வரவு



காலையில்  கண் விழித்ததும் முதல் வேலையாக காலண்டரில் ராசி பலன் பார்ப்பது தர்மராஜுக்கு நாற்பது ஆண்டு காலப் பழக்கம். நல்ல பலன் என்றால் உற்சாகமாவார்; எச்சரிக்கை ஏதேனும் என்றால், சோகமாகிவிடுவார். இன்றைக்கு அவரின் தனுசு ராசிக்கு ‘எதிர்பாராத வரவு’ என்று போட்டிருந்தது. மனிதர் குஷியானார். ஆனால், ராசி பலனை உண்மையாக்க அவருக்கு மணியார்டர் எதுவும் வரவில்லை. கூரியரில் செக், டிமாண்ட் டிராஃப்ட் என்று எதுவும் வரவில்லை. வங்கிக்கணக்கிலோ செல்போன் வழியாகவோ பணம் தருவதாக எவரும் தகவல் எதுவும் தரவில்லை. அன்றைய பொழுதின் பெரும் பகுதி வரவை எதிர்பார்த்த ஏமாற்றத்திலேயே  கழிந்தது.



‘தினப்பலன் பொய்த்து விட்டதே’ என்ற வருத்தத்துடன் படுக்கச் சென்றார். அப்போது ஒரு செல்போன் மெசேஜ்... ‘உங்கள் செல்போன் எண்ணுக்கு பத்து ரூபாய்க்கு வெற்றிகரமாக ரீ-சார்ஜ் செய்யப்பட்டுள்ளது!’ என்றிருந்தது. எவனோ அதிர்ஷ்டம் இல்லாதவன் தவறுதலாக நம்பர் மாற்றி அவருக்கு ரீ-சார்ஜ்  செய்திருப்பதை அறிந்தார். மீண்டும் காலண்டரைப் பார்த்தார். அன்றைய பலனில் நஷ்டம் என்றோ துரதிர்ஷ்டம் என்றோ எந்த ராசிக்கும் போடவில்லை. ‘அப்போ அவன் எந்த ராசிக்காரனாக இருப்பான்’ என யோசித்துக்கொண்டே படுக்கச் சென்றார் தர்மராஜ்.