விஜய்சேதுபதியிடம் ஈகோ பார்த்தேன்!



‘சூது கவ்வும்’ ரமேஷ்திலக் ஃபீலிங்

‘சூது கவ்வும்’ படத்தில் ஜாகுவார் காரை நேசிக்கும் டிரைவர், ‘காக்கா முட்டை’யில் ஏமாற்றிப் பிழைக்கும் ரவுடி, ‘டிமான்டி காலனி’யில் அருள்நிதியின் நண்பர், ‘ஆரஞ்சு மிட்டாயி’ல் ஆம்புலன்ஸ் ஊழியர் என கிடைத்த கேரக்டர்களில் எக்கச்சக்க ஸ்கோர் செய்து விடுவார் ரமேஷ்திலக். பின்னே, நார்வே திரைப்பட விழாவில் சிறந்த சப்போர்ட்டிங் கேரக்டருக்கான விருதை சும்மாவா கொடுப்பார்கள்? நடிகர், சூரியன் எஃப்.எம்மில் ஆர்.ஜே என பல தளங்களில் சிறகை விரிக்கும் ரமேஷுக்கு இது வளரும் சீஸன்!



‘‘பூர்வீகமே சென்னைதான். அப்பா திலகநாதன், பேங்க்ல வேலை பார்த்து ரிட்டயர் ஆனவர். அம்மா சபிதா இல்லத்தரசி. ஒரு அக்கா, ஒரு அண்ணன். பி.எஸ்சி. மேத்ஸ் படிச்சேன். கிடைச்ச வேலை திருப்தி இல்லை. அப்புறம்தான் ஆர்.ஜே. ஆனேன். அங்கிருந்தே சினிமாவில் நடிக்க முயற்சி பண்ணினேன். சுராஜ் சார்கிட்ட சொல்லி வச்சிருந்தேன். ‘மாப்பிள்ளை’யில் செகண்ட் ஹீரோவா வாய்ப்பு கொடுத்தார். செகண்ட் ஹீரோன்னா ஒரே ஒரு செகண்ட் தலையைக் காட்டிட்டுப் போவேன். அப்புறம் வெங்கட்பிரபு சாரோட நட்பு கிடைச்சது.

‘மங்காத்தா’வில் கும்பல்ல நிற்கிற சீன் ஒண்ணு கொடுத்தார். முதன்முதலா டயலாக் பேசி நடிச்ச படம், ‘மெரீனா’. அதுக்கு அப்புறம் குறும்படங்கள் சீஸன் ஆரம்பிச்சது. டோமினிக் என்ற நண்பர் மூலம் நலன் குமாரசாமி சார் அறிமுகம் ஆனார். அவரோட குறும்படங்கள்ல நடிச்சேன். யூ டியூப் பார்க்குறவங்க மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆனேன்!’’ - படபடவென பேசுகிறார் ரமேஷ்.

‘‘விஜய்சேதுபதிக்கும் உங்களுக்கும் வேவ்லெங்த் செட் ஆகிடுச்சு போல...’’
‘‘விஜய்சேதுபதி அண்ணனோட 3 படங்கள் நடிச்சிருக்கேன். ‘சூது கவ்வும்’ல அவரோட நடிக்கும்போது, நாமளும் நடிகர்... அவரும் நடிகர்... வலியப் போய் அவர்கிட்ட பேசுறதுக்கு என்ன இருக்குனு கொஞ்சம் ஈகோவா இருந்துட்டேன். ஆனா, அவர் ஈகோ இல்லாம நல்லா பழகினார். அந்தப் படத்துல இருந்து எனக்கொரு நல்ல அண்ணன் கிடைச்சிருக்கார். ‘காக்கா முட்டைனு ஒரு படத்தோட ஆடிஷன் இருக்கு. ட்ரை பண்ணு’னு எனக்குச் சொன்னதே அவர்தான். அப்படி ஒரு நல்ல மனிதர். ‘ஆரஞ்சு மிட்டாய்’ சரியா போகலைனாலும், இப்போ அதுல நடிச்சதுக்காக விருது கிடைச்சிருக்கறது சந்தோஷமா இருக்கு!’’

‘‘ஆர்.ஜே டு ஆக்டர்... அடுத்து என்ன?’’
‘‘பெருசா எந்தத் திட்டமும் போடல. இப்போதான் நடிக்கவே ஆரம்பிச்சிருக்கேன். எல்லா கேரக்டரிலும் நடிச்சு, நல்ல பெயர் எடுக்கணும்னு சின்ன ஆசை இருக்கு. ‘இந்த கேரக்டருக்கு ரமேஷ்தான் வேணும்’னு அடம்பிடிச்சு எனக்கு சான்ஸ் கொடுக்கற இயக்குநர் நண்பர்கள் இருக்கறதால, நல்ல கேரக்டர்கள் பண்ணிட்டிருக்கேன்னு நினைக்கறேன். ‘ஒரு நாள் கூத்து’, ‘மோ’, சுசீந்திரன் சார் இயக்கத்தில் உதயநிதி சார் நடிக்கற படம்னு கொஞ்சம் படங்கள் கைவசம் இருக்கு. நேரம் அமையும்போது, எல்லாமே தானா அமையும் ப்ரோ!’’

- மை.பாரதிராஜா