ஏழைகளுக்கு எட்டாக்கனி ஆகுமா எம்.பி.பி.எஸ்?
மீண்டும் வரும் நுழைவுத் தேர்வு
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய அளவிலான பொது நுழைவுத்தேர்வை (National Eligibility Entrance Test -NEET) நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியிருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பின் விளைவாக, அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் தேசிய அளவில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு நடத்தும் சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் நுழைவுத்தேர்வுக்கு தடை விதித்து சட்டம் இருக்கும் நிலையில், இந்தத் தீர்ப்பு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
+2 தேர்வு முடிவுகள் வெளிவர உள்ள நிலையில் மாணவர்கள் மத்தியில் பெரும் தவிப்பு உருவாகியுள்ளது. ‘‘இதனால் தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்; மாநிலங்களின் உரிமை பறிக்கப்படும்’’ என்று கவலைப்படுகிறார்கள் கல்வியாளர்கள். இந்தியாவில் 381 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் தனியார் கல்லூரிகள் 188. பிற கல்வி நிறுவனங்களை மத்திய அரசும், மாநில அரசுகளும் நடத்துகின்றன.
இதுதவிர பல நிகர்நிலை மருத்துவப் பல்கலைக்கழகங்களும் உள்ளன. இவை தனித்தனியாக நுழைவுத்தேர்வுகளை நடத்தி மாணவர்களைச் சேர்க்கின்றன. எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களுக்கும் தனித்தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மாநில அரசுகள் நடத்தும் கல்வி நிறுவனங்களில் 15 சதவீத இடங்கள் மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. அந்த இடங்களை நிரப்புவதற்கு AIPMT என்ற நுழைவுத்தேர்வை மத்திய அரசு நடத்துகிறது.
மருத்துவக் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கு ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொருவிதமான வழிமுறையைக் கடைப்பிடிக்கின்றது. சில மாநிலங்களில் தனித்தனியாக நுழைவுத்தேர்வு உண்டு. தமிழகத்தில் முன்பு மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு மூலமாகவே மாணவர்கள் சேர்க்கப்பட்டார்கள். இந்த நுழைவுத்தேர்வு நகர்ப்புற, மேல்தட்டு மக்களுக்கு சாதகமாக இருப்பதாகவும், கிராமப்புற, அடித்தட்டு மாணவர்களின் உரிமைகளைப் பறிப்பதாகவும் எழுந்த குற்றச்சாட்டுகளை அடுத்து ரத்து செய்யப்பட்டு +2 மதிப்பெண் அடிப்படையில் ஒற்றைச் சாளர முறை அறிமுகமானது. இது தொடர்பாக இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இந்தச் சூழலில் இந்திய மருத்துவக் கவுன்சில் (MCI) கடந்த 2013ல் ‘இந்தியாவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு அகில இந்திய அளவில் ஒரே நுழைவுத்தேர்வு நடத்தப்படும்’ என்று அறிவித்தது. ‘தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களையும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மொத்த இடங்களையும் தங்கள் விருப்பம்போல நிரப்பிக்கொள்கின்றன. பெரும் தொகையைப் பெற்றுக்கொண்டு மிகக்குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் மருத்துவ இடம் வழங்கப்படுகிறது. அப்படிப் படிக்கிற மாணவர்களால் மருத்துவத் தொழில் வணிகமாகி விடுகிறது’ என மருத்துவக் கவுன்சில் கூறியது.
இதை எதிர்த்த வழக்குகளில் உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் நுழைவுத்தேர்வுக்கான தடையை நீக்கியதோடு, இந்த விவகாரத்தை தொடக்கத்தில் இருந்தே விசாரிக்கவும் உத்தரவிட்டது. மறுவிசாரணை முடிந்து தீர்ப்பு வரும்வரை நுழைவுத்தேர்வை நடத்த அனுமதி அளித்துள்ளது. நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, +2 கட்ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட பிறகு, ஏராளமான கிராமத்து மாணவர்களும், அடித்தட்டுக் குடும்பத்து மாணவர்களும் மருத்துவக் கல்வி நிறுவனங்களில் கால் வைத்தார்கள். நுழைவுத்தேர்வு கொண்டு வரப்பட்டால், மீண்டும் பணக்கார, நகர்ப்புற, மேல்தட்டு மாணவர்களுக்கு மட்டுமேயான படிப்பாக மருத்துவக் கல்வி மாறிவிடும் என்ற குமுறல் இப்போது எழுந்துள்ளது.
இது தொடர்பாக ஆதங்கத்தோடு பேசினார் சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத். ‘‘மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கல்வி நிறுவனங்களில் மாநில அரசுதான் மாணவர்களைச் சேர்க்க வேண்டும். ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் மாநில மாணவர்களுக்காகத்தான் கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன. அதில் மத்திய அரசு வல்லாதிக்கம் செய்து குழப்பம் ஏற்படுத்துவது முறையல்ல. மருத்துவத்தின் புனிதத்தைக் காப்பாற்றுவது முக்கியம்தான்.
அதேநேரம், ஒரு ஜனநாயக தேசத்தில் அனைத்து படிப்புகளிலும் பாகுபாடு இல்லாமல் அனைத்து தரப்பு மக்களுக்கும் உரிய பங்கு கிடைக்க வேண்டும். இந்திய மருத்துவக் குழுமம் திட்டமிட்டுள்ள NEET தேர்வு வெறும் போட்டித்தேர்வு மட்டுமல்ல. தகுதிகாண் நுழைவுத்தேர்வு (Eligibility Entrance Test). குறிப்பிட்ட மதிப்பெண்களைப் பெற்றால்தான் தேர்ச்சி அடைய முடியும். எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் 40%, மாற்றுத்திறனாளிகள் 45%, பொதுப் பிரிவினர் 50% மதிப்பெண்கள் பெற வேண்டும்.
இது, சமூகநீதிக்கு, இடஒதுக்கீட்டு முறைக்கு முற்றிலும் எதிரானது. பல்வேறு மொழிகள், பாடத்திட்டங்கள், கல்வி முறைகள் உள்ள ஒரு நாட்டில், அகில இந்திய அளவில் நுழைவுத்தேர்வைத் திணிப்பது நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் கேடு விளைவிக்கும். மாநிலங்களின் உரிமையைப் பறிக்க முயற்சிக்கிற மத்திய அரசு, தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மீது கருணையும், கரிசனமும் காட்டுவது வியப்பளிக்கிறது.
நுழைவுத்தேர்வு நடத்தி, மதிப்பெண் பட்டியலை தனியார் பல்கலைக்கழகங்களுக்கு தருவார்களாம். அதன் அடிப்படையில் அவர்கள் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளலாமாம். இது இன்னும் தவறுகளை ஊக்கப்படுத்தும். தமிழக அரசு உடனடியாக நீதிமன்றத்தை அணுகி தன் நிலையை உறுதி செய்ய வேண்டும்’’ என்கிறார் ரவீந்திரநாத்.
‘‘ஏற்கனவே தமிழகம் போன்ற மாநிலங்களில் 15% இடங்களை மத்திய அரசுக்குக் கொடுத்து விடுவதால் நம் மாநில மாணவர்களுக்கு போதிய இடங்கள் கிடைப்பதில்லை என்ற குமுறல் இருக்கிறது. இந்தச் சூழலில் அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்தினால், ஐ.ஐ.டி. நிறுவனங்களைப் போல பிற மாநில மாணவர்களே அதிக இடங்களைப் பெற்றுச்செல்லும் நிலை ஏற்படும்’’ என்று அச்சம் தெரிவிக்கிறார் ‘பொதுப்பள்ளிக்கான மாநில மேடை’ அமைப்பின் நிறுவனர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
‘‘நகர்ப்புற மாணவர்கள் நுழைவுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகளுக்குச் சென்று தேர்வில் தேர்ச்சி பெறுவார்கள். கிராமப்புற மாணவர்களும், ஏழைக் குடும்பத்து மாணவர்களும் வாய்ப்பை இழப்பார்கள். மேலும், இந்தத் தேர்வு ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடக்கும். சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் நடத்துவார்கள். மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் வாய்ப்பை இழப்பார்கள்.
ஆங்கில மீடியத்தில் படித்தவர்களும், இந்தி மீடியத்தில் படித்தவர்களும் முழுப்புரிதலோடு தேர்வை எழுதுவார்கள். மாநில மொழிகளில் படித்தவர்கள் தவித்து நிற்பார்கள். இப்படி மிகப்பெரும் பாகுபாட்டை உருவாக்கும் நடைமுறைச் சிக்கல்களில் உச்ச நீதிமன்றம் கவனத்தையே செலுத்தவில்லை’’ என்றும் குற்றம் சாட்டுகிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.
இந்தாண்டு நுழைவுத்தேர்வு இல்லை
பல மாநிலங்களில் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான மாணவர் சேர்க்கை ஏற்பாடுகள் தொடங்கி விட்டன. இருக்கும் குறைந்தபட்ச அவகாசத்தில் நுழைவுத்தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்து முடிக்க முடியாது. அதனால் இந்தக் கல்வியாண்டில் நுழைவுத்தேர்வு நடத்துவதற்கு சாத்தியமில்லை என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது.
- வெ.நீலகண்டன்
|