எம்.ஜி.ஆர் தொடங்கி விஜய் வரை..!



தெறி மகேந்திரன்

‘‘நான் சென்னைக்கு வரும்போது இன்ன மாதிரி ஆவேன், டைரக்டர் அல்லது இப்போ சொல்றாங்களே... நடிகர்னு... இப்படி எதையுமே நினைச்சு வரல. அப்படி யாராவது சொல்லியிருந்தா சிரிச்சிருப்பேன். வாழ்க்கையின் வினோத விளையாட்டுகளில் இதுவும் ஒண்ணு. நான் இதை இப்படித்தான் எடுத்துக்கறேன்!’’ - பாந்தமாகப் பேசுகிறார் இயக்குநர் மகேந்திரன். இன்னமும் தமிழ் சினிமா படைப்பாளிகளில் அபூர்வ கதாநாயகன். ‘தெறி’யின் பிரதான வில்லன்.

‘‘ ‘தெறி’க்கு முன்னாடியே நிறைய நடிக்கக் கூப்பிட்டு இருக்காங்க. அவங்ககிட்ட ‘ஏன் விஷப்பரீட்சை’ன்னு சொல்லி தவிர்க்கப் பார்த்திருக்கேன். அப்படியும் வற்புறுத்தினா ‘வேற நல்ல நடிகருக்கு அந்த வாய்ப்பைக் கொடுத்திருங்க’ன்னு சொல்லி அனுப்பியிருக்கேன். ஆனா, தாணு சார் அப்படியில்லை. அப்படி எதுவும் சொல்லி அவரை அனுப்பிட முடியாது. என்னுடைய சுக, துக்கங்களில் எப்பவும் பங்கேற்பவர். பார்க்கும்போது மட்டும் ‘செளக்கியமா?’னு ஓடுற ஓட்டத்தில கேட்டுட்டுப் போறவர் கிடையாது.

வருடைய ‘தையல்கார’னில் வசனம் எழுதியிருக்கேன். என் மகன் ஜானுக்கு ‘சச்சின்’ல வாய்ப்பு கொடுத்தார். இப்போ பிரபலமான ரெண்டு முக்கிய படங்களைத் தயாரிச்சிக்கிட்டு இருக்கிறவர். தயாரிப்பாளர் சங்கத் தலைவர். ஆனால், எனக்காகப் பேச டைம் ஒதுக்கி வச்சிருப்பார். ‘காரியம் இருந்தால் பேசணும், இல்லாட்டி பேச்சு கிடையாது’ என்பதெல்லாம் அவர்கிட்ட கிடையாது.

அவரே கேட்ட பின்னாடி, விஜய் இதை ஏற்றுக் கொண்ட பிறகு, அட்லி தீர்மானித்தபடி என்னால் ‘தெறி’ கேரக்டரை ஏற்காமல் இருக்க முடியவில்லை. ஆனால், இப்போது பார்த்தால் எல்லாமே நல்லபடியாக முடிந்திருக்கிறது. இப்படியொரு ரோல் செய்ததில் எனக்கும் சந்தோஷம்!’’
‘‘உங்களின் ஃபேவரிட் லிஸ்ட்டில் முன்னமே அட்லி இருந்தாரா?’’

‘‘ ‘ராஜா ராணி’ பார்க்கும்போது என்னால் ரசிக்க முடிந்தது. குறிப்பாக, அவர் டயலாக்கில் எனக்கு ரொம்ப இஷ்டம். சின்ன வார்த்தைகளில், சீக்கிரத்தில் முடிகிற மாதிரி எழுதுவார். எனக்கு எந்தப் படம் பார்த்தாலும் ரைட்டர் நினைவு வர்றது வழக்கம். ‘ராஜா ராணி’ படம் முடிஞ்சிடும்... அப்ப டெயில் பீஸ் மாதிரி ஒரு காட்சி வரும்.

பிரச்னையில் இருந்த ஆர்யா - நயன்தாரா ஜோடி சுமுகமாகி சமையல் நடந்துக்கிட்டு இருக்கும். சந்தானம், வீட்டுக்கு வருவார். ‘வந்துட்டான்டா’னு நயன் முணுமுணுப்பார். ‘உனக்குத்தான்டா பிரியாணி ரெடியாகிட்டு இருக்கு’னு ஆர்யா சொல்வார். நயன்தாரா ‘வாங்க’னு சின்னப் புன்னகை. ‘தெரியும்டா’னு சந்தானம் சொல்லுவார். தியேட்டர் அலறும். அட்லி அவ்வளவு தூரம் யதார்த்தத்திற்கு நெருக்கம்.  ‘நீங்க ஓகே பண்ணுனது சந்தோஷமான விஷயம் சார்’னு விஜய் சொன்னார். அவர் 58 படம் செய்துட்டார். 58 வில்லன்களைப் பார்த்துட்டார்.

இப்படி ஒரு பெரிய படம்னா சின்ன வேஷத்துக்குக் கூட பெரிய நடிகர்களைப் போடுவாங்க. செலவு பத்தின கவலை இருக்காது. முதல் நாள் ஷூட்டிங் போயிருந்தேன். ஆறடி உயரத்தில் ஒருத்தர் மைக் டைசன் கணக்கா இருந்தார். அவர் பல்கேரியாவில் பிரபலமான மல்யுத்த சாம்பியன்... லூபோனு பெயர். நான் சொன்னா எதையும் கேட்கிற அடியாளாம் அவர். அடியாளையே பல்கேரியாவிலிருந்து பிடிக்கும்போது, ஒரு முக்கிய வில்லனை பள்ளிக்கரணையிலிருந்து பிடிப்பாங்களா? ஆனால், அது நடந்திருக்கு. அவங்க எதிர்பார்ப்பை பூர்த்தி செஞ்சுட்டேன் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. அதையும் தாண்டி யிருக்கேனா..? பார்த்துட்டு சொல்லுங்க!’’

‘‘உங்களுக்கு தெரியுமே... ஒரு படம் எப்படி உருவாகி வந்திருக்குன்னு...’’‘‘எப்படிப்பட்ட படமா இருந்தாலும் அதற்கு சென்டிமென்ட்தான் அடித்தளம். அதில் நடிகர், நடிகைகள் கூட்டியோ, குறைச்சோ பண்ணிடக் கூடாது. சிலபேர் சென்டிமென்ட்ல அழுத்தம் கொடுக்கறேன்னு பிழிஞ்சு எடுத்திடுவாங்க. ஆனா, சென்டிமென்ட் இல்லைன்னா நாம வீடியோ கேம்ஸ் விளையாடிட்டுப் போயிடலாம். அட்லி இதுல அவ்வளவு கச்சிதம். ‘ஒரு உப்புக்கல் கூட, குறைவா இல்லை’னு சொல்வாங்களே...

அப்படிப் பண்ணியிருக்கார். 1000 பேர் இருக்கிற ஃப்ரேமில் ஒருத்தன் கொஞ்சம் சிரிச்சாலும் அவருக்குத் தெரியுது. ‘ஏய், ஏய்’னு அவரை அப்புறப்படுத்திட்டுதான் அடுத்த வேலை பார்க்கிறார். நல்ல விஷயம் படத்தில் வரணும்னு அவர் பிடிவாதமா நிற்கிறார். நானெல்லாம் பிடிவாதத்தைத் தளர்த்தி, சமாதானம் பண்ணிட்டு இருந்திருக்கேன். அடி விழுந்திருக்கு. அட்லி அப்படி இல்லை. அவருடைய சென்டிமென்ட்ல உறுத்தலே இல்லை. டயலாக் லிமிட்டா, ஆக்‌ஷன் அளவா, சென்டிமென்ட் சரிவிகிதத்தில்... அவர் வயசில எனக்கு இது சாத்தியமே இல்லை.

என்னிடம் நெருங்கிப் பழகிய தாணு சார் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். ஆனால் நெருங்கிப் பழகாமலே என்னை பரிந்துரைத்த விஜய்க்கும் அட்லிக்கும் நான் நல்லது செய்யணும் இல்லையா! நான் இந்த ரோல் பண்ணும்போது ஒரு தேர்டு அம்பயர் இருந்தார். அவர்தான் ஜார்ஜ் வில்லியம்ஸ்... கேமிராமேன். எங்களுக்குள்ளே தம்ஸ் அப், புருவம் உயர்த்துதல், ஆஹானு ஒரு சிரிப்பு... எல்லாம் நடந்திருக்கு!’’
‘‘வசனம் சிறப்பா இருந்ததா சார்?’’

‘‘சில டயலாக்குகள் நம்மளையே வெளிச்சம் போட்டுக் காட்டிடும். சுமாரான நடிகர்களுக்குக் கூட அப்படிப்பட்ட நல்ல டயலாக்ஸ் அமைஞ்சிருக்கு. ‘தங்கப்பதக்கம்’ நாடகம் நடக்கும்போதே சிவாஜியோட சேர்ந்து மனைவி, மருமகள், மகன்னு அத்தனை பேரும் கைதட்டல் வாங்கிட்டுப் போவாங்க. சில சமயம் டயலாக்கே நடிப்பை கத்துக் கொடுக்கும்.

ஒரு இடைவெளியில்... தோரணையில்... படத்தையே டயலாக் தூக்கிட்டுப் போற இடங்கள் நிறைய நடந்திருக்கு. சரத்பாபு தன் மேல் கோபமா இருக்கார்னு ‘முள்ளும் மலரும்’ ரஜினி நினைப்பார். ‘கை, காலு இல்லைன்னாலும் பிழைச்சிக்குவான். கெட்ட பய சார் இந்தக் காளி’னு சொல்லுவார். பேசுகிற தன்மையில், உச்சரிக்கிற அழகில், இருக்கிற சூழலில், இன்னிக்கு வரைக்கும் இந்த டயலாக் புகழ் அடைஞ்சிருக்கு. இன்னிக்கு இருக்கிறதில் விஜய் மிக யதார்த்தமான நடிகர்.

இதில் நிறைய இடங்களில் விஜய் பிரமாதமா செய்திருக்கார். எத்தனை நல்ல படமாக இருந்தாலும் ஓடினால்தான் அதற்கு மரியாதை. எல்லோரும் என் ‘உதிரிப்பூக்கள்’ பற்றிப் பேசுறாங்க. 100 நாட்கள் தாண்டி ஓடினதில்தான் இந்த மரியாதை. எனக்கு என்ன சிறப்புன்னா எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, விஜய் இப்படி எல்லா காலத்தோடும் சம்பந்தப்பட்டு இருக்கேன். அந்த வாய்ப்பை அளித்த விஜய்க்கு நன்றி!’’

- நா.கதிர்வேலன்