சிறுதானியத்தை ஏற்பார்களா சிறுவர்கள்?



‘‘சித்திரை மாதத்தில் நீர்மோர், பானகம்தான் பிரதான உணவு. சத்துள்ள அறுசுவை கொண்ட உணவுகளைச் சமைத்து சித்திரை திருவிழாக்களைக் கொண்டாடுவதுதான் தமிழர் மரபு!’’ - ஆவலுடன் பேசத் துவங்கினார் உணவியலாளர் ராஜமுருகன்.

 உணவக மேலாண்மையும், எம்.பி.ஏவும் முடித்து சிறுதானிய உணவு சமைப்பதையே கொள்கையாகக் கொண்டிருப்பவர். சிறுதானிய உணவுத் திருவிழாக்கள் பலவும் நடத்தியிருக்கிறார். திருமணங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் சமைத்தால் கூட சிறுதானிய உணவு மட்டும்தான்!‘‘சிறுதானிய உணவுகளில் சுவை அதிகம் இருப்பதில்லையே?’’

 ‘‘நவீன ரசாயன உணவுக்கு நாக்கு அடிமை ஆனதுதான் காரணம். கம்பு தோசை, ராகி முறுக்கு, சாமை அதிரசம் எனத் துவங்கி படிப்படியாக நம்மை தயார்படுத்திக்கொள்ள வேண்டும். உடல் தானாகப் பழகிவிடும். நம் மண்ணின் உணவு நமக்குப் பழகாமல் வேறு யாருக்கு பழகும்?’’
‘‘சிறுதானியங்களில் தரமானதை எப்படிக் கண்டுபிடிப்பது?’’

 ‘‘எந்த ஒரு தானியத்தின் தோலை நீக்கினாலும், அது அரிசியாகும். வரகில் இருந்து தோலை நீக்கினால் வரகரிசி. சாமையில் தோல் நீக்கினால் சாமை அரிசி. ஆனால், நெல்லில் தோல் நீக்குவது போல் சிறுதானியத்தில் முழுதாகத் தோல் நீக்கக் கூடாது. வெள்ளையாக இருக்கும் எந்த தானியமும் பாலீஷ் செய்யப்பட்டதே!’’‘‘சிறுதானிய உணவு பற்றிய ஆர்வத்தைக் குழந்தைகளிடம் உருவாக்குவது எப்படி..?’’

‘‘ ‘இது சிறுதானிய உணவு, ஆரோக்கியமானது’ என்பது போன்ற தகவலை அவர்களிடம் சொல்லக் கூடாது. சிறு தானிய மரபு பற்றிய அறிவை நட்பு ரீதியில் பேசவேண்டும். அவர்களையும்  பேசவைக்க வேண்டும். அவர்கள் விருப்பத்தின்படி சமைத்துத் தரவேண்டும்!’’
இனி, ராஜமுருகனின் சிறுதானிய ரெசிபிகள்...

சிறுதானிய பாஸ்தா

தேவையானவை
சாமை மாவு    - 100 கிராம்
கேரட்        - 50 கிராம்
உருளைக்கிழங்கு    - 20 கிராம்
குடமிளகாய்    - 50 கிராம்
வெங்காயம்    - 1
பூண்டு    - 8 பல்
வெண்ணெய்     - 100 கிராம்
உப்பு         - தேவையான அளவு
மிளகுத்தூள்     - தேவையான அளவு

செய்முறை: சாமை மாவில் உப்பு கலந்த சூடான நீர் தெளித்து நன்கு பிசைந்து, சிறு சிறு நீள உருண்டைகளாக உருட்டவும். இதை நன்கு கொதிக்கும் நீரில் 10 நிமிடம் வேக விட்டுப் பின் நன்றாக வடிக்கவும். நறுக்கிய காய்கறிகளுடன், 4 பல் பூண்டு, சிறிது உப்பு கலந்து வேக வைத்து, வடித்து, நன்றாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் வெண்ணெயைச் சூடாக்கி, மீதி பூண்டுகளை பொடியாக நறுக்கி லேசாக வதக்கவும், சாமை மாவு உருண்டைகளைப் போட்டு, அரைத்து வைத்துள்ள விழுதையும் சேர்த்து மெதுவாகக் கலந்து கொதித்த பின் உப்பும், மிளகுத்தூளும் கலந்து பரிமாறவும்.

தினை சொய்யம்

தேவையானவை
தினை அரிசி    - 1 டம்ளர்
உளுந்து    -    1 டம்ளர்
உப்பு        -    1 சிட்டிகை (பூரணத்திற்கு)
தேங்காய்த்துருவல்    -    2 டம்ளர்
வெல்லம்    -    250 கிராம்
ஏலக்காய்    -    1/2 டீஸ்பூன்
சுக்குத்தூள்    -    1 சிட்டிகை
நெய்        -    1 டேபிள்ஸ்பூன்
கடலை எண்ணெய் -    தேவையான அளவு

செய்முறை: நெய்யைச் சூடாக்கி, தேங்காய்த்துருவலை ஈரம் போகும்வரை வறுக்கவும். பின் அதனுடன் வெல்லத்தூள், ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள், சேர்த்து நன்கு உருண்டு வரும்போது இறக்கி ஆறவிடவும். தினை அரிசி, உளுந்து இரண்டையும் நன்றாக 1 மணி நேரம் ஊற வைத்து, ஊறியதும் அதை மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் உப்பு ஒரு சிட்டிகை சேர்க்கவும். சேர்த்த பூரணத்தைச் சிறு எலுமிச்சைப் பழ அளவு உருட்டி, தினை மாவில் இட்டு எண்ணெயில் பொரித்தெடுக்கவும். அடுப்பை குறைவான சூட்டில் எரியவிடவும்.

வரகு கத்தரிக்காய் சோறு

தேவையானவை
வரகரிசி        - 1 டம்ளர்
கத்தரிக்காய்    - 1 டம்ளர் (நறுக்கியது)
சின்ன வெங்காயம்      - 10 (நறுக்கியது)
சீரகம்                - 1/2 டீஸ்பூன்
வெந்தயம்        - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய்     - 3 டேபிள்ஸ்பூன்
புளி        -  எலுமிச்சை அளவு
மஞ்சள் தூள்    - சிறிது
கடலைப் பருப்பு    - 3 டேபிள்ஸ்பூன்
தனியா        - 3 டேபிள்ஸ்பூன்
மிளகாய்        - 5

செய்முறை: வரகரிசியுடன் 3 பங்கு நீர் சேர்த்து வேகவிடவும். கடலைப் பருப்பு, மிளகாய், தனியாவை தனித்தனியாக வறுத்து மசாலாவாக அரைத்துக்கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி வெந்தயம், சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின் நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து லேசாக வதக்கவும். பாதி வெந்த பிறகு, புளியைக் கரைத்து சேர்த்து அத்துடன் மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும். பச்சை வாசனை போன பிறகு இக்கலவையைச் சோற்றுடன் சேர்த்துக் கலக்கவும். பின் அரைத்த மசாலாவை சோற்றுடன் கலந்து பரிமாறவும்.

சாமை முறுக்கு

தேவையானவை
சாமை அரிசி மாவு    -    1 டம்ளர்
கடலை மாவு    -    1 டம்ளர்
எள்        -    2 டேபிள்ஸ்பூன்
வெண்ணெய்    -    1 டேபிள்ஸ்பூன்
ஓமம்        -    1 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்     -    1 டீஸ்பூன்
பெருங்காயம்        -    1 சிட்டிகை
உப்பு    -    தேவையான அளவு

செய்முறை:
சாமை அரிசி மாவு, கடலை மாவு, உப்பு சேர்த் நன்கு சலித்துக் கொள்ளவும். அதனுடன் வறுத்த எள், ஓமம், வெண்ணெய், மிளகாய்த் தூள், பெருங்காயம் இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து சிறிது சிறிதாக நீர் சேர்த்து முறுக்கு பதத்திற்குப் பிசைந்துகொள்ளவும். எண்ணெய் காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் பிழிந்து எண்ணெயில் பொறித்தெடுக்கவும்.

குதிரைவாலி பக்கோடா

தேவையானவை
குதிரைவாலி அரிசி மாவு    -    1 டம்ளர்
நெல் அரிசி மாவு    -    3 டேபிள்ஸ்பூன்
கடலை மாவு    -    3 டேபிள்ஸ்பூன்
இஞ்சி-பூண்டு விழுது    -    2 டீஸ்பூன்
மிளகாய்த் தூள்    -    1 டீஸ்பூன்
சீரகத்தூள்    -    1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள்    -    1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம்    -    1/2 டம்ளர்
(நறுக்கியது)
கறிவேப்பிலை    -    2 கொத்து
(நறுக்கியது)
கொத்தமல்லி    -   1 கைப்பிடி
(நறுக்கியது)
உப்பு    -    தேவையான அளவு
பெருங்காயம்    -    1 சிட்டிகை
எண்ணெய்    -    தேவையான அளவு

செய்முறை: மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும் சிறிது நீர் தெளித்து நன்கு கலந்து பிசறி எண்ணெயில் உதிர்த்துப் பொறித்து எடுக்கவும்.

- புகழ் திலீபன்

மாடல்: உஷா ராணி
படங்கள்: செல்வன்