குட்டிச்சுவர் சிந்தனைகள்
தீபாவளி திருவிழாவுக்கு புதுப் படங்கள் வருது, பொங்கல் திருவிழாவுக்கு புதுப் படங்கள் வருது, தேர்தல் திருவிழாவுக்கு ஏன் வர்றதில்ல? சொல்லப் போனா தீபாவளி, பொங்கலை விட இந்தத் திருவிழாவின்போதுதான் மக்கள் கையில அதிகமா பணம் புழங்குது. அதான் நாங்களே நாலஞ்சு படத்தை திரையிட முடிவு செஞ்சுட்டோம்...
தேர்தலும் கடந்து போகும்: ‘யாரோ சைரன் வச்ச காருல போங்க, எங்களுக்கு நைட்டானா பீரு... விடிஞ்சா சோறு’னு வாழும் பல லட்சம் தமிழ் மக்கள் சேர்ந்து நடிக்கும் படம்தான் இது. அரசியலைப் பற்றி கருத்துக்கூட சொல்ல விரும்பாமல் வெறுத்துப் போன மனிதர்களின் கதை இது. ‘தினசரி வருமானம்தான் எங்களுக்கு வெகுமானம், நான் வேலை செய்யும் இடம் வெகு தூரம்’னு வரும் பாடல் ஆல்ரெடி பட்டி தொட்டி எங்கும் பயங்கர ஹிட். இந்தப் படத்தை ‘ஓட்டுக்கு நோட்டு’ சினி ஆர்ட்ஸுக்காக இயக்கி இருக்கிறார் ‘குவாட்டர்’ கோயிந்து.
ஹலோ நான் தாய் பேசுறேன்: தேர்தல் சமயங்களில் மட்டும் ஆடியோ வழியாகவும் வீடியோ வழியாகவும் மக்களைச் சந்திக்க வரும் ஹீரோவின் கதைதான், ‘ஹலோ நான் தாய் பேசுறேன்’. பிள்ளைகளுக்கு என்ன செய்யவேண்டுமென ஒரு தாய்க்குத் தெரியுமென, அனைவரின் நெத்தியிலும் 111 விதியின் கீழ் நாமம் போடும் சென்டிமென்ட் சீன், ‘அது இந்த டிராயர் இல்ல, மேஜை டிராயர்’ என ஆளை மாத்தி உருட்டும் காமெடி சீன், முன்னாள் அமைச்சர்கள் போல முன்னாள் வேட்பாளர்கள் கொண்டு வரும் ட்விஸ்ட் சீன்கள், லாரி போகும் ரோட்டில் ஏரியை விடும் ஆக்ஷன் சீன், ஹெலிகாப்டர் காட்சிகள், கன்டெயினர்கள் காட்சிகள் என பக்கா கமர்ஷியல் படமாக வந்திருக்கிறது இந்தப் படம் என்று ஃபர்ஸ்ட் காப்பி பார்த்த விநியோகஸ்தர்கள் சொல்லியிருக்கின்றனர். தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தன் சொந்தச் செலவுலயே தயாரிப்பாளர் வெளியிடுகிறார்.
தனியொருவன் 2: காதல் இளவரசர்கள் நிறைய பேரைப் பாத்திருக்கோம்... ஆனா கற்பனை இளவரசர்னு யாரும் இல்லை. அந்தக் குறைய நிவர்த்தி செய்ய, நம்ம சின்னய்யா நடிப்பில் வெளியாகும் படம்தான் ‘தனி ஒருவன் 2’. தன்னைத்தானே முதல்வர் வேட்பாளரா அறிவிச்சுக்கிட்டு, தன்னைத்தானே முன்னிறுத்தி, தனக்குத்தானே ஓட்டு போட்டு, தன்னைத்தானே முதல்வரா நினைச்சுக்கிட்டு, தனக்குத்தானே தமிழக பட்ஜெட் வரை போடும் ஒரு அட்டகாச கற்பனைக் கதைதான் இந்தப் படம்.
நாலு மாவட்டத்துக்குள்ள யாரோவாகவும், நாப்பது மாவட்டத்துல ஜீரோவா இருந்தாலும், தன்னை எப்பொழுதும் ஹீரோவாக நினைத்து வாழும் இந்தக் கேரக்டரை அற்புதமாக வடிவமைத்து இருப்பதாக, படத்தின் இயக்குநர் கோபதாஸ் சொல்லியிருக்காரு. படத்தை பெரும் செலவில் ‘மாம்பழம் கிரியேஷன்ஸ்’ தயாரிச்சு இருக்காங்க. படத்தை நாலு மாவட்டத்தில் மட்டும் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
நானும் ரவுடிதான் 2: தமிழக வாழைக்காய் உரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி பேல்பூரிமுருகன் நடிக்கும் படம்தான் ‘நானும் ரவுடிதான் 2’. இந்தப் படம் சென்ற படத்தின் தொடர்ச்சியாகும். சென்ற படத்தின் முடிவில், ‘ரெண்டு நிமிஷம் உத்து பார்த்தாரு, டக்குனு காலை அமுக்கச் சொல்லிட்டாரு’னு முடிந்த கதையின் தொடர்ச்சியா, ‘கடைசிவரை கையேந்தி நின்னும் கால் கிலோ காபித்தூள் கிடைக்கலை’ என இந்தப் படம் ஆரம்பிக்கும் காட்சிகள் இணையத்தில் ஆல்ரெடி வந்துவிட்டன. ‘கிடைச்ச கொய்யாவ கையோட வச்சுக்குவாரா, இல்லை திரும்ப அய்யாவையே பார்க்கப் போவாரா’னு ஆரம்பக் காட்சியைப் பார்த்த அனைவரும் முழுப் படத்தையும் பார்க்க ஆவலாக இருக்கிறார்கள்.
காவி சட்டை: ‘காக்கி சட்டை’ படம் பெற்ற வெற்றியில், அதே பாணியில் வெளிவரும் படம்தான் ‘காவி சட்டை’. ‘காக்கி சட்டை’யில மனுஷனோட கிட்னி, லிவர், நுரையீரல்னு எடுத்து உயிரைப் பறிக்கிறத காட்டுன மாதிரி, டுமீல்-இசை சவுண்ட்ராஜன் இயக்கத்துல வர்ற இந்தப் படத்துல மனுஷனோட பொறுமையை சோதிச்சு உயிரை எடுக்கிறதப் பத்தி காட்டுறாங்களாம்.
மிஸ்டு கால் கொடுத்து ஆர்வத்துல சேர்ந்தவங்க எல்லாம் பொறுமையை இழந்து போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட, பாதி படம் முழுக்க தொகுதியில் நிற்க ஆளைப் பிடித்து காவி டிரஸ்ஸை மாட்டி விடுறதுதான் கதை. கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சிக்கு ஒரு தொகுதி தரும் கட்சிகளுக்கு மத்தியில், கூட்டணிக் கட்சிகளின் ஒவ்வொரு தொண்டருக்கும் ஒரு தொகுதி கொடுக்கும் காட்சி படத்தின் ஹைலைட்டா இருக்கும்னு இணை இயக்குநர் கிச்சுகிச்சு ராஜா சொல்லியிருக்காரு.
படம் முழுக்க ஒரே சீரியஸா போறதுனால, அவங்க இரண்டாம் கட்டத் தலைவர்களின் தேர்தல் பிரசார பேச்சையே படத்துக்குள்ள காமெடி டிராக்கா சேர்த்து விட்டுட்டாங்களாம். தாமரை புரொடக்ஷன்ஸ் சார்பா, நரேந்திர தாடி மற்றும் ஸ்மித் ஷா சேர்ந்து தயாரிச்சு இருக்காங்க. தமிழகத்தின் அனைத்து தொகுதிகளிலும் ரிலீஸ் ஆகப் போறதா சொல்லும் இந்த படம் டைரக்டா ஏதாவது இந்தி சேனலில் ரிலீஸானாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை.
அபத்த சகோதரர்கள்: பேசவே தெரியாத - யாராவது பேசினாலும் தூங்க ஆரம்பிக்கும் ஒரு நடிகர், பேச ஆரம்பிச்சா முடிக்கத் தெரியாத ஒரு நடிகர், பேச வேண்டியதைத் தவிர மற்றதைப் பேசும் நடிகர், பேச வேண்டியதை தெளிவில்லாமல் பேசும் ஒரு நடிகர், பேசக் கூடாததை தெளிவாகப் பேசும் ஒரு நடிகரென பல நடிகர்கள் சேர்ந்து நடிக்கும் படம்தான் ‘அபூர்வ சகோதரர்கள்’ படத்தை வைத்து எடுக்கப்படும் ‘அபத்த சகோதரர்கள்’.
‘‘உனக்கு ரெண்டம்பது, எனக்கு ரெண்டம்பது, இவனுக்கு ரெண்டம்பது, அவனுக்கு ரெண்டம்பது... ஆக மொத்தம் பத்து, சியர்ஸ்’’னு இவர்கள் தொகுதி பிரிக்கும் காட்சிகள் கொண்ட டிரெய்லரே பயங்கர வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘குறைப் பிரசவமானாலும் சுகப் பிரசவம்’னு கடைசியாக தென்னந்தோப்போடு கோவிந்ததாசன் வரும் இடைவேளை ட்விஸ்ட் அழகாக வந்துள்ளதாக இயக்குநர் மைக்கோ குமுறியுள்ளார். ‘படத்தைப் பார்க்கும்போது தூங்குபவர்களை விட படத்தில் நடிக்கும்போதே நடிகர்கள் தூங்கிய படம்’ என்ற பெருமையை கேன்ஸ் திரைப்பட விழாவில் பெற்றது. ரிலீஸ் தேதிக்குள் இன்னமும் பல காமெடிக் காட்சிகள் இணைக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் ‘குதிரை றெக்கை’ கோபால் சொல்லி இருக்கிறார்.
-ஆல்தோட்ட பூபதி ஓவியங்கள்: அரஸ்
|