பெண்கள் ஓட்டு யாருக்கு?



இந்த ஆட்சி தமிழகப் பெண்களுக்கு கொடுத்திருக்கும் பரிசு, பெருந்துயரம் ஒன்றுதான்.

‘‘உலகத்துல வேறு எங்கும் இந்த அவலம் இல்லை. வீதிக்கு வீதி சாராயக்கடை... அந்தக் காலத்துல சாராயம் காச்சுறவங்களை பிடிச்சு ஜெயில்ல போட்ட காவல்துறை, இப்ப ‘சாராயம் கூடாது’ன்னு சொல்றவங்களை பிடிச்சு, கொடுமைப்படுத்துற கொடூரம் இங்கே மட்டும்தான். டாஸ்மாக்கால பல குடும்பங்கள் அழிஞ்சாச்சு.  இளம் விதவைகள் எண்ணிக்கையும் அதிகமாயிடுச்சு.

பெரியவங்க குடிச்சு கெட்டழிஞ்சது போக, ஸ்கூலுக்குப் போற பிள்ளைகள்லாம் கூட குடிச்சுட்டு தெருவில விழுந்து கிடக்குற அளவுக்கு நிலை மோசமா இருக்கு. இன்னும் ஒருமுறை அ.தி.மு.கவுக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சா, மாநிலம் முழுவதும் சாராயம்தான் ஓடும்... எந்த குடும்பமும் மிஞ்சியிருக்காது!’’ - ஆவேசமாகப் பேசுகிறார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் தமிழ்ச்செல்வி.

கடந்த ஐந்தாண்டு அ.தி.மு.க ஆட்சியில் பெரிதும் வதைபட்டது பெண்கள்தான். டாஸ்மாக்கால் ஏற்பட்ட குடும்ப வன்முறை, பொருளாதாரச் சிக்கல், உறவுக் குலைவுகள் ஒரு பக்கம்... விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு குறைபாட்டால் ஏற்பட்ட பிரச்னைகள், கல்வியும் மருத்துவமும் தரமிழந்து போனதால் தனியாரை நாட வேண்டிய நெருக்கடி மறுபக்கம் என பெரும்பாலான பிரச்னைகளை எதிர்கொண்டது பெண்கள்தான்.

திடீரென ஒரே நாளில் காய்கறிகள் நூறு ரூபாய்க்கு மேல் விலையேறுவதும், சில நாட்களில் 5 ரூபாய்க்குக் கீழாகக் குறைந்து வீதிகளில் கொட்டப்பட்டு அழிவதும் இந்த ஆட்சியின் சாகசங்களில் ஒன்று. செயலற்ற மந்திரிகளும், மக்களின் துயரறியாமல் அரங்கத்துக்குள் இருந்தே செயலாற்றும் முதல்வரும் தமிழகப் பெண்களுக்கு கொடுத்திருக்கும் பரிசு, பெருந்துயரம் ஒன்றுதான்.

‘‘குடிக்கிறது தப்பே இல்லேங்கிற மனநிலை எல்லாத் தரப்பிலயும் வந்தாச்சு. நல்லதுக்கும் குடிக்கிறாங்க... கெட்டதுக்கும் குடிக்கிறாங்க. சின்னச் சின்ன பசங்கள்லாம் குடிச்சுட்டு வீண் வம்பை வளக்குறாங்க. கிராமங்கள்ல அமைதியே போயிடுச்சு. ‘நான் பதவியேற்ற உடனே குற்றவாளிகள் எல்லாம் ஆந்திரா பக்கம் ஓடிட்டாங்க’னு முதல்வர் சொன்னாங்க. கடந்த 5 ஆண்டுகள்ல ஏகப்பட்ட கொலைகள், கொள்ளைகள். பெண்கள் தைரியமா நடமாட முடியலே. எத்தனை செயின் பறிப்பு சம்பவங்கள். செயினோட சேர்த்து உயிரையும் பறிக்கும் கொடுமையும் நடக்குது! பாலியல் வன்முறைகளும் அதிகமாயிடுச்சு. சிறு பிள்ளைகளைக்கூட வெளியில தைரியமா அனுப்பி வைக்க முடியலே.

கடந்த 5 ஆண்டுகள்ல அரசாங்கம் எவ்வளவு வேகமா செயல்பட்டிருக்குங்கிறதுக்கு ஒரே ஒரு உதாரணம், ரேஷன் கார்டு. பல வீடுகள்ல இத்துப் போய் கிழிஞ்சிருச்சு. பேப்பர் மேல பேப்பர் ஒட்டுறாங்களே ஒழிய, புது கார்டு தரலே.

இதைக்கூட செய்ய முடியாத அளவுக்கு அரசு எந்திரம் அத்துப் போய் கிடக்கு. வெளிப்படையா ஆணவக் கொலைகள் நடக்குது. பட்டப்பகல்ல நடுவீதியில வந்து வெட்டிட்டுப் போறாங்க. அரசு பகிரங்கமா ஒரு எச்சரிக்கை கூட விடுக்கலே. ஓட்டுக்காக ஒரு தரப்புக்கு ஆதரவா அ.தி.மு.க நிக்குதோன்னு சந்தேகம் வருது.

இலவசங்களைக் கொடுத்து ஏமாத்திடலாம்னு நினைக்கிறாங்க. அவங்க கொடுத்த மிக்ஸி, கிரைண்டரெல்லாம் மூலையில கிடக்கு. நிறைய பேர் பழைய இரும்புக் கடையில போட்டுட்டாங்க. ஆடு, மாடெல்லாம் கட்சிக்காரங்களுக்கு மட்டும்தான் கிடைக்குது. கிளைச்செயலாளர்ல இருந்து வார்டு உறுப்பினர் வரைக்கும் ஆளுக்கு ஆள் நாட்டாமை பண்ற நிலை.

விவசாயத்தை நம்பியிருந்த பெண்கள் எல்லாரும் வேலை இல்லாம திருப்பூர், கோவைன்னு போய் கொத்தடிமையா வேலை செஞ்சுக்கிட்டிருக்காங்க. பல பெண்கள் கட்டிட வேலைக்குப் போறாங்க. குடும்பங்கள் எல்லாம் பிரிஞ்சு கிடக்கு. இந்த ஆட்சியை அகற்றினால்தான் நாட்டுக்கு சுபிட்சம்’’ என்கிறார் தமிழ்ச்செல்வி.

‘எல்லோருக்கும் ஒரே மாதிரி கல்வி’ என்ற நோக்கில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை குழிதோண்டிப் புதைத்து விட்டார்கள். தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் இங்கே தனி ராஜாங்கமே நடத்துகின்றன. அவர்கள் செய்யும் அத்தனை தவறுகளும் மன்னிக்கப்படுகின்றன. மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டப்படி பள்ளிக்கு அருகில் வசிக்கும் அடித்தட்டு குழந்தைகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அத்திட்டத்திற்கு சரிவர கொள்கைகள் வகுக்காததால், மனம் போன போக்கில் மாணவர்களைச் சேர்க்கின்றன தனியார் பள்ளிகள். அத்திட்டத்தின் நோக்கமே சிதைந்து போய்விட்டது. இலவசமாக சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தை மத்திய அரசிடம் வாங்கி மாநில அரசு தர வேண்டும். ஆனால் 2015-16 கல்வியாண்டுக்கான ரூ.150 கோடி கட்டணத்தை இதுவரை தமிழக அரசு கொடுக்கவே இல்லை.

 ‘முறைப்படி விதிகள் வகுக்காததால் மாணவர்களுக்கான கட்டணத்தைத் தரமுடியாது’ என்று மத்திய அரசும் கைவிரித்துவிட்டது. தமிழக அரசு கட்டணம் தராததால் தனியார் பள்ளிகள், இடஒதுக்கீட்டுப்படி சேர்த்த விளிம்புநிலை மாணவர்களின் பெற்றோரிடம் கட்டணம் கட்டுமாறு நெருக்கடி கொடுத்து பணம் வசூலிக்கிறார்கள். இதைக் கண்டும் காணாமலும் மௌனம் காக்கிறது அரசு.

‘‘முன்னல்லாம் அரசுப்பள்ளிகள்ல தரமா சொல்லிக் கொடுத்தாங்க. தைரியமா பிள்ளைகளை அனுப்பி வச்சோம். இப்போ பல பள்ளிகள்ல ஆசிரியர்களே இல்லை. அரசுக்கே அரசுப்பள்ளி கள்ல நம்பிக்கை இல்லாம, நல்லாப் படிக்கிற பிள்ளைகளை தனியார் பள்ளிகள்ல சேத்து
விடும்போது நம்ம பிள்ளைகளை எப்படி அரசுப்பள்ளியில சேக்க முடியும்?

எல்லா செலவையும் விட கல்விச்செலவு இன்னைக்கு எல்லாக் குடும்பத்தையும் நெரிக்குது. மக்கள் மேல கொஞ்சமும் அக்கறையில்லாத ஒரு அரசை 5 ஆண்டு சகிச்சுக்கிட்டதே பெரிசு. கண்டிப்பா இந்தத் தேர்தல்ல அதிமுகவுக்கு வாக்களிக்க மாட்டேன்’’ என்கிறார் ராணிப்பேட்டையைச் சேர்ந்த கிருஷ்ணவேணி.

80 ரூபாய் விற்ற துவரம் பருப்பு திடீரென 200 ரூபாயைத் தாண்டி ஏறியது. வீடுகளில் சாம்பார் வாசனையே அற்றுப் போனது. பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், விலையைக் குறைக்க, பருப்பு புழக்கத்தை நிர்வகிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல பூண்டு, உளுந்து என அத்தனை அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்தது. அமுதம் அங்காடிகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பதாக அறிவித்தார்கள்.

ஆனாலும் அவை சில இடங்களில் மட்டுமே இருப்பதால் அது எல்லா மக்களையும் சென்றடையவில்லை. ‘‘வேலையும் இல்லை, பொருட்களோட விலையும் உயர்ந்திடுச்சு... எங்களை மாதிரி மிடில் கிளாஸ் குடும்பங்கள் நல்ல சோறு சாப்பிடவே முடியாதுங்கிற நிலை. வருமானத்திற்கு மேல செலவாகுது. பாதி நேரம் கரன்ட்டே வரமாட்டேங்குது. கேட்டா ‘மின்சார உற்பத்தியில தன்னிறைவு அடைஞ்சிட்டோம்’னு சொல்றாங்க. மக்கள் மேல அக்கறையில்லாத இந்த அரசு திரும்பவும் வரக்கூடாது’’ என்று கோபமாகச் சொல்கிறார் சாத்தூர் செல்வி.

தாலிக்கு தங்கம் கொடுக்கும் திட்டத்தில் பதிவு செய்த பெண்கள் அதை வாங்குவதற்காக படும் பாடு சொல்லி மாளாது. அப்பன் வீட்டுப் பணத்தை எடுத்துக் கொடுப்பது போல அதிகாரிகளுக்கு அப்படியொரு அலட்சியம். அதையெல்லாம் கடந்து வாங்கச் சென்றால், அமைச்சர்களுக்காக மணிக்கணக்கில் காத்துக் கிடக்க வேண்டும். பல பெண்கள் இந்த தங்கமே வேண்டாம் என்று தவிர்த்துவிட்டுச் சென்ற சம்பவங்களும் உண்டு.
‘நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில்’ வேலை செய்யும் 95 சதவீதம் பேர் பெண்கள்.

பெரும்பாலும் விவசாயத் தொழிலாளர்கள். இவர்களுக்கு தரப்படும் ஒருநாள் சம்பளம் 183 ரூபாய். ஆனால், கட்சிக்காரர்களும் அதிகாரிகளும் தின்றது போக கிடைப்பது வெறும் 100 ரூபாய்தான். கணவனை இழந்த மற்றும் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.1000 மாதாந்திர உதவித்தொகை வழங்கப்பட்டது. பல மாதங்களாக பெரும்பாலான பெண்களுக்கு இது கிடைக்கவில்லை.

‘உதவித்தொகையை நிறுத்துவதற்கான முன்னோட்டம்தான் இது’ என்கிறார்கள்.இப்படி எல்லா மட்டத்திலும் தோல்வியுற்று நிலைகுலைந்து நிற்கிற அரசின் மீது பெண்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவுவதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. தேர்தல், அந்த மனநிலையை அப்பட்டமாக வெளிப்படுத்தும்..!

செய்தீர்களா? செய்தீர்களா?

அதிமுக 2011 தேர்தலில் பெண்களுக்காக கொடுத்த வாக்குறுதிகள்...

* படித்த இளம் பெண்களுக்கு தொழில் முனைவோருக்கான பயிற்சி அளித்து, சுயதொழில் தொடங்க, தகுதிக்கேற்ப அரசு பங்குத்தொகை ரூ.25 லட்சம் வழங்கப்படும்.

* சுய உதவிக்குழு பெண்களுக்காக ஒவ்வொரு கிராமத்திலும், ஏற்றுமதி நோக்கில் கூட்டுறவு முறையில் ஒரு பெரிய தொழில் தொடங்கப்படும். அதில் அனைவருக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்படுவதோடு பங்குதாரர்களாகவும் ஆக்கப்படுவார்கள்.

* ஒவ்வொரு கிராமத்திலும் கம்யூனிட்டி சோலார் சக்தி மையங்கள், எரிவாயு மையங்கள் உருவாக்கப்பட்டு கிராமப்புற தெருவிளக்குகள் மற்றும் வீடுகளுக்குத் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அதில் வரும் லாபம் சுயஉதவிக்குழு பெண்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்.

* ஒவ்வொரு ஊராட்சி ஒன்றிய தலைமையகத்திலும் முதியோர் மற்றும் ஆதரவற்ற ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறப்பு தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்படும். மூன்று நேர உணவு வழங்கப்படும்.

 *  மகளிர் குழுக்களுக்கு 25 சதவீத மானியத்துடன் ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கப்படும். 100 நடமாடும் அங்காடிகள் அமைக்கப்படும். 20 மகளிர் விடுதிகள் கட்டப்படும். மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு செல்போன் வழங்கப்படும்.

- தினகரன் செய்தியாளர்கள் உதவியுடன் வெ.நீலகண்டன்