கடக லக்னத்துக்கு சந்திரனும் சூரியனும் தரும் யோகங்கள்



34 கிரகங்கள் தரும் யோகங்கள்

ஜோதிடரத்னா கே.பி.வித்யாதரன்

ஓவியம்: மணியம் செல்வன்

சூரியனின் ஒளிக்கற்றையை இழுத்து சந்திரன் வெளிவிடும்போதே, அங்கு முற்றிலும் புதியதோர் மாற்றம் நிகழ்கின்றது. சூரியனும் சந்திரனும் இணைந்திருப்பதே அமாவாசை ஆகும். அமாவாசை என்பதே சூட்சுமமான சக்திகள் பூமிக்கு வருகை தரக்கூடிய நாளாகும். உதாரணமாக, முன்னோர்களின் நீத்தார் கடன்களில் ஆரம்பித்து உக்கிரமான தேவதைகளுக்கான மந்திர ஜபம் வரை அமாவாசை அன்றுதான் செய்யப்படுகின்றது.

பொதுவாகவே அமாவாசை திதியன்று பிறப்பவர்களின் உள்ளுணர்வானது அதிசயிக்கத்தக்க வகையில் இருக்கும். எப்போதும் ஏதோவொரு சிந்தனைத்தளத்தில் இருப்பார்கள். தொடர்ந்து ஒரே துறையில் பல வருடங்களுக்கு சாதனையாளராகத் திகழ்வார்கள். சொந்த பந்தங்களோடு பொருந்திப் போக முடியாது. வீட்டிலேயே இருந்தாலும் யாரோடும் அன்னியோன்யமாக இருக்க முடியாது. ஒரு சிறிய மனவிலக்கம் இருந்து கொண்டே இருக்கும். அமாவாசையில் பிறந்த பத்து வயது சிறுவனுக்கு முப்பது வயதிலெல்லாம் நண்பர்கள் இருப்பார்கள். எந்த வேலையிலுமே ஆரம்பத்தில் ஆர்வம் இருக்காது.



போகப் போகத்தான் தீவிரமாக வேலையில் ஈடுபடுவார்கள். அமாவாசை திதியில்தான் மூலிகை மருந்துகளைத் தயார் செய்வார்கள். எனவேதான் அமாவாசையில் பிறந்த பலர் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவராகவும் விளங்குவார்கள். அதேபோல மாந்திரீகத்தில் ஈடுபடுவோர்கள் கூட அமாவாசையன்றுதான் சில மாந்திரீக வேலைகளைச் செய்வார்கள். இந்தத் திதியில் பிறந்த சிலருக்கு மயானத்திற்கு அருகே வீடு அமைவதுண்டு. அதேபோல ஜீவசமாதிக்கு அருகேகூட அமையும்.

அமாவாசை நிறைந்த நாளென்று சிலர் திட்டமிட்டு புதிய காரியங்களைச் செய்வார்கள். ஆனால், பெரும்பாலும் அந்த நாளில் முன்னோர்களுக்கான தர்ப்பணம் மற்றும் மந்திர ஜபம் போன்றவை தவிர மற்றவற்றைத் தவிர்த்துவிடு தல் நல்லது. லௌகீக விஷயங்கள் கூடாது என்பதே முக்கியம். ஏனெனில், அமாவாசை என்பதே ஒருவித சந்திர-சூரிய யுத்தம்தான். எனவேதான் இந்த திதியில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் மிகுதியாக இருக்கும். இவர்கள் யாருக்கு உதவுகிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு எதிரியாகிவிடுவார்கள்.

அமாவாசையன்று பிறந்தவர்களை ‘திருடன்’ என்று நையாண்டித்தனமாக சொல்வதெல்லாம் முற்றிலும் தவறு. அமாவாசைக்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. இனி கடக லக்னத்தில் பிறந்தவர்களுக்கு எந்த இடத்தில் சந்திரனும் சூரியனும் இணைந்திருந்தால் என்னென்ன பலன்களைத் தருவார்கள் என்று பார்க்கலாம்...

கடக லக்னமாகிய ஒன்றாம் இடத்தில் லக்னாதிபதியான சந்திரனும், இரண்டாம் வீடான சிம்மத்தின் அதிபதியான சூரியனும் இணைந்திருந்தால் பல்துறை அறிஞர்களாக விளங்குவார்கள். நிறைய பேச வேண்டுமென்று நினைப்பார்கள். ஆனால், அமைதியாக இருப்பார்கள். இவர்களால் செயற்கையாக நடந்து கொள்ளத் தெரியாது. உண்மையைப் பேசி சங்கடத்தில் ஆழ்த்துவார்கள். எல்லாவற்றையுமே ‘பிராக்டிக்கலா யோசிச்சுப் பாருங்க’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார்கள். எதையுமே குருட்டுத்தனமாக அணுக மாட்டார்கள்.

அதேசமயம் முக்கியமான விஷயங்களில்கூட ஒருவித அலட்சிய சுபாவம் இருக்கும். ‘‘அப்புறமா பார்த்துக்கலாம்’’ என்பார்கள். சிம்மத்தில் சந்திரனும் சூரியனும் சேரும்போது சூரியனின் ஆதிக்கமே மேலோங்கியிருக்கும். கொஞ்சம் படபடப்பாக இருப்பார்கள். விவாதம் அதிகமாகச் செய்வார்கள். இவர்களுக்கு கண்களில் சிறு கோளாறு தென்பட்டாலும் உடனே பார்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல நரம்புத்தளர்ச்சி வந்து நீங்கும். இவர்களுக்கு வெகுநாட்களுக்கு சேமிக்கத் தெரியாது. மருத்துவக்கல்வி கற்பவர்கள் இதில் நிறைய பேர் உண்டு. குடும்ப வாழ்க்கையில் பெரிதாக ஈடுபாடு காட்டமாட்டார்கள்.



கன்னியில் சூரியனும் சந்திரனும் இணைந்து அமர்ந்தால் பெரும் ஆராய்ச்சியாளராகத் திகழ்வார்கள். ஈடுபடும் துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பார்கள். அறிவுஜீவி என்று எல்லோராலும் சொல்லப்படுவார்கள். ஆனால், இளைய சகோதரரோடு அவ்வப்போது மோதல் போக்கு இருந்துகொண்டே இருக்கும். அதேபோல போகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டிருப்பர். இவர்களோடு பழகுபவர்கள் இவர்களைப் புரிந்துகொள்ள மிகவும் சிரமப்படுவார்கள். ஆணாக இருந்தாலும் காதில் கடுக்கண் அணிந்துகொள்ள விரும்புவார்கள்.  எப்போதும் எள்ளலும் கிண்டலும் நக்கலுமாகவே பேசுவார்கள்.

துலாம் ராசியில் சூரியன் நீசமாகிறார். எனவே சந்திரனின் ஆதிக்கம் ஓங்கும். இவர்கள் பிறந்ததிலிருந்து தாயார் நோய்வாய்ப்பட்டபடி இருப்பார்கள். தாயார் எவ்வழியோ வாரிசுகளும் அவ்வழியே செல்வார்கள். சிலர் தாயாரின் பூர்வீகத்தையே தங்களின் பூர்வீகமாக சொல்லிக் கொள்வார்கள். இவர்கள் சொந்த வீடு வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரட்டைப் பத்திரம் உள்ள வீட்டை வாங்கி சிக்கிக் கொள்வார்கள். தங்கள் பெயரில் வீட்டை வைத்துக் கொள்ளக் கூடாது. வியாபாரச் சிந்தனை அதிகமாக இருக்கும். பாத்திரக்கடை, சமையலறை சாதனங்கள், நகை செய்தல் என்று சில தொழில்களில் கொடிகட்டிப் பறப்பார்கள்.

விருச்சிக ராசியில் சந்திரன் நீசமாகிறார். ஆனால், சூரியன் பலமாக இருப்பார். நீரும் நெருப்புமாக உள்ள இரு கிரகங்கள் ஐந்தாம் இடத்தில் இருந்தால் ஏதேனும் மன உளைச்சல் இருந்து கொண்டே இருக்கும். திடீரென்று நம்பிக்கையாகவும், திடீரென விரக்தியோடும் பேசுவார்கள். தாய்மாமன் கொஞ்சம் சிரமப்பட்டுக் கொண்டே இருப்பார். பூர்வீகச் சொத்து சரியாக வராது. நெருங்கியவர்களே வீண்பழி சுமத்துவார்கள்.

எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கனவுத் தொல்லை இருந்து கொண்டே இருக்கும். இவர்களுக்கு வாழ்க்கைத்துணை பார்க்கும்போது, அவர்களின் ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தில் நல்ல கிரகங்கள் அமர்ந்திருப்பது நல்லது. இல்லையெனில் குழந்தைக்கு பாதிப்புகள் உண்டாகும். தனுசு ராசியில் இவ்விரு கிரகங்களும் உட்கார்ந்திருப்பது நல்ல அமைப்பே ஆகும். சாதிக்கப் பிறந்தவர்கள் இவர்களே என்று சொல்லிவிடலாம்.

ஆனால் என்ன, அவ்வப்போது மறதி வந்து போகும். காடு, மலை போன்ற தேசாந்திரங்களுக்குச் செல்வதற்கு விரும்புவார்கள். நிறைய சொத்து இருக்கும். ஆனால், எதை என்ன செய்வதென்றே தெரியாது. எதற்கெடுத்தாலும் தத்துவம் பேசிக் கொண்டேயிருப்பார்கள். பிள்ளைகளுக்காக ஓடி ஓடி உழைப்பார்கள். ஆனால், உட்கார்ந்து வாழ்க்கைத்துணையோடு நாலு வார்த்தை பேசமாட்டார்கள். திங்கட்கிழமை, வியாழக்கிழமைகளில் இவர்கள் கடன் வாங்கக் கூடாது. தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபரிடம் கடன் வாங்குதல் கூடாது. ஆனால், வங்கிகளில் வாங்கலாம்.

மகரத்தில் இவ்விரு கிரகங்கள் அமர்ந்தால், வாழ்க்கையில் அவ்வளவு சீக்கிரம் செட்டிலாக முடியாது. ‘‘12 வருஷமா லவ் பண்றேன். இன்னும் கல்யாணம் ஆகலை’’ என்று புலம்பும்படியாக இருக்கும். வாழ்க்கைத்துணையிடம் கொஞ்சம் அடங்கிப் போகும்படியாகத்தான் இருக்கும். இவர்கள் கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நலம். கணவன் - மனைவி புரிந்துணர்வெல்லாம் சொல்லும்படியாக இருக்காது. மனக் குழப்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். எனவே, விட்டுக் கொடுத்துச் செல்வதே இந்த இடத்திற்கு நல்லது. இல்லையெனில் தாமதத் திருமணம் இன்னும் நல்லது. ரசவாத வித்தையெல்லாம் தெரிந்து வைத்திருப்பார்கள்.

கும்பத்தில் சூரியனும் சந்திரனும் இருந்தால் எப்போதும் அலைச்சல், டென்ஷன், திடீர் பயணம் என்றெல்லாம் இருந்து கொண்டே இருக்கும். இவர்களில் பலருக்கு பெற்றோரின் அனுசரணையும் இருக்காது. வீணாகக் காசைக் கரியாக்கிக் கொண்டிருப்பார்கள். குடும்பத்திற்காக செலவு செய்யாமல், தேவையில்லாத போக விஷயங்களை நாடி அதற்காக செலவு செய்வார்கள். தாய் தந்தையருக்கு உடல்நிலை சரியில்லை என்பதற்காக மிகப்பெரிய ஊதியம் வரும் வருமானத்தையே விட்டுவிட்டு வருவார்கள். அவ்வப்போது நெஞ்சுவலி வந்துபோகும்.

மீனத்தில் சூரியனும் சந்திரனும் இருப்பது சில நல்ல பலன்களைத் தந்தாலும், தந்தையோடு கருத்துமோதல் வரும். அல்லது அவரது உடல்நிலையில் ஏதேனும் பாதிப்புகள் வந்தபடி இருக்கும். நிரந்தர வருமானம் மற்றும் சேமிப்புகள் இருக்காது. இவர்களுடைய வாழ்வின் முக்கிய நிகழ்வில் தந்தையார் பங்கெடுத்துக் கொள்ள முடியாத நிலை இருக்கும். தந்தையின் அருமையை மத்திம வயதில் உணர்வார்கள்.

இவர்களில் பலர் யோகா கற்றுக்கொண்டு யோகா மாஸ்டராக வருவார்கள். ஏதேனும் ஞானியரின் சமாதிக்கு இவர்கள் அவ்வப்போது சென்று வந்தால் மிகவும் நல்லது. ஏனெனில், குரு வீடான மீனத்தில் சூரியனும் சந்திரனும் அமர்ந்திருப்பதால் இம்மாதிரியான ஜீவசமாதிகள் நல்ல நிலையில் முன்னேற வைக்கும். சித்தத்தில் எப்போதும் ஒரு நிம்மதி சூழ இருப்பார்கள். எல்லோரையும் போல தொழில் செய்தாலும் தனிப்பட்ட முறையில் ஆத்மார்த்தமாக ஏதேனும் ஒரு தொழிலை ஏற்றுச் செய்வார்கள். 

மேஷத்தில் சூரியனும் சந்திரனும் இருந்தால் டீக்கடை, கூல்ட்ரிங்ஸ், தானியக் கிடங்கு, பால் வியாபாரம், கெமிக்கல் இன்ஜினியர், ஐஸ்க்ரீம் போன்ற தொழில்களை ஏற்று நடத்தினால் எளிதாக வெற்றி பெறுவார்கள். சிறிய வயதில் வறுமையை அனுபவித்ததால் நான்கு பேருக்கு பயன்படும்படியாக ஏதேனும் செய்துவிட்டுத்தான் செல்வார்கள். தன்னை மதிக்காதவர்களை சட்டென்று அவமானப்படுத்தும் குணம் இருக்கும். நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசாங்கத்தோடு ஏதேனும் தொழில் முறையாக தொடர்பு கொண்டிருப்பார்கள். இவர்களுக்கு அடிக்கடி முழங்காலில் அடிபடும்.

ரிஷபத்தில் இவ்விரு கிரகங்கள் அமர்ந்திருப்பதால் மூத்த சகோதரரோடு அடிக்கடி பிரச்னைகள் வந்து நீங்கியபடி இருக்கும். இந்த அமைப்பிலேயே இவர்கள்தான் கொஞ்சம் சேமிப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அடிக்கடி நண்பர்களை அழைத்து விருந்து கொடுத்தபடி இருப்பார்கள். எப்போதுமே செய்யும் தொழிலோடு இணையாக வேறொரு தொழிலைச் செய்வார்கள். கொஞ்சம் காது மந்தமாக இருக்கும்.
 
மிதுனத்தில் சூரியனும் சந்திரனும் இருப்பது ஆன்மிகத்தில் தீவிரமாக ஈடுபட வைக்கும். எப்போதும் ஏதாவதொரு தலத்திற்கு யாத்திரையாக சென்றபடி இருப்பார்கள். அடிக்கடி தொப்புளுக்கு அருகே வலியும், எரிச்சலும் இருக்கும். கடன் வாங்கி அடிக்கடி செலவு செய்தபடி இருப்பார்கள். மலைகள் இருக்கும் ஊருக்கு அடிக்கடி சென்று தங்கி விட்டு வருவார்கள்.

ஜாதகத்தில் இவ்வாறு சந்திரனும் சூரியனும் சேர்ந்திருக்கும்போது, அவை நின்ற ராசிக் கட்டங்களுக்குத் தகுந்தவாறு பலன்கள் வேறுபடும். சிலசமயம் நேர்மறை கதிர்வீச்சுக்கும், சில இடங்களில் எதிர்மறை கதிர்வீச்சுக்கும் ஜாதகர் ஆளாக வேண்டியிருக்கும். எனவே, அந்த பாதிப்பிலிருந்து காத்துக்கொள்ளவும் நேர்மறையான பலன்களைப் பெறவும் திருஈங்கோய்மலை தலத்திற்கு சென்று வாருங்கள். இக்கோயிலில் யோகினிகள் என்கிற பெண்களே பூஜை செய்வார்கள். ஈசனின் திருப்பெயர் மரகதாசலேஸ்வரர். மரகதத்தால் ஆன சுயம்பு மூர்த்தி இவர்.

அம்பாளின் சக்தி பீடத்தில் சாயா சக்தி பீடமும் இதுதான். அம்பாளுக்கு சிவன் தன் இடப்பாகத்தை தர உறுதி தந்த இடமாகும். அம்மையின் திருப்பெயர் மரகதாம்பிகை என்பதாகும்.  அகத்தியர் ஈ வடிவம் கொண்டு இத்தலத்தை வழிபட்டதால் திருஈங்கோய்மலை என்று பெயர் பெற்றது. திருச்சியிலிருந்து 50 கி.மீ. தொலைவிலும், முசிறியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

(கிரகங்கள் சுழலும்...)