ஊட்டி, கொடைக்கானலிலும் உக்கிரம்



வெயில் கொளுத்துவது ஏன்?

உள்ளூர் வெயிலைப் பொறுக்க முடியாமல்தான் கோடை விடுமுறைக்குக் குளிர்ப் பிரதேச டிரிப் அடிக்கிறார்கள் மக்கள். ஆனால், இப்போது... ‘அந்தக் கடலே வத்திப் போனால்’ நிலைமைதான் அங்கேயும். கடந்த மாதம் முழுவதும் ஊட்டி, குன்னூர், கொடைக்கானல் பகுதிகளில் வழக்கத்தைவிட ஒன்று முதல் இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்துள்ளதாகச் சொல்கிறார்கள் வானிலை ஆர்வலர்கள். ‘‘குன்னூர், கோத்தகிரி பகுதியில வழக்கமா மார்ச் மாசம் கோடை மழை பெய்யும். கடந்த ஆண்டுகள்ல கூட பரவலான மழை இருந்துச்சு.



ஆனா, இந்தாண்டு அதற்கான அறிகுறியே இல்லை. வெயில் வெளுக்குது!’’ என்கிறார் கோவைச் சேர்ந்த வானிலை ஆர்வலரான சிவக்குமார். கடந்த பத்து வருடங்களாக கோவை, குன்னூர், ஊட்டி பகுதிகளின் வானிலையை உன்னிப்பாகக் கவனித்து வருபவர். ‘‘ஒட்டுமொத்த நீலகிரி மாவட்டத்தையே எடுத்துக்கிட்டா, இங்கே மார்ச் மாசத்துல சராசரி மழையளவு 35 மி.மீ. ஆனா, இந்த தடவை வெறும் 4.9 மி.மீ.தான் பெய்திருக்கு. பொதுவா அவ்வப்போது மழை இருக்கிறதால, எப்பவுமே இங்க வெயிலுக்கு கொஞ்சம் இதமான சூழல் நிலவும்.

இதனால, மக்களும் ஆர்வமா சுற்றுலா வருவாங்க. ஆனா, இந்த முறை வெக்கைதான் அடிக்குது. பொதுவா, ஊட்டியை விட குன்னூர்லதான் மார்ச் மாசம் அதிக மழை பெய்யும். அதனோட அமைவிட சூழல் அப்படி. ஆனா, இந்த வருஷம் பெய்தது வெறும் 0.8 மி.மீ.தான். குன்னூர்லயே 26 டிகிரிக்கும் அதிகமா வெயில் அடிக்குது. மக்கள் நடந்தோ, டூவீலர்லயோ வெளியே போக முடியல. அதே மாதிரி ஊட்டியில இரவு நேரத்துல பத்து டிகிரி செல்சியஸ் பதிவாகும். ஆனா, இந்த முறை 12 வரை எகிறிடுச்சு.

கோயமுத்தூர்லயும் 36 டிகிரியிலிருந்து 38 வரை ஏறிடுச்சு. இந்த வருஷம் சராசரி வெப்பநிலையை விட ரெண்டு டிகிரி கூடுதல்!’’ என்கிறார் அவர் கவலையாக! ‘‘ஊட்டியை விட எப்பவும் ஜில்லுனு இருக்கிற கொடைக்கானல்லயும் இந்த முறை மழையில்லை’’ என்கிறார் மதுரையைச் சேர்ந்த அரசு குழந்தைகள் நல மருத்துவர் ராஜ்குமார். கடந்த ஐந்து வருடங்களாக வானிலையை கவனித்து வரும் இவர், பணி நிமித்தமாக அடிக்கடி கொடைக்கானல் செல்பவர்.

‘‘கடந்த மாசம் மட்டும் மூணு தடவை போயிட்டு வந்துட்டேன். வெள்ளி அருவியில மட்டும் லேசா தண்ணீர் கொட்டுது. தாழையார் அருவியில சுத்தமா தண்ணி இல்ல. இப்படியொரு சூழலை நான் பார்த்ததுமில்ல. பொதுவா, மேற்கிலிருந்து வீசுற வெப்பக் காற்று ஊட்டியைத் தாக்குற அளவுக்கு கொடைக்கானலைத் தாக்காது. இதனால, மார்ச் முதல் மே வரையிலான மாசங்கள் இங்க இதமாயிருக்கும்.

மழையும் ஓரளவு பெய்யும். ஆனா, இந்த முறை 22.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் அடிக்குது. வழக்கமா இந்தக் காலத்துல 20 டிகிரிதான் இருக்கும். நைட்ல கூட 11ல் இருந்து 12 டிகிரி செல்சியஸ் வரை இருக்கு. மழைன்னு பார்த்தா, மார்ச்ல சராசரியா 30 மி.மீ பெய்யும். ஆனா, இந்த முறை வெறும் 3 மி.மீ.தான் பெய்திருக்கு. தென்மேற்குப் பருவமழை ஆரம்பிக்கிற வரை இப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்!’’ என்கிறார் அவர் கவலையாக! 



ஏன் வெயில் இப்படிக் கொளுத்துகிறது? 

‘‘எல்நினோ இன்னும் வெப்பமான நிலையில இருக்கிறதுதான் இதுக்குக் காரணம்!’’ என்கிறார் KEA வெதர் பிளாக்கைச் சேர்ந்த வேலாயுதம். ‘‘கடந்த வருஷம் இதே மார்ச் டூ ஏப்ரல் காலத்துல தென் தமிழகம் முழுவதும் பரவலான மழை பெய்ஞ்சது. இந்த முறை மழை கொஞ்சம் தள்ளிப் போகுது, அவ்வளவுதான். ஏப்ரல் கடைசியில மழையை எதிர்பார்க்கலாம். ஆனாலும், வெப்பம் அதிகரிக்கத்தான் செய்யும்.

வழக்கத்தை விட ரெண்டு டிகிரி கூடுதலான வெயில் இருக்கும். இது மலைப் பிரதேசங்களுக்கும் பொருந்தும். தேயிலைத் ேதாட்டம் நிரம்பிய வால்பாறையிலயே 32 டிகிரி வெயில் அடிக்குது. குன்னூர், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடுனு எல்லா கோடை வாசஸ்தலங்களிலும் வழக்கத்தைவிட கூடுதலான வெயில்தான். எல்நினோ டைம்ல இந்த மாதிரி எப்பவும் நடக்கும்!’’ என்கிற வேலாயுதம், ‘‘அதுமட்டுமல்ல... உலகின் பல வானிலை மாடல்கள் இந்த எல்நினோ, லா நினாவை தோற்றுவிக்கலாம்னு சொல்லுது. அதாவது, எல் நினோவுக்கு எதிரா அமைகிற வானிலை மாற்றம். அதனால, அக்டோபர், நவம்பர்ல அதிகளவு மழை பெய்றதுக்கும் சான்ஸ் இருக்கு!’’ எனக் குளிர்ச்சியான தகவலோடு முடிக்கிறார்.

எல்லா கோடை வாசஸ்தலங்களிலும் வழக்கத்தைவிட கூடுதலான வெயில்தான். ஆனா அக்டோபர், நவம்பர்ல அதிகளவு மழை பெய்றதுக்கும் சான்ஸ் இருக்கு!

- பேராச்சி கண்ணன்