சென்னையில் ஓர் ஊர் சந்தை!
‘சந்தை’ என்றாலே கிராமங்கள்தான் நினைவுக்கு வரும். குளிரூட்டிய மால்களும் சூப்பர் மார்க்கெட்களும் மலிந்த சென்னையில் ஊர்மணம் கமழும் சந்தை ஒன்று நடந்தால் எப்படி இருக்கும்? நகரத்தில் கிராமம் செய்யும் நோக்கில் இப்படியொரு ஊர் சந்தையை நடத்துகிறார்கள் ‘செம்மை சமூகம்’ என்கிற அமைப்பினர். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் இந்நிகழ்விற்கு சென்னை மக்களிடையே ஏக வரவேற்பு. கடந்த வாரம் தி.நகர் தக்கர் பாபா பள்ளியில் நடந்த ஊர் சந்தை முற்றிலும் வித்தியாச அனுபவம்!
ரசாயனம் கலக்காமல் விளைந்த நாட்டுக் காய்கறிகள், பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியங்கள், பழங்கள், செக்கில் ஆட்டி எடுத்த எண்ணெய் வகைகள், வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட சாம்பார் பொடிகள், பற்பொடிகள், முகப்பொலிவு பவுடர்கள், தானிய வகை உணவுப் பண்டங்கள், கூழ் வகைகள், பனையோலை கைவினைப் பொருட்கள் என விற்பனையில் எங்கும் இயற்கை மணம்!
ஒருபுறம் மண்பாண்டங்கள் விற்பனை ஜோராக நடக்க, அதன் அருகே மண்குவளைகளை குழந்தைகளுக்கு செய்து காட்டி மகிழ்வித்துக் கொண்டிருந்தார் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த தேவராசு. மறுபுறம், குழந்தைகளுக்கு சிலம்பாட்டம், தாயம், பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகளை அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர் சில இளைஞர்கள்.
‘‘எங்க குடும்பத்துல எல்லாருமே செம்மை சமூக அமைப்புல இருக்கோம். இந்த சாம்பார் பொடி எந்தக் கலப்படமும் இல்லாதது. துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய்னு சாம்பார் பொடிக்குத் தேவையானதை பார்த்துப் பார்த்து சுத்தமா வாங்கி செஞ்சிருக்கேன். அதே மாதிரிதான் இந்த வத்தல் குழம்பு பொடியும்!’’ என விற்பனை செய்தபடியே நம்மிடம் பேசும் புவனேஸ்வரி, தனியார் எஞ்சினியரிங் கல்லூரியில் பேராசிரியை!
‘‘இதை வியாபாரத்துக்குன்னு பண்ணலை. பிராண்ட் ஆக்கவும் விரும்பல. மக்கள் விளம்பரங்களைப் பார்த்து தரமில்லாத பொடி வகைகளை வாங்கி ஏமாறுறாங்க. அதெல்லாம் ஆரோக்கியத்துக்கு நல்லதில்ல. இத நாமே வீட்டுல ஈஸியா ரெடி பண்ணலாம். நம்ம முன்னோர்கள் அப்படி செஞ்சு சாப்பிட்டதாலதான் நோய்கள் இல்லாம நீண்ட காலம் வாழ்ந்தாங்க!’’ என்கிறார் அவர் புன்னகையோடு! அருகிலேயே அவர் மகன் ஆதித்யா மஞ்சள் பொடி, கிராம்பு, வேப்பிலைப் பொடி போன்றவை கலந்து உருவாக்கிய இயற்கை பல்பொடியை விற்பனைக்கு வைத்திருந்தார்.
அடுத்து, இளையராஜா... சாஃப்ட்வேர் எஞ்சினியர். ஆனால், வாழைப்பழம், மளிகைப் பொருள் விற்பவராக அவதாரமெடுத்து நின்றிருந்தார் மனிதர்! ‘‘எனக்கு சொந்த ஊர் கோபிசெட்டிப்பாளையம். செம்மையில இணைஞ்ச பிறகு ஊர்ல அஞ்சு ஏக்கர் நிலம் வாங்கி வாழை, அரிசி விவசாயம் பண்றேன். இது என் நிலத்துல விளைஞ்ச வாழைப்பழங்கள். ரஸ்தாளி, பூவம்பழம் ரெண்டும் இப்போ நல்லா வந்திருக்கு. எந்த ரசாயனமும் கலக்காதது!’’ என்கிறார் அவர் உற்சாகமாக!
இவருக்கு எதிரில் கடை விரித்திருந்த இளங்கோ, பூந்தமல்லி அருகேயுள்ள கண்ணப்ப பாளையத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞர். செம்மை சமூகத்தைச் சாராதவர் எனினும் முகநூல் வாயிலாக இதை அறிந்து வந்திருந்தார். ‘‘பாரம்பரியமாவே விவசாயக் குடும்பம் நாங்க. இப்ப, பதினொரு ஏக்கர்ல சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கந்தசாலினு பாரம்பரிய நெல் ரகங்களை போட்டு இயற்கை விவசாயம் பண்ணிட்டு இருக்கோம். அந்த அரிசி ரகங்கள் பத்தி மக்களுக்கு அவ்வளவா தெரியலை. ஒரு சிலர்தான் வந்து வாங்கிட்டுப் போறாங்க. சீக்கிரமே இதைப் புரிஞ்சுப்பாங்க!’’ என்றார் நம்பிக்கையாக!
கருப்பட்டி பணியாரம், கேழ்வரகு உருண்டை, உளுந்து அல்வா, முறுக்கு வெரைட்டிகள், நாட்டுக் கோழி முட்டைகள், தேன் வகைகள் என அடுத்தடுத்து கடைக்காரர்கள் விற்றுக் கொண்டிருக்க, செம்மை சமூகத்தின் தலைவர் ராஜராஜனைச் சந்தித்தோம். ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றும் இவர், தன் சொந்த கிராமத்தில் விவசாயமும் செய்து வருகிறார்.
‘‘இப்போ ஆர்கானிக் என்கிற சொல்லே பிசினஸா மாறிட்டு வருது சார்! ‘ஆர்கானிக்’னு சொல்லி சாதாரண பொருட்களை அதிக விலைக்கு விக்கிறாங்க. இயற்கை விளை பொருட்கள் மேல மக்கள் காட்டுற ஆர்வம்தான் இதுக்கு முக்கிய காரணம். ஆனா, அவங்களுக்கு சரியான பொருள் போய்ச் சேருறது இல்ல. உற்பத்தி பண்றவங்களுக்கும் வாங்குறவங்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்காம இடைத்தரகர்கள் எடுத்துக்கறாங்க. இந்த வணிகத்துல அறம்னு ஒண்ணு இல்லாமலே போயிடுச்சு. அதனாலதான், இதுக்கு ஒரு களம் அமைச்சுத் தரணும்னு நினைச்சோம்!’’ என்றவரிடம் ‘‘இப்படிெயாரு ஐடியா எப்படி வந்தது?’’
என்றால், செம்மையின் தலைமை செயல்பாட்டாளர் ம.செந்தமிழனைக் கைகாட்டினார். ‘‘நம்ம மரபுக்கு திரும்ப விருப்பம் கொண்டோரின் கூடல்தான் இந்த செம்மை சமூகம் அமைப்பு. ஆரம்பத்தில், இந்தச் சமூகத்தில் இணைந்தவர்கள் கூடிப் பேசும்போது, அவரவர் நிலங்களில் விளைந்த பொருட்களையும், அவர்களே தயாரித்த பொருட்களையும் பண்டமாற்றிக் கொண்டார்கள். அவை, எந்தக் கலப்படமும் இல்லாத இயற்கை உணவுப் பொருட்கள்.
இதை மற்ற மக்களுக்கும் கொண்டு சேர்க்கலாம் என நினைத்ததன் விளைவே இந்த ஊர் சந்தை கருத்தாக்கம். இது வெறும் விற்பனைக்களம் மட்டுமல்ல! இயற்கையான வாழ்வியல் முறை, மருத்துவம் என நம் மரபு சார்ந்தவை அனைத்தையும் பகிர்ந்துகொள்ளும் கருத்தரங்குகளையும் இங்கே நடத்துகிறோம். அதனால்தான், இங்கு நிகழும் எல்லா விஷயங்களையும் கவனித்து உள்வாங்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கிறோம்’’ என்கிறார் அவர் நிறைவாக!
‘ஆர்கானிக்’னு சொல்லி சாதாரண பொருட்களை அதிக விலைக்கு விக்கிறாங்க. இயற்கை விளைபொருட்கள் மேல மக்கள் காட்டுற ஆர்வம்தான் இதுக்கு முக்கிய காரணம்.
- பேராச்சி கண்ணன் படங்கள்: ஆர்.சி.எஸ்
|