நினைவோ பறவை
எழுத்து சொல் பொருள் ‘காதலைக் காதல் என்றும் சொல்லலாம்’ - பூமா ஈஸ்வரமூர்த்தி
குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் புதுப்புது பெயர்களைக் கண்டுபிடிக்கிறார்கள். எல்லாக் குழந்தைகளின் அகராதியிலும் ‘நாய்’ என்றால் ‘ஜூஜூ’... பறவைக்கு ‘கிக்கீ’... மொழி தோன்றுவதற்கு முந்தைய ஆதிவாசிக்கு, மரம் என்பது ஒரு சித்திரம். புலி என்பது ஒரு பயச்சித்திரம்.
ஒன்றிலிருந்து ஒன்றை அடையாளப்படுத்துவதற்காக மொழியும், பெயர்ச் சொற்களும் தோன்றியபோது, வாழ்க்கையின் ஆச்சர்யங்களும், புதிர்களும் தொலைந்துவிட்டன.
முதன்முதலில் ஒரு மரத்திற்கு ‘மரம்’ என்று பெயர் வைத்தவனுடைய கற்பனையின் பரவசம் அடுத்த தலைமுறைக்கு இல்லாமல் போயிற்று. மரத்தை மரமாகப் பார்க்காமல் மொழியறிந்த குழந்தைகள் மாமரமாகப் பார்க்கின்றன. உலகம் தன் இயந்திரக் கைகளால் ஒரு குழந்தையை சிறுவனாக மாற்றுகிறது. பின்னாட்களில் அந்தச் சிறுவன் மாமரத்தைக் கட்டிலாகப் பார்க்கிறபோது இளைஞனாகிறான்; கதவாகப் பார்க்கிறபோது குடும்பஸ்தன் ஆகிறான்; வெட்டி எரிக்கிறபோது வயோதிகன் ஆகிறான்.
கல்லூரியில் என்னுடன் படித்த நண்பன் கண்ணனை நினைக்கிறபோதெல்லாம் எனக்கு இந்த சிந்தனைகள்தான் மனதில் ஓடும். கண்ணன் ஒரு வளர்ந்த குழந்தை. ஒல்லியாகக் கிட்டத்தட்ட ஆறடி இருப்பான். கலைந்த கேசமும், கசங்கிய சட்டையும் அவனது அலட்சிய குணத்தின் வாயிற்படிகள். அஃறிணை, உயர்திணை என எதைப் பார்த்தாலும் கண்ணன் அதற்கொரு பட்டப் பெயர் வைத்துவிடுவான்.
கண்ணன் வைக்கும் பெயர்களின் ரசிகர்களாக கல்லூரியில் ஒரு பெரும் பட்டாளமே இருந்தது. கல்லூரி கேன்டீனுக்கு ‘மரண விலாஸ்’; கணக்குப் பேராசிரியருக்கு ‘கோழி’; முதல்வருக்கு ‘நாட்டாமை’; பேருந்துக்கு ‘நத்தை’; ஜாக்கி சானுக்கு ‘அதிரடி அகத்தியர்’ என தொடக்க காலத்தில் கண்ணன் வைத்த பெயர்கள் இன்றைக்கும் எங்கள் கல்லூரியில் புழக்கத்தில் இருக்கின்றன. பின்னாட்களில் கண்ணனின் மொழியறிவு முதிர்ச்சி அடைந்து, அவன் வைக்கும் உருவகப் பெயர்கள் முதல் பார்வையில் புரியாமல் போயின. உதாரணமாக மின்விசிறிக்கு ‘குடிகாரன்’ என்றும், உலகத்திற்கு ‘மதுப்புட்டி’ என்றும் நாமகரணம் செய்திருந்தான். யோசிக்கும்போதுதான் இரண்டுக்குமுள்ள தொடர்புகள் புலப்படும்.
ஒருமுறை கண்ணனை அவனுடைய பெற்றோர் அடித்து உதைத்து மனநல மருத்துவமனையில் சேர்த்திருந்தார்கள். எங்கள் வகுப்பே திரண்டு போய் பார்த்துவிட்டு வந்தோம். கல்லூரியில் மட்டுமல்ல, வீட்டிலும் கண்ணன் சதா நேரமும் பெயர் வைத்துக் கொண்டிருப்பதாகவும், தன் அப்பாவை ‘கம்பி’ என்றும், அம்மாவை ‘சங்கிலி’ என்றும் கூப்பிட்ட சம்பவம்தான் மனநல மருத்துவமனை வரை கொண்டுவந்திருக்கிறது என்றறிந்தோம்.
ஒரு எறும்பைப் போல கண்ணனின் மனம் சதா சொற்களைத் தேடி ஊர்ந்துகொண்டிருந்தது. மனநல மருத்துவருக்கு ‘வான்கோழி’ என்று பெயர் வைத்து அவரிடமே அவன் சொன்னபோது, அவர் தன் சிறகுகளைக் காற்றில் விரித்துக் காட்டி சில மாத்திரைகளை எழுதித் தந்து, ‘‘காலப்போக்கில் சரியாகிவிடும்’’ என்று வீட்டிற்கு அனுப்பி வைத்து பெருமூச்சு விட்டதாக நண்பர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
கண்ணனின் தேர்வுத் தாள்களைத் திருத்தும்போது கல்லூரிப் பேராசியர்களுக்கு புதுத் தலைவலி தொடங்கியது. பித்தாகரஸ் தேற்றத்தைப் பற்றிய கேள்விக்கு ‘பிச்சாண்டியின் புதிர்’ எனத் தலைப்பிட்டு விடை எழுதியிருந்தான் கண்ணன். கேள்விக்கான விடை சரியாக இருந்தது என்றாலும், மாற்றி அமைக்கப்பட்ட பெயர்கள் கனவுகளிலும் பேராசிரியர்களைத் துரத்த ஆரம்பித்தன.
கல்லூரி இறுதியாண்டில் கண்ணன் அரூப வார்த்தைகளில் பெயர் வைக்க ஆரம்பித்தான். அந்த வார்த்தைகளில் தமிழ் இருந்தாலும், மொழியில்லாத மொழியின் சொற்களும் தென்பட ஆரம்பித்தன. கல்லூரித் தோட்டத்தில் திரிந்துகொண்டிருந்த ஒரு அணிலைப் பார்த்து ‘கோடாண்ட கலீலோ’ என்று அவன் பெயர் வைத்தான்.
அதுவரை அவன் ரசிகர்களாக இருந்தவர்கள் அமானுஷ்யமான பயத்திற்குள் தாங்கள் தள்ளப்பட்டதாகவும், கண்ணனை முனி பிடித்து விட்டதாகவும் பின்பு தெரிவித்தார்கள். சில வேளைகளில் வானத்தைப் பார்த்து ஏதோ பேசிவிட்டு அருகில் இருக்கும் பொருட்களுக்கு அரூபமாகப் பெயர் வைப்பான். அந்தப் பெயர்கள் யாருக்கும் புரிவதில்லை. கடவுளின் மொழி யாருக்குப் புரியும்?
நகரிலேயே பேரழகியான ஒருத்தியை கண்ணன் ‘தொம்பித்தா’ என்று அழைத்தபோது, ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டுகிறான் என்று அவள் எண்ணி செருப்பால் அடித்து சத்தம் போட்ட நாளில் கண்ணனின் கல்லூரி வாழ்க்கை முடிவுற்றது. அதற்குப் பிறகு அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் குறைந்து, நான் மேற்படிப்பிற்காக சென்னைக்கு வந்துவிட்டேன். விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது கண்ணனைப் பற்றி விசாரித்தேன். ராணுவத்தில் சேர்ந்துவிட்டதாக நண்பர்கள் மூலம் பதில் வந்தது.
இதெல்லாம் நடந்து முடிந்து பத்து வருடங்களுக்குப் பிறகு, உலகத் திரைப்பட விழாவிற்காக டெல்லி சென்றிருந்தேன். ஈரானிய படமொன்றைப் பார்த்துவிட்டு, அந்தப் படம் எழுப்பிய அதிர்வலைகளுடன் உப்கர் திரையரங்கிற்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு சர்தார்ஜி ஹோட்டலில் தந்தூரி ரொட்டிக்காகக் காத்திருந்தபோது தற்செயலாகக் கண்ணனைச் சந்தித்தேன்.
எனக்கு அவனை அடையாளம் தெரியவில்லை. அவன்தான் என் பெயரை இனிஷியலுடன் சொல்லியழைத்து தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான். கன்னம் உப்பிப் போய், தொப்பை விழுந்து, பஞ்சாபிகளைப் போல சிவந்திருந்தான். ராணுவத்தில் அலுவலகப் பிரிவில் வேலை பார்ப்பதாகச் சொன்னான். ‘துப்பாக்கிகளுக்கும், தந்தூரி ரொட்டிகளுக்கும் என்ன பெயர் வைத்திருக்கிறாய்?’ எனக் கேட்க நினைத்தேன். பெயர் வைக்கும் குணத்தையே மறந்தது போல், டெல்லியின் குளிர் பனியைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.
கடைக்கு வெளியே காரிலிருந்த ஒரு பெண்ணைத் தன் மனைவி என்றும், அருகிலிருந்த மூன்று வயது பையனைத் தன் மகன் என்றும் அறிமுகப்படுத்தினான். அந்த மூன்று வயதுப் பையன் என்னைப் பார்த்து புன்னகைத்து ‘தாடிதா தக்கதா’ என்றான். ஒரு கணம் கண்ணனும் நானும் ஸ்தம்பித்துவிட்டோம். நிச்சயம் அது இந்தி வார்த்தை இல்லை. கண்ணனின் மகன் எனக்கு வைத்த பட்டப்பெயர் அது... மழலைச் சொல் என்று மாற்றி நினைத்து திருப்தி கொள்கிறது மனசு.
பின்னாட்களில் அந்தச் சிறுவன் மாமரத்தைக் கட்டிலாகப் பார்க்கிறபோது இளைஞனாகிறான்; கதவாகப் பார்க்கிறபோது குடும்பஸ்தன் ஆகிறான்; வெட்டி எரிக்கிறபோது வயோதிகன் ஆகிறான்.பேருந்துக்கு ‘நத்தை’; ஜாக்கி சானுக்கு ‘அதிரடி அகத்தியர்’ என தொடக்க காலத்தில் கண்ணன் வைத்த பெயர்கள் இன்றைக்கும் எங்கள் கல்லூரியில் புழக்கத்தில் இருக்கின்றன.
(பறக்கலாம்...)
நா.முத்துக்குமார்
ஓவியங்கள்: மனோகர்
|