வேகத்தடை
‘‘ஏங்க, இன்னைக்கு முதல் வேலையா நம்ம ஏரியா கவுன்சிலர்கிட்ட பேசி, இந்த ரோட்ல நம்ம வீட்டு முன்னாடி ஒரு வேகத்தடை போடச் சொல்லணும். கிளம்புங்க!’’ - ஞாயிறு தூக்கத்தைக் கலைத்தாள் என் மனைவி ஆனந்தி. இருவரும் டூவீலரில் புறப்பட்டோம். ‘‘இந்தத் தெருவுல போறவங்களுக்கு என்னவோ நேஷனல் ஹைவேஸ்ல போறதா நினைப்பு. ஃப்ளைட் ஓட்டற மாதிரி பறக்கறாங்க. பசங்களை வெளியே அனுப்பவே பயமா இருக்கு. நல்லா உயரமா வேகத்தடை போட்டாதான் சரியா வரும்!’’
‘‘வேகத்தடை போட்டா மட்டும் மெதுவா வரப்போறாங்களா? நாமதான் பசங்களை தனியா விடாம ஜாக்கிரதையா பார்த்துக்கணும்!’’ என்றேன். ‘‘நீங்க கொஞ்சம் சும்மா இருங்க. இவங்களுக்காக பயந்து பசங்களை வீட்லயே போட்டு பூட்டி வச்சுக்க முடியுமா? ஓடி ஆடி விளையாடற வயசு!’’ - அதற்கு மேல் அவளிடம் இதைப்பற்றிப் பேசவில்லை.
கவுன்சிலரிடம் பேசிவிட்டு இருவரும் திரும்பி வந்துகொண்டிருந்தோம். எதிர்பாராத விதமாக எங்கிருந்தோ இரண்டு சிறுவர்கள் வண்டியின் குறுக்கே ஓடி வர, கொஞ்சம் சுதாரித்து நிறுத்தி னேன். ஆனந்திக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘என்ன பசங்களை வளர்க்கறாங்க, தெருவுல விட்டுட்டு..? வாலுங்க! மோதி இருந்தா என்ன ஆயிருக்கும்!’’ என்றாள். நான் அமைதியாக சிரித்துக்கொண்டேன்.
- நா.கோகிலன்
|