துப்பட்டா போதும் 5 பேரை அடித்து விரட்டலாம்!



‘‘திடீர்னு நாலைஞ்சு பேர் சூழ்ந்து நிக்கிறபோது, என்ன செய்யறதுன்னே தோணாம, பெண்கள் நிலைகுலைஞ்சு நிக்கிறாங்க. அந்தக் காலத்து தமிழ்ப்பெண்கள் தங்களை சீண்ட வர்றவங்களை, தலையில சுமைக்கு வச்சிருக்கிற சிம்மாட்டுத் துணியைக் கொண்டே அடிச்சு விரட்டியிருக்காங்க. நம்மோட பாரம்பரியக் கலையான சிலம்பத்துல, அவசரக் காலத்தை சமாளிக்க நிறைய வழிமுறைகள் இருக்கு. சுலபமான அந்த யுக்திகளை பெண்கள் கத்துக்கிட்டா துப்பட்டாவை வச்சே அஞ்சு பேரை அடிச்சு முடக்கலாம்...’’

- உற்சாகமாகவும் அக்கறையாகவும் பேசுகிறார் சுகுணா. சென்னையில் பெரம்பூர், ரமணா நகரில் வசிக்கும் சுகுணா, பிரபல சிலம்ப வீரர் சீனிவாசனின் மகள். அப்பாவும் மகளும் இணைந்து, பெண்களுக்கான குறுகிய கால தற்காப்பு சிலம்பப் பயிற்சியை வடிவமைத்திருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவிகள், இல்லத்தரசிகளுக்கு பயிற்சியும் வழங்கியிருக்கிறார்கள்.

‘‘சர்வ சாதாரணமா துன்பம் இழைக்கப்படும் அப்பாவிகள்னா, அது குழந்தைகளும் பெண்களும்தான். யாரும் கேள்வி கேட்கமாட்டாங்க. இந்தியாவில ஆண்டுக்கு 50 ஆயிரம்  பெண்களும் குழந்தைகளும் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறாங்க. தமிழகத்தில 8  ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்படுறாங்க. இதெல்லாம்  பதிவான சம்பவங்கள். பதிவாகாதவை இன்னும் எவ்வளவோ இருக்கு.

இன்னைக்கும் நகர்ப்புறங்கள்ல நடக்கிற ஒண்ணு, ரெண்டு சம்பவங்கள்தான் வெளிச்சத்துக்கு வருது. கிராமங்கள்ல, அடித்தட்டு மக்கள் வசிக்கற பகுதிகள்ல நடக்கிற வன்முறைகள் வெளியவே தெரியறதில்லை. பஞ்சாயத்துகள்ல, மிரட்டல்கள்ல முடிஞ்சு போகுது. ஆண்களே மேலோங்கி நிக்கிற நம்ம சமூகத்தில, பெண்கள் அடங்கியும் ஒடுங்கியும் வாழ வேண்டியிருக்கு. 

பொதுவா எல்லா உயிரினங்களுக்குமே தற்காப்பு உணர்ச்சி உண்டு. ஆளோட அசைவைப் பாத்தே பயந்து ஓடுற காகம் கூட, தன் குஞ்சுகளுக்கு பாதிப்புன்னா துரத்தித் துரத்திக் கொத்த வரும். அந்த உணர்வு எல்லா உயிரினங்களுக்குள்ளயும் இருக்கு. ஆனா, பெண்கள் நிராயுதபாணியா நிக்கிறாங்க. இனம் புரியாத தயக்கமும், பயமும், பதற்றமுமே அவங்க தற்காப்பு உணர்வை முடக்கிடுது. அந்த பலவீனம்தான் குற்றவாளிகளுக்கு பலம். 
நம் ஆதிசமூகம் தாய்வழிச் சமூகம்.

பாரம்பரியக் கலைகள்ல ஆண்களை விடவும் பெண்களே மேலோங்கி நின்னிருக்காங்க. கிராமங்கள்ல தற்காப்பு பயிற்சி முறைகள் கட்டாயமா இருந்திருக்கு. இந்தந்த வயசுல இதை இதையெல்லாம் கத்துக்கணும்னு திட்டம் இருந்திருக்கு. ஆண்களை விடவும் பெண்கள் வலுவா இருந்திருக்காங்க.
ஆனா இன்னைக்குள்ள பெண்களுக்கு சுய பாதுகாப்பு உணர்வே கூட அத்துப் போச்சு. பெண்கள் தைரியமா வெளியில நடமாட முடியாத நிலை இருக்கு. பாலியல் சீண்டல்கள் ஒரு பக்கம், செயின் பறிப்பு மாதிரி திருட்டு வேலைகள் ஒரு பக்கம்னு அச்ச உணர்வு எப்பவும் சூழ்ந்திருக்கு. இதை மாற்றணும்னா, பெண்களுக்கு கட்டாயம் தற்காப்புப் பயிற்சி தேவை.

நம் ஆதி கலைகள்ல கைகளும் கால்களும்தான் ஆயுதம். ஒரு விரலை வச்சு எதிராளியை துடிதுடிக்க வைக்கிற நுட்பமெல்லாம் இருக்கு. சிலம்பத்துல சில அடிப்படைப் பயிற்சிகள் வெறுங்கையால மோதுறதுதான். சிலம்பத்துக்கு பெரிய வரலாறு உண்டு. 5000 ஆண்டுக்கு முற்பட்ட கலை. வெறுங்கை யுத்தம் மட்டுமில்லாம நெடுங்கம்படி, கோபட்டா, வாள் வீச்சு, பிச்சுவா, சுருள்பட்டா, லேசம், செண்டாயுதம், வளரி, இடிகட்டை, கட்டாரி, கண்டக்கோடாரி, வீச்சரிவாள், வெட்டரிவாள், கல்துணின்னு பல சண்டை முறைகள் இருக்கு.

சிலம்பத்தோட அடிப்படையே தற்காப்புதான். உலகத்தில இருக்கிற அத்தனை தற்காப்புக் கலைகளை விடவும் சிலம்பம் சிறப்பானது. காரணம், அதுல மருத்துவமும் இருக்கு. முறையா சிலம்பம் கத்துக்கிட்டா உடல்நலக் கோளாறுகள் வராது. சிலம்பத்தோட நுட்பங்களைப் புரிஞ்சுக்கிட்டா எத்தனை பேர் வந்தாலும் பெண்கள் தனியா நின்னு அடிச்சு வெளுக்கலாம்.

நெடுங்காலமா இதை பள்ளியில பாடமா வைங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கோம். இப்பத்தான் அது அரசாங்கம் காதுல விழுந்திருக்கு. நிறைய அரசுப்பள்ளிகள்ல மாணவிகளுக்கு இந்த சிலம்பக்கலையை சொல்லித் தர்றோம். தனியார் பள்ளிகளும் ஆர்வத்தோட அழைக்கிறாங்க’’ என்கிறார் சீனிவாசன்.

‘‘முறையா சிலம்பத்தைக் கத்துக்க ஆறேழு வருஷம் ஆகும். ஆனா, தற்காப்புக்கான சில நுட்பங்களை சீக்கிரமே கத்துக்கலாம். ஒரு சில வாரங்கள் கத்துக்கிட்டு, அதுக்கப்புறம் வீட்டில் இருந்தே பிராக்டீஸ் பண்ணலாம். சிலம்பம், முதல்ல பயத்தைப் போக்கும். என்கிட்டே யாரும் வாலாட்ட முடியாதுங்கிற தன்னம்பிக்கையை உருவாக்கும்.

நாலு பேர் வந்து வம்பு பண்ணும்போது, தைரியமா எதிர்த்து நின்னாவே ஓடிடுவாங்க. சிலம்பத்துல ஒண்டியடி, பிண்டப்பை, முண்டப்பை, கிரிக்கி, உருட்டி, ஒத்தைச் சுவடு, பிரிவுச் சுவடு, ரெட்டு வீச்சு, பூட்டுப் பிரிவு, மடு சிரமம், எடுத்தெறிதல்னு வரிசையா சில பயிற்சிகள் இருக்கு. எல்லாத்துக்கும் அடிப்படை கால் பாடம். காலை முன்பின் வைச்சு எதிராளியை எதிர்கொள்ள பழகிட்டா போதும்.

எல்லா நேரமும் கத்தியோ, கம்போ தூக்கிட்டுப் போக முடியாது. ஆனா துப்பட்டா எப்பவும் உடம்போட இருக்கும். அது போதும். கத்தி வீசுற லாவகத்தோட துப்பட்டாவை வளைச்சுப் பயன்படுத்தணும். கத்தி மாதிரி, கல் மாதிரி, கம்பு மாதிரி துப்பட்டா மாறும். அதுக்கு
பெண்ணோட மனோபாவம் மாறணும். ‘இந்தப் பெண் நம்மைத் தாக்கப் போறாள்’னு தெரிஞ்சதும், வர்றவங்களுக்கு பயம் ஏற்படும். அந்த பயம் நம் பலம்.

கால், முழங்கை, விரல்னு உடல் பாகங்களை பயன்படுத்தி நொடிப்பொழுதுல அட்டாக் பண்றதுக்கு சில பயிற்சிகள் இருக்கு. உடம்புல எது எதெல்லாம் பலவீனமான உறுப்புகள், அதை எப்படி தாக்கினா முடக்கலாம்னு சில யுக்திகள் இருக்கு. நேர நிர்வாகம், கை - கால் இயக்கம், உடல் சுழற்சி முறைகளைக் கத்துக் கொடுக்கிறோம்.

உடம்போட முழு சக்தியையும் கைக்குக் கொண்டு வர சில பயிற்சிகள் இருக்கு. அதேபோல மொத்த கவனத்தையும் ஓரிடத்துல குவிக்கிறதுக்கும் சில பயிற்சி முறைகள் இருக்கு. பார்வையை வச்சே எதிராளியை கணித்து, நிலைகுலைய வைக்க சில அடிமுறைகள் இருக்கு. இதையெல்லாம் அதிகபட்சம் ஆறு மாசத்துக்குள்ள கத்துக்கலாம். கத்துக்கிட்டா மனசுல தைரியம் வந்திடும். அந்த தைரியமே, அஞ்சு பேர் கூட இருக்கிறதுக்கு சமம்.

பள்ளி, கல்லூரி மாணவிகள் மட்டுமில்லாம குடும்பத் தலைவிகளும் ஆர்வமா வர்றாங்க. நம் சமூகத்துல வெறும் பேச்சும் அறிக்கையுமா பெண்களோட பிரச்னைகள் முடிஞ்சு போகுது. அக்கறை வேணும்... எல்லாப் பள்ளிகள்லயும் இதை அடிப்படை பாடமா வைக்கணும். அப்போதான் பெண்கள் தைரியமா தலைநிமிர்ந்து நடக்க முடியும்!’’ - நம்பிக்கையோடு சொல்கிறார் சுகுணா. கத்தி வீசுற லாவகத்தோட துப்பட்டாவை  வளைச்சுப் பயன்படுத்தணும். கத்தி மாதிரி, கல் மாதிரி, கம்பு மாதிரி  துப்பட்டா மாறும். அதுக்கு பெண்ணோட மனோபாவம் மாறணும்!

- வெ.நீலகண்டன்
படங்கள்: அருண்