தலைமுறைகளின் அக்கறை!
புல்லாங்குழல் பூ வாசனை அக்கா குயில் ஆலாபனை புல்மீது தூங்கும் கண்ணாடிப் பூக்கள் என் நெஞ்சு தீண்டுமோ!
- தனது இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘குகன்’ படத்துக்கான பழநிபாரதியின் பாடல் வரிகளை ஒலிக்கவிட்டுப் பேசுகிறார் இயக்குநர் அழகப்பன் சி. ‘‘பூச்சிக்கொல்லி மருந்து, கெமிக்கல்னு கண்டதையும் போட்டு வயலையும், நம்ம ஆயுளையும் கெடுத்து வச்சிட்டோம். அந்தக் காலத்தில் பசுஞ்சாணம், வாய்க்கா தண்ணீர்னு இயற்கை விவசாயம் நமக்கு ஆரோக்கியமான சோத்தைக் கொடுத்துச்சு. நல்ல மனசையும் கொடுத்துச்சு. இப்போ அதெல்லாம் எங்கே போச்சு?’’ - அக்கறையாக கேள்வி எழுப்புகிற அழகப்பன் சி, இதற்கு முன் இயக்கிய ‘வண்ணத்துப் பூச்சி’ படத்திற்காக தமிழக அரசின் இரண்டு விருதுகளை வாங்கியவர்.
‘‘இப்போ இருக்கற காமெடி ட்ரெண்ட் மத்தியில ஒரு சின்ன பயத்தோடதான் வர்றேன். படிச்ச பையனை புரிஞ்சுக்காத பெற்றோர், தன்னைக் கண்டெடுத்தவங்கதான் உண்மையான பெற்றோர்னு நினைக்கற ஹீரோனு நல்லதொரு கருத்தை சொல்ற படமா ‘குகன்’ இருக்கும். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல் உதவி செஞ்சவன்தான் புராணத்தில் வர்ற குகன். அவனை மாதிரிதான் என் பட நாயகனும்.
புதுமுகங்கள் அரவிந்த் கலாதர், சுஷ்மா... ஹீரோ, ஹீரோயின். ‘ஆடுகளம்’ நரேன், சிங்கம்புலி, சுப்பு பஞ்சுனு நிறைய ஆர்ட்டிஸ்ட்கள் இருக்காங்க. குருகல்யாண்னு இரட்டையர்கள் இசை. அண்ணன் குரு அமெரிக்காவில் இருந்தும், தம்பி கல்யாண் சென்னையில் இருந்தும் சேர்ந்து இசையமைச்சிருக்காங்க. ஓவியர் அரஸ் இதில் ஓவியராவே நடிச்சிருக்கார். ஹீரோ பணக்காரக் குடும்பத்தில் பிறந்த பையனாகவும் இருக்கணும்... விவசாயியா பார்க்கவும் சரியா வரணும்... அப்படி ஒரு பையனைத் தேடிக்கிட்டிருந்தேன்.
‘ஆடுகளம்’ நரேன்தான் அரவிந்த் கலாதரை அறிமுகப்படுத்தினார். திருநெல்வேலில ஷூட்டிங் போயிட்டிருந்தப்பதான் தெரிஞ்சது, அந்தப் பையன் கலா மாஸ்டரோட அக்கா பையன்னு. என்னோட பாணியில் இருந்து கொஞ்சம் விலகி, இதில் காமெடியும் கலந்து கொடுத்திருக்கேன். பையன் மேல அக்கறை வைக்கணும்னு பெற்றோரையும் அப்பா அம்மாவை புரிஞ்சுக்கணும்னு இளைஞர்களையும் இது நினைக்க வைக்கும். இந்தப் படத்தை கிரேட் டாக்கீஸ் தயாரிச்சிருக்காங்க!’’
‘‘அடுத்து..?’’ ‘‘என்னையும் கவிதைகளையும் எப்போதுமே பிரிச்சிட முடியாது. வர்ற புத்தகக் காட்சிக்கு என்னோட படைப்புகள் ரெடியாகிடுச்சு. தாய்நிலம்னு ஒரு கவிதைத் தொகுப்பும், முகநூலில் நான் எழுதின கவிதைகள் தவிர என்னுடைய சிறுகதைகளையும் ஒரு தொகுப்பா கொண்டு வர்றேன். அடுத்து ஒரு காமெடி படம் இயக்குற வேலையில் இறங்கிட்டேன்!’’
- மை.பாரதிராஜா
|