புகையைத் தடுக்குமா படம்?



* ஒரு படம் யாரையாவது பயமுறுத்தி திருந்தச் செய்யுமா? ‘‘ஆம், செய்யும்’’ என கையில் அடித்து சத்தியம் செய்கிறார்கள் சுகாதாரத் துறையினர். அழகான, ஸ்டைலான, வலிமையான ஆண்களின் படங்களை பாக்கெட்டில் அச்சிட்டு சிகரெட் விற்ற காலம் மாறிவிட்டது. அதில் எச்சரிக்கை படம் வேண்டும் என முன்பு உத்தரவு வந்தது. இப்போது புகை பிடிக்கும் பழக்கத்துக்கு எதிராக மிக முக்கியமான அடுத்த அடியை எடுத்து வைத்திருக்கிறது இந்தியா. இந்த ஏப்ரல் முதல் தேதியிலிருந்து சிகரெட் பாக்கெட்களில் 85 சதவீத அளவில் எச்சரிக்கை படங்களும் வாசகங்களும் இடம்பெறும்.

* ஆரம்ப கால சிகரெட் பாக்கெட்களில் வெறும் எச்சரிக்கை வாசகங்கள் மட்டுமே இருந்தன. அதையும் சிகரெட் பாக்கெட் என்ன கலரோ, அதே கலரில் அச்சிட்டு படிக்கவே முடியாத மாதிரி பார்த்துக்கொள்வார்கள்.



* கடந்த 2008ம் ஆண்டில் முதல்முறையாக ‘படத்துடன் கூடிய எச்சரிக்கை வேண்டும்’ என சட்டம் வந்தது. ‘பாக்கெட்டின் 40 சதவீத பகுதியில் எச்சரிக்கை இடம்பெற வேண்டும்’ என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது. புகை பிடிப்பவரின் நுரையீரல் கெட்டுப்போனது போன்ற ஒரு படத்துடன், ‘புகைப்பழக்கம் கொல்லும் - புகையிலை புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றன. முடிந்த அளவு இந்தப் படத்தை கறுப்பு - வெள்ளையில் மோசமாக அச்சிட்டு, ‘அது நுரையீரலா? இந்தியா மேப்பா?’ என சந்தேகம் வரக்கூடிய ரேஞ்சில் ‘எச்சரிக்கை’ செய்தன நிறுவனங்கள்.

* இப்போது இதுதான் ஒரு பாக்கெட்டின் 85 சதவீத இடத்தில் இடம்பெற வேண்டும் என விதி வந்துள்ளது. இதில் 60 சதவீத இடத்தில் படமும், 25 சதவீத இடத்தில் எச்சரிக்கை வாசகமும் அச்சிட வேண்டும். இதன்படி, தொண்டை மற்றும் வாய் புற்றுநோய் வந்தவரின் படங்களுடன், ‘புகைப்பழக்கம் தொண்டை புற்றுநோயை உண்டாக்கும், புகையிலை வாய் புற்றுநோயை உண்டாக்கும்’ என்ற வாசகங்கள் இடம்பெற வேண்டும்.

* உலகிலேயே தாய்லாந்துதான் ‘புகை எச்சரிக்கை’ விஷயத்தில் இதுவரை முதலிடத்தில் இருந்தது. அங்கு சிகரெட் பெட்டியில் 85 சதவீதம் எச்சரிக்கை பகுதிகள்தான் இருக்கும். இந்தியா இப்போது தாய்லாந்துடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொள்கிறது.

* ஆஸ்திரேலியா இந்த விஷயத்தில் விநோதமான ஒரு விதியை கடந்த 2011ம் ஆண்டு கொண்டுவந்தது. அங்கு எந்த சிகரெட் கம்பெனியும் தங்கள் பிராண்டை முன்னிலைப்படுத்த முடியாது. எல்லா சிகரெட் பாக்கெட்களும் ஒரே மாதிரி இருக்கும். அதில் பயமுறுத்தும் படங்கள், எச்சரிக்கை வாசகங்கள் அடங்கியிருக்கும். கீழே அது என்ன பிராண்ட் என சின்னதாக எழுதியிருக்கும். மற்றபடி லோகோ, வண்ணம் என எதற்கும் அனுமதி இல்லை.  இப்போது ஆஸ்திரேலியா போலவே பிரான்ஸ் மாறியிருக்கிறது.

* படங்களுடன் கூடிய எச்சரிக்கை வாசகங்களை சிகரெட் பாக்கெட்டில் அச்சிட வேண்டும் என்ற சட்டத்தை முதலில் கொண்டுவந்த நாடு, கனடா. கடந்த 2000மாவது ஆண்டில் அவர்கள் இப்படிச் செய்தார்கள். இப்போது உலகில் 77 நாடுகளில் படங்களோடு கூடிய எச்சரிக்கை வாசகம் உள்ளது.

* இந்தியாவில் இப்படி பட எச்சரிக்கை அமலுக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளில் என்ன மாற்றம் நிகழ்ந்தது என பெரிய ஆய்வுகள் ஏதுமில்லை. எனினும், ‘சிகரெட் வாங்குபவர்களில் ஐந்தில் மூன்று பேர் இந்த எச்சரிக்கைப் படங்களையும் வாசகங்களையும் கவனிக்கிறார்கள்; இப்படி கவனிப்பவர்களில் மூன்றில் ஒருவர் இந்தப் பழக்கத்தைக் கைவிட வேண்டும் என நினைக்கிறார்’ என்பது ஒரு கருத்துக்கணிப்பில் தெரிய வந்தது.



* மக்கள்தொகை போலவே புகை பிடிக்கும் விஷயத்திலும் உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. குறிப்பாக இங்கு வயது வந்தோரில் 34.6 சதவீதத்தினருக்கு புகையிலைப் பழக்கம் உள்ளது. அதாவது, வயது வந்த நபர்களில் மூன்றில் ஒருவர் புகையிலைப் பழக்கத்தோடு உள்ளார்.

* இந்தியாவில் புகைபிடிக்க ஆரம்பிக்கும் ஒருவரின் சராசரி வயது 17.8. கவலை தரும் இன்னொரு விஷயம், 15 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்களில் 14.6 சதவிகிதம் பேருக்கு புகைப்பழக்கம் உள்ளது.

* இந்தியாவில் ஆண் புற்றுநோயாளிகளில் 40 முதல் 45 சதவீதம் பேர், புகையிலை காரணமாக புற்றுநோய்த் தாக்குதலுக்கு ஆளானவர்கள். பெண் புற்றுநோயாளிகளில் இது 15 முதல் 20 சதவீதம்.

* இந்தியாவில் புகையிலை காரணமாக ஒரு நிமிடத்துக்கு இரண்டு பேர் மரணமடைகிறார்கள்.

* புகை பிடிக்கும் பலரும் ‘உடலை இவ்வளவு கெடுத்துக்கொண்டோம். இனி புகையைக் கைவிட்டு என்ன ஆகப் போகிறது’ என நினைக்கிறார்கள். ஆனால், புகையை மறந்த முதல் நாளிலிருந்தே உடல் தனக்குள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றி புத்துணர்வு பெறத்
துவங்குகிறது!

- அகஸ்டஸ்