கள்’’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் தொழிலாளர்கள்.
‘‘கடந்த 5 ஆண்டுகளில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழந்து, வாழ்வின் விளிம்புக்குச் சென்றிருக்கிறார்கள். முதலாளிகளுக்கும் பணக்காரர்களுக்குமான ஆட்சியாகவே இது இருந்து முடிந்திருக்கிறது. உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களில் குறைந்தபட்ச உரிமையைக் கூட தொழிலாளர்கள் பெறமுடியவில்லை. உரிமை கேட்டுப் போராடினால் காவல்துறை தடியோடு வந்து நிற்கும்.
‘ஒப்பந்தத் தொழிலாளர் நீக்குதல், முறைப்படுத்துதல் சட்டம் 1971’ன்படி, ஒப்பந்தத் தொழிலாளர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தக் கூடாது. ஆனால், பல நிறுவனங்களிலும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள், பழகுனர்கள்தான் நேரடி உற்பத்திப் பணிகளில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். மிகக்குறைந்த ஊதியம்... கடும் பணிச்சுமை... சங்கத்தில் சேர்வதற்குக் கூட உரிமை இல்லாத அளவுக்கு ஒரு சர்வாதிகார ஆட்சியைத்தான் இத்தனை காலம் மக்கள் சகித்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னையைச் சுற்றியுள்ள 5 லட்சம் தொழிலாளர்களில் 3 லட்சம் பேர் அத்துக்கூலிகளாக எதிர்காலம் புரியாமல் வாழ்க்கை நிரந்தரமில்லாமல் உழைத்துக் கொட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசின் அக்கறையின்மையாலும், போதிய நடவடிக்கை இன்மையாலும், 25 ஆயிரம் தொழிலாளர்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு நோக்கியா, ஃபாக்ஸ்கான் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மூடி விட்டு ஓடிப் போயின. மிகுந்த கனவுகளோடு வேலையில் சேர்ந்த இளைஞர்கள் பலர், எதிர்காலம் புரியாமல் தவித்து நிற்கிறார்கள். அவர்களைப் பற்றி துளியளவும் அக்கறை காட்டவில்லை இந்த அரசு. மாற்று வேலைக்கான உதவிகளைக் கூடச் செய்யவில்லை. பயிற்சி முகாம் நடத்துகிறேன் என்றார்கள். அதனால் துளியளவும் பலனில்லை. தனியார் நிறுவனங்களை விடுங்கள். அரசு நிறுவனங்களான போக்குவரத்து, மின் வாரியம், கூட்டுறவு, சிவில் சப்ளை கார்ப்பரேஷன், டாஸ்மாக் போன்றவற்றிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. அனைத்தும் நிரந்தரப் பணியிடங்கள். அதையெல்லாம் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு இருக்கிற ஊழியர்களை வன்கொடுமைக்கு உள்ளாக்குகிறார்கள்.
பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்யாமல் வஞ்சிக்கிறார்கள். அவ்வப்போது, நியமிக்கப்படுகிற சில நிரந்தரப் பணியிடங்களுக்கும் கடும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எல்லாவற்றிலும் ஊழல், முறைகேடு. அ.தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்ற காலத்திலிருந்து மின்வெட்டால் வேலையிழந்த, தொழில் இழந்த, வாழ்க்கை இழந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம். பலர் தாக்குப் பிடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு இறந்த அவலமெல்லாம் உண்டு. உணர்வுள்ள ஒரு தொழிலாளி கூட இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க மாட்டார்கள்...’’ என்கிறார், தமிழ்நாடு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாநில உதவிப் பொதுச்செயலாளர் திருச்செல்வம்.
தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறைக்கு ஐந்து ஆண்டுகளில் 3 முறை அமைச்சர்களை மாற்றினார்கள். ‘‘ஒருவருக்கும் தொழிலாளர்களின் நலன் மீதும் வாழ்க்கை மீதும் அக்கறையும் இல்லை; புரிதலும் இல்லை’’ என்று குமுறுகிறார்கள் தொழிலாளர்கள். பன்னாட்டு நிறுவனங்களின் அடக்குமுறையிலும், பணி அழுத்தத்திலும் சிக்கி பல தொழிலாளர்கள் இறந்ததாகவும், ஆனால் அவை இயற்கை மரணங்களாகப் பதிவு செய்யப்பட்டு நிறுவனங்கள் காப்பாற்றப்பட்டதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள் தொழிற்சங்கத்தினர்.
‘‘இது முற்றிலும் தொழிலாளர் விரோத அரசு. தொழிற்சங்கப் போராட்டங்களை திட்டமிட்டு முடக்க முயற்சித்தது. அந்த வடுக்கள் எல்லாம் தொழிலாள தோழர்களின் உடலிலும் மனதிலும் ஆழப் பதிந்து கிடக்கின்றன. அவர்கள் யாரும் மீண்டும் அ.தி.மு.க.வுக்கு ஆளும் வாய்ப்பைத் தர மாட்டார்கள்...’’ என்று உறுதியாகச் சொல்கிறார் இடதுசாரி சிந்தனையாளர் அருணன்.
‘‘தேர்தலின்போது, ‘தொழிலாளர்களின் வாழ்க்கையை மாற்றுவோம்’ என்றார்கள். என்ன மாறியது? விலைவாசி உயர்வு அடித்தட்டு தொழிலாளர்களின் குரல்வளையை நெரித்துக் கொண்டிருக்கிறது. மின் கட்டணம், பால் விலை, பேருந்துக் கட்டணங்கள் என எல்லாம் உயர்ந்து விட்டன. ஏழைத் தொழிலாளர்களின் நம்பிக்கையாக இருப்பது அரசுப் பள்ளிகள்தான். தனியார் பள்ளிகளை வளர்த்தெடுப்பதற்காக அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு முடக்கப்பட்டன. எல்லாவற்றிலும் லஞ்சம், ஊழல். ஆயா வேலை முதல் துணைவேந்தர் வேலை வரை எல்லாவற்றுக்கும் விலை நிர்ணயித்து வசூல் செய்கிறார்கள்.
காலை முதல் மாலை வரை உடல் வருத்தி உழைத்துக் களைத்து தொழிலாளி சம்பாதிக்கும் காசை டாஸ்மாக்கில் பிடுங்கிக் கொள்கிறார்கள். ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய்... யாருடைய பணம்? அதை நுகர்ந்து பாருங்கள்... அடித்தட்டு தொழிலாளியின் வியர்வையும் ரத்தமும் நாறும்...’’ என்று ஆவேசம் ததும்பப் பேசுகிறார் அருணன். ‘மனிதர்களே மனிதக்கழிவுகளை அகற்றக்கூடாது’ என்று ஐ.நா. சபை வரை தீர்மானம் நிறைவேற்றி வைத்திருக்கிறது.
உலகெங்கும் எவ்வளவோ நவீன சாதனங்கள் வந்தபிறகும் கூட இங்கே மனிதர்கள்தான் சாக்கடைகளை சுத்தம் செய்கிறார்கள். உரிய பாதுகாப்பு சாதனங்கள் கூட இல்லை. சராசரி மனிதர்கள் மூக்கைப் பிடித்துக் கொண்டு கடந்துபோகிற மலக் கிணற்றுக்குள் மூழ்கி அடைப்பை எடுக்கிறார்கள் தொழிலாளர்கள். அவ்விதம் இறங்கும்போது இறப்போரும் உண்டு. நீதிமன்றங்கள் தீர்ப்பு சொல்லி ஓய்ந்து விட்டன. ஆனால் அரசு மாறவில்லை. போதிய நிதி ஒதுக்கி போதுமான உபகரணங்கள் வாங்கக்கூட மனமில்லை.
திமுக அரசால் அமைக்கப்பட்ட தொழிலாளர் நலவாரியங்கள் அனைத்தும் அ.தி.மு.க.வினர் அடைக்கலமாகும் மையங்களாகி விட்டன. ‘‘தமிழகத்தில் கட்டுமானத் தொழிலாளர்கள், உடல் உழைப்புத் தொழிலாளர்களுக்கு நல வாரியங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் பல லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த நலவாரியங்களை முறையாகச் செயல்படுத்த முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும் என்பது விதி. 2011ல் பொறுப்பேற்ற அ.தி.மு.க அரசு, 2014 மத்தியில் கட்டுமானத் தொழிலாளர் வாரியத்துக்கும், உடல் உழைப்புத் தொழிலாளர் வாரியத்துக்கும் மட்டும் முத்தரப்புக் கமிட்டியை அமைத்தது. நியாயமாக அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் அதில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் தொழிற்சங்கத்துக்கு தொடர்பே இல்லாத அ.தி.மு.க.வினர் எல்லாம் உள்ளே வந்து விட்டார்கள். கட்டுமானத் தொழிலாளர் வாரியத்தில் அம்மா பேரவை செயலாளர் உறுப்பினராக இருக்கிறார். உடல் உழைப்புத் தொழிலாளர் நல வாரியத்தில் ஒரு மாவட்ட செயலாளரே உறுப்பினராக இருக்கிறார். இந்த வாரியங்களிலிருந்து முறையாக எந்த பணப் பயனும் தொழிலாளர்களுக்குச் செல்வதில்லை. தொழிலாளர்களை அலைக்கழிக்கிறார்கள். மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம் மிக முக்கியமான அரசு அமைப்பு.
அவ்வப்போது கூடி தொழிலாளர் நலன் சார்ந்த முடிவுகளை எடுக்க வேண்டும். கடந்த 5 வருடங்களில் ஒரே ஒரு முறைதான் இந்தக் கூட்டம் நடந்திருக்கிறது. தொழிலாளர்கள் கை கோர்த்து இந்தத் தேர்தலில் அ.தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்புவார்கள்...’’ என்கிறார் கட்டுமானத் தொழிலாளர் சம்மேளனத்தின் அகில இந்தியத் தலைவர் சிங்காரவேலு. போராடினால் போலீஸ்... உரிமை கேட்டால் உதை... இந்த அடக்குமுறைக்கும், சர்வாதிகாரத்துக்கும் தேர்தலில் தக்க பதில் தருவார்கள் தொழிலாளர்கள்.
சொன்னீர்களே... செய்தீர்களா?
2011 தேர்தலில் அதிமுக தந்த வாக்குறுதிகள்
* தென்னை, பனை விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயரவும் தொழிலுக்கு உத்தரவாதம் அளிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்களின் தனிநபர் வருமானத்தை 3 மடங்காக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். * மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு மாவட்டம்தோறும் தொழிற்கூடங்கள் அமைத்துத் தரப்படும். டெரகோட்டா முறையில் மண்பாண்டங்கள் செய்ய பயிற்சி அளிக்கும் வகையில் தொழிற்பயிற்சிக் கூடங்கள் அமைக்கப்படும். * விவசாயத் தொழிலாளர்களின் தனிநபர் வருமானம் 3 மடங்காக உயர்த்தப்படும். * கிராமங்கள்தோறும் நடமாடும் மருத்துவமனை செயல்படுத்தப்படும். * 40 லட்சம் குடும்பங்களுக்கு 1 லட்ச ரூபாய் மானியத்துடன் பசுமை வீடு திட்டம் விரிவுபடுத்தப்படும். * 30 முதல் 40 கிராமங்கள் இணைக்கப்பட்டு தேவையான சாலை, உள்கட்டமைப்புகள், தொலைத் தொடர்பு, அறிவுசார் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு பொருளாதார மேம்பாடு அடைய வழிவகை செய்யப்படும். * பாரம்பரிய மீனவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்றுமதி நோக்கோடு நடுக்கடல் மீன் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக்கூட்டல் ஏற்றுமதி கப்பல் பூங்கா அமைக்கப்படும். * தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை இன மக்களுக்கு தொழில் தொடங்க பயிற்சி அளித்து 25 சதவீத மானியத்தில் கடன் உதவித்தொகை வழங்கப்படும். * சத்துணவுப் பணியாளர்களின் பணி மற்றும் ஊதியம் தொடர்பான பிரச்னைகள் முன்னுரிமையோடு அணுகப்பட்டு முடிவுகள் எடுக்கப் படும்.
யாருக்கு ஓட்டு?
கைத்தறி நெசவாளர் முத்துக்கனி, விருதுநகர் பல கைத்தறி கூட்டுறவு சங்கங்களில் கொள்முதல் செய்த துணிகளுக்கு அரசு பணம் வழங்காததால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி தொழிலாளர்களுக்கு சம்பளம் போடுகிறோம். இந்த அரசு அகற்றப்பட்டால்தான் நிலை சீராகும்.
பெட்டிக்கடைக்காரர் முகம்மது ஜியாத் கான், நம்புதாளை ஐந்தாண்டுகளாக செயல்படாத அ.தி.மு.க.வுக்கு ஒருபோதும் நான் ஓட்டு போட மாட்டேன்.
ஓட்டல் தொழிலாளி முகம்மது இப்ராகிம், ராமநாதபுரம் மின்வெட்டால் பல தொழில்கள் நாசமாகி விட்டன. அதை சரிசெய்ய ஆக்கபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
விவசாயத் தொழிலாளி மகேந்திரன், போடி பாலிடெக்னிக் படிச்சுட்டு விவசாயத் தொழிலாளியாக இருக்கிறேன். படிச்ச படிப்புக்கு வேலை இல்லை. எங்க பகுதியில ஒரு தொழிற்சாலையும் இல்லை. மாங்காய் கூழ் கம்பெனி துவக்குவோம்னு சொல்லி ஓட்டு வாங்கினாங்க. எதுவும் நடக்கலே.
நெசவாளர் மணி, காரைக்குடி உரிய கூலி கிடைக்கலே. பாவு கிடைக்காததால தொழில் நசிஞ்சு போச்சு. எங்கள் வாழ்வாதாரத்தை காக்கத் தவறிய அ.தி.மு.க.விற்கு ஓட்டு போட மாட்டோம்.
நெசவாளர் சீதாராமன், சிவகங்கை தி.மு.க ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட மெகா கிளஸ்டர் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர். தறி மாடலை மாற்ற வேண்டும். டிசைன் மாற்ற வேண்டும். எங்களுக்கென்று எதையும் இவர்கள் செய்யவில்லை.
நகைத்தொழிலாளி ராஜேந்திரன், ஒட்டன்சத்திரம் எல்லாத் துறைகளும் நசிஞ்சு பணப்புழக்கமே இல்லாமப் போயிடுச்சு. அ.தி.மு.க. விற்கு இம்முறை எங்கள் ஓட்டு இல்லை.
அரசு போக்குவரத்துக் கழகம் ராஜேந்திர குமார், திண்டுக்கல் வாரிசு வேலையின்போது படிப்பிற்கேற்ற பணி வழங்குவதில்லை. தி.மு.க ஆட்சியில் இதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது. போராட்டம் நடத்தியும் அ.தி.மு.க அரசு இதனை நடைமுறைப்படுத்தவே இல்லை.
விவசாயத் தொழிலாளி செல்வக்குமார், கொக்கிரகுளம் நெல்லை மாநகரப் பகுதியில் குடிக்க தண்ணி கிடைக்கலே. இந்தமுறை அ.தி.மு.க.விற்கு வாக்களிக்கக் கூடாதுங்கிறதுல உறுதியா இருக்கேன்.
மார்க்கெட்டிங் எக்சிக்கியூடிவ் ராஜ், சங்கரன்கோவில் திரும்பவும் ஆட்சிக்கு வந்தா படிப்படியாக மதுவுக்கு தடை விதிப்போம்னு இப்போ சொல்றாங்க. 5 வருஷம் என்ன செஞ்சாங்க? எத்தனை தொழிலாளர்கள் உழைச்சு சேர்த்த பணம் டாஸ்மாக்ல வீணாச்சு!
கூலித் தொழிலாளி கண்ணன், ஊத்துமலை எங்களை மாதிரி கூலித் தொழிலாளர்களுக்கு ஆடு, மாடு தர்றேன்னு சொன்னாங்க. எங்களுக்குக் கிடைக்கல. மிக்சி, கிரைண்டர் கூட எங்க ஊருல பாதிப் பேருக்கு வந்து சேரல. ஊழல் செய்யற இந்த ஆட்சி முடிஞ்சு போகட்டும்.
ஜெராக்ஸ் கடை ஊழியர் விஜயலட்சுமி, சங்கரன்கோவில் எங்க நகரத்துல இன்னைக்கு வரைக்கும் 10 நாளுக்கு ஒரு முறைதான் குடிநீர் கிடைக்குது. நாங்க படற அவஸ்தையை வெளியில சொல்லமுடியலே. நிச்சயமா இவங்களுக்கு ஓட்டு போட மாட்டோம்.
காற்றாலை தொழிலாளி கிருஷ்ணகுமார், கோவில்பட்டி இந்தப் பகுதியில 11 தனியார் பவர் பிளான்ட் இயங்கிச்சு. அ.தி.மு.க. ஆட்சியில் வெளிமாநிலங்களில் இருந்து மின்சாரம் விலைக்கு வாங்கினதால எல்லா ஆலையையும் மூடிட்டாங்க. எல்லாரோட வேலையும் போயிடுச்சு.
விவசாயத் தொழிலாளி வெள்ளத்துரை, காவலாக்குறிச்சி தி.மு.க ஆட்சிக்கு வந்தா விவசாயக் கடனை தள்ளுபடி செய்வோம்னு சொல்றாங்க. இந்த முறை அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போடப் போறதில்லை.
தீப்பெட்டி தொழிலாளி தேவி, கோவில்பட்டி பல நூறு பெண்களுக்கு வாழ்க்கை தந்த தீப்பெட்டி தொழில் நசிஞ்சு போச்சு. ஏழைகள் மேல கொஞ்சமும் அக்கறையில்லாத இந்த அரசுக்கு முடிவு கட்டுவோம்.
கூலித் தொழிலாளி ஜீவானந்தம், கடையநல்லூர் பால், பஸ் கட்டணம் எல்லாம் கூடிப் போச்சு. குறைச்ச கூலி வாங்கற தொழிலாளிங்களுக்கு வாழ்க்கையே நரகமானதுதான் மிச்சம்.
கேபிள் ஆபரேட்டர் ராமகிருஷ்ணன், கீழப்பாவூர் ரேஷன் கடைக்கு எப்போ போனாலும் ‘இல்லை’ங்கிற பதிலைத் தவிர வேறெதுவும் கிடைக்கிறதில்லை. இந்த ஆட்சி எங்களுக்கு வேண்டாம்.
பீடித் தொழிலாளி சுலைமான், தென்காசி அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை முடக்கினது அ.தி.மு.க. அரசு. எங்க மேல அக்கறை காட்டாத இவங்களுக்கு ஓட்டு இல்லை.
டூவீலர் மெக்கானிக் சுருளிராஜன், ராப்பூசல் பணக்காரங்க செய்யிறது மட்டும்தான் தொழில். எங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஒரு உதவியும் கிடைக்காது. அ.தி.மு.க.வுக்கு தேர்தல்ல பாடம் புகட்டுவோம்.
வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் தொழிலாளி பாஸ்கர், புதுக்கோட்டை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினாமுதல்ல போலீஸ்தான் தடியோட வந்து நிக்குது. இது மக்களாட்சி இல்லை, போலீஸ் ஆட்சி.
ஜவுளிக்கடை ஊழியர் பிரபு, புதுக்கோட்டை மதுக்கடைகளை வீதிக்கு வீதி திறந்து நாறடிச்ச அதிமுகவுக்கு எங்க ஓட்டு இல்லை.
பூ வியாபாரி முனீஸ்வரன், ஸ்ரீரங்கம் ஆட்சிக்கு வந்ததும் ஸ்ரீரங்கத்தில் அடிமனை பிரச்னை தீர்த்து வைக்கப்படும்னு அந்த அம்மா சொன்னாங்க. 5 வருடம் முடிஞ்சிடுச்சு. சொன்ன ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றலே.
டிவி மெக்கானிக் பினுக்குமார், திருச்சி எம்எல்ஏ யார்னு கூட தெரியலை. தொகுதிப் பக்கம் வந்து எட்டிப் பார்த்தால்தானே தெரியும்! இந்த முறை வரட்டும். நாக்கைப் பிடுங்குற மாதிரி கேட்டு துரத்துறோம்.
டீக்கடை தொழிலாளி விஜய், நாகப்பட்டினம் விலைவாசி ஏறிப்போச்சு. மக்கள் மேல கொஞ்சமும் அக்கறையில்லாத இந்த அரசு இதோடு முடிஞ்சு போகட்டும்.
டெய்லர் ராஜ்குமார், நாகப்பட்டினம் பால், காய்கறியெல்லாம் வாங்கிச் சாப்பிடவே முடியாது போலருக்கு. இந்த ஆட்சி தொடர்ந்தா எங்களை மாதிரி ஏழைங்க வாழவே முடியாது.
மட்டன் ஸ்டால் காஜா மைதீன், சோமரசம்பேட்டை பசுமை வீடு திட்டம், இலவச ஆடு திட்டங்களை எல்லாம் அ.தி.மு.க.காரங்களே கொண்டு போயிட்டாங்க. பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்கலே.
- தினகரன் செய்தியாளர்கள் உதவியுடன் வெ.நீலகண்டன்
|