வாடஸ் அப்பில் இனி எல்லாம் ரகசியம்!



‘நான் ஒரு முடிவெடுத்துட்டா, அதுக்கப்புறம் என் பேச்சை நானே கேட்க மாட்டேன்’ என்ற ரேஞ்சுக்கு ஒரு முடிவெடுத்திருக்கிறது வாட்ஸ்அப். ஆம், இனி வாட்ஸ்அப்பில் நாம் அனுப்பும் எழுத்துச்செய்திகள், போட்டோ, வீடியோ என எதையுமே போலீஸோ, உளவு அமைப்புகளோ இடைமறித்துப் பார்க்க முடியாது. அவ்வளவு ஏன்? வாட்ஸ்அப் நிர்வாகத்தால் கூட பிரித்துப் பார்க்க முடியாது. அனுப்புகிறவருக்கும் பெறுகிறவருக்கும் மட்டுமே தெரியும் பரம ரகசியமாய் அது பாதுகாக்கப்படும்!

‘நாட்டின் பாதுகாப்பு முக்கியமா? நாட்டு மக்களின் பிரைவஸி முக்கியமா?’ - உலக நாடுகள் அனைத்திலும் இதுதான் இப்போது ஹாட் விவாதம். ஏற்கனவே ஆப்பிளுக்கும் அமெரிக்க உளவுத் துறைக்கும் இந்த விஷயத்தில்  வாய்க்கால் தகராறு ஓடிக் கொண்டிருக்கிறது. ‘தீவிரவாதி பயன்படுத்திய ஐ போனைத் திறந்துகொடு’ என அவர்கள் கேட்க,

‘கஸ்டமர் மொபைலைத் திறக்கும் தொழில்நுட்பம் எங்களிடமே இல்லை’ என ஆப்பிள் கை விரிக்க, இந்தப் பிரச்னை அமெரிக்காவையே ‘பிரித்து’ மேய்ந்துகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நேரத்தில் வாட்ஸ்அப் எடுத்திருக்கும் முக்கிய முடிவு இது.
‘‘இன்று முதல் உங்கள் வாட்ஸ்அப் உரையாடல்கள் மிகமிக ரகசியமாகப் பரிமாறப்படும்!’’ என கடந்த ஏப்ரல் 6 அன்று இதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் வாட்ஸ்அப் நிறுவனர்களில் ஒருவரான ஜேன் கௌம்.

உலகம் முழுவதும் நூறு கோடிப் பேர் பயன்படுத்தும் நம்பர் ஒன் சோஷியல் ஆப், வாட்ஸ்அப்தான். ஆனாலும், போட்டியாளரான டெலிகிராமில் இருப்பது போல் தகவல் பாதுகாப்பு இதில் இல்லை என்று விமர்சிக்கப்பட்டது. அதனாலேயே ரஷ்யாவிலும், சில பல இஸ்லாமிய நாடுகளிலும் வாட்ஸ்அப்பை விடவும் டெலிகிராம் முன்னணியில் இருந்தது. இப்போது தன் மூலம் பகிரப்படும் தகவல்களுக்கு முழுப் பாதுகாப்பை வழங்கி அந்தக் கறையைத் துடைத்திருக்கிறது வாட்ஸ்அப்.

‘‘நீங்க பாட்டுக்கு பொது மக்கள் இப்படி ரகசியமா பேசிக்க வசதி பண்ணித் தர்றீங்க... தீவிரவாதிகள் அதை வச்சு சதித் திட்டங்கள் தீட்டினா என்னா பண்றது?’’ என்பதுதான் இதுபற்றி அரசாங்கங்கள் கேட்கும் அல்டிமேட் கேள்வி. அதிலும் நம் நாடு இதில் ரொம்பவே சென்ஸிட்டிவ். பிளாக்பெர்ரி மூலம் பகிரப்படும் பி.பி.எம் தகவல்களை இந்திய அரசால் கண்காணிக்க முடியவில்லை என்பதாலேயே அந்த போன் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. கடைசியில் பிளாக்பெர்ரி இந்தியாவுக்குள் ஒரு சர்வரை அமைத்த பிறகே தடை நீக்கப்பட்டது.

அதே போல சமீபத்தில் ‘பொதுமக்கள் எல்லோரும் தங்களின் வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எஸ்.எம்.எஸ் தகவல்களை 90 நாளைக்கு அழிக்கக் கூடாது... குற்றச் செயல்களை விசாரிக்கும்போது அவற்றைக் காண்பிக்க வேண்டும்...’ என்றெல்லாம் சட்டம் போட்டு எதிர்ப்புகள் வலுத்த பின் அதைத் திரும்பப் பெற்றது மத்திய அரசு.

இப்போதும் கூட வாட்ஸ்அப் கொண்டு வந்திருக்கும் இந்த வசதி எத்தனை நாட்களுக்கு இந்தியாவில் அனுமதிக்கப்படும் என்று தெரியவில்லை. பாதுகாப்பைத் தளர்த்தும் வரை வாட்ஸ் அப் இந்தியாவில் தடை செய்யப்படலாம் என்றுகூட சொல்கிறார்கள். காரணம், அமெரிக்காவை விட அதிகமாக இந்திய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் தீவிரவாத பயம்!

‘‘தீவிரவாதம்ங்கிறது ரொம்பப் பழசுங்க. வாட்ஸ்அப்தான் தீவிரவாதத்தை உருவாக்குதா என்ன? எல்லா தொழில்நுட்பத்தையும் தப்பா பயன்படுத்துறவங்க இருக்கத்தான் செய்வாங்க. தீவிரவாதிகள் துப்பாக்கியைத் தப்பா பயன்படுத்துறாங்கனு துப்பாக்கியே வேண்டாம்னு சொல்ல முடியுமா?’’ - தீர்க்கமாகக் கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளையைச் சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ். வாட்ஸ்அப் இப்படியொரு மாற்றத்தைக் கொண்டு வந்த மறுநாளே இது பற்றிய ஆதரவுக் குரல்களையும் ஆக்கபூர்வ விவாதங்களையும் முடுக்கிவிட்டிருக்கிறது இந்த அமைப்பு.

‘‘நாம் யாருக்கு செய்தி அனுப்புகிறோமோ அவரைத் தவிர வேறு யாரும் அதைப் படிக்கக் கூடாது என நினைப்பது நம் உரிமை. இந்த வசதியைத் தர வேண்டியது வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களின் கடமை. தகவல் பரிமாற்றம் என்பது இயல்பாகவே இப்படித்தான் இருக்க வேண்டும். அரசாங்கமே ஆனாலும் தனி மனிதர் விஷயத்தில் தலையிடுவது அராஜகம்தான்.

சென்ட்ரல் மானிட்டரிங் சிஸ்டம் என்ற பெயரில் அந்த அராஜகம் நம் நாட்டிலேயே நடக்கிறது. இப்போதும் கூட அரசாங்கம் நினைத்தால் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் எந்த நேரத்தில் யார் யாருக்கெல்லாம் செய்தி அனுப்பினார் என்ற தகவலை சேகரித்துவிட முடியும். இதன் மூலம் ஆட்சேபகரமான செய்திகளை உருவாக்கி பரப்பியது யார் என்பதையும் கண்டுபிடித்துவிட முடியும்.

இதை மெட்டா டேட்டா என்பார்கள். பெரும்பாலான புலனாய்வுகளுக்கு உதவுவது இந்த மெட்டா டேட்டாதான். ஆக, குற்றவாளிகளும் தீவிரவாதிகளும் வாட்ஸ்அப்பின் இந்த வசதியைப் பயன்படுத்தி உலகத்தை அழித்துவிட முடியாது. தனிமனித உரிமையை நிலைநாட்டி நமது பிரைவஸியைப் பாதுகாக்கும் மாற்றமாகத்தான் நாங்கள் இதைப் பார்க்கிறோம்!’’ என்கிறார் அவர் முடிவாக!

மிஞ்சிப் போனா நம்மாளு மொக்கை ஜோக் அனுப்புவான்... ஜொள்ளு வழிய குட்மார்னிங், குட் நைட் சொல்வான்... அதுக்கெல்லாம் இவ்ளோ கெடுபிடி தேவையா பாஸ்!பிரைவஸி என்பது நம் உரிமை. இந்த வசதியைத் தர வேண்டியது வாட்ஸ்அப் போன்ற நிறுவனங்களின் கடமை.

- நவநீதன்