குட்டிச்சுவர் சிந்தனைகள்



நடிகர்கள் எல்லோரும் நடிகர் சங்கக் கடனை அடைக்கவும், புதிதாக கட்டிடம் கட்டவும் கிரிக்கெட் மேட்ச் விளையாடறாங்க. ஒருவேளை இதே மாதிரி இயக்குநர்கள் சங்கமும் ஒரு கிரிக்கெட் மேட்ச் நடத்தினா எப்படி இருக்கும்? அதுக்கு முன்னோட்டமா இயக்குநர் கிரிக்கெட்டின் ஆறு டீம்களைப் பார்ப்போம்.

பாரதிராஜாவின் ‘அல்லிநகர வெள்ளைப் புறாக்கள்’, ஹரியின் ‘திருநெல்வேலி துரைசிங்கங்கள்’, மிஷ்கினின் ‘சைதாப்பேட்டை சப்வே சிறுத்தைகள்’, டி.ராஜேந்தரின் ‘திருச்சி தங்கச்சிகள்’, பாலாவின் ‘பாண்டிச்சேரி பிதாமகன்கள்’ மற்றும்  செல்வராகவனின் ‘ரெயின்போ காலனி ரோமியோ ஜூலியட்கள்’.

பாரதிராஜாவின் ‘அல்லிநகர வெள்ளைப் புறாக்கள்’: ஊருக்கே புத்திய சொல்லி வீட்டுல மட்டும் புரண்டு படுக்கிற ‘முதல் மரியாதை’ சிவாஜிதான் இந்த டீமுக்கு வயசான கேப்டன்னா, ஊருக்கே கத்திய காமிச்சு, ரோட்டுல புரண்டு கிடக்கிற ‘கடலோரக் கவிதைகள்’ முட்டம் சின்னப்பதாஸ்தான் வைஸ் கேப்டன்.

‘கிழக்குச் சீமையிலே’ படத்து மாமன் மச்சானான விருமாண்டி சிவனாண்டிதான் ஓபனிங் பேட்ஸ்மேன்ஸ், ‘பதினாறு வயதினிலே’ மயிலும், ‘முதல் மரியாதை’ குயிலும்தான் மிடில் ஆர்டர் பேட்டிங், ஸ்பின் பவுலர் சப்பாணி, ஃபாஸ்ட் பவுலர் பரட்டைன்னு பக்காவா செட்டான டீம் இது. ‘Fullலா பவுடர் போட்டுக்கிட்டு நலுங்காம நடந்தானாம், ராத்திரிக்கு நல்லா குடிச்சிப்புட்டு நடுரோட்டுல கிடந்தானாம்ங்கிற கதையா’ன்னு மொக்க சிலேடைகள் சொல்லும் ‘மண்வாசனை’ காந்திமதிதான் கோச்சு.

ஒவ்வொரு பேட்ஸ்மேன் இறங்குறப்பவும் ஒன்பது வெள்ளையுடை தேவதைகள் கூட்டிவந்து பிட்ச்ல விட்டுட்டுப் போகும். ஒவ்வொரு ரன்னும் அடிச்சுட்டு, விளையாடும் வீரர்கள் வானத்தைப் பார்த்து அண்ணாந்து அஞ்சு நிமிசம் சிரிக்கிறத பழக்கமா வச்சிருக்கிற டீம் இது ஒண்ணுதான். கார்க் பால், கவரிங் பால்ல கிரிக்கெட் விளையாடியத விட இவங்க கள்ளிப்பால்ல விளையாடியதுதான் அதிகம்.

‘ஆத்தா நான் பாசாயிட்டேன்’னு படத்துல ஓடி வர்ற ஹீரோ-ஹீரோயின் எல்லாம், கிரவுண்டுல ரன் ஓடுறப்ப, ‘ஆத்தா நான் ரீச்சாயிட்டேன்’னுதான் ஓடுவாங்க. ‘என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய பேட்ஸ்மேன் வந்திருக்கிறேன்’னு சொல்லிட்டு கிரவுண்டுக்கு வர்றத ஒரு வழக்கமாவே வச்சிருக்காங்க. மேட்ச் tieல முடிஞ்சா, சூப்பர் ஓவருக்கு சம்மதிக்க மாட்டாங்க. அதுக்கு பதிலா சேவல் சண்டை நடத்தி ரிசல்ட் பார்க்கணும் என்பதே இவங்ககிட்ட இருக்கிற கெட்ட பழக்கம்.

ஹரியின் ‘திருநெல்வேலி துரைசிங்கங்கள்’: பேட்ட புடிச்சு பிராக்டீஸ் பண்றவங்க மத்தியில், அருவாள எடுத்து கிரிக்கெட் பிராக்டீஸ் பண்றவங்கதான் ஹரியின் டீம் மெம்பர்ஸ். இவ்வளவு ஏன்... ஸ்டம்ப்புக்கு பதிலா அருவாளையும், பெயில்ஸுக்கு பதிலா பாமையும் வச்சு விளையாடுவாங்கன்னா பாருங்க. ‘ஊருக்கு இதான் கடைசி பஸ்ஸு, விட்டா போயிடும்’ங்கிற ரேஞ்சுல, அம்பது ஓவர் மேட்ச்சையே அஞ்சு ஓவர்ல ஆடிட்டு வரும் அளவுக்கு வேகமா ஆடுவாங்க. பவுண்டரி லைனா பனை மரத்தை நடறது...

பார்க்கிங் ஏரியா முழுக்க டாடா சுமோவை நிறுத்தறது... ஒவ்வொரு பந்தையும் அடிக்கிறதுக்கு முன்னாடியும் பந்து வீசுன பிறகும் ‘ஏய்ய்ய் ஓய்ய்ய்’னு கத்துறது... இதெல்லாம் இவங்க சென்டிமென்ட். ஒரு சாமி, ரெண்டு சாமின்னு, ஆறு சாமி வரை விக்ரமும், அடுத்த அஞ்சு ப்ளேயரா சூர்யாவுமே வெவ்வேறு கெட்டப்ல விளையாடி முடிக்கிறதுதான் இந்த அணியோட ப்ளஸ் பாயின்ட். சியர்லீடர்ஸுக்கு தாவணி போட்டுவிடுறது, டிரிங்க்ஸ் பிரேக்ல இளநீர் கொடுக்கிறதுனு மேட்ச் முழுக்க மண் வாசனை கமழும்.

மிஷ்கினின் ‘சைதாப்பேட்டை சப்வே சிறுத்தைகள்’: இருக்கிறதுலயே வித்தியாசமான அணி இது. இந்த அணி நைட் மேட்ச் மட்டும்தான் விளையாடும், அதுவும் கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு! இந்த அணியைப் பொறுத்தவரை, ஒரே பவுலர் ஒரு முழு ஓவரையும் வீச மாட்டார். ஓவரின் ஒவ்வொரு பந்தையும் ஒவ்வொரு பவுலரா நடந்து வந்து வீசுவாங்க.

முக்கால்வாசி மேட்ச் மெதுவா போனாலும், பேட்டிங்கோ பவுலிங்கோ, கடைசி அஞ்சு ஓவர்ல சிறுத்தையின் வேகம் காட்டும் அணிதான் இது. இவர்களின் ஹோம் கிரவுண்ட், மாநகர சப்வேக்கள், ஆள் அரவமற்ற ரயில்வே ஸ்டேஷன், அபார்ட்மென்ட் கார் பார்க்கிங் மற்றும் ஊருக்கு வெளிய இருக்கும் முள் காடு.

டி.ராஜேந்தரின் ‘திருச்சி தங்கச்சிகள்’: இருக்கிற அணிகளில் பலவீனமான அணி இதுதான். பொட்டல் பாலைவனமா dryயா இருக்கிற ஆத்தைக் கூட cry பண்ணி பொங்கும் வெள்ளமா மாத்திடும் அளவுக்கு சென்டிமென்ட் நிறைஞ்ச டீம் இது. கேப்டன் டி.ஆர் மட்டும்தான் டீம்ல இருக்கிற ஒரே ஆம்பள, மத்த எல்லா பிளேயர்ஸும் கல்யாணி 1, கல்யாணி 2னு கல்யாணி 10வரை பெண்கள் மட்டும்தான்.

பேட்ஸ்மேன் முனையில ரன்னடிச்சுட்டு, எதிர்முனையில் இருக்கிற தங்கச்சிய முதுகுல தூக்கிட்டு அதுக்கும் சேர்த்து ரன் ஓடுவாரு எங்க டி.ஆரு. பவுலிங், பேட்டிங், கீப்பிங், ஃபீல்டிங், டிரிங்க்ஸ்... ஏன் அம்பயரிங் கூட தனியாளா எங்க தலைவரே செய்வாரு. இந்த அணியின் பலவீனம் ஒண்ணுதான்... மேட்ச் நடக்குறதை மறந்துட்டு, டக்குனு பிட்ச்லயே தாளம் போட்டு இசைத் தூறல் போடுவாரு!

பாலாவின் ‘பாண்டிச்சேரி பிதாமகன்கள்’: இருக்கும் ஆறு அணிகளில் ஆக்ரோஷமான அணி எதுன்னா அது நம்ம பாலாவோட அணிதான். என்னதான் வெள்ளையும் சொள்ளையுமா யூனிபார்ம் தந்தாலும், விளையாடப் போறதுக்கு முன்னால மண்ணுல புரண்டு, சேறுல தூர் வாரி வர்ற அணி இது.

இந்த அணியின் பேட்ஸ்மேன்கள்தான், பேட்டே இல்லாம வெறும் கையிலயே காட்டு காட்டுனு காட்டுவாங்க. ஏற்கனவே இந்த அணி வீரர்கள் மீது அம்பயரின் கொரவளைய கடிச்சது, அப்பீல் கேட்ட எதிரணி பவுலரின் இடுப்பை உடைச்சது, ‘நான் கடவுள்’ ஆர்யாவ வச்சு பாரதிராஜா டீம் வீரர்கள அடிச்சதுனு பிராதுகள் பல்லாயிரம் இருக்கு.

மேட்ச் ஜெயிச்சாலும் தோற்றாலும் தங்கள் அணியின் டெயில் எண்டர்களையே போட்டுத் தாக்கிட்டு இன்னிங்ஸை முடிக்கிறதுதான் இவங்க ஸ்டைல். சியர்லீடர்ஸா இருக்கிற இவங்க டீமின் ஹீரோயின்கள் எல்லோருமே அரை லூசாவோ, முக்கால் லூசாவோ இருக்கிறதுதான் இவங்க அணியின் பலவீனம். இவங்களுக்கு புடிச்ச கிரவுண்ட் சுடுகாடு, மாட்டு மந்தை, காபித் தோட்டம் மற்றும் கஞ்சா தோட்டம்.

செல்வராகவனின் ‘ரெயின்போ காலனி ரோமியோ ஜூலியட்கள்’: இருக்கும் அணிகளில் கலர்ஃபுல்லான அணி இது. இந்த அணியில் இடம் பெறணும்னா குறைந்தபட்ச தகுதி, 20 வயசுக்குள்ள இருக்கணும்.

எப்பவுமே ஒரு ஆண் ஒரு பெண் என்றுதான் பேட்டிங் இறங்குவாங்க. விளையாடுற ஆண் அவுட்டானா அவங்களோடயே அந்தப் பெண்ணும், பெண் அவுட்டானா அவங்களோடயே அந்த ஆணும் கிளம்பி பெவிலியன் போயிடுவாங்க. மேட்ச் ஜெயிச்சாலும் தோத்தாலும் மொத்த டீமும், நடு ரோட்டுல நெருப்ப கொளுத்திவிட்டு ‘திவ்யா திவ்யா’னு சுத்தி ஆடுறதுதான் இவங்க ஸ்டைல்.

மேட்ச் நடக்கும்போது, பேட்டிங் புடிக்கிற பேட்ஸ்மேனோட அப்பா வந்து, ‘‘நீ ஓடுறப்ப துடிக்கிறது மூச்சு இல்லடா, என்னோட அடமானம் வச்ச வாட்சு’னு ஏதாவது ரைமிங்கா திட்டிட்டுப் போறது இவங்க சென்டிமென்ட். முதல் இன்னிங்ஸ்ல நல்லா இருக்குற இவங்க அணியின் வீரர்கள், செகண்ட்-ஆஃப்ல கொஞ்சம் சைக்கோவா மாறுவதுதான் எந்த மேட்ச்லயும் மாறாம இருக்குது.

எந்த மேட்ச் விளையாடினாலும், எதிர் அணியின் சியர் லீடர்ஸை எப்படியாவது கரெக்ட் பண்ணுவது  இவங்க டீம்ல ரொம்ப பிரசித்தம்.  என்ன... தேதி குறிச்சி ப்ளான் பண்ணி இவங்க விளையாடின மேட்ச்சுகளை விட, விளையாடாம பாதில நின்ன மேட்ச்சு கள்தான் அதிகம்.         

ஆல்தோட்ட பூபதி

ஓவியங்கள்: அரஸ்