எஸ். ராமகிருஷ்ணன் IN Download மனசு



மீட்க விரும்பும் இழப்பு...

எனது பால்ய காலம் இனிமையானது அல்ல. பதிலாக, தனிமை நிரம்பியது. எல்லோரும் விளையாடிக்கொண்டிருந்தால், நான் விளையாட்டை வேடிக்கை பார்ப்பேன். சிறு வயதில் ‘என்னை யாரும் புரிந்துகொள்ளவில்லையே’ என்ற ஏக்கம் எனக்கு உண்டு. எனக்கு துணை தேவைப்பட்டது; கிடைக்கவே இல்லை. இன்று வரை என் நண்பர்களாக இருக்கிறவர்கள் ஒன்று என்னை விட மூத்தவர்கள் அல்லது ரொம்ப இளையவர்கள். என் வயதில் எனக்கு நண்பர்களே கிடையாது.

ஆசைப்பட்டு நடக்காத விஷயம்...

நிறைய. பள்ளி, கல்லூரி நாட்களில் ஒரு காமிக்ஸ் புத்தகம் எழுத வேண்டும் என ஆசைப்பட்டேன். காமிக்ஸ் படங்களை எடுத்து வெட்டி, கதையும் எழுதி, தலைப்பு தந்து அதை நூலகத்தில் போட்டிருக்கிறேன். இப்படியொரு எழுத்தாளனாக ஆன பின்னாலும் நான் ஏனோ காமிக்ஸ் புத்தகத்தை எழுதவேயில்லை.



அறம் எனப்படுவது...

நன்மை, தீமை என இரண்டு தான் உண்டு. அடிப்படை நன்மை என்பது, உன் உடலைக் கொண்டும், மொழியைக் கொண்டும் யாரையும் துன்புறுத்த மாட்டேன் என்பது. நன்மையைக் கடைப்பிடிப்பதில் ஏதாவது அடிப்படை இருக்கிறது என்றால், அது வள்ளுவரின் வாய்மையில் இருக்கிறது. உங்கள் சுயநலத்தை பிரதானமாகக் கருதினால் தீமையின் பக்கமே போக வழியிருக்கிறது. நல்லவனாக இருக்கத்தான் கற்றுத் தர வேண்டியிருக்கிறது; தீயவனாக முயற்சிக்கவே வேண்டாம். தானாக வாய்த்துவிடும். தீமைக்கே ஒரு வசீகரம் இருக்கிறது. நன்மை செய்வதன் மூலம் அன்பைப் பரிமாறுகிறார்கள். ரொம்பப் பழைய, இன்னும் வாழ்க்கைக்குத் தேவையான விஷயம் என்றால், அது அன்புதான். அன்பை உடையவனே மனிதன். வெறுப்பை உமிழ்வதே தீமை. உலகளாவிய சிறு நன்மை எனில், அது தீமையை மறுப்பதுதான்.

இதுவரை கற்ற பாடம்...

எதைச் செய்தாலும் 100 சதவீத ஈடுபாட்டோடு செய்ய வேண்டும். கையில் எழுதுவதை மறக்க, கம்ப்யூட்டருக்குத் திரும்ப யாரையும் நான் சார்ந்திருக்கவில்லை. நானே படித்து, ஒரு கம்ப்யூட்டரை வாங்கி, தமிழில் டைப் அடிப்பதற்கான வசதி தெரிந்து, தினமும் எட்டு மணி நேரம் அடித்து கற்றுக்கொண்டேன். 100 சதவீத ஈடுபாடு இல்லாமல் எதையும் நான் செய்யமாட்டேன். அப்படிச் செய்தால்தான் காரியங்கள் நடக்கும் என நம்புகிறேன். ‘வேலைதான் வாழ்க்கை’ என நினைக்கிறேன். நான் ஓய்வு எடுத்துக்கொண்டதே இல்லை. அப்படி ஓய்வு என்றால் குறைவாகப் படித்து, குறைவாக எழுதுவதுதான். எதுவும் செய்யாமல் ஒரு நாளும் நான் இருந்ததில்லை. குறைந்தபட்சம் 5 பக்கங்கள் எழுதி, பத்து பக்கம் படித்து அந்த நாளை அர்த்தமுள்ளதாக்கிவிடுவேன்!

பயணங்கள்...

பயணமும், சுற்றுலாவும் ஒன்றல்ல. சுற்றுலா கேளிக்கைதான். பயணம் நோக்கம் கருதிச் செல்வது. நான் பயணத்தின்போது அனுபவத்தை அடைகிறேன். முதல் அனுபவமாக ரயில் ஏறும்போது நம் அடையாளம் அற்றுப் போகிறது. ‘ஆயிரம் பயணிகளில் நானும் ஒருவன்’ என்ற நிலை வந்துவிடுகிறது. புதிய வாழ்க்கையை, மாற்று இடத்தைப் பார்க்கும்போது மனசு மாற ஆரம்பிக்கிறது. இது நம்மை நாமே புதுப்பித்துக்கொள்கிற வித்தை. நம் ஆளுமையை உருவாக்கிக்கொள்ள பயணம் தேவைப்படுகிறது. பருவ காலத்தை முன்வைத்தே நான் பயணம் மேற்கொள்வேன். ஒவ்வொருவரும் இந்தியாவை குறுக்கு வெட்டாக ஒரு தடவையாவது பார்த்தாக வேண்டும். வேறு நாடுகள் என்றால் விசா, அனுமதி என ஏராளமான பணம் செலவாகும்.



இந்தியாவில் ஒரு தடவை குறுக்கும் நெடுக்குமாய் போனால் உங்கள் பார்வை மாறும். வரலாறு புரியும். நீங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டு பயணம் செய்கிறவராக இருந்தாலும் போகலாம். ‘எனக்கு சாப்பிடத்தான் பிடிக்கும்’ என்றாலும் அதற்காகப் போகலாம். ஒரு சின்ன நத்தை கூட தன் இடத்தை விட்டு நகர்கிறது. சின்னஞ்சிறிய குருவி கூட ஒரு இடத்தில் நிற்கமாட்டேன் என்கிறது. நாம் ஒரு இடத்தை விட்டு நகர்வதென்றால் காசு, காரணம் எனத் திட்டமிட வேண்டியிருக்கிறது. தயவுசெய்து புறப்பட்ட பிறகு வீட்டை மறந்துவிடுங்கள். நத்தை மாதிரி வீட்டையும் சுமந்து போனால் புண்ணியமே இல்லை. வீட்டில் அடைந்து கிடக்கிற பெண்கள் வெளியே வர வேண்டும். நதிகளையும், மலைகளையும் அவர்களிடம் காட்ட வேண்டும். பயணம் உங்களைப் புதுப்பிக்கிறது.

லைஃப்லைன்...

நான் எப்போதும் சந்தோஷங்களை விட கண்ணீரையே விரும்புகிறேன். மனிதர்கள் சந்தோஷத்தை விடவும் கண்ணீரில்தான் ஆறுதல் அடைந்திருக்கிறார்கள். வாழ்வின் துயரங்களைப் புரிந்துகொள்ளவும், அதிலிருந்து மக்களை மீட்கவும் நான் எழுதுகிறேன். நான் பெரிய கொண்டாட்டங்களை விரும்பியதே கிடையாது. யாராவது தோற்றுப் போய்விட்டால், அவர்கள் பக்கத்தில் நான் இருப்பேன். தோற்றுப்போன பலருக்கும் ஆறுதலாக இருந்திருக்கிறேன். அவர்களைத் துயரத்தில் இருந்து மீட்ட பிறகு நான் வந்துவிடுவேன். அதற்குப் பிறகு அவர்களுக்கு யாரும் தேவையில்லை!

ஆசான்...

எஸ்.ஏ.பெருமாள். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்தவர். பள்ளி, கல்லூரி காலத்திலிருந்து என்னை உருவாக்கி வழி நடத்தியவர். என் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் அவரிடம் பகிர்கிறேன். என் திருமணத்தை நடத்தி வைத்து, என் சொந்த வீட்டைத் திறந்து வைத்த வரும் அவரே. என் பிள்ளைகள் அவரை ‘தாத்தா’ என்றே அழைக்கிறார்கள். மதுரைக்குச் சென்றால் அவர்கள் போகப் பிரியப்படுகிற இடம், அவர் வீடுதான். என் எழுத்துக்கள் அனைத்தையும் வாசித்தவர். கோணங்கி, பாரதி கிருஷ்ணகுமார், கே.ஏ.குணசேகரன் எனப் பலரை அடையாளம் கண்டது அவரே. ஒரு தந்தையைப் போலவே அவர் உறவைப் பாதுகாக்கிறேன்.

ஆண் - பெண் உறவு...

ஆண் - பெண் உறவு புரிந்துகொள்ளப்படாமலேயே இருக்கிறது. பெண்கள் ஒடுக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் நடந்துகொண்டே இருக்கிறது. ஆனால், பெண்களின் புரிந்துகொள்ளும் திறனும், தைரியமும், ஒரு சூழலுக்கு அவர்கள் பொருந்துவதும் ஆச்சரியப்படுத்துகிறது. டால்ஸ்டாய் தன் வயோதிகத்தில் தன் மனைவியை விட்டுப் போய்விடுகிறார். ‘எவ்வளவு வருடம் கூட இருந்தேன், எத்தனைக் குழந்தைகளைப் பெற்றிருக்கிறேன், எவ்வளவு நெருக்கமாக இருந்திருக்கிறேன்’ என்று மனம் வருந்துகிறார் அவர் மனைவி. என் தாத்தாவிடம் என் பாட்டி பேசவே முடியாது. என் அம்மா பேசவும், சண்டை போடவும் முடியும். நான் மனைவியோடு எல்லா உணர்வுகளையும் பகிர்ந்து வாழ்கிறேன்.



மிகச் சிறந்த நண்பன்...

விவேகானந்தன். அவன் என்ன செய்கிறான் என்பதை இங்கிருந்தே என்னால் சொல்ல முடியும். கல்லூரி நாட்களில் அவன் வீட்டிலிருந்து எழுந்து காலேஜுக்குப் போவேன். அவன் வீட்டிற்கும், என் வீட்டிற்கும் எனக்கு வித்தியாசம் தெரியாது. நான் ஊருக்குப் போனால் என்னை ரயிலேற்றி, கை அசைத்துத்தான் திரும்புவான். நாங்கள் தினமும் பேசிக்கொள்ள மாட்டோம். அவனுக்கு நான் முக்கியம்... எழுத்தாளர் அல்ல. விளையாட்டுக்காவது ‘ஏதாவது வாங்கிக் கொடுடா’ என அவன்கிட்டேதான் கேட்பேன். ‘அவன் என்கிட்ட இருக்கணும்’ என நான் விரும்பினாலே அடுத்த நிமிஷம் அவன் வந்து என் பக்கத்தில் நிற்பான்.

பாதித்த விஷயம்...

இந்த சங்கர். அந்தச் சிறு துண்டுப் படத்தை நானும் பார்த்தேன். கல்வி தோல்வி அடையும்போது, சாதி மேலோங்குகிறது. இப்போது கல்வியை நம்ப முடியவில்லை. ‘படித்து வாங்கியதா? ஆளைப் பிடித்து வாங்கியதா?’ எனக் கண்டுகொள்ள முடியவில்லை. படித்தவன் செய்கிற சூதும் வாதுமே எல்லாவற்றுக்கும் காரணம். இப்படி சாதிப் பெருமையைத் தூக்கிப் பிடிக்கும்போது நம் பிள்ளைகளுக்கு என்னதான் நடக்கும்? சாதிப் பெருமிதம் பொங்கி வழிவதை என்ன செய்யப் போகிறோம்? இதற்கு உண்மையாகவே எதிர்ப்பு இருக்கிறது. ஆனால், ஒரே குரலாக இல்லை. அது ஒலிக்க வேண்டும்.

படித்த புத்தகம்...

சபா நக்வி எழுதிய ‘வாழும் நல்லிணக்கம்’ புத்தகம். காலச்சுவடு வெளியீடு. இந்துக்களும், முஸ்லிம்களும் எப்படி நம் நாட்டில் ஒன்றுகலந்திருக்கிறார்கள் என ஆய்வு செய்து எழுதிய புத்தகம். பயண நூல். வியப்பூட்டக்கூடிய தகவல்கள். வங்காளத்தையும், ஒடிஷாவையும் ஒட்டியிருக்கிற கிராமங்களில் இரண்டு மதத்தினரும் சேர்ந்து வாழ்கிறார்கள். ஒரே ஆள் இந்து மதத்திலும், இஸ்லாமிலும் இருக்கிறார். அவர்களுக்கு இந்து பெயரும், முஸ்லிம் பெயரும் இருக்கிறது. பஞ்சாங்கம் பார்த்து கல்யாணம் செய்கிறார்கள். ஹாஜி வந்து கல்யாணம் நடத்துகிறார். முக்காடு போட்டு குங்குமம் வைக்கிறார்கள். ராமர் ஓவியங்களை இஸ்லாமியர் வரைகிறார். பூரி ஜகந்நாதரைப் பற்றி 2000 பாடல்கள் எழுதி, பாடி, புகழ்பெறுகிறார் ஒரு முஸ்லிம். தர்கா இருக்கிற இடத்தில் பூரி ஜகந்நாதரின் தேர் வந்து நின்று மரியாதை செலுத்திவிட்டுப் போகிறது. மிக முக்கியமான புத்தகம்!

குடும்பம்...

சந்திரபிரபா... என் காதல் மனைவி. திருமணம் செய்துகொண்டால் எல்லா உறவுகளையும் துடைத்தெறிந்துவிட வேண்டும் என்பதை விலக்கினோம். திருமணத்திற்குப் பிறகு அவரவர் விரும்பியபடியே இருக்கலாம்... இருவரின் விருப்பங்களையும் பரஸ்பரம் பகிர்ந்துகொள்ள முடிவெடுத்தோம். குழந்தைகளை அவர்களது விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன். உடை தேர்வு கூட அவர்களுடையதே. முழு சமர்ப்பணம், முழு தன்னிறைவு.

- நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்