நியூஸ் வே
* முதல்முறையாக மனைவி கேட் மிடில்டனுடன் ஏழு நாள் பயணமாக இந்தியா வந்திருக்கிறார் பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்! ராஜ குடும்பம் நம்ம ஊர் தோசை சுட்டு சாப்பிட்டது, சச்சினுடன் கிரிக்கெட் ஆடியது என பெரிய பெரிய ஆசைகளை எல்லாம் தாண்டி அந்தத் தம்பதி மிகவும் விரும்பியது, தாஜ்மகாலைப் பார்க்க! வில்லியமின் அம்மா டயானா ஒரே ஒரு முறை இந்தியா வந்தார். கணவரோடு வந்திருந்தாலும், தனியாக அமர்ந்து தாஜ்மகால் பின்னணியில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பொதுவாக காதல் தம்பதிகள் இங்கு ஜோடியாக அமர்ந்து படம் எடுத்து பொக்கிஷமாக பாதுகாப்பார்கள். டயானாவுக்கு தனிமையே மிஞ்சியது. ஒரு காதலின் சோக முறிவை உணர்ச்சிகரமாகச் சொன்ன படம் அது. அதே இடத்தில் டயானா மகனும் மருமகளும் அமர்ந்து நெகிழ்ச்சியோடு போட்டோ எடுத்துக்கொண்டனர்.
* ‘இந்தியாவின் முதல் அதிவேக ரயில்’ என்ற பெருமிதத்தோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது ‘காடிமான் எக்ஸ்பிரஸ்’. டெல்லியிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் ஆக்ராவை 100 நிமிடங்களில் அடைகிறது இந்த ரயில். மணிக்கு அதிகபட்சமாக 160 கிலோமீட்டர் வேகம். ரயிலில் மொத்தம் 715 இருக்கைகள். அகன்ற ஜன்னல்கள். விமானங்களில் இருக்கும் ஏர் ஹோஸ்டஸ் போல பணிப்பெண்கள் உண்டு. உணவு வகைகளை ஆர்டர் செய்து வாங்கலாம். சதாப்தியைவிட மேம்பட்ட பயண அனுபவம்.
* உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவைப் பார்க்க வரும் பலரும் அவரோடு செல்ஃபி எடுத்து, அதை ஃபேஸ்புக், ட்விட்டர் என பதிவேற்றிவிடுகிறார்கள். ‘முதல்வருக்கு செல்ஃபிக்கு போஸ் கொடுப்பதைத் தவிர வேறு வேலை இல்லை’ என்பது போல எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்ய, இப்போது அவரைப் பார்க்க வருபவர்கள் தங்கள் போனை அறைக்கு வெளியே வைத்துவிட்டுச் செல்ல வேண்டும் என நிபந்தனை போடப்பட்டுள்ளது.
* ‘‘எல்லா மத்திய அமைச்சர்களும் சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாற்றம் செய்ய வேண்டும். ஒவ்வொருவருக்கும் ட்விட்டரில் குறைந்தது ஒரு லட்சம் ஃபாலோயர்களாவது இருக்க வேண்டும்’’ என உத்தரவு போட்டிருக்கிறார் பிரதமர் மோடி. ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் போன்றவர்களை ஏற்கனவே பல லட்சம் பேர் பின்பற்றுகிறார்கள். புதியவர்கள்தான் தவிக்கிறார்கள்.
* நூறு சதவீத வாக்குப் பதிவுக்காக ஃபேஸ்புக் நிறுவனத்தோடு கை கோர்த்து பிரசாரம் செய்யப் போகிறது தேர்தல் ஆணையம். ‘‘தமிழகத்தில் 31 சதவீதம் வாக்காளர்கள் ஃபேஸ்புக்கில் ஆக்டிவ்வாக இருக்கிறார்கள். மே 15ம் ேததி ஃபேஸ்புக் உள்ளே நுழையும் ஒவ்வொரு தமிழக பயன்பாட்டாளர்களுக்கும் வாக்களிக்கச் சொல்லி அலர்ட் கொடுக்கப்படும். மேலும், அவர்களின் முகவரியை வைத்து அருகிலுள்ள வாக்குச் சாவடியைக் காட்டும் ஒரு இணைப்பும் அனுப்பப்படும்!’’ என்கிறார் ஃபேஸ்புக் இந்திய நிறுவனத்தின் பொது கொள்கை இயக்குநர் அங்ஹி தாஸ்!
* கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ படத்தின் ஷூட்டிங் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பரபரக்கிறது. அங்கே அழகழகான லொகேஷன்களில் ஏகப்பட்ட க்ளிக்ஸ் எடுத்து பயணத்தை இனிதாக்கி வருகிறார் தனுஷ். அங்கே வெயில் எப்படி பாஸ்?
* சுயசரிதை எழுதும் பிரபலங்கள் பட்டியலில் இணைந்திருக்கிறார், கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயில். ஒரு டெஸ்ட் மேட்ச்சின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்ததில் ஆரம்பித்து, பல சாதனைகளைச் சொந்தமாக்கியிருக்கும் இவரது நூலின் பெயரும் வசீகரமானதே! அது, ‘சிக்ஸ் மெஷின்’. ‘‘என் ஆட்டம் போலவே நூலும் போர் அடிக்காமல் அதிரடியாக இருக்கும். பல ஆண்டுகளாக நான் பகிர்ந்துகொள்ள விரும்பிய ரகசியங்களை இதில் சொல்லியிருக்கிறேன். கிரிக்கெட் வட்டாரத்தைத் தாண்டியும் நூல் பரபரப்பாகும்’’ என கண் சிமிட்டு கிறார் கெயில். ஜூன் மாதம் புத்தகம் ரிலீஸ்!
* ஏ.ஆர்.முருகதாஸ் - அஜித் கூட்டணிக்கு முயற்சி நடந்துகொண்டே இருக்கிறது. இருவருக்கும் சரமாரி சந்திப்புகள் நடக்கின்றன. அதைத் தயாரிக்க தயார் என முருகதாஸிடம் தெரிவித்துவிட்டார் உதயநிதி.
* ஜெயராம் மகன் காளிதாஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் விவேகானந்தர் கெட்டப்பில் சாமியாராக நடிக்கிறார் கமலஹாசன். நண்பர் ஜெயராமிற்காக பைசா வாங்காமல் பண்ணும் ரோல் இது.
* த்ரிஷாவின் அம்மா, குஷ்புவின் மகள்கள், பிரசன்னா, சினேகா, பிந்துமாதவி, நமீதா என பலரும் ஆவல் பொங்க ‘தி ஜங்கிள் புக்’ பார்த்து மகிழ்ந்திருக்கிறார்கள்.
* டெல்லியில் ‘பத்மவிபூஷண்’ விருது வழங்கும் விழாவில் சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்ததும் புத்துணர்ச்சி ஆகிவிட்டார்கள் ப்ரியங்கா சோப்ராவும், டென்னிஸ் ஏஞ்சல் சானியா மிர்ஸாவும்! ரஜினியின் உடல்நலனை விசாரித்துவிட்டு அப்படியே ‘2.0’ பற்றியும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்திருக்கிறார்கள்!
* ‘வடசென்னை’ படத்தை பார்ட் 1, பார்ட் 2 என எடுக்க நினைத்தார் வெற்றிமாறன். செலவுக்கு பயந்து தனுஷ் யோசித்தார். இப்போது லைக்கா நிறுவனம் தயாரிக்க பச்சைக்கொடி காட்டி விட, ஓகே சொல்லிவிட்டார்.
* நட்பு காரணமாக ஜெயம் ரவியின் ‘போகன்’ படத்திலும் நடிக்க ஒப்புக்கொண்டு விட்டார் அரவிந்த்சாமி. அவருக்கு முனிவர் கேரக்டராம். அந்தமானில் அந்தக் காட்சிகளைப் படமாக்குகிறார்கள்.
* மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் தலைமை தேர்தல் ஆணையம் ஸ்பெஷல் கவனம் வைத்திருக்கிறது. கிட்டத்தட்ட 100 தேர்தல் பார்வையாளர்கள் அந்த மாநிலத்துக்குப் போயிருக்கிறார்கள். இதில் கடுப்பாகியிருக்கும் முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘வேண்டுமானால் அவர்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவைக்கூட கூட்டி வந்து தேர்தலை நடத்தட்டும்’’ என்று முழங்கி யிருக்கிறார்.
* கிட்டத்தட்ட தமிழ் காமெடி நடிகர்களின் ஃபிட்னஸ் மாஸ்டர் ஆகிவிட்டார் ஆர்யா. சந்தானத்தைத் தொடர்ந்து இப்போது விவேக்கும் ஆர்யாவுடன் சைக்கிளிங் பயிற்சி செய்கிறார். ‘‘ஆர்யா என் சைக்கிளிங் குரு!’’ என்கிறார் விவேக்.
* ‘இருமுகன்’ படத்தில் ஒரு முகத்திற்கு ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்த வேடத்திற்கு தாடியை எடுக்கப் போகிறார் விக்ரம்.
* முத்தக் காட்சிகளுக்குப் புகழ்பெற்ற நடிகர் இம்ரான் ஹஷ்மியுடன் ‘அசார்’ படத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறார் நர்கீஸ் ஃபக்ரி. இந்தப் படத்திலும் முத்த மழைதான். ‘‘எத்தனை முத்தங்கள் என ஞாபகமில்லை. சமயங்களில் ரீடேக் எடுக்கிறார்களா, பாடல் காட்சியா என்றுகூட சந்தேகம் வரும் அளவுக்கு முத்தங்கள்’’ என எதிர்பார்ப்பைக் கிளறுகிறார் நர்கீஸ்.
* பாலா படத்தில் நடித்தும் பெரிய வாய்ப்புகள் ஏதுமின்றி இருந்த ஜனனி ஐயர், இப்போது ‘தொல்லைக்காட்சி’, ‘உல்டா’ என இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். ‘‘நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் மட்டும்தான் இப்போது கவனம் செலுத்துகிறேன்!’’ என்கிறார் ஜனனி.
* விஜய்யுடன் ஜோடி சேர்ந்துவிட்ட மகிழ்ச்சியில் தெறிக்கிறார் கீர்த்தி சுரேஷ். ‘விஜய் 60’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் எளிய பூஜையோடு தொடங்கிவிட்டது. ‘கத்தி’யில் நடித்த சதீஷ், இதில் காமெடி பண்ணுகிறார். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார்.
* கார்த்திக் சுப்புராஜ் ‘இறைவி’யை அடுத்து ரஜினி, அஜித் இரண்டு பேருக்கும் ஒன் லைன் சொன்னார். ‘பார்க்கலாம்’ என்று அவர்களும் சொல்லி வைத்தார்கள். இப்போது லாரன்ஸ் திடீரென கார்த்திக்கின் வண்டியில் ஏறிவிட்டார்.
* ‘‘காதல்... கல்யாணம்... கிளாமர்... போட்டி... இதெல்லாம் பேசிப் பேசி போரடிக்குது. நயன்தாராவிலிருந்து யாருக்கும் நான் போட்டியில்லை...’’ என சமீபத்தில் மனம் திறந்திருக்கிறார் அஞ்சலி.
* பிரசாந்தை கவனிப்பதுதான் அப்பா தியாகராஜனுக்கு முதல் வேலை. இப்போது பழைய ஹீரோக்கள் எல்லாம் வில்லன் ஆகிக்கொண்டிருக்க, விஜய் ஆண்டனிக்கு வில்லனாக நடிக்க தியாகராஜன் ரெடி!
* ‘இது நம்ம ஆளு’க்கு ப்ரமோஷன் வேலைகள் தொய்வின்றி நடக்க டி.ஆர் - பாண்டிராஜ் இருவருக்கும் இடையில் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
|