முகங்களின் தேசம்
ஜெயமோகன்
லட்சியவாதத்தின் கனி சில மாதங்களுக்கு முன் எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு வந்தது. அப்துல் ஷுக்கூர் என தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய ‘நூறு நாற்காலிகள்’ என்னும் நீள்கதை மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப் பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார்.
நான் அமைப்பு சார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப் போல வீண் வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. காரணம், அவர் நடத்தும் டீக்கடையிலேயே அந்தக் கூட்டம் நடக்கும் என்றார். சென்ற சில மாதங்களாக மாதம் ஒருமுறை அந்த டீக்கடையிலேயே ஷுக்கூர் இலக்கியக் கூட்டங்களை நிகழ்த்தி வருகிறார். கேரளத்தின் கண்ணனூர் மாவட்டத்தில் தலைச்சேரி - கண்ணூர் சாலையில் உள்ள பெடயங்கோடு என்னும் கிராமம் அது.
‘‘ஜனவரி மூன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி நடைபெறும். பயணச் செலவு ஏதும் தரமுடியாது. விற்கும் நூல்களின் பணத்தைக்கூட நோயுற்றிருக்கும் ஓர் எழுத்தாளருக்கு அளிக்கவிருக்கிறேன்’’ என்றார். அந்த லட்சியவாதம் எனக்குப் பிடித்திருந்தது. ‘‘வருகிறேன்’’ என்றேன். ஒரு மாறுபட்ட அனுபவமாக இருக்கும் என்று தோன்றியது.
என் வழக்கமான பயணத் தோழர்கள் கிருஷ்ணன், ராஜமாணிக்கம் இருவரையும் அழைத்தேன். திருப்பூர் நண்பர் கதிரின் காரிலேயே செல்லலாம் என்று முடிவெடுத்தோம். அதை ஒரு விரிவான பயணமாக ஆக்கிக்கொண்டோம். 2016 ஜனவரி இரண்டாம் தேதி கோவையிலிருந்து கிளம்பி, மானந்தவாடி அருகே உள்ள இடைக்கல் என்னும் கற்கால பாறைச்செதுக்கு ஓவியங்களைப் பார்த்துவிட்டு மாலையில் கண்ணனூரில் தங்கினோம். காலையில் கண்ணனூர் கோட்டையைப் பார்த்துவிட்டு ஷுக்கூர் வாழும் பெடயங்கோடு என்னும் ஊரை விசாரித்து வழிதேடிச் சென்றோம்.
பெடயங்கோட்டை அணுகியபின் ஷுக்கூரைப் பற்றி கேட்கவேண்டுமே என நினைத்து பார்த்துக்கொண்டே வந்தோம். பெடயங்கோடு மிகச்சிறிய ஊர். ஆகவே கடந்து சென்றுவிட்டோம். மீண்டும் வழி விசாரித்துத் திரும்பி வந்தோம். அங்கே சாலையோரத்தில் ஒரு பெட்டிக்கடையில் ஷுக்கூர் பற்றி கேட்டோம். ஆச்சரியமாக, கடைக்காரர் முகம் மலர்ந்து ‘‘ஷுக்கூர் இக்காவா? தெரியாம இருக்குமா?’’ என்றார். அவர் பெயர் லத்தீஃப். அவரும் ஒரு கவிஞர், மூன்று தொகுதிகள் பிரசுரித்திருக்கிறார். ‘‘அதோ அந்தக்கடைதான். நானும் வருவேன்’’ என்றார்.
நாங்கள் மெல்லச் சென்றபோது சாலையோரமாக வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு நின்றிருந்த ஷுக்கூர், எங்களை மறித்து கை காட்டி அழைத்தார். நாங்கள் கடந்து செல்லும்போதே அவர் பார்த்துவிட்டிருந்தார். என் பெயர் எழுதப்பட்ட தட்டி சாலையோரமாக இருந்தது. ‘‘இதுதான் என் கடை’’ என்றார் ஷுக்கூர். சின்னஞ்சிறிய டீக்கடை. நான் இன்னும் சற்று பெரிய கடையை எதிர்பார்த்தேன். அங்கே எப்படி கூட்டம் நடத்துவது என்று தெரியவில்லை. ஆனால் நான் அதைக் கேட்கவில்லை.
ஷுக்கூர் சைக்கிளில் மீன் வாங்கிக்கொண்டுவந்து தெருத்தெருவாகக் கூவி விற்கும் தொழிலைத்தான் இருபதாண்டுகளாகச் செய்துவந்தார். அதற்குமுன் மண்வெட்டும் கூலித்தொழிலை பத்தாண்டு காலம் செய்தார். அவரது மகன் துபாயில் வேலைக்குப் போனபின் ஓராண்டாகத்தான் டீக்கடை நடத்துகிறார். பெரிய அளவில் வருமானம் இல்லை. ஆனால் எளிய வாழ்க்கைக்கு அது போதும் என்றார்.
ஷுக்கூருக்கு ஐந்தாம் வகுப்புதான் படிப்பு. சுயமாக வாசிக்கக் கற்று, அவரே இலக்கியத்தை வந்தடைந்தார். இலக்கியத்தின் அடிப்படைகளை அவருக்கு எவரும் சொல்லித் தரவில்லை, அவரே வாழ்க்கையைக் கொண்டு இலக்கியத்தை அடையாளம் கண்டார். வாசிக்க ஆரம்பித்தபின் புத்தகங்களையும் வாங்கி, மீன் சைக்கிளின் முன்பக்கம் பையில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு மீனுடன் புத்தகங்களையும் கூவி விற்றிருக்கிறார்.
‘‘நான் மீன் அளவுக்கே புத்தகங்களையும் விற்றிருக்கிறேன்’’ என்றார் ஷுக்கூர். ‘‘ஆரம்பத்தில் கொஞ்சம் வேடிக்கையாகத்தான் பார்த்தார்கள். ஆனால் என் ஆர்வத்தைப் பார்த்தபின் கம்யூனிஸ்ட்கள் எனக்கு ஆதரவு அளித்தார்கள்’’ என்றார். தான் விற்கும் எந்த நூலையும் முதலில் தானே வாசித்துவிடவேண்டும் என்பது ஷுக்கூரின் நெறி. அந்நூலைப் பற்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்வார். நூலைப் பற்றி அவரே விரிவாக அறிமுகமும் செய்வார். அவருக்கென ஒரு சிறிய இலக்கிய வாசகர் கூட்டம் உருவாகி வந்தது. அதன்பின்னரே ஷுக்கூர் கவிதைகள் எழுத ஆரம்பித்தார். இதுவரை மூன்று கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார்.
அடித்தளத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்தவர்கள், வழக்கமாக தங்கள் போராட்டங்களைப் பற்றிய கவிதைகளையும் அரசியல் கருத்துக்களையும்தான் எழுதுவது வழக்கம். ஷுக்கூர் எழுதியவை அவரது வாழ்க்கையின் அர்த்தம் பற்றிய ஆழமான தத்துவநோக்குள்ள கவிதைகள். நவீனகவிதைகள் அவை. டீக்கடை வைத்தபின் கூடவே பெடயங்கோட்டில் வீடு வீடாக இலக்கியத்தை அறிமுகம் செய்து வருகிறார் ஷுக்கூர். என் ‘நூறு சிம்ஹாசனங்ஙள்’ நூலை மட்டும் 450 பிரதிகள் அச்சிட்டு அந்த ஊரில் வெளியிட்டிருக்கிறார். இந்த டீக்கடை இலக்கியம் அவரது கனவுகளில் ஒன்று. இதை ஒரு வகை தனிப்பட்ட தவமாகவே அவர் நினைக்கிறார்.
ஷுக்கூர் இக்காவின் வீட்டுக்குச் சென்றோம். எங்களில் இருவர் சைவர்கள். ‘‘இங்கே அந்த மாதிரி நல்ல சாப்பாடு கிடைக்காதே’’ என்றார் ஷுக்குர். நான் சிரித்துவிட்டேன். நானும் நண்பர்களும் அவர் இல்லத்தில் நெய்ச்சோறும் சிக்கனும் சாப்பிட்டோம். அவரது மனைவியும் திருமணமான மகளும் வீட்டில் இருந்தனர். அவர்களின் சமையல் வடக்கு மலபாருக்கே உரிய மிதமான காரமுள்ள சுவை கொண்டது. ஷுக்கூர் எங்களை அருகில் உள்ள வளைபட்டணம் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றார். நதிக்கரையில் கோயில் கொண்டுள்ள பகவதியின் காவலாளிகளாகக் கருதப்படும் மிகப்பெரிய மீன்கள் நிறைந்த நீர்ப்பெருக்கைப் பார்த்தோம். ‘‘பாதுகாக்கப்பட்ட மீன்கள் இவை. இலக்கியமும் இப்படித்தான் பாதுகாக்கப்படவேண்டும்’’ என்றார் ஷுக்கூர் சிரித்தபடி.
அந்த நதிக்கரையில்தான் படகுகள் வந்து சேரும் படித்துறை இருந்தது. கடலில் இருந்து மீன், படகுகள் வழியாக அங்கே வந்துசேரும். அங்கே அதிகாலையிலேயே சென்று ஏலத்தில் மீனை எடுத்து சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்று விற்பதுதான் ஷுக்கூரின் வழக்கம். மழைக்காலத்தில் மீன் விற்பது மிகக்கடினம். முழுநேரமும் நனைந்தாகவேண்டும். ஆனால் மீன் சீக்கிரம் அழுகாது. வெயிலில் மீன் அழுகி நஷ்டம் ஏற்படும்.
‘‘அன்றைக்கெல்லாம் நல்ல மீன் சாப்பிட்டதே இல்லை. மிஞ்சிப் போன அழுகிய மீன்தான் எப்போதும் உணவு’’ என்று ஷுக்கூர் சிரித்தபடி சொன்னார். தன் கஷ்டங்களை முழுக்க அவர் சிரிப்புடன் மட்டுமே சொல்கிறார் என்பதைக் கவனித்தேன். கஷ்டங்களை அவர் கடந்து வந்துவிட்டிருந்தார். ஆகவே அவை எளிய கதைகளாக மாறிவிட்டன. கடந்து வருவதற்கு இலக்கியம் உதவியிருக்கிறது மதியம் இரண்டரை மணிக்குக் கூட்டம். வழக்கமாக முப்பது பேர்தான் வருவார்கள்.
ஆனால் அக்கூட்டம் பற்றி ‘மாத்ருபூமி’, ‘மலையாள மனோரமா’ நாளிதழ்களில் என் நண்பர்களான இதழியலாளர்கள் பெரிய அளவில் செய்தி வெளியிட்டிருந்தமையால் அன்று நூறு பேர் வந்திருந்தனர். இரு சக்கர வண்டிகளிலும் கார்களிலும் வந்துகொண்டே இருந்தனர். கணிசமானவர்கள் கண்ணனூர், தலைச்சேரி முதலிய நகரங்களிலிருந்து வந்திருந்தனர். கடைக்குள் இடமில்லாமல் பாதிப் பேர் சாலையில் அமர்ந்திருக்க நேரிட்டது.
வாசகர்களுடன் பரவலாக அறியப்பட்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள், விமர்சகர்கள் பலர் கலந்துகொண்டனர். நால்வர் நூலைப் பற்றிப் பேசியபின், நான் சிற்றுரையாற்றி கேள்விகளுக்குப் பதிலளித்தேன். அத்தனை பேரும் அந்நாவலை வாசித்திருந்தனர். அதற்குச் சமானமான பிற நாவல்களுடன் ஒப்பிட்டும் பேசினர். உற்சாகமான உரையாடல். கூரிய மதிப்பீடுகள். மாலை ஆறு மணிக்கு சந்திப்பு முடிந்த பின்னரும் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் நக்கலும் கிண்டலும் இல்லாமல் கேரளத்தில் இலக்கியக்கூட்டங்கள் முடிவடைவதில்லை.
‘‘நவீன இலக்கியத்தை நாங்கள் டீக்கடைகளில்தான் பேசிப் பேசி உருவாக்கினோம்’’ என்றேன். ‘‘முன்பு கேரளத்தில் கம்யூனிசமும் டீக்கடைகளில் உருவானதுதான்’’ என்றார் தாஹா மாடாயி என்னும் விமர்சகர். ‘சிங்கிள் டீ இலக்கியம்’ என்றுதான் நவீன இலக்கியத்தை பழைய இலக்கியவாதிகள் சொல்வார்கள்.
ஏழு மணி வரை அங்கே நின்றபடியே இலக்கியம் பேசிக்கொண்டிருந்தோம். பிறகு விடைபெற்றுக் கிளம்பினேன். ஷுக்கூர் இக்கா என் கைகளைப் பற்றிக் கொண்டு, ‘‘முதல் கூட்டத்தை கன்னட எழுத்தாளர் சிவராம காரந்தின் ‘சோமனதுடி’ பற்றி நடத்தினோம். அந்த அளவுக்கு தார்மீக வேகம் உள்ள நாவல் இது. எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’’ என்றார். நான் சம்பிரதாயமாக ஏதும் சொல்ல விரும்பவில்லை. ‘‘இக்கா... மறுபடியும் சந்திப்போம்’’ என்று மட்டும் சொன்னேன்.‘
‘மாத்ருபூமி’ நாளிதழ் இந்த நிகழ்ச்சிக்காக தங்கள் நிருபரையும் புகைப்படக்காரரையும் அனுப்பியிருந்தது. அவர்களின் காரிலேயே நான் கோழிக்கோடு கிளம்பினேன். அங்கிருந்து எர்ணாகுளம் வழியாக நாகர்கோவில் வந்தேன். திரும்பும் வழி முழுக்க ஒரே விஷயத்தைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன். தமிழகத்தில் இலக்கியமென்பது உணவும் உறைவிடமும் பிற வசதிகளும் அமைந்துவிட்டவர்களுக்கான ஒருவகை கேளிக்கை என்னும் எண்ணம் உள்ளது. மேலும் மேலும் உலகியல் லாபங்களைச் சம்பாதிப்பதற்கு இலக்கியம் எதிரானது என்னும் எண்ணம் உள்ளது.
ஆனால் ஷுக்கூர் போன்றவர்களை அவர்களின் அடித்தள வாழ்க்கையிலிருந்து கைகொடுத்துத் தூக்கியது இலக்கியம்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும் கனவுகளையும் இலக்கியமே அளித்தது. இத்தனை வயதில் ஷுக்கூர் இக்கா எதற்காக இப்பணியைச் செய்கிறார்? அடையாளமோ, புகழோ தேடி அல்ல. அது அவர் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை அளிக்கிறது. வெற்றியோ, பணமோ, புகழோ அல்ல... லட்சியவாதமே வாழ்க்கைக்கு இலக்கையும் நிறைவையும் அளிக்கமுடியும். இலக்கியத்தின் சாராம்சமாக இருப்பது லட்சியவாதமே. அதைத்தான் ஷுக்கூர் இக்காவின் கனிந்த முகம் எனக்குக் காட்டியது.
வாசிக்க ஆரம்பித்தபின் புத்தகங்களையும் வாங்கி, மீன் சைக்கிளின் முன்பக்கம் பையில் கட்டித் தொங்க விட்டுக்கொண்டு மீனுடன் புத்தகங்களையும் கூவி விற்றிருக்கிறார்.
தன் கஷ்டங்களை முழுக்க அவர் சிரிப்புடன் மட்டுமே சொல்கிறார் என்பதைக் கவனித்தேன். கஷ்டங்களை அவர் கடந்து வந்துவிட்டிருந்தார்.
ஷுக்கூர் போன்றவர்களை அவர்களின் அடித்தள வாழ்க்கையிலிருந்து கைகொடுத்துத் தூக்கியது இலக்கியம்தான். அவர்களுக்கு வாழ்க்கையில் நம்பிக்கையையும் கனவுகளையும் இலக்கியமே அளித்தது.
(தரிசிக்கலாம்...)
ஓவியம்: ராஜா
|