தெறி... வெறி!
பட்டுக்கோட்டையார் நினைவலைகளைப் படித்தபோது கண்கள் பனித்தன. 29 வயதிலேயே மறைந்துவிட்டாலும் அவரது பல பாடல்களின் தாக்கம் என்றும் நம்மை விட்டு மறையாது! - எம்.பர்வீன் பாத்திமா, திண்டுக்கல்-2.
தரங்கம்பாடி தமிழனின் ‘தேங்காய்ப் பால் விஸ்கி’ மிக அசத்தலான முயற்சி! உடலுக்குக் கெடுதி இல்லையெனில் இந்தப் புதிய வகை மது வரவேற்கத்தக்கதே! - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
பெரியவர்களே சோம்பேறித்தனத்தால் சிறுதானிய வகைகளை சமைப்பதில்லை. குழந்தைகளிடம் அவற்றைக் கொண்டு சேர்க்கக் கொடுத்த டிப்ஸ், ரெஸிபி அருமை! - டி.வி.ரமா, செங்கல்பட்டு.
இயக்குநர் மகேந்திரனின் பேட்டியைப் படித்தவுடன், அவர் நடிப்பில் வர இருக்கும் ‘தெறி’ படத்தை ‘வெறி’யுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டோம். - ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்.
பாரம்பரியமும் வரலாற்று முக்கியத்துவமும் நிறைந்த பழுவேட்டரையர் குடும்பம் இன்னும் வாழ்வதும், அவர்களது வாரிசுகள் இருப்பதும் அறிந்து வியந்தோம்... மகிழ்ந்தோம்! - சிவகுமார், பாளையங்கோட்டை.
என்னது! துப்பட்டாவில் ஐந்து பேரை அடித்து விரட்டலாமா? அந்தக் காலப் பெண்கள் கூட புலியை முறத்தால்தான் விரட்டினார்கள். இனி அதுகூட தேவையில்லை போலிருக்கே! - கே.காந்திதாசன், புதுச்சேரி.
போட்டோகிராபர் எஸ்.முத்துக்குமார் கிளிக் செய்த நடிகர், நடிகைகளின் ஸ்டில்களே நமக்கு ‘கிஃப்ட்’. அந்த ‘கிஃப்டுக்கே... கிஃப்ட்’ தர கமலால் மட்டுமே முடியும்! - ஆசை.மணிமாறன், திருவண்ணாமலை.
கேரள நிறுவனத்தின் ரெடிமேட் பிரசார மேடைகள் அபாரம். வேண்டும்படி நகர்த்திக்கொள்ளும் இந்த வேன் மேடைகள் தேர்தல் நேர டிராஃபிக் ஜாம் பிரச்னைக்கு நல்ல தீர்வு! - டி.வி.சாம்பசிவன், தஞ்சாவூர்.
விஷால் புண்ணியத்தில் காமெடி கிங் வடிவேலு நான்கு படங்களில் ஒப்பந்தம் ஆகியிருப்பது மகிழ்ச்சி. இனி வடிவேலுவை சிரிப்பு ‘வெடி’வேலுவாக திரையில் பார்த்து ரசிக்கலாம். - எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.
‘முதலில் குழந்தை... அப்புறம் காதல்!’ என்ற தலைப்பு ஈர்த்தது. காதல் என்ற பெயரில் நம்ம ஊரில் இப்போது இதானே நடக்கிறது என்று பார்த்தால் மேட்டர் வேற... அதுவும் செம! - எஸ்.குகன், திருச்சி.
ஆச்சரிய வரவாக Download மனசு ஆரம்பமே அசத்தல். இயக்குநர் பாண்டிராஜைத் தொடர்ந்து இன்னும் பல வி.ஐ.பிக்களின் வெளிவராத பக்கங்களைப் பார்க்கக் காத்திருக்கிறோம்! - கே.விக்னேஷ், காங்கேயம்.
|