நினைவோ ஒரு பறவை



நா.முத்துக்குமார்

இன்றே கடைசி
‘நானும் அவளும்
எதிரெதிரே வைக்கப்பட்ட
இரண்டு நிலைக் கண்ணாடிகள்
பிம்பத்துக்குள் பிம்பமாய்
பிரதிபலித்துக்கொண்டு
இரவும் பகலுமாய் நீளும் பயணத்தில்
யார் பிம்பம்? யார் பிரதிபிம்பம்?’
- கவிஞர் இந்திரன்

(‘மிக அருகில் கடல்’ தொகுப்பிலிருந்து...)



‘‘ஒளி உண்டாகக் கடவதாக’’ என்றார் கடவுள்; ஒளி உண்டானது. ‘‘சினிமா உண்டாகக் கடவதாக’’ என்றார் மீண்டும்; தாமஸ் ஆல்வா எடிசன் உண்டானார். குகைகளின் சுவர்களில் செதுக்கப்பட்ட சிற்பங்களும் ஓவியங்களும் உயிருள்ளதாகி நடனமாடத் தொடங்கின. இதெல்லாம் நடந்து முடிந்து நீண்ட நாட்களுக்குப் பிறகு எங்கள் கிராமத்திற்கு டூரிங் டாக்கீஸ் வந்தது. கூண்டு வண்டிகளில் இருபுறமும் போஸ்டர் ஒட்டி, ரேடியோ ஸ்பீக்கர்களில் ‘இன்றே கடைசி’ என்று திரையிடப்படும் படத்தின் பராக்கிரமங்களைச் சொல்லி, சிறுவர்கள் நாங்கள் பின்தொடர, நோட்டீஸ் கொடுத்துச் சென்றார்கள். மறக்காமல் ஒவ்வொரு தடவையும் கடைசியாக ‘ஒளி, ஒலி அமைப்பு - ஈஸ்வரி சவுண்ட் சர்வீஸ்’ என்று முகவரியோடு காது குத்து, கல்யாணம், மஞ்சள் நீராட்டு விழா போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு அணுகச் சொன்னார்கள்.

ஆடாதொடை பூக்களின் வடிவத்தில் சாயம் போயிருந்த அந்த ஸ்பீக்கர்களின் வசீகரத்தில், நாங்கள் ஊர் எல்லை வரை சென்று வழியனுப்புவோம். இப்படியாக, மாட்டு வண்டிகளின் ஸ்பீக்கர் உதவியுடன் சினிமாவின் விதை எங்கள் ஊரில் விழத் தொடங்கியது. ஒவ்வொரு உருவமும் தனது காதில் பேசும் ரகசியங்களை, ஒளி ஒரு கறுத்த நிழலாக மொழிபெயர்க்கிறது. ஒளிக்கும் நிழலுக்குமான உறவின் சூட்சுமம் விக்ரமாதித்யனுக்கு வேதாளம் சொல்லும் கதையாக தினந்தோறும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஒளி, உயரமான உருவங்களைச் சுருக்கி நிழலெடுத்து அகங்காரம் அழிக்கிறது. குட்டையான உருவங்களை நெடிதாக்கிக் காட்டி ஆறுதல் சொல்கிறது. ‘ஒளி இல்லாத பொருள் ஜகத்தில் இல்லை; இருள் என்பது குறைந்த ஒளி’ என்றான் பாரதி. ஒளி அவனது நிழலையும் வரலாற்றின் இருண்ட அறையில் புகைப்படமாக்கி விட்டு, அடுத்தடுத்த நிழல்களைப் பிரதியெடுக்க விரைந்து கொண்டிருக்கிறது.

கிராமத்தில் இரவுச் சாப்பாட்டிற்குப் பிறகு எங்கள் பாட்டி கதை சொல்லத் தொடங்குவாள். வேப்ப மரக் காற்றோடு திண்ணையில் அமர்ந்து ‘உம்’ கொட்டக் கொட்ட, பெளர்ணமி நிலவொளியில் மாய உலகம் தன் கதவுகளைத் திறக்கும். ‘‘ஒரு ஊர்ல...’’ என்று ஆரம்பித்து ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி, கதைகள் சஞ்சரிக்கும். பறக்கும் கம்பளம் மேகங்களைக் கிழித்து வானத்தில் பறக்கும். பஞ்சவர்ணக் கிளியின் கழுத்துச் சிமிழுக்குள் இளவரசியின் உயிர், அபயக்குரல் கொடுக்கும். மோதிரங்களை விழுங்கும் மீன்கள், துஷ்யந்தனின் ஞாபகங்களைக் களவாடும்.

பள்ளிக்கூடம் முடிந்து விளையாடும் பின்மாலைப் பொழுதுகளில் நாங்கள் விஞ்ஞானியாகி விடுவோம். விஞ்ஞானம் ஒரு பொம்மை மாதிரி. அது எப்போதும் சிறுவர்களின் கண்களாலேயே பார்க்கச் சொல்கிறது. ஆச்சர்யங்களையும், பிரமாண்டங்களையும், புதிர்களையும் திறந்து பார்க்க, சிறுவர்களின் மனநிலையை விஞ்ஞானம் கேட்கிறது. விஞ்ஞானிகள் பலரின் செயல்களில் குழந்தைத்தனம் கலந்திருப்பது இதனால்தான்.



விஞ்ஞானிகளான பிறகு நாங்கள் சொந்தமாக திரைப்படம் காட்ட ஆரம்பித்தோம். எங்கள் முதல் திரைப்படக் கருவியின் செய்முறை மிக எளிமையானது. ஒரு தீப்பெட்டி, நீளமான சுருளாக ஒட்டப்பட்ட காகிதப் படங்கள், இரண்டு குச்சிகள். இவைதாம் எங்கள் முதலீடு. தீப்பெட்டியின் மத்தியில் சதுரமாக வெட்டிவிட்டு, மேலேயும் கீழேயும் இரண்டு குச்சிகளைச் செருகி, மேல் குச்சியில் காகிதச் சுருளை ஒட்டி, அதன் முடிவை கீழ்ச் சுருளில் கட்டியதும் கருவி தயார். கீழே இருக்கும் குச்சியைத் திருகத் திருக சதுர இடைவெளியில் படம் ஓடிக் கொண்டிருக்கும். சில நாட்களில் அனைவருக்கும் போரடித்து விட்டது. செய்முறை எளிதென்பதால் எல்லா சிறுவர்களும் விஞ்ஞானிகளாகி விட்டார்கள்.

மூத்த விஞ்ஞானிகள் வளர வேண்டாமா? நாங்கள் வேறு கருவிக்கு மாறினோம். இதன் முதலீடு, வீட்டிற்குத் தெரியாமல் திருடும் தைரியத்தைக் கேட்டது. ஒரு நாற்பது வாட்ஸ் பல்பு, முகம் பார்க்கும் கண்ணாடி, சில ஃபிலிம் சுருள்கள். இவைதான் கச்சாப் பொருட்கள். பல்பின் மேல் பகுதியை உடைத்து விட்டு அதன் குடுவைக்குள் தண்ணீரை ஊற்றிக் கொள்வோம். பல்புக்கு முன்னால் சூரிய ஒளியில், முகம் பார்க்கும் கண்ணாடியைக் காட்டி, பிரதிபலிக்கும் ஒளி, பல்பில் விழுமாறு செய்வோம்.

பல்புக்கு பின்னால் ஃபிலிம் சுருளை வைப்போம். இவை அனைத்தும் ஒரு வெள்ளைச் சுவர் அல்லது வெண்திரை (அப்பாவின் வேஷ்டி) முன்னால் நடக்கும். ஃபிலிமில் இருக்கும் உருவம் பெரிதாகத் தெரிய, கூடியிருக்கும் சிறுவர் கூட்டம் குதூகலிக்கும். அந்தக் காலத்தில் கிராமத்து மாந்தோப்புகளில் மாங்காய்கள் திருடு போவதெல்லாம், நாங்கள் காட்டும் இந்தப் படத்திற்குப் பையன்கள் தரும் கட்டணமாக இருந்தது.

இந்த எல்லாக் கண்டுபிடிப்புகளுக்கும் சவால் விட்டபடி, ‘மருதமலை மாமணியே முருகய்யா...’ என்றழைத்து டிக்கெட் கொடுத்து டூரிங் டாக்கீஸ் (சரிபாதி செந்தமிழில் ‘டென்ட்டு கொட்டா’) படம் காட்டிக் கொண்டிருந்தது. கிராமத்தின் ஒரே பொழுதுபோக்கு அதுதான். ஆற்று மணலில் அமர்ந்தபடி, பொரி உருண்டை சாப்பிட்டுக்கொண்டு, சாம்பல் நிறத்தில் சாயம் போன திரையில் படம் பார்ப்போம்.

ஒரு முறை நான் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது, இடைவேளையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த ஒரு அண்ணன், எங்கள் தெரு அக்காவிற்கு ஒரு கடிதம் கொடுத்து என்னைக் கொடுக்கச் சொன்னார். அந்த அக்கா ரொம்பவும் அழகாக இருப்பார். கிராமத்திலேயே எட்டாவது வரை படித்தவர். செம்பருத்திப் பூப்பறிக்க காலைகளில் எங்கள் வீட்டிற்கு வருவார்.

கடிதத்தை வாங்கியதும் எனக்குக் கைகள் நடுங்கத் தொடங்கிவிட்டன. டிக்கெட் கவுன்ட்டருக்கு அருகில் ஒளிந்து நின்று பிரித்துப் படித்தேன். ‘உனக்கு செகப்பு தாவணி ரொம்ப அழகா இருக்கு. உன் தங்கச்சிகிட்ட என்னைக் காட்டி என்ன சொல்லிக்கிட்டிருந்தே? என்னையே பார்த்துப் பார்த்து சிரிக்குறா! மளிகைக் கடை அண்ணாச்சி சந்தேகப்படறாரு... நாளைக்கு கன்னியம்மன் கோயிலுக்கு வந்துடு’ என்று எழுதி கையெழுத்திட்டிருந்தது. ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள். கையெழுத்திற்கு மேல் ‘கோடி முத்தத்துடன்’ என்பதற்குப் பதிலாக ‘கேடிமுத்தத்துடன்’ என்றிருந்தது.

அந்த அக்காவின் அம்மாவுக்குத் தெரியாமல் கையைக் கிள்ளி கடிதத்தைக் கொடுத்தேன். நான்காக மடித்து தாவணிக்குள் செருகி விட்டு என்னைப் பார்த்துச் சிரித்தது. நாலைந்து மாதத்திற்குள் இருவரின் வீட்டிற்கும் விஷயம் தெரிந்து சண்டையாகி, அந்த அக்காவும் அண்ணனும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்கள். துஷ்யந்தனின் மோதிரத்தை விழுங்கிய மீன்கள், அவர்களின் கடிதங்களையும் விழுங்கியபடி நீந்திக் கொண்டிருந்தன.

அதற்குப் பிறகும் டூரிங் டாக்கீஸின் மணலுக்கடியில் விரல்கள் சேர்வதும், கண் பார்வை வழி காதல் தொடர்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போது சவுக்கு கட்டைக்குப் பதில் ஆளுயர சுவர்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வேலி போடுகின்றன. மாநகரத்து திரையரங்குகளில் மணல் மேடுகள் இல்லை. ஏ, பி, சி, டி என்று மாநகரம் ஆண்களையும் பெண்களையும் எண்களாக மாற்றி, சம உரிமை கொடுத்து உட்கார வைக்கிறது.

அகன்ற திரைகளில், டி.டி.எஸ். ஒலியுடன் மாநகரம் தொழில்நுட்பத்தின் துல்லியத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கிறது. மாநகரத்து பெருந்திணைக் காதலர்களும், உடன் போக்கு ஜோடிகளும் கடைசி இருக்கைகளைக் கேட்டு வாங்கிப் படம் பார்க்கிறார்கள். கைக்கிளை அன்பர்கள், கழிவறைகளில் தத்தம் காதலியின் பெயரையோ, படத்தையோ கிறுக்கி, அதற்குக் கீழ் ‘ஹார்ட்டின்’ வரைகிறார்கள்.

ஒளி, உயரமான உருவங்களைச் சுருக்கி நிழலெடுத்து அகங்காரம் அழிக்கிறது. குட்டையான உருவங்களை நெடிதாக்கிக் காட்டி ஆறுதல் சொல்கிறது. டூரிங் டாக்கீஸின் மணலுக்கடியில் விரல்கள் சேர்வதும், கண் பார்வை வழி காதல் தொடர்வதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

பள்ளிக்கூடம் முடிந்து விளையாடும் பின்மாலைப் பொழுதுகளில் நாங்கள்  விஞ்ஞானியாகி விடுவோம். விஞ்ஞானம் ஒரு பொம்மை மாதிரி. அது எப்போதும்  சிறுவர்களின் கண்களாலேயே பார்க்கச் சொல்கிறது.

(பறக்கலாம்...)