ரகசிய வீதிகள்



அட்டகாசத் தொடர்

அதிகாலை சூரியன் அவர்கள் தங்கியிருந்த லாட்ஜைத் தொட்டபோதே விஜய் குளித்து முடித்து, தயாராகிவிட்டான். கேமரா வைத் துடைத்து, தேவையான லென்ஸ்கள் இருக்கின்றனவா என்று உறுதி செய்துகொண்டான். உதவியாளன் பன்னீரையும், ஓட்டுநர் ப்ரகாஷையும் தயாராகச் சொல்லிவிட்டு, கல்யாணி இருந்த அறைக் கதவைத் தட்டினான்.

கதவைத் திறந்த கல்யாணியைப் பார்த்ததும், அதிர்ந்தான். வழக்கமான உற்சாகமின்றி அவள் களைப்புடன் காணப்பட்டாள். கண்கள் இடுங்கியிருந்தன. “கல்லு... என்னாச்சு? நான் இல்லாம தனியா படுத்ததுனால சரியா தூங்கலையா..?” என்று அவளுக்கு உற்சாகமூட்ட முனைந்தான்.



கல்யாணி களைப்புடன் ஒரு புன்னகையை உதிர்த்தாள். “இல்லடா... நைட்டு சரியான தூக்கமில்ல! காய்ச்சல் வந்த மாதிரி உடம்பு வலிக்குது...” “ஷூட்டை கேன்ஸல் பண்ணிருவோமா..?” “சீச்சீ... முதல் எபிசோட்லயே சொதப்பினோம்னா, அசிங்கமாயிரும். பதினஞ்சு நிமிஷம் கொடு... ரெடியாகி வர்றேன்!” என்று கதவைச் சாத்திக்கொண்டாள். முப்பத்தைந்து நிமிடங்களில் கல்யாணி கதவைத் திறந்தாள். குளித்து முடித்து, பளிச்சென ஒப்பனை செய்து, பாசிப் பச்சையில் பட்டுடுத்தி, கூந்தலில் மல்லிகைச் சரம் வைத்து, தேவதை போல் நின்றாள்.
 
விஜய் திருஷ்டி கழிப்பதுபோல் காற்றில் கையோட்டி, “அட... அட... அட... உனக்கு மட்டும் ஒரு பாய் ஃப்ரெண்ட் இருந்தா, இப்படிப் பார்த்ததும், உன் கால் கட்டை விரலை நக்கிட்டுக் கெடக்கச் சொன்னாகூட கெடப்பான்...” என்றான். “எனக்கு பாய் ஃப்ரெண்ட் கெடையாதுனு யார் உனக்குச் சொன்னது..?” “என்னைத் தவிர வேற பயல்கூட உனக்கு ஃப்ரெண்டா  இருக்கானா..?” “டேய், ஊர்ல இருக்கற பொண்ணுங்க எல்லாம் உன்னையே பாய் ஃப்ரெண்டா வெச்சுப்பாங்கன்னு ஜொள்ளு வுடாத...”

“அது யாருப்பா உன் ஆளு..?” “நேரம் வரும்போது சொல்றேன். இப்ப கோயிலுக்குப் போகணும்... கிளம்பு!” அவர்கள் கோயிலுக்குப் போய்ச் சேர்ந்தபோது, அரவமணிநல்லூர் ஆலயத்தின் கோபுரத்துக்கு இளம் சூரியன் தனி வெளிச்சம் பாய்ச்சியிருந்தது. ஆலயத்தை ஒட்டி நெளிந்துகொண்டிருந்த பெண்ணையாற்றின் நீரலைகள் கோயிலின் தலைகீழ் பிம்பத்தை மிருதுவாகத் தாலாட்டிக்கொண்டிருந்தன.

கேமராவில் முகம் வரும் என்பதால், கணேச குருக்கள் மெலிதாகப் பவுடர் பூசி, நெற்றியை அடைத்து, பட்டையாக விபூதி பூசியிருந்தார்.
“மூலவரைத் தவிர வேற எதை வேணும்னாலும் படம் பிடிச்சுக்கோங்க...” என்று அனுமதி தந்திருந்தார். “இங்க நடராஜருக்கு அப்படி என்ன சிறப்பு..? அதைப் பத்திச் சொல்லுங்க...” என்று சொல்லிவிட்டு, ‘பேசுங்கள்’ என்று கல்யாணி சைகை செய்ய, கணேச குருக்கள் கேமராவைப் பார்த்து, பற்கள் தெரிய, புன்னகையை விரிவாக்கினார். வெவ்வேறு பின்னணிகளில் நின்று, கோயில் பற்றி விவரித்தார்.
 
“இந்தக் கோயில்ல இதோ இந்த நடராஜர் ரொம்ப ரொம்ப விசேஷம். பஞ்சலோகத்துல பண்ண சிலை. ஒவ்வொரு விரல் நகம்கூட தத்ரூபமாத் தெரியறது பாருங்கோ. பிரிச்சுப் போட்ட சடைமுடியை எப்படி வரிவரியா செதுக்கியிருக்கா, பாருங்கோ... பிரிட்டிஷ் காலத்துல எத்தனையோ கோயில்கள்ல இருந்த அற்புதமான சிலைகளையெல்லாம் அவா தங்களோட ஊருக்குத் தூக்கிண்டு போயிட்டா. இதையும் தூக்கிடணும்னு தொரை திட்டம் போட்டிருந்தார்.

விஷயம் தெரிஞ்சதும், எங்க கொள்ளுத்தாத்தா இதை பத்திரமா கொண்டுபோய் நெல்லு குதிருக்குள்ள ஒளிச்சு வெச்சுட்டாரு. கடேசி வரைக்கும் கண்டுபிடிக்க முடியாம தொரை திரும்பிப் போயிட்டார். சுதந்திரம் கெடைச்சதும்தான் நடராஜர் மறுபடி வெளிய வந்தார். அப்படிலாம் போராடிக் காப்பாத்தின அற்புதக் கோயில் இது. ஆனா, இப்போ சரியான பராமரிப்பு இல்லாம சன்னிதிலாம் இருண்டு கெடக்கு...”

“இங்க ஒரு கதவு தெரியறதே... அது வழியா பாதாளக் குகை ஒண்ணு இருக்கு. நேரா அரண்மனைக்குப் போகும்னு சொல்லுவா! எதிரி படையெடுத்து வந்தா, மகாராணி தலைமைல தேசத்துல இருக்கற பொம்பளைங்க எல்லாரையும் இங்க பாதுகாப்பா இருக்கச் சொல்வாளாம். பல நூறு வருஷமா இது மூடியே கிடக்கு. இப்ப திறந்தா, பாம்பும், தேளும்தான் உள்ள இருக்கும்னு நினைக்கறேன்...”

இன்னும் சில விவரங்களை தான் சொல்வதற்காக அவரிடம் கேட்டு, கல்யாணி குறித்துக்கொண்டாள். இன்னோவா காரின் உச்சியில் ஏறி, அங்கு கேமராவை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான் விஜய். அந்த உயரத்திலிருந்து பார்த்தபோது, வர்ணம் பூசி பல வருடங்கள் ஆகியிருந்த கோபுரம் சற்றே களையிழந்திருந்தாலும், பின்னணியில் முழங்கால் ஆழத்துக்கு சலசலத்துக்கொண்டிருந்த பெண்ணையாற்றில் மிதந்த அதன் பிம்பம் அற்புதமாக இருந்தது.

“கல்லு! பெண்ணையாறை முன்னால வெச்சு, கோயிலைப் பின்னணில வெச்சு, அக்கரைலேர்ந்து எடுத்தா நல்லா இருக்காது..?” “சூப்பரா இருக்கும்டா... போலாம்!” கார் அங்கிருந்து புறப்பட்டு, பாலத்தில் ஏறி மறுகரைக்கு வந்தது. கேமரா வழியே பார்த்து, விஜய் உதடுகளைப் பிதுக்கினான். “வெயில் உச்சிக்கு வந்திருச்சு. சாயந்திரம் அஞ்சு மணி போல வந்தா நல்லா இருக்கும்...”

“நானும் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்...” என்றாள் கல்யாணி. மதிய உணவை முடித்து, சற்று ஓய்வெடுத்துவிட்டு, அவர்கள் பெண்ணையாற்றின் மறுகரைக்கு வந்து காரை நிறுத்தியபோது, சூரியன் மேற்கில் இறங்கியிருந்தது. விஜய் கேமராவை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தினான். கல்யாணி கரையோரத்தில் நின்று மைக்கைப் பிடித்தாள். “இல்ல கல்லு... தண்ணி ரொம்ப ஆழமில்லியே, அதுல இறங்கி நில்லு! நதிக்கு நடுவுல நின்னு பேசற மாதிரி பார்க்கறதுக்கு நல்லா இருக்கும்...”

“நல்லதா ஒரு பட்டுப் புடவை கட்டியிருக்கேனில்ல..? உனக்கு அதை நனைக்கணும்...” என்று முனகிவிட்டு, கல்யாணி நீரில் இறங்கினாள். “பன்னீரு! மூஞ்சில நிழல் விழுது பார்... தெர்மகோலை இப்படிப் பிடி..!” ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, விஜய் கேமரா வழியே பார்த்தான். தெளிவான நீல வானப் பின்னணி. ஆற்றோரம் வளர்ந்திருந்த பச்சை மரங்கள். அவற்றில் பூத்திருந்த வண்ண மலர்கள். மேற்கில் சரிந்திருந்த சூரியனின் வெளிச்சத்தில் கோயிலின் கோபுரம் அற்புதமாகத் தெரிந்தது. திருப்தியுடன் ‘பேசு’ என சைகை செய்தான். கல்யாணி பளீரென்ற குரலில் துவங்கினாள்.

“அரவமணி என்ற பெயருக்கு என்ன அர்த்தம்..? அரவம் என்றால், பாம்பு. ‘அரவம், அணி, நல்லூர்’ என்று வார்த்தைகளைப் பிரித்தால், பாம்பை அணிந்த இறைவன் சிவனைக் குறிப்பிடுவதாகக் கொள்ளலாம். இந்தக் கோயிலை எழுப்பிய அரசன், மூலவருக்கு ஒரு கிரீடம் செய்திருந்தான் என்றும், அதில் கிடைத்தற்கரிய நாகரத்தினக் கல் பதிக்கப்பட்டிருந்தது என்றும் இன்னொரு செய்தி சொல்கிறது. அரவத்தின் மணியான நாகரத்தினத்தைக்  குறிப்பிடுவதால் இப்பெயர் வந்தது என்று சொல்வோரும் உள்ளனர்...”

மதியம் சாப்பிட்ட கோழி பிரியாணி வயிற்றை நிறைத்திருக்க, டிரைவர் ப்ரகாஷின் கண்கள் செருகின. காரின் முன் இருக்கையை நன்றாகப் பின்னுக்குத் தள்ளிச் சரித்து, சாய்ந்துகொண்டார். சில நிமிடங்களில் அவரிடமிருந்து மெலிதான குறட்டை சத்தம் வரத் தொடங்கியது. “தேவர்களுக்குப் பரிமாறுவதற்காக எடுத்துச் சென்றபோது, அமிர்தம் சில துளிகள் இங்கு சிந்தியதால், இந்த ஆலயத்தின் தீர்த்தத்தில் நீராடினால், நீண்ட ஆயுள் கிட்டும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

பெண்ணையாற்றின் வடகரையில் கம்பீரமாக தலை நிமிர்த்தி நிற்கும் இந்த அமிர்தலிங்கேஸ்வரர் கோயில் பல சரித்திரச் சிறப்புகள் மட்டுமல்ல, புராணச் சிறப்புகளும் கொண்டது. ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக் கோயில்களாக ஐந்து அறைகள் உள்ளன. கோயிலுக்கு உள்ளே அமைந்துள்ளது, பாஞ்சாலி குளம். பஞ்ச பாண்டவர் வனவாசத்தின்போது இங்கு தங்கியிருந்ததாகவும், அப்போது திரௌபதி நீராடுவதற்காக இக்குளத்தை பீமன் வெட்டியதாகவும் சொல்லப்படுகிறது...”

திடீரென்றுதான் விஜய் அவர்களை கவனித்தான். கேமராவிலிருந்து கண்ணை எடுத்து, கல்யாணிக்குப் பின்னால் பார்த்தான். அக்கரையில் கோயிலுக்கு வெளியே கணேச குருக்கள் தன் உடலைத் தூக்கிக்கொண்டு ஓடி வந்துகொண்டிருந்தார். கேமராவை ஜூம் செய்து பார்த்தான். அவர் கண்களில் பயம் தெரிந்தது. பின்னாலேயே முகத்தைத் துணியால் மூடிய இருவர் அவரைத் துரத்துவது தெரிந்தது. “வனவாசம் முடிந்து, கடும் போருக்குப் பின் நாட்டைத் திரும்பப் பெற்ற பாண்டவர்கள், பட்டாபிஷேகம் முடிந்ததும் மீண்டும் இங்கு வந்து, அமிர்தலிங்கேஸ்வரரை வழிபட்டுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது. 

பதவி இழந்தவர்கள், சொத்து சுகங்களை இழந்தவர்கள் இங்கு வந்து வழிபட்டால், பாண்டவர்களைப் போல் இழந்ததை இறைவன் அருளால் மீண்டும் மீட்கலாம் என்று நம்பப்படுகிறது...” என்று கல்யாணி விளக்கிக்கொண்டிருக்கும்போதே, கணேச குருக்களை எட்டிப் பிடித்தவன், தன் கையிலிருந்த கத்தியை வீசினான். அவர் அப்படியே துவண்டு தண்ணீரில் விழுந்தார். “கல்யாணி... ஓடு! காருக்கு ஓடு..!” என்று விஜய் கத்தினான்.

கல்யாணியின் முகத்தில் வெளிச்சம் சரியாக விழுவதற்காக, தெர்மாகோலைச் சற்று சாய்த்துப் பிடித்திருந்த உதவியாளன் பன்னீர், என்ன நடக்கிறது என்று புரியாமல் தடுமாற... “நீயும் ஓடுடா!” என்றான் விஜய், கேமராவிலிருந்து கண்களை எடுக்காமல். கணேச குருக்களை வெட்டியவன் நிமிர்ந்தான். அங்கிருந்தே மறுகரையில் இருந்த கேமராவைப் பார்த்தான். “டேய், எவனோ படம் பிடிக்கிறான் பாரு...” என்று கத்தியதும், அவர்கள் இருவரும் தண்ணீரில் இறங்கி, ‘தளப்... தளப்...’ என்று ஒலியெழுப்பியவாறு ஓடி வரலாயினர். அந்த ஒலி கேட்டு கல்யாணி திரும்பிப் பார்த்தாள். என்ன நடக்கிறது என்பதைப் புரிந்து, அங்கிருந்து காரை நோக்கி தண்ணீரில் ஓட ஆரம்பித்தாள்.

விஜய் கேமராவுடன் காருக்கு ஓடி, “ப்ரகாஷ், எழுந்திருங்க...” என்று கதவை பலமாகத் தட்டினான். தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்து, எங்கிருக்கிறோம் என்று ப்ரகாஷ் உணர்ந்தார். அதிகமாகப் பழக்கமில்லாத புடவையும், தண்ணீருக்கடியில் மணல் மடியில் சேகரமாகி, பாதங்களுக்கடியில் உருளும் சிறு கற்களுமாகச் சேர்ந்து, கல்யாணியைக் கவிழ்த்தன. விஜய் இன்னோவாவின் கதவைத் திறந்தபோது, அவர்கள் கல்யாணியை எட்டிப் பிடித்துவிட்டனர். ஒருவன் அவளைப் பிடித்துக்கொள்ள, அடுத்தவன், “ஏய் கேமராமேன், இங்க வா...” என்று கத்தினான். கல்யாணியின் கழுத்தில் கத்தி வைக்கப்பட்டது. பன்னீர் ஓடி காருக்குள் ஒளிந்தான்.

“கேமராவைக் குடுடா...” “அண்ணே, நான் எதுவும் ரெக்கார்ட் பண்ணல.. அவளை விட்டுடுங்க!” என்று விஜய் கூவினான். “டேய், கேமராவைக் கொண்டா..” என்ன நடக்கிறது என்று புரியாவிட்டாலும், ஆபத்தான ஒரு சம்பவம் வெளியே கட்டவிழ்ந்துகொண்டிருக்கிறது என்பதை ப்ரகாஷ் புரிந்து, தனது இருக்கையை நிமிர்த்தி, சரியான கோணத்தில் பொருத்தி, காரின் என்ஜினை உயிர்ப்பித்தபோது, அடுத்தவன் விஜய்யை நெருங்கினான். கேமராவைப் பிடுங்க முனைந்தான்.

விஜய் கேமராவைத் தராமல் தன்னுடன் இறுக்கிப் பிடித்து, “அண்ணே... ரெண்டு லட்ச ரூபா கேமரா அண்ணே! இதுல வேற என்னென்னவோ ரெக்கார்ட் பண்ணியிருக்கு... வேணாம்! எஸ்டி கார்டை குடுத்துடறேன். கேமராவை தரமாட்டேன்...” என்று கெஞ்சலான குரலில் சொன்னான். அவர்களுக்குச் சற்றும் பொறுமையில்லை. கல்யாணியைப் பிடித்திருந்தவன் அவள் கழுத்தில் கத்தியால் சரக்கென்று இழுத்தான். ரத்தம் கொப்பளித்து வெளியே வர ஆரம்பித்தது. கல்யாணியின் கண்கள் பயத்தில் மேற்புறமாக உருண்டு இமைகளுக்குள் செருகின. அவளை அவன் அப்படியே தண்ணீரில் பொத்தென்று சரியவிட்டான்.

தண்ணீரைச் சுற்றிலும் சிதறடித்துக்கொண்டு கல்யாணி குப்புற விழுந்தாள். அவளைச் சுற்றி நீரே சிகப்பாக ஆரம்பித்தது. அவள் முதுகின்மேல் காலை வைத்து அவன் அழுத்திப் பிடிக்க, உயிர்வாயு தேடி கல்யாணியின் நுரையீரல் கதற, ப்ரகாஷ் பதறினார். “விஜய்! குடுத்துடு... குடுத்துடுப்பா!” என்று அவர் அலற, விஜய் பணிந்தான். தன்னை மிரட்டியவனிடம் கேமராவைக் கொடுத்தான். அவன் அதைத் திறந்து எஸ்டி கார்டை வெளியே எடுத்து, பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். கேமராவைத் தூக்கி தண்ணீரில் எறிந்தான்.

அவர்கள் இருவரும் உடனே தண்ணீரில் ‘தளப்... தளப்...’ என்று விரைந்து ஓடி மறுகரையில் ஏறினர். ‘அவர்களைத் துரத்திப் போவதா, விரைவாக ரத்தத்தை இழந்துகொண்டிருக்கும் கல்யாணியை கவனிப்பதா?’ “பன்னீரு, கேமராவை எடுத்துக்கடா...” என்று குரல் கொடுத்தபடியே ஓடிப் போய், குப்புறக் கிடந்த கல்யாணியை இரு கைகளாலும் தண்ணீரிலிருந்து தூக்கினான் விஜய்.

நனைந்த கேமராவை அள்ளிக்கொண்டு பன்னீர் ஓடிவந்து ஏறிக்கொள்ள, பின் இருக்கையில் கல்யாணியைப் படுக்க வைத்தான் விஜய். அவளைச் சுற்றி உடனடியாக சிகப்பாய் குருதி சேகரமானது. தன் சட்டையைக் கழற்றி அவள் கழுத்தில் அழுத்திப் பிடித்தபடி, “பக்கத்து ஹாஸ்பிடலுக்கு வண்டியை விரட்டுங்க ப்ரகாஷ்...” என்று விஜய் பதறினான். இன்னோவா கார் இக்கரையில் வேகமெடுக்க, மறுகரையில் மறைவில் காத்திருந்த ஹோண்டா, சரக்கென்று புறப்பட்டு காணாமல் போனது.

கல்யாணியைப் பிடித்திருந்தவன் அவள் கழுத்தில் கத்தியால் சரக்கென்று இழுத்தான். ரத்தம் கொப்பளித்து வெளியே வர ஆரம்பித்தது.

(தொடரும்...)

சுபா
ஓவியம்: அரஸ்