மோகன்லால் மாதிரி நடிகரை நான் சந்தித்ததே இல்லை!
சமுத்திரக்கனி செம!
‘‘வணக்கம் சகோ... ‘அப்பா’ ரெடி. தணிக்கைக் குழுவினர் பாத்துட்டு, ‘அவ்வளவு அருமையா இருக்கு. சமீபத்தில் பார்த்த நிறைவான படமா இதைச் சொல்லலாம். இப்படிப் படங்கள் கொடுத்தா எங்களுக்கு வேலை அதிகம் இருக்காது. சந்தோஷமா, கத்திரி வைக்காம படத்தைக் கொடுத்திடலாம்’னு சொன்னாங்க. சந்தோஷமா இருக்கேன்!’’ - மனதில் இருப்பதைப் பேசிவிடுகிறார் சமுத்திரக்கனி. இன்றைக்கு இவர்தான் ஸ்பெஷல். தரமான படங்களைத் தயாரிக்கிறார்... அல்லது, அதில் இருக்கிறார். புத்தகங்கள் நிறைந்திருக்கிற புது அலுவலகத்தில் நடந்தது தங்குதடையில்லாத உரையாடல்.
‘‘நடிப்புக்கு தேசிய விருது, எங்கே பார்த்தாலும் பாராட்டு... ஆனா, நீங்க அடுத்த பட ரிலீஸ் ‘அப்பா’விற்கு ரெடியாகிட்டீங்க..?’’ ‘‘எனக்குச் சொல்ல வேண்டியது நிறைய இருக்கு. அதில் இருந்து பின்வாங்க முடியாது. ‘அப்பா’, குழந்தைகளை வைத்து எடுத்து, பெற்றோர்களும் பார்க்க வேண்டிய படம். நாம குழந்தைகளை மாற்ற நினைக்கிறோம். ஆனா இங்க மாற்றப்பட வேண்டியது பெற்றோரும் கல்வி முறையும்தான். குழந்தைகள் சரியாத்தான் இருக்காங்க.
நாம், நம்மளையே அறிவாளிகளா நினைச்சுக்கிட்டு அவர்களின் இலக்கை அடைய விடாமல் தடுக்கிறோம். குழந்தைகள் பார்த்தால் இதைக் கொண்டாடு வாங்க. அவங்க உலகத்தை அப்படியே எடுத்து வச்சிருக்கேன். 14 வயதில் அவங்களுக்கு ஒரு மாற்றம் வரும். அதை பெற்றோர் முதலில் காமமா பார்த்து தப்பா நினைப்பாங்க. அது இல்லை அது. ஒரு ஆறு மாச பேப்பரைத் திறந்து படிச்சிருந்தா, கண்ணில் படக்கூடிய நிகழ்வுகள்தான். எங்கோ தூரத்தில் உட்கார்ந்து அரும்பாடுபட்டு எழுதின கதையெல்லாம் இல்லை. அதை திரைக்கதையாக்கினது மட்டுமே என் வேலை. சிரிச்சிட்டுப் பார்க்கும்போதே, சிந்திக்கவும் வைக்கும்!’’
‘‘ ‘அப்பா’ன்னா... எப்படி வரணும் உள்ளே?’’ ‘‘தகப்பன்தான் ஒவ்வொருத்தருக்கும் ஹீரோ. மூணு விதமான தகப்பன்களை இதில் காட்டியிருக்கேன். ஒரு தகப்பன் குழந்தைகளின் கையைப் பிடிச்சுக்கிட்டே போய், நடந்து, அவங்க மனசைப் புரிஞ்சு, அவங்க ஆற்றலை அறிஞ்சு இருப்பான். இன்னொருத்தன் குழந்தை பிறக்கிறதுக்கு முன்னாடியே அது ஆண் குழந்தையா இருந்தா எப்படி இருக்கணும், பெண் குழந்தையா எப்படி இருக்கணும், எப்படி வளர்க்கணும், படிக்க வைக்கணும், வெளிநாட்டுக் கல்வி, பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும், எவ்வளவு வரதட்சணை வாங்கணும்...
இப்படியெல்லாம் யோசிக்கிறவன். இன்னொருத்தன் வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் கடந்து போகக் கூடியவன். இந்தியாவுக்கு 1947லேயே பிரிட்டிஷ்காரன் சுதந்திரம் கொடுத்திட்டு போயிட்டான். ஆனால், இங்கே பல வீடுகள்ல அப்பாவுக்கும், மகனுக்கும் சுதந்திரப் போராட்டம் நடந்துக்கிட்டே இருக்கு. ‘ரெண்டு வயசுல உன் விரலைப் பிடிச்சுக்கிட்டு நடந்தேன்தான். ஆனா, இத்தனை வயசுலயும் நீ என் கையை விடாம வச்சிருக்கியே நியாயமா?’னு ஆதங்கப்படுறாங்க பசங்க.
இங்கே எந்தத் தகப்பனும் பையன்கிட்ட ‘உன் பிரச்னை என்னடா’னு கேக்கறது கிடையாது. 5 நிமிஷம் அவனோட சேர்ந்து இருக்கிறது கிடையாது. தோளில் கையைப் போட்டால் பெட்டிப் பாம்பாகி காலைச் சுத்திச் சுத்தி வருவான். அதைக் கூட செய்யிறது கிடையாது. இதில் நாலு தேசிய விருது வாங்கினவங்க இருக்காங்க. தம்பி ராமையா, ‘காக்கா முட்டை’ விக்னேஷ், நான், இளையராஜா. நாலு பேரும் அப்படியே மனசைக் கொண்டு போய் செலுத்தியிருக்கோம்!’’
‘‘இளையராஜாவோட முதல் தடவையாக...’’ ‘‘அப்படியே கோயிலுக்குப் போன மாதிரியிருந்தது. காலை 7 மணிக்கு குளிச்சிட்டு சுத்தபத்தமா போனால் திவ்யமா இசை பெருகி வரும். நாம் எளியவங்க. ரெண்டு கையாலதான் அள்ளிப் பருகலாம். இசையா துள்ளித் துள்ளி ஓடுகிற நதி எங்கே போய்ச் சேருமோ... யாருக்குப் பயன்படுமோ..!’’
‘‘பெரிய மரியாதை கிடைத்துவிட்டதே... இனி நடிப்புதானே?’’ ‘‘இப்பக்கூட கைவசம் 5 கதைகள் இருக்கு. ஜெயம் ரவி, நண்பன் சசிக்கு பக்குவமா ரெண்டு கதைகள் இருக்கு. பிறந்த ஒவ்வொருத்தனும் பயணப்படுறது இறப்பை நோக்கித்தான். அதற்கு முன்னாடி நாம் எப்படி வந்தோம், என்ன செய்தோம் என்பதற்கான கூடுதல் பதிவுதான் இது. விருது வாங்கிட்டோம்னு அங்கேயே திகைச்சு நிற்கிறது கிடையாது. கொஞ்சம் ரசிச்சிட்டு அடுத்த பயணத்திற்குப் போக வேண்டியதுதான். இதே ‘அப்பா’வை தெலுங்கில், இந்தியில் பண்ண பேச்சுவார்த்தை நடக்குது. கனிஞ்சு வருகிற மாதிரி தெரியுது. இப்பவும் மனசைப் பிடிக்கிற மாதிரி, ‘விடவே கூடாதுடா’னு சில கேரக்டர்கள் நம்மளைக் கூப்பிடும்... அப்படியிருந்தால் உடனே நடிப்புக்கு போவேன்!’’
‘‘மலையாளத்தில் மோகன்லாலோட நடிக்கிறீங்க?’’ ‘‘அவருக்கு என்னையும் எனக்கு அவரையும் பிடிக்கும். போனால் அப்படியே கட்டிப் பிடிச்சிட்டு வரவேற்பார். ‘விசாரணை’ படம் பார்த்துட்டுதான் பிரியதர்ஷன் கூப்பிட்டார். ‘கனி! ரெண்டு நாளா தூங்க முடியல... இப்படிப் பண்ணிட்டீங்களே’னு பாராட்டிட்டு இந்தக் கதையைச் சொன்னார். அதுதான் ‘ஒப்பம்’. சொல்லிட்டு இருக்கும்போதே ‘நீங்க, லால் எல்லாம் இருக்கீங்க... போதாதா?’னு சொல்லிட்டு உடனே கிளம்பிட்டேன். ‘இரு... இரு கனி’னு இழுத்துப் பிடிச்சு முழுக்கதையையும் சொன்னார். பிரமாதமான படம்.
நிச்சயமா எல்லா மொழியிலும் ஒரு ரவுண்ட் வரும். ‘எந்த மொழியில் பண்ணாலும் என்னைக் கூப்பிடுங்க’னு லால்கிட்ட சொல்லியிருக்கேன். அவர்கூட நடிச்சா அப்படிப் பாதுகாப்பா இருக்கலாம். இப்படி ஒரு நடிகரை நான் சந்தித்ததே கிடையாது. நாம் நடிக்கிறதை தனியா நின்னு ரசிப்பார். அவர் நம்மை ரசிக்கிறதெல்லாம் சாமான்யப்பட்ட விஷயமா! ஏதோ கேரளக்கரையும் நம்மளைக் கொண்டாடுவது நல்லாதானே இருக்கு!’’ - புன்னகைக்கிறார் கனி.
- நா.கதிர்வேலன்
|