உதயநிதியை பாராட்டிய ஹன்சிகா!
மனிதன் ஸ்பாட்டில் ஒரு டூயட் பேட்டி
பக்கத்து வீட்டுப் பையன் போல செம ஃப்ரெண்ட்லி ‘லுக்’கில் உதயநிதி. பிங்க் ரோஸ் பூங்கொத்து போல ஃப்ரெஷ் சிரிப்பில் ஹன்சிகா. ‘‘ஹாய்... உதய் சார்!’’ என உதயநிதியை வரவேற்கிறார் ஹன்சிகா. ‘‘ஹன்சிகானாலே கொஞ்சம் உதறல்தான். மத்த ஹீரோயின்ஸ் இங்கிலீஷைக் கூட ஈஸியா சமாளிச்சிடலாம். இவங்க பிரிட்டிஷ் இங்கிலீஷ்ல பின்றாங்க. இல்லனா, இந்தியில ‘ஹை... ஹை...’ங்கறாங்க!’’ - சிரிக்கிறார் உதயநிதி. ‘என்றென்றும் புன்னகை’ அஹமத் அடுத்து இயக்கியிருக்கும் ‘மனிதன்’ பட டப்பிங் ஸ்பாட்டில் ஆரம்பித்தது இந்த ஜாலி கொண்டாட்டம்.
‘‘இன்னிக்கு செம கலக்கலா வந்திருக்கீங்க ‘மாடர்ன் அன்னை தெரஸா’ அவர்களே!’’ என உதயநிதி ஹன்சிகாவை வம்புக்கிழுக்க, எதுவும் புரியாமல் விழித்தோம். ‘‘விவேக் சார் எனக்குக் கொடுத்த கிரெடிட் அது. சூரியன் எஃப்.எம்ல நடந்த ‘மனிதன்’ பட இசை வெளியீட்டு விழாவில்தான் விவேக்ஜி அப்படிச் சொன்னார். ஆதரவற்ற குழந்தைகளுக்கான சமூக சேவைனு என்னோட சோஷியல் வொர்க் பத்தி பாராட்டிச் சொன்னது அது!’’ என்ற ஹன்சிகாவின் பேச்சில் வெட்கப் புன்னகை.
‘‘இந்தப் படத்துல ஹன்சிகா என்ட்ரி ஆனது எப்படி? அஹமத் சார் சாய்ஸா?’’ - உதயநிதிக்கு இந்தக் கேள்வி. ‘‘இல்லீங்க. ஹன்சிகா இந்தப் படத்துல இருந்தா நல்லா இருக்கும்னு நான்தான் சொன்னேன். ‘என்றென்றும் புன்னகை’க்குப் பிறகு நானும் அஹமத் சாரும் ‘இதயம் முரளி’னு ஒரு ப்ராஜெக்ட் தொடங்கலாம்னு இருந்தோம். முழுக்க முழுக்க வெளிநாட்டுல நடக்கற கதை அது. ஸோ, பெரிய பட்ஜெட் தேவைப்பட்டுச்சு. அந்தப் படத்துக்காக ஹன்சிகா கமிட் ஆகியிருந்தாங்க. அப்புறம் இப்போதைக்கு பெரிய பட்ஜெட் வேணாம்னு நினைச்சோம்.
வேற ஸ்கிரிப்ட் ட்ரை பண்ணும் போதுதான் ‘மனிதன்’ அமைஞ்சது. அந்தப் படத்துக்கு ஹன்சிகா கொடுத்த கால்ஷீட் இருந்ததால, இதிலும் அவங்களையே கமிட் பண்ணிட்டோம். அஹமத் சார் கூட, ‘பொள்ளாச்சியில் இருக்கற ஒரு டீச்சர் கேரக்டர்... ஹன்சிகா செட் ஆகிடுவாங்களா?’னு சின்னதா தயங்கினார். ஆனா, கேரக்டருக்குத் தகுந்த மாதிரி தன்னை தயார்படுத்தி, படத்துல பிரமாதப்படுத்திட்டாங்க ஹன்சிகா!
‘ஓகே ஓகே’வுக்குப் பிறகு அவங்களோட நடிக்கிறேன். ஷூட்டிங் தொடங்கின ரெண்டாவது நாளே, ‘என்ன உதய் சார்... ஆக்ட்டிங் பிச்சு உதறுறீங்க... டான்ஸ்லயும் கலக்குறீங்க...’னு சொன்னாங்க. சந்தோஷமா இருந்துச்சு. நான் நடிக்க வந்த புதுசுல பாக்யராஜ் மாதிரி டான்ஸ் ஆடுறேன்னு எல்லாரும் சென்னாங்க. அதுக்குக் காரணம், முதல் படத்துல தினேஷ் மாஸ்டர் என்னை அதிகம் கஷ்டப்படுத்தல. ‘உங்களுக்கு வர்ற மாதிரி பண்ணுங்க’னு ஃப்ரீயா விட்டுட்டார். ஆனா, அடுத்த படத்தில் பிருந்தா மாஸ்டர் பெண்டு நிமித்திட்டாங்க. அப்புறம் நானே கொஞ்சம் முயற்சி பண்ணி இப்ப பெட்டரா வந்திருக்கேன்னு நினைக்கிறேன்!’’
‘‘நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில நீங்க விளையாடல. ஆனா, ஹன்சிகா வைஸ் கேப்டனாமே?’’ - கலாய்த்தோம். ‘‘ஆமா, நான் சென்னை சிங்கம்ஸ் சப்போர்ட்டர். மதுரை காளைஸ், நெல்லை டிராகன்ஸ், ராம்நாடு ரைனோஸ், தஞ்சை வாரியர்ஸ்னு ஒவ்வொரு டீமும் செம..!’’ - எனப் படபடத்தார் ஹன்சிகா.
‘‘உதயநிதி - அஹமத்... நீங்க ஃப்ரெண்ட்ஸா?’’ ‘‘நான் காலேஜ் படிக்கறப்போ அஹமத் சார் என்னோட சீனியர். ஆனா, அப்போ அவர் எனக்குப் பழக்கம் இல்ல. அவர் இயக்கின ‘என்றென்றும் புன்னகை’யை நான் ரிலீஸ் பண்ணினதில் இருந்துதான் எங்க நட்பு தொடங்கிச்சு. அந்தப் படத்தை பார்த்த நிமிடத்திலேயே ‘அஹமத் சார், நம்ம காம்பினேஷன்ல ஒரு படம் ஆரம்பிப்போம்’னு சொல்லியிருந்தேன். அதுதான் இப்ப தொடருது!’’
‘‘பிரகாஷ்ராஜ், ராதாரவின்னு ரெண்டு ஜாம்பவான்கள் படத்துல இருக்காங்க...’’ ‘‘ஆமா! அவங்க ரெண்டு பேரும் பண்ணாத கேரக்டர் இல்ல. அவங்க பர்ஃபார்மென்ஸுக்கு நடுவுல நான் காணாமப் போயிடுவேனோனு கொஞ்சம் கவலைப்பட்டேன். ராதாரவி சார் நாலஞ்சு சீன்ல செம க்ளாப்ஸ் வாங்குவார். பிரகாஷ்ராஜ் சாரோட கேரக்டர் பெயர் ஆதிசேஷன். அவரைத் தவிர வேற யாராலும் அந்தக் கேரக்டரை இவ்வளவு சிறப்பா பண்ணியிருக்க முடியாது. ஐஸ்வர்யா ராஜேஷும் நடிச்சிருக்காங்க. என் படங்கள்ல எப்பவும் பாடல்கள் ஹிட் ஆகி பேசப்பட்டிருக்கு. அதை இந்தப் படத்திலும் தொடர வச்சிருக்கார் சந்தோஷ் நாராயணன் சார். இதில் ‘கொண்டாட்டம்’னு ஒரு ஸாங் ஏற்கனவே ஹிட். மதி சார் ஒளிப்பதிவு படத்துக்கு பலம் சேர்க்கும்.
விவேக் சாரோட நடிக்கணும்கிற ரொம்ப நாள் ஆசை இதில் நிறைவேறியிருக்கு. இதுல அவர் பார்ட் டைமா ஊறுகா கடை நடத்துற வக்கீல் கேரக்டர்ல நடிச்சிருக்கார். ரெடி பண்ணி வச்சிருக்குற டயலாக்ஸைத் தாண்டி, டேக்ல வேறொரு பன்ச் பேசி அசத்திடுவார். ‘வி.ஐ.பி’யில ‘தங்கபுஷ்பம் காமெடி’ செமயா இருக்கும்ல... இதுல அதே மாதிரி ‘வண்டார்குழலி’ங்கற போர்ஷன் எவர் கிரீன் காமெடியா இருக்கப் போகுது பாருங்க!’’ - ரிலாக்ஸ்டாக சொன்னார் உதய்.
‘‘ஒரு சேஞ்சுக்கு ஹன்சிகாவே உதயநிதியை பேட்டி எடுக்க விடலாமே!’’ - நாம் கொளுத்திப் போட, ஆரம்பமானது கேள்வி செஷன். ‘‘சந்தானத்தை மிஸ் பண்றோம்னு தோணுச்சா?’’ ‘‘இல்ல. சந்தானத்துக்கும் எனக்கும் சினிமாவைத் தாண்டின ஒரு நட்பு இருக்கு. என்னோட வளர்ச்சியில ரொம்ப முக்கியமான பார்ட் சந்தானத்துக்கு இருக்கு. இப்ப நாங்க சேர்ந்து நடிக்கலைன்னாலும் வாரா வாரம் சந்திச்சிடுறோம். அடிக்கடி போன்ல பேசறோம். எங்களுக்குள்ள ஆன் ஸ்கிரீன்ல என்ன இருக்கோ அதான் ஆஃப் ஸ்கிரீன்லயும் இருக்கும்!’’
‘‘உங்க ரியல் லைஃப் ஹீரோயின்... கிருத்திகா பத்தி சொல்லமாட்டீங்களா?’’ ‘‘என்னோட பெஸ்ட் கிரிட்டிக் அவங்கதான். சில படங்கள் பார்த்து, ‘இது வேலைக்கே ஆகாது’னு கூட வெளிப்படையா சொல்லியிருக்காங்க. கதை கேட்கும்போதெல்லாம் என்கூட அவங்களும் சப்போர்ட்டிவ்வா இருப்பாங்க. சரியா கணிப்பாங்க. ‘மனிதன்’ படத்தைப் போட்டுப் பார்த்து ‘உங்க கேரியர்ல இதான் பெஸ்ட் மூவி’னு பாராட்டினாங்க. அவங்களும் அடுத்து படம் இயக்குறதுக்கான வேலைகளை ஆரம்பிச்சிட்டாங்க. வீட்ல குழந்தைகளையும் கவனிச்சிக்கிட்டு சினிமாவிலும் ட்ராவல் பண்றாங்கன்னா உண்மையிலேயே அவங்க ரியல் லைஃப் ஹீரோயின்தான்!’’ - இந்த பதிலுக்கு ஹன்சிகாவே பரவசமாகி கைதட்ட, Talk Show மாதிரி முடிந்தது சந்திப்பு.
- மை.பாரதிராஜா
|