கவிதைக்காரர்கள் வீதி



தலைமுறை
தாத்தன் காலத்தில்
நதிக்கரையில் புதைத்தோம்
தகப்பன் காலத்தில்
நதியிலேயே புதைத்தோம்
எம் காலத்திலோ
நதியையே புதைத்தோம்!
- ஸ்ரீதர் பாரதி, மதுரை.

காவல்காரன்
ஏடிஎம் காவல்காரருக்கு
மொத்த பணத்தையும்
கொள்ளைக்காரர்களிடமிருந்து
காக்கும் லாவகம் இருந்தது
ஆனால்
சம்பள நாளன்று
வட்டிக்காரனிடமிருந்து
சொந்தப் பணத்தை
பாதுகாக்க இயலவில்லை!
- கனவு திறவோன், ரூர்க்கி.



வாழ்க்கை
வக்கீலுக்கு படித்த மகன்
வாழ்க்கை கற்றுக்கொடுத்தான்
சொத்து வேண்டி
வழக்கு போட்டு!
- நா.கி.பிரசாத், கோவை.

பொம்மைகள் உலகம்
படிக்க வைக்கின்ற
அம்மா ஒரு பொம்மை
வெளியே கூட்டிச் செல்லும்
அப்பா ஒரு பொம்மை
சாப்பாடு ஊட்டுகின்ற
பாட்டி ஒரு பொம்மை
விளையாட்டுக் காண்பிக்கும்
தாத்தா ஒரு பொம்மை
குழந்தையின் உலகத்தில்
எல்லோரும் பொம்மைகள்
- நாகேந்திர பாரதி, சென்னை-24.

சொல் 
ஆயிரம் இருந்தாலும்
நான் அப்படிச்
சொல்லியிருக்கக்கூடாது
என்கிறார்கள்.
நமக்குள்ளே இருப்பது
ஆயிரம் இல்லை
ஒன்றுதான்,
அதை
வேறெப்படிச் சொல்வது?
- சேயோன் யாழ்வேந்தன், திருச்சி.