அவசரம்
‘‘ஹலோ... ஃபயர் சர்வீஸா?’’ ‘‘ஆமா, நீங்க..?’’ ‘‘சார், அவசரம் சார்! இங்கே ஒரு வீட்ல தீப்பிடிச்சு எரியுது. அணைக்கறதுக்கு பக்கத்துல எங்கேயும் தண்ணீர் இல்ல. ப்ளீஸ், கொஞ்சம் சீக்கிரம் வாங்க சார்!’’ ‘‘என்னய்யா, ஒரே தொந்தரவா போச்சு. இப்ப வெயிட்டிங்ல ஒரே வண்டிதான் இருக்கு. ஆனா, டிரைவர் இப்பதான் பக்கத்துல சாப்பிடப் போயிருக்காரு. காலையில இருந்து தன் செல்போனுக்கு சார்ஜ் போடக் கூட நேரமில்லாம சிட்டி முழுக்க போய் தீயணைச்சிட்டு வந்திருக்கார் அந்த மனுஷன்.
நாங்களும் சாப்பிடவோ, தூங்கவோ வேணாமாய்யா? எல்லாரும் உடனே வாங்கன்னா எங்கே போறது? வெயில் காலம். கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கக்கூடாதா? எப்படியும் அவர் சாப்பிட்டு, வண்டி எடுத்துட்டு வர இன்னும் 1 மணி நேரம் ஆகும். அதுக்குள்ள அங்க இருக்கறவங்க சேர்ந்து தீயை அணைக்கப் பாருங்க. நல்ல ஆளுங்கப்பா!’’
- அலட்சியமாக சொல்லிவிட்டு தெருப் பெயரை வாங்கிக்கொண்டு போனை வைத்தார் அந்த அதிகாரி. சாப்பிட்டுவிட்டு வந்த டிரைவரிடம் தீப்பிடித்த ஏரியாவைச் சொன்னதும் அதிர்ந்தார். அது அவர் வசிக்கும் ஏரியா. ‘யார் வீடாக இருக்கும்?’ என்ற பதைபதைப்போடு அவசர அவசரமாய் ஸ்பாட்டுக்குப் போய்ப் பார்த்தவருக்கு மயக்கமே வந்தது. எரிந்து அடங்கியிருந்த வீடு, அவர் வீடு!
- இரா.பாரதிதாசன்
|