ஓட்டு போட்டால் அதிர்ஷ்டப்பரிசு!
நூறு சதவீத வாக்குப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் என்னென்னவோ பிரசாரம் செய்து கொண்டிருக்க, நெல்லையைச் சேர்ந்த ராமநாதன் ஒரு ஸ்மார்ட் ஐடியா கண்டுபிடித்துவிட்டார். ‘ஓட்டு போடுங்கள்... பணப் பரிசை வெல்லுங்கள்’ என அவர் வெளியிட்ட அறிவிப்பைப் பார்த்து தேர்தல் ஆணையமே தலையைச் சொறிந்துகொண்டிருக்கிறது.
‘‘ ‘எனக்கு ஓட்டுப் போடு... பணம் தர்றேன்’னு சொல்றதுதாங்க தப்பு. நான் சொல்றது அது இல்ல. ‘முதல்ல வாக்குச் சாவடிக்கு வா... வந்து ஓட்டு போடு! குலுக்கல் முறையில் பரிசு தர்றேன்’ங்கிறதுதான் என் பாயின்ட். இதனால நூறு சதவீத வாக்குப் பதிவு சாத்தியமாகும்!’’ என்கிறார் ராமநாதன் கூலாக. நெல்லையில் ‘வாஞ்சி இயக்கம்’ என்ற அமைப்பை நடத்திக் கொண்டிருப்பவர் இவர்.
‘‘என்னோட சொந்த கிராமம் தென்காசி பக்கத்துல இருக்கிற திருமலையப்பபுரம். இங்க மொத்தமே ஆயிரம் ஓட்டுகள்தான். ஆனா, எப்பவுமே அறுபது டூ எழுபது சதவீத ஓட்டுகள்தான் பதிவாகும். ஒரே வாக்குச்சாவடி உள்ள சின்ன ஊர்... அங்கே கூட ஏன் நூறு சதவீதம் வரலைனு யோசிச்சேன். அப்போதான், கேரளாவுல பத்தினம்திட்டா மாவட்ட ஆட்சியர் ஹரிகிஷோர் ‘வாக்களிச்சா பரிசு தரப்படும்’னு அறிவிச்ச செய்தியை பேப்பர்ல படிச்சேன். அங்கே ஓட்டு சதவீதம் குறைவாயிருக்கும் நூறு வாக்குச் சாவடிகளைத் தேர்ந்தெடுத்து இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கார்.
இதை நாமும் ஃபாலோ பண்ணலாம்னுதான் இந்த அறிவிப்பை வெளியிட்டேன். மக்கள் வாக்களிச்ச பிறகு கொண்டு வர்ற அந்த ஸ்லிப்பை வாங்கி நம்பர் குறிச்சு வச்சு, குலுக்கல் முறையில இந்தப் பரிசைக் கொடுப்பேன். லாட்டரிச் சீட்டு முறை மாதிரிதான்! முதல் பரிசு ஆயிரம் ரூபாய், ரெண்டாம் பரிசு ரூ. 750, மூணாவது பரிசு ரூ. 500, நாலாவது பரிசு ரூ.250, அஞ்சாவது பரிசு ரூ. 100’’ என்கிறவரிடம், ‘இதெல்லாம் தேர்தல் விதிப்படி சரியா?’ என்றால் சிரிக்கிறார்.
‘‘ஒரு தேர்தல் அதிகாரியைப் பின்பற்றிதானே சார் இதை நான் செய்றேன். இது தப்புனு எப்படிச் சொல்ல முடியும்? என்னோட அறிவிப்பைப் பார்த்த உடனே மாவட்ட தேர்தல் அதிகாரிகிட்ட இருந்து எனக்கு ‘உடனே பதிலளிக்கும்படி’ நோட்டீஸ் வந்துச்சு. நான் பத்தினம்திட்டா மாவட்டத் தேர்தல் அதிகாரியோட அறிவிப்பை சுட்டிக் காட்டியிருக்கேன். என்ன நடக்குதுனு பார்க்கலாம்!’’ என்கிறார் அவர் ஆவலாக!
- பேராச்சி கண்ணன் படம்: பரமகுமார்
|